மெட்ராஸ் மாகாண முதல் சட்டமன்றம் (1952 - 1957): ஏராளமான முன்னுதாரணங்களின் களம்!

மெட்ராஸ் மாகாண முதல் சட்டமன்றத் தேர்தல் பற்றி...
தமிழக சட்டப்பேரவை (கோப்புப்படம்)
தமிழக சட்டப்பேரவை (கோப்புப்படம்)EPS
Updated on
5 min read

இந்த ஆண்டு (2026) தமிழ்நாடு சட்டப்பேரவைக்கான தேர்தல் ஆண்டு. தேர்தலுக்கான பரபரப்புகள் முன்கூட்டியே பரபரவெனப் பற்றிக்கொண்டுவிட்டன. இச்சூழலில், அறிஞர் அண்ணாவின் ஆட்சிக்காலத்தில் தமிழ்நாடு என மாநிலப் பெயர் மாற்றம் (1969) சட்டப்பூர்வமாக நிகழ்வதற்கு முன்பு - மெட்ராஸ் மாகாணமாக (Madras State) இருந்த மாநிலத்தில் - விடுதலைபெற்ற இந்தியாவின் முதல் பொதுத்தேர்தல் மூலம் 1952இல் அமைந்த மெட்ராஸ் மாகாண சட்டமன்றம் (1952 - 1957),  அரசியலில், சட்டமன்ற வரலாற்றில் ஏராளமான முன்னுதாரணங்களின் களமானது குறித்து ஒரு மீள் பார்வை காணலாம், வாங்க.

நாடாளுமன்றத்துக்கும், மாநிலச் சட்டமன்றங்களுக்கும் சேர்த்தே நடைபெற்ற முதல் பொதுத் தேர்தல்,1952 என வரலாற்றுக் குறிப்புகளில் காணப்பட்டாலும், அந்தத் தேர்தல்கள் நவம்பர் 1951 முதல் மார்ச் 1952 வரை நடைபெற்றதால், இந்தியத் தேர்தல் ஆணையம் அத்தேர்தலை 1951 - 1952 தேர்தல் என்றே குறிப்பிடுகிறது.. அப்போதைய மெட்ராஸ் (சென்னை) மாகாணம் என்பது தற்போதைய தமிழ்நாடு, ஆந்திரம், கர்நாடகம், கேரளத்தின் சில பகுதிகள் என பரந்து விரிந்த பெரும்பரப்பாக 309 சட்டமன்றத் தொகுதிகள் கொண்டதாக இருந்தது. இதில் 66 தொகுதிகள் இரட்டை உறுப்பினர் தொகுதிகள். ஆக, மொத்த சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 375 என இருந்தது.

முதல் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில், மொத்த வாக்காளர்கள் 3.66 கோடி; வாக்குப் பதிவு 54.75% என்கின்றன புள்ளி விவரங்கள். மூன்று காங்கிரஸ் உறுப்பினர்கள் (திருவாளர்கள் எம். பக்தவத்சலம், திருவள்ளூர், பி. சுப்பராயன், சேலம், ஏ. இராமசாமி முதலியார் மெட்ராஸ் தெற்கு) போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஆகவே, தேர்தல் 372 இடங்களுக்கு மட்டுமே நடைபெற்றது. (இணைய வளம், தொழில்நுட்பம், காளான்களாக மலிந்து விரவிக்கிடக்கிற சமூக ஊடகங்களின், முறைப்படுத்தப்படாத கூக்குரல் செயல்பாடுகளால் - அரசியல் களம் மிகச் சூடாகிவரும் தற்போதைய காலங்களில் தமிழக சட்டமன்றத்திற்கு யாரேனும் போட்டியில்லாமல் தேர்ந்தெடுக்கப்படுவது என்பதெல்லாம் கனவிலாவது நடக்குமா இங்கு என்பது அடர்ந்த சந்தேகமே!)

1952 தேர்தலையடுத்த முதல் சிக்கல் எந்தவொரு கட்சியும் ஒரு அரசமைக்கத் தனிப் பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதில் தொடங்கியது. இச்சிக்கலின் தொடர் விளைவுகளில் முதன்மையானதாக 1950 இல் இந்திய அரசமைப்புச் சட்டம் (Constitution of India) நடைமுறைக்கு வந்த பின்னர் முதல்முறையாகத், தேர்தலில் போட்டியிடாத ஒருவர் மாநிலத்தில் முதலமைச்சரான முன்னுதாரணம் நிகழ்ந்தது.

சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை

அடுத்து, ஒரு மாநிலத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களின் ஒரு பகுதியினர் புதிதாக அமையும் வேறு மாநிலங்களுக்கு ‘டிரான்ஸ்பர்’ செய்யப்பட்ட அசாதாரணம் ஒருமுறையல்ல; இரண்டுமுறை நிகழ்ந்தது.

முதலாவதாக, அக்டோபர் 1, 1953 இல், கூட்டு சென்னை மாநிலத்தின் (Composite Madras state) தெலுங்கு பேசும் பகுதிகளை உள்ளடக்கிய ஒரு தனி ஆந்திர மாநிலம் உருவாக்கப்பட்டது; பெல்லாரி மாவட்டத்தின் கன்னடம் பேசும் பகுதி அப்போதைய மைசூர் மாநிலத்துடன் இணைக்கப்பட்டது. இதனால் அந்தந்தப் பகுதிகளைச் சேர்ந்த சென்னை மாகாண சட்டமன்ற உறுப்பினர்கள் தமது மாநிலங்களுக்கு டிரான்ஸ்பர்  செய்யப்பட்டதால், சட்டப்பேரவை உறுப்பினர்களின் எண்ணிக்கை 231 ஆகக் குறைந்தது. இரண்டாவதாக, நவம்பர் 1, 1956 இல் மாநில மறுசீரமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்ததன் விளைவாக, முந்தைய மலபார் மாவட்டத்தில் இருந்த தொகுதிகள் கேரள மாநிலத்துடன் இணைக்கப்பட்டன. இதனால் சட்டமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை 190 ஆகச் சரிந்தது.

1952 இல் 375 ஆக ஆரம்பித்து 1956 நவம்பரில் 190 ஆகத் தேய்ந்தது முதல் மெட்ராஸ் சட்டமன்றம்.

1956 ஆம் ஆண்டின் இந்திய மறுவரையறை ஆணையத்தால் உருவாக்கப்பட்ட நாடாளுமன்ற, சட்டமன்றத் தொகுதிகளின் புதிய எல்லை நிர்ணய ஆணை 1956 இன்படி, கேரளத்தின் தமிழ் பேசும் பகுதிகள் (இன்றைய கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் செங்கோட்டை வட்டம் ஆகியவை) சென்னை மாநிலத்துடன் சேர்க்கப்பட்டதால் சட்டமன்றத்தின் உறுப்பினர் எண்ணிக்கை 205 ஆக உயர்த்தப்பட்டது. ஆனால்,1957 தேர்தல்கள் விரைவில் நடைபெற இருந்ததால் 190இல் இருந்து 205 ஆகக் கூடிய இடங்களுக்குத் தேர்தல் நடத்தப்படவில்லை. 

1957 தேர்தல்கள் 205 தொகுதிகளுக்கு நடத்தப்பட்டன. 1959 ஆம் ஆண்டில், ஆந்திரப் பிரதேசம் மற்றும் சென்னை (எல்லைகளை மாற்றுதல்) சட்டம் 1959 இன் விளைவாக, ஆந்திரப் பிரதேச சட்டமன்றத்திலிருந்து ஒரு உறுப்பினர் சென்னைக்கு ஒதுக்கப்பட்டார். 1962 தேர்தல்கள், இந்த 206 தொகுதிகளுக்கு நடத்தப்பட்டன. 1965 ஆம் ஆண்டில், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றத் தொகுதிகள் மறுவரையறை ஆணை, 1965 இன் மூலம் சட்டமன்றத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் எண்ணிக்கை 234 ஆக உயர்த்தப்பட்டது. ஆங்கிலோ-இந்திய சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்த ஒரு நியமன உறுப்பினரும் இந்த சட்டமன்றத்தில் உள்ளனர். 1965 முதல், உறுப்பினர்களின் எண்ணிக்கை 234 மாறாமல் உள்ளது.

