
கேரள மாநிலம், கொச்சியில் 1,100 படுக்கைகளுடன் ஓர் அதிநவீன பன்னோக்கு மருத்துவமனை. மற்றொன்று, 2,500 கி.மீ. தொலைவில் ஹரியாணாவின் ஃபரிதாபாத்தில் 2,600 படுக்கைகளுடன் 36 லட்சம் சதுர அடி பரப்பு கட்டடங்களுடன் மிக பிரம்மாண்டமாக அமைந்திருக்கிறது. தங்களால் செலவிட்டுப் பெற இயலாத 40 லட்சத்துக்கும் அதிகமான மக்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை, இதயம் மற்றும் மூளை அறுவைச் சிகிச்சைகள். மற்றவர்களுக்கு அவர்களால் செலுத்தக் கூடிய அளவிலான கட்டணத்தில். இது அரசின் திட்டமா? அல்லது பெருநிறுவன அறக்கட்டளைத் திட்டமா? அல்ல.
தற்போது ஒரு லட்சத்துக்கும் அதிகமான குடும்பங்களுக்குப் பயனளிக்கிற கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்றோருக்கான ஓய்வூதியத் திட்டம். அரசு நல்வாழ்வுத் திட்டமா? அல்ல. ஆண்டுக்கு ஒரு கோடி பேருக்கு இலவச உணவுத் திட்டம். மக்கள் நலத் திட்டமா? அல்ல. 47,000 -க்கும் மேற்பட்ட வீடுகள் கட்டப்பட்டு வீடற்றவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன; 1,00,000 வீடுகள் என்ற இலக்கை நோக்கித் தொடர்ந்து கொண்டிருக்கிறது. எந்தவோர் அரசின், மாநில அல்லது மத்திய அரசு வீட்டுவசதித் திட்டமா? அல்ல.
4,100 ஆசிரியர்கள், 86,000 மாணவர்களுடன் 80-க்கும் அதிகமான பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் சிறப்புக் கல்வி நிறுவனங்கள். நாடு முழுவதும் மாணவர்களில் 50,000 பேருக்குக் கல்வி உதவித்தொகை. இதுவொரு பெருநிறுவன சமூகப் பங்களிப்புத் (சிஎஸ்ஆர்) திட்டமா? அல்ல.
2001 குஜராத் நிலநடுக்கம், 2004 சுனாமி, கத்ரீனா புயல், 2005 குஜராத் வெள்ளம், 2005 மகாராஷ்டிர வெள்ளம், 2008 பிகார் வெள்ளம், 2009 ஆலா புயல், 2010 ஹைதி நிலநடுக்கம், 2011 டொஹோகு நிலநடுக்கம், சுனாமி, 2013 வட மாநில வெள்ளங்கள், 2013 ஹையான் புயல், 2014 பாகிஸ்தான், இந்தியா வெள்ளம், 2015 நேபாள நிலநடுக்கம், 2015 தென் மாநில வெள்ளங்கள், 2016 புட்டிங்கல் கோயில் தீவிபத்து, 2017 மரியா புயல், 2017 ஒக்கி புயல், 2018, 2019 கேரள வெள்ளங்கள் என எல்லா பேரிடர்களுக்கு நிவாரண நிதியாக 7.5 கோடி அமெரிக்க டாலர்கள். ஏதேனும் பன்முக முகமையின் நிவாரணத் திட்டமா? அல்ல.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் தூய்மை இந்தியா (ஸ்வச் பாரத்) இயக்கத்துக்காக ரூ. 100 கோடி நன்கொடை. ஏதாவது கோடீஸ்வரரின் நன்கொடையா? அல்ல.
இந்தப் பெரும் பணிகள் யாவும் மாதா அமிர்தானந்தமயி மடத்தின் மனிதாபிமான சேவைகளின் தலைப்பு மட்டுமே, இதன் உடலும் ஆன்மாவும் கோடிக்கணக்கான மக்களால் பக்தியுடன் "அம்மா" என்றழைக்கப்படும் மாதா அமிர்தானந்தமயி.