பெல்லாரி மற்றும் ஆந்திரத் தொகுதிகளைச் சேர்ந்த அமைச்சர்கள் நாகண்ணா கவுடா, சங்கர ரெட்டி, பட்டபிராமா ராவ், சஞ்சீவையா மற்றும் ரங்கா ரெட்டி ஆகியோர் 1953 செப்டம்பர் 30 இல் ஆந்திர மாநிலம் பிரிந்து தனி மாநிலமாக மாறுவதற்கு ஒரு நாள் முன்பு பதவி விலகினர். பின்னர்,1956 ஆம் ஆண்டு மாநில மறுசீரமைப்புச் சட்டத்தைத் தொடர்ந்து, அத்தவர் பாலகிருஷ்ணா ஷெட்டி (ஏ. பி. ஷெட்டி) 1956 மார்ச் 1 ஆம் தேதி அமைச்சரவையிலிருந்து விலகினார்,

சட்டமன்ற இடமாற்றங்கள்.

தமிழ்நாடு சட்டமன்றம் சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் தற்போது உள்ளதை அறிவோம். முதல் சட்டமன்றத்தில் (1952-57) நிகழ்ந்த எண்ணிக்கை ஏற்றத்தாழ்வுகளால் சட்டமன்றமும் சில இடமாற்றங்களைக் காணவேண்டிய அவசியங்கள் ஏற்பட்டன. 1952 ஆரம்பத்தில் சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 375 ஆக இருந்ததால் செயின்ட் ஜார்ஜ் கோட்டையிலிருந்து, அரசாங்க எஸ்டேட் வளாகத்தில் (Government Estate Complex) உள்ள தற்காலிக இடத்திற்கு, (முன்னர் கலைவாணர் அரங்கம் இருந்த கட்டிடம்) மார்ச் 1952இல் சட்டமன்றம் நகர்த்தப்பட்டது. மொழிவாரி மாநிலங்கள் மறுசீரமைப்பு, ஆந்திர மாநில உருவாக்கம் போன்ற நிகழ்வுகளால் சட்டமன்றத்தின் எண்ணிக்கை 190 ஆகக் குறைந்த பின்னர் முதல் சட்டமன்றம் மீண்டும் புனித ஜார்ஜ் கோட்டைக்கு 1956ல் திரும்பியது.

ஆளுநர், முதல்வர், பேரவைத் தலைவர் மாற்றங்கள்

முதல்சட்டசபை தனது காலத்தில் மூன்று ஆளுநர்கள், (திருவாளர்கள் பவநகர் மகாராஜா, கிருஷ்ண குமார் சிங் ஜி, ஸ்ரீ பிரகாசா, ஏ.ஜே. ஜான்) இரண்டு முதலமைச்சர்கள், (ராஜாஜி, காமராஜர்) இரண்டு பேரவைத் தலைவர்களைக் (திருவாளர்கள் ஜெ. சிவசண்முகம் பிள்ளை, என். கோபால மேனன்) கண்டது.

அரசியல்அமைப்புச் சட்டத்தின்படி (1950), முதல் சட்டசபை அமைவதற்கு முன்வரை, 1935 இந்திய அரசாங்கச் சட்டப்படி (Government of India Act) அமைந்திருந்த அரசின் முதலமைச்சராக திரு. பி.எஸ். குமாரசாமிராஜா இருந்தார். 1952இல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட அவர் தோல்வியடைந்தார். ஆனால், நிலவிவந்த மரபுகளின்படி, அடுத்த அமைச்சரவை அமையும்வரை காபந்து அரசின் முதல்வராகத் தொடர்ந்தார்.

சென்னை மாகாணத்தில் சட்டமன்றம், பேரவை (அசெம்ப்ளி), மேலவை (கவுன்ஸில்) என இருஅவைகள் கொண்டதாக (Bicameral) -- 1982 இல் மேலவை கலைக்கப்பட்டதுவரை – இருந்தது., முக்கிய முடிவுகள் எடுக்கும் அதிகாரமற்ற நிலையில் காபந்து அரசின் முதல்வராகத் தொடரும் குமாரசாமி ராஜா மிக அசாதாரணமான, முன்னுதாரணமான ஒரு காரியத்தை எந்தத் தயக்கமும் காட்டாமல் செய்தார். அது, மேலவைக்கு நான்கு உறுப்பினர்களை [ராஜகோபாலாச்சாரி (ராஜாஜி), முகமது உஸ்மான், வி.பாஷ்யம் அய்யங்கர் மற்றும் ஓ.பி.ராமசாமி ரெட்டியார்] ஆகியோரை சட்டமேலவைக்கு நியமனம் செய்ய ஆளுநருக்குப் பரிந்துரை செய்ததாகும்.

ஆளுநராக இருந்த மகாராஜா கிருஷ்ண குமார்சிங் ஜி இவ்விசயத்தில் தயக்கம் காட்டி, முதல் முறையாகக் குடியரசுத் தலைவர் கருத்தறிய டாக்டர் ராஜேந்திர பிரசாத்துக்குத் தக்க பரிந்துரைக்காக அனுப்பி வைத்தார். தேர்தலில் போட்டி யிடாத ஒருவரை (ராஜாஜி) , சட்டமேலவைக்கு நியமனம் செய்து, முதல்வராகப் பதவிப் பிரமாணம் செய்து வைப்பது ஏற்கத் தக்கதுதானா என்பது  ஆளுநர் கிருஷ்ண குமார்சிங் ஜியின் தயக்கமாகும். இவ்விசயத்தில் இழுபறி நீடித்தது. ஒன்றிய அமைச்சராக இருந்த ஶ்ரீபிரகாசாவை ஆளுநராக நியமித்தபின் முடிவுக்கு வந்தது. மார்ச் 31 1952இல் ராஜாஜி மற்றும் மூவர் சட்டமேலவைக்கு ஆளுநரால் நியமிக்கப்பட்டனர். அடுத்தநாள், ஆட்சியமைக்க, சட்டமன்ற காங்கிரஸ் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த ராஜாஜிக்கு ஆளுநர் அழைப்பு விடுக்கப்பட்டது. அப்பட்டமான அரசியலமைப்புச் சட்டவிதிகள் மீறப்பட்ட முன்னுதாரணம் நிகழ்ந்தது.

அது யாதெனில், இதற்கிடையில், சென்னை மாகாணத்தில் காங்கிரஸ் அமைச்சராக இருந்த டி. பிரகாசம் கட்சியிலிருந்து அதிருப்தியில் வெளியேறி, மெட்ராஸ் கிசான் மஜ்தூர் பிரஜாபார்ட்டி (KMPP) என்ற கட்சியில் சேர்ந்து 1952 தேர்தலில் போட்டியிட்டுத் தோற்றார். ஆனாலும், அவருக்கு சட்டமன்றத்தில் இரண்டாவது பெரிய கட்சியாக வெற்றி பெற்றிருந்த கம்யூனிஸ்ட் உட்பட 166 பேருள்ள ‘யுனைட்டட் டெமாக்ரடிக் ஃபிரண்ட்’ (யு.டி.எஃப்) என்ற கூட்டமைப்பின் ஆதரவு இருந்ததால் ஆட்சியமைக்க உரிமை கோரியிருந்தார். காங்கிரஸுக்கு அப்போது 152 இடங்களே இருந்தன. மகாராஜா கிருஷ்ண குமார்சிங்ஜி முடிவெடுக்க விரும்பவில்லை.

அடுத்து வந்த ஆளுநரான ஶ்ரீபிரகாசா, காங்கிரஸுக்குச் சாதகமாகவே முழுமூச்சுடன் செயல்பட்டார். பெரும்பான்மையுடன் முன்நின்று உரிமைகோரிய டி. பிரகாசம் தரப்பின் கோரிக்கையைப் புறந்தள்ளி –அரசியலமைப்புச் சட்டத்தை மீறி– தேர்தலில் போட்டியிடாத இராஜாஜியைத் தலைவராகத் தேர்ந்தெடுத்த காங்கிரஸ் அமைச்சரவையை அமைக்கத் துணை நின்றார். முதல் சட்டமன்றத்திலேயே, ஆட்சியமைக்கப் பெரும்பான்மை அணிகோரிய உரிமை பரிசீலனை ஏதுமின்றிப் புறந்தள்ளப்பட்டு, ஒன்றிய அரசின் மறைமுகத் தலையீடு நிகழ்ந்து, வேண்டியவர்களுக்குச் சாதகமாக ஆளுநர் நடக்கும் முன்னுதாரணத் தொடக்கம் நிகழ்ந்தது.