மாதா அமிர்தானந்தமயி மடத்தின் சர்வதேச தலைமையகத்தின் அஞ்சல் முகவரி, எந்தவொரு பெருநகரத்திலுள்ள எந்தவொரு ஆடம்பரமான கட்டடத்திலும் இல்லை. கேரளத்தில் உள்ள சிறுகிராமமான வள்ளிக்காவில் இருக்கிறது. கடலாலும் காயலாலும் சூழப்பட்ட வெறும் 80 ஏக்கர் பரப்பளவு கொண்ட தீவு. இந்தக் கிராமம், அமெரிக்கா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா, ஆசியா மற்றும் ஆஸ்திரேலிய என உலகெங்கும் பரந்துவிரிந்திருக்கும் மனிதாபிமான சேவைகளின் சர்வதேச தலைமையகமாக எப்படி மாறியது?
இது, நவீனத்திலிருந்து துண்டிக்கப்பட்ட இந்த சிறிய துண்டு நிலப்பரப்பில் மீனவ சமுதாயத்திலிருந்து வந்த எளிய, புன்னகை பூக்கும் பெண்ணான, பல பதிற்றாண்டுத் தவத்தாலும் மனிதர்கள் மீதான எல்லையற்ற அன்பினாலும் அரவணைக்கும் சன்னியாசினியாகவும் உலகளாவிய ஆன்மிக ஒளியாகவும் உருவான, சுதாமணி பிறந்த இடம். இந்த மகத்தான ஆன்மிகம் மற்றும் சேவை இயக்கத்துக்கு ஆற்றலை அளிப்பவர் இவர்தான்.
அதிகம் அறியப்படாத சுதாமணியாகப் பிறந்து தற்போது பிரசித்திபெற்ற அம்மாவாக வாழ்ந்து வரும் இடம் வள்ளிக்காவுதான். அவர் ஒருபோதும் எளிதில் அணுகக் கூடிய வசதியான அல்லது புகழ்பெற்ற இடத்துக்குச் செல்லவில்லை. அவர் பிறந்து, தவழ்ந்து, விளையாடிய, அதேநேரத்தில், அவருக்குள் இருந்த அற்புதத்தை அறிந்துகொள்ள முடியாதவர்களால் மோசமாக நடத்தப்பட்ட இடத்திலேயே வாழ்ந்து வருகிறார். பிறப்பு முதல் இன்று வரை அவரது வாழ்க்கை ஒரு திறந்த புத்தகமாக இருந்துகொண்டிருக்கிறது.
அன்பு தேவைப்படுகிற, புறக்கணிக்கப்பட்ட, துன்புறுகிற மற்றும் துயருற்ற மனிதகுலத்துடன் ஒப்பிட, அவர் அரவணைத்து, அவர்களின் ஆன்மிக வேர்களுடன் மீண்டும் இணைத்த, இவருடைய பெருமளவிலான மனிதாபிமான சேவைகளின் அளவானது மிக சொற்பமாகத் தோன்றுகிறது. அவர் 4 கோடிக்கும் அதிகமானோரை அரவணைத்து, ஆறுதலளித்துள்ளதாக செய்யறிவு மதிப்பிடுகிறது. அனைத்து இனங்கள், நாடுகள் மற்றும் மதங்களைச் சார்ந்த கோடிக்கணக்கான மக்களுடைய வாழ்க்கையை அவரது தெய்வீகத்தன்மை மாற்றியமைத்துள்ளது. பழம்பெரும் பாரதத்தின் சநாதன தர்மத்தில் வேர்கொண்ட அவருடைய அன்பு, எல்லா பிரிவினைகளுக்கும் அப்பாற்பட்டு, அவர் தொடுகிற அனைத்து மனிதர்களையும் ஒன்றிணைக்கிறது.
கேரளத்தின் மிக உயர்ந்த அறிவு ஜீவிகளில் ஒருவரும், விவேகானந்த கேந்திரத்தின் தலைவருமான ஸ்வர்கிய பி. பரமேஸ்வரன்ஜிக்கு நன்றி சொல்ல வேண்டும்; அவரால்தான் ஏறத்தாழ முப்பதாண்டுகளுக்கு முன் அம்மாவை முதன் முதலாகத் தரிசித்தேன். அதனைத் தொடர்ந்து, அவருடைய கருணையும் வழிகாட்டுதலும் எனக்குக் கிடைத்தது.