கவலையளிக்கும் விதமான அப்பட்டமான அரசியல் குதிரை பேரம் முன்னுதாரணமாகி, எம்.ஏ. மாணிக்க வேலுநாயக்கர் தலைமையிலான  ‘காமன்வீல் பார்ட்டி’ காங்கிரசோடு இணைக்கப்பட்டது. இணைப்புக்கான அரசியல் பேரத்தின்படி மாணிக்கவேலுநாயக்கருக்கு அமைச்சரவை இடமும் வழங்கப்பட்டது. 

முன்னுதாரணங்கள் பல

இதன் முன்னர் குறிப்பிட்ட்டுள்ள அசாதாண செயல்பாடுகள் முன்னுதாரணங்களுடன் கீழ்க்காண்பவைகளும் குறிப்பிட உரியன.

·         சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடாத ஒருவரை  – இடைத்தேர்தலில் போட்டியிடவும் மாட்டேன் என்று அடம்பிடித்த ஒருவரை(ராஜாஜி) சட்டமன்றக் கட்சித் தலைவராக (முதலமைச்சராக) காங்கிரஸ் கட்சி தேர்ந்தெடுத்த முன்னுதாரணம்;

·         சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகிக் கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் வரை அரசியல் இழுபறிகள் நீடித்து அதன்பின் அரசு அமைந்த முன்னுதாரணம்;

·         ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்தும் அமைச்சரவை அமைப்பதில் காங்கிரஸ் குழுக்களிடையே மற்றும் பிற கட்சிகளைச் சேர்ப்பதில் நிலவிய இழுபறிகளால் நத்தை வேகத்தில் - ஒன்பது நாட்களுக்குப்பிறகே - ராஜாஜி அரசு பதவியேற்றுக்கொண்ட முன்னுதாரணம்;

·         முதலமைச்சர் இடைத்தேர்தலில் போட்டியிடமாட்டேன் என்பதில் அசையா உறுதியாக நின்றதால், வேறு வழியில்லாமல், அவரைமட்டும் மேலவைக்கு நியமனம் செய்தால் வெளிப்படையாகத் தெரியுமே என்பதற்காக, மேலும் மூவரையும் சேர்த்துச் சாதாரண நிகழ்வுபோல சட்டமேலவைக்கு ஆளுநர் நால்வரை நியமனம் செய்த முன்னுதாரணம்;

·         காங்கிரஸ் அரசே மாநிலத்தில் அமைக்கப்பட வேண்டும் என்பதற்காக முனைப்போடு பத்திரிகைத் துறையின் இரு ஜாம்பவான்கள் (பத்திரிகைக்குழும உரிமையாளர் திரு. ராம்நாத் கோயங்கா, தினமணி ஆசிரியர் திரு. ஏ.என். சிவராமன் ஆகியோர்) கிட்டத்தட்ட அரசியல் ஓய்விலும், தேர்தல்களில் பணப்புழக்கம் அதிகரித்து வருவது குறித்த அதிருப்தி காரணமாகத் தேர்தல் அரசியலில் இருந்து விலகி நின்றவருமாகிய, 73 வயது இராஜாஜியை முதலமைச்சர் பொறுப்பேற்கச் சம்மதிக்கச்செய்து, அரசு அமைப்பதில் பத்திரிக்கையாளர்களது பங்கு, தலையீடு, முனைப்புகளுக்கு முன்னுதாராணம்;

·         நாட்டின் உயர்பொறுப்பிலிருந்த ஒருவரை (சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாக பதவி வகித்த இராஜாஜியை) சென்னை மாகாண முதலமைச்சராக்கிய முன்னுதாரணம்; (இதனை ‘மை டவுன்ஃபால்’ (My Downfall) என இராஜாஜியே தனது டைரியில் 31-3-1952 தேதியில் கைப்பட எழுதி வைத்திருப்பதாக அவரது பேரன் இராஜ்மோகன் காந்தி குறிப்பிட்டுள்ளார். (ஆதாரம்.ராஜாஜி: எ லைஃப், பென்குயின், 1997, பக் 358)

தமிழ்நாட்டில் முதலமைச்சராக மூன்று தவணைகளில் பணியாற்றிய ஒருவர், ஒருவேளை இம்முன்னுதாரணத்தைப் பின்பற்றித்தானோ, என்னவோ, சந்தர்ப்பக்காற்று சாதகமாக வீசி அவரது அமைச்சரவையிலே அமைச்சராக இருந்த இன்னொருவர் முதல்வரானபோது, அந்த அமைச்சரவையில் துணை முதல்வராக இறங்கியதும் பிற்காலத்தில் கண்டோம்.

·         1952 முதல் தான் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றங்கள், நாடாளுமன்றம் ஆகியவற்றின் இருப்புக்காலம் முதல்கூட்டத் தேதியிலிந்து ஐந்தாண்டுகள் என முன்னுதாரணமாகியது. அதற்கு முன் அவற்றின் இருப்புக்காலம் மூன்றாண்டுகள் மட்டுமே.

·         முதல் சட்டமன்றம் 31 மார்ச் 1957இல் கலைக்கப்பட்டதும் ஒரு முன்னுதாரணமே. (அதன் ஆயுட்காலம் மே 2, 1952 வரை இருக்க உரியது.)

·         முதல் சட்டமன்றம் தனது காலத்தில் 9 கூட்டத்தொடர்களில் (Sessions) 314 வேலைநாட்களில் (1571 மணி 33 நிமிடங்கள்) செயல்பட்டுள்ளது. இதில் 12 இரவு நேர அமர்வுகளும் அடங்கும். முன்னுதாரணமாக 10-2-1955இல் ஒரு இரகசிய அமர்வும் (Secret Sitting/ In-camera Sitting) நடைபெற்றுள்ளது. (இரகசிய அமர்வின்போது சட்டமன்ற உறுப்பினர்கள்தவிர யாரும் – செய்தியாளர்கள், பார்வையாளர்கள், அரசுத்துறை அலுவலர்கள், பணியாளர்கள் எவரும் – அவைக்குள், பார்வையாளர் மாடம் உட்பட எப்பகுதியிலும் இருக்க அனுமதி இல்லை.)

·         வழக்கமாக தற்காலிக பேரவைத்தலைவர் ஆளுநர் முன், உறுப்பினர்கள் பதவியேற்பு சட்டமன்றத்தில், அல்லது பேரவைத்தலைவர் அறையில் நிகழும். மிக அசாதாரண முன்னுதாரணமாக, முதல் சட்டமன்ற உறுப்பினர் ஒருவருக்கு மே 5, 1952இல், அவரது உடல்நிலை காரணமாக, உறுப்பினரின் இல்லத்திலேயே பதவிப்பிரமாணம் நடைபெற்றுள்ளது.

[ஆதாரம்: Madras Legislative Assembly, 1952-1957 A Review, Legislative Assembly Department Madras-2, March 1957]

மாநிலம் வெகு விரைவில் பதினேழாவது தமிழ்நாடு சட்டமன்றத்தேர்தல்களை (2026இல்) எதிர்நோக்கியுள்ள நிலையில், முதல் சட்டமன்றத்தேர்தல் (1952), முதல் சட்டமன்றம் (1952-1957) விளைவித்துள்ள அசாதரண நிகழ்வுகள் முன்னுதாரணங்களைத் திரும்பிப் பாரக்கையில் வியப்பு மிஞ்சுகிறது.

நிகழ்ந்தவைகளில் இருந்து கற்றுக்கொண்டு 17ஆவது சட்டமன்றத்தை அமைக்கும் எஜமானர்களான வாக்காளர்கள் தமக்குச் சிக்கல்கள் தராத, உறுதிப்பெரும்பான்மை கொண்ட தமிழ்நாடு அரசை அமைத்துக் கொள்வார்கள் என்ற நம்பிக்கை நிறைந்துள்ளது. மறவாது, தவறாது வாக்களித்து, சிறந்த மக்களாட்சி உதயமாக உறுதிகொள்வோம்.

**

[கட்டுரையாளர் - கல்லூரி, பல்கலைக்கழகப் பணி நிறைவுக்குப் பின் உயர் நீதிமன்ற வழக்குரைஞர்]

Summary

The First Legislative Assembly of Madras (1952 - 1957): A Field of Numerous Precedents

தமிழக சட்டப்பேரவை (கோப்புப்படம்)
அண்ணாவின் அறிவுத் தீ பரவட்டும்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com