அனைைத்து ஹிந்து ஆன்மிக மற்றும் சேவை அமைப்புகளை ஒன்றுதிரட்டி, அவற்றின் சேவைகளை வெளிப்படுத்தும், ஹிந்து வாழ்க்கை முறையில் ஊறிய தத்துவங்கள் மூலம் பெற்றோர்கள், மூத்தவர்கள் மற்றும் பெண்களுக்கு மதிப்பளிக்கிற சூழலை மேம்படுத்தும் என்னுடைய முயற்சிக்கு அவர் பெரிதும் ஆதரவளித்தார்.
அம்மாவுடனான எனது கலந்துரையாடல்கள் அதிகமானபோது, நான் வியந்துபோகிற அளவில், அவர் ஓர் ஆன்மீக குரு; அதற்கும் மேலானவர் என்பதை நான் உணர்ந்துகொண்டேன். அவரது கட்டுமானப் பொறியியல் பற்றிய அவருடைய புரிதலானது அவரது பிரம்மாண்டமான மருத்துவமனைகள் மற்றும் சிறப்பு மையங்களை உருவாக்கும் கட்டடக் கலைஞர்களையும் பொறியாளர்களையும் வியப்பில் ஆழ்த்தக் கூடியது என்பதையும் அவரது அறிவியலின் நுட்பமான அறிவோ, அவரது நேனோ அறிவியல் ஆய்வகங்களில் உள்ள ஆராய்ச்சியாளர்களைத் திகைப்பில் ஆழ்த்தக் கூடியதென்றும் நான் கேள்விப்பட்டிருக்கிறேன்.
என்றாலும், தனியாக ஒரு முறை, ஒரு நாள் இரவு, பின்னேரம் வரை, அந்த அமைப்பின் ஒட்டுமொத்த நிதி நிலைமைகள், அதன் வருமானம் மற்றும் செலவுகள், தேய்வு, உபரி நிதி, தற்போதைய மற்றும் எதிர்காலத் திட்டங்கள் மற்றும் அவற்றுக்கான பட்ஜெட் ஆகியவை பற்றிய புள்ளிவிவரங்களை விரல் நுனியில் விளக்கியபோது நான் திகைத்துப் போனேன்! அந்த அறிவின் பரப்பு கற்றறியப்பட்டதோ அல்லது கற்றறியப்படக் கூடியதோ அல்ல. அது மனித ஆற்றலுக்கு அப்பாற்பட்டது. அது பிரபஞ்சத்தைப் போன்றது.
அம்மா ஒரு தெய்விக அற்புதம். புரிந்துகொள்ள முடியாத ஓர் அதிசயம். மனதில் ஒரு கேள்வி எழுந்தது. அவர் எப்போதாவது தூங்குவாரா? அப்படி அவர் தூங்கினால், எப்போது? அவருக்கு நெருக்கமான ஒரு சன்னியாசி சீடரிடம் கேட்டேன். அவர் என்னிடம் கூறினார், “எனக்குத் தெரியவில்லை. ஒரு நாள், நள்ளிரவில் விழித்துக்கொண்டேன். அவர் ஆசிரமத்தை வலம்வருவதைப் பார்த்தேன். மற்றொரு நாள், அதிகாலை 2 மணிக்கு எழுந்தேன். அவர் நடந்துகொண்டிருப்பதைக் கண்டேன். இன்னொரு நாள் அதிகாலை 4 மணி. அப்போதும் நடந்து கொண்டுதான் இருந்தார்.” அவர் இந்த ஆசிரமத்துக்கும் இந்த சமூகத்துக்கும் காவலர் – உள்ளும் புறமும் எப்போதும் விழித்திருப்பவர்.
பகவத் கீதையில் ஸ்ரீ கிருஷ்ணர் கூறுகிறார்:
या निशा सर्वभूतानां तस्यां जागर्ति संयमी |
यस्यां जाग्रति भूतानि सा निशा पश्यतो मुने:
இதன் பொருள்: எல்லா உயிரினங்களுக்கும் இரவாகிய நேரத்தில், முனி விழித்திருக்கிறார்; மற்ற உயிரினங்கள் விழித்திருக்கும் நேரமே முனிக்கு இரவு. அவர்தான் அம்மா.
[கட்டுரையாளர் - ஆசிரியர், துக்ளக் இதழ்]
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.