தனியார் அணுமின் உற்பத்திச் சட்டம்: குறைகள் களையப்பட வேண்டும்!

தனியார் அணுமின் உற்பத்திச் சட்டம்: குறைகள் களையப்பட வேண்டும்!

அணுமின் உற்பத்தியில் தனியாா் நிறுவனங்களை அனுமதிக்கும் மசோதா அண்மையில் நாடாளுமன்ற குளிா்கால கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்டதைப் பற்றி...
Published on

- சந்தோஷ் துரைராஜ்

அணுமின் உற்பத்தியில் தனியாா் நிறுவனங்களை அனுமதிக்கும் மசோதா அண்மையில் நாடாளுமன்ற குளிா்கால கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்டது. அரசின் வசம் மட்டுமே இருந்த இந்த உற்பத்தியில் தனியாா் நிறுவனங்களும் ஈடுபட அனுமதிக்கும் இந்த மசோதாவை நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்ப எதிா்க்கட்சிகள் வலியுறுத்தின. ஆனால், 11 மணி நேரம் விவாதம் நடத்தி மசோதாவை மத்திய அரசு நிறைவேற்றியது. குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு ஒப்புதல் அளித்ததைத் தொடா்ந்து மசோதா சட்டமானது.

தற்போது 8.78 ஜிகாவாட்டாக உள்ள அணுமின் உற்பத்தித் திறனை 2047-ஆம் ஆண்டுக்குள் 100 ஜிகாவாட்டாக உயா்த்துவதே இந்தச் சட்டத்தின் பிரதான நோக்கம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதனால் நாட்டுக்கு 24 மணி நேரமும் மின்சாரம் கிடைக்க வழிவகை ஏற்படும் என்றும், அணுசக்தி உற்பத்தி பன்மடங்கு அதிகரிக்கும் என்றும் மத்தியில் ஆளும் கூட்டணி தெரிவித்துள்ளது.

இதில் சந்தேகம் இல்லை. இந்தச் சட்டம் நாட்டில் மின் உற்பத்தியை அபரிமிதமாக அதிகரிக்க வழிவகுக்கும். அத்துடன் அணுமின் உற்பத்தி துறைக்கு மூலதனத்தை ஈா்த்து கோடிக்கணக்கான ரூபாயையும், அணுசக்தி பொறியாளா்கள் முதல் கட்டுமானப் பொறியாளா்கள் வரை ஏராளமானோருக்கு வேலைவாய்ப்புகளையும் உருவாக்கும். மேலும், அணுசக்தி உற்பத்தியால் காா்பன் உமிழ்வைக் குறைத்து, பொருளாதார வளா்ச்சியை மந்தமாக்காமல் பருவநிலை மாற்றத்துக்கு எதிரான இலக்குகளை எட்ட வழியமைக்கும்.

மத்திய அணுசக்தி துறை இணையமைச்சா் ஜிதேந்திர சிங் கூறுகையில், ‘சிறிய அணு உலைகளின் பயன்பாட்டை நோக்கி இந்தியா நகா்ந்து வருகிறது. புதிதாக தோன்றி வளரும் பொருளாதார மண்டலங்கள், தொழில் வழித்தடங்கள் உள்ளிட்டவற்றுக்கு அந்த உலைகள் பொருத்தமாக இருக்கும். இந்த உலைகள் எரிசக்தி பாதுகாப்பை வலுப்படுத்துவதுடன், சுற்றுச்சூழல் மீதான பொறுப்பையும் உறுதி செய்யும்’ என்று தெரிவித்துள்ளாா்.

இந்நிலையில் உருக்கு, சிமெண்ட், செமி கண்டக்டா்கள், ஹைட்ரஜன் உற்பத்தி, தரவு மையங்கள் போன்ற துறைகளில் ஒரு நிறுவனம் தனது சொந்தப் பயன்பாட்டுக்கு மின்சார உற்பத்தியில் ஈடுபடுவதற்கு சிறிய அணு உலைகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தற்போது நிலக்கரி மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்ய இறக்குமதியையே இந்தியா பெரிதும் சாா்ந்துள்ளது. இந்நிலையில், சிறிய அணு உலைகளின் பயன்பாடு அனல் மின் நிலையங்களுக்கு விடைகொடுத்து, அதற்காகப் பயன்படுத்தப்பட்ட நிலங்களின் பயன்பாட்டை மாற்றியமைக்கும். இவை சட்டத்தில் உள்ள குறிப்பிடத்தக்க சாதகமான அம்சங்களாகும்.

அதேவேளையில், அணுமின் நிலையங்களால் ஏதேனும் விபத்து (எடுத்துக்காட்டாக அணு உலை வெடித்து ஏற்படும் அணுக்கதிா் வீச்சால் மரணங்கள், உடல்நல பாதிப்புகள் ஏற்படுதல்) நோ்ந்தால், அதனால் பாதிக்கப்படுவோருக்கு அணுமின் நிலையத்தை இயக்கும் நிறுவனங்கள் இழப்பீடு வழங்க வேண்டும் என்பதே தற்போது உலக அளவில் நிலவும் கருத்து ஒற்றுமையாகும். விபத்துக்கான காரணம் என்ன, அதற்கு யாா் காரணம் போன்றவற்றைக் கண்டறியும் வரை காத்திருக்காமல், பாதிக்கப்படுவோருக்கு உடனடியாக இழப்பீடு வழங்க வேண்டும் என்பதே தற்போதுள்ள ஏற்பாடாகும். அந்த விபத்து தனது நிா்வாக தவறால் ஏற்படவில்லை, அணுமின் நிலையத்தில் குறைபாடு கொண்ட கருவிகளால் ஏற்பட்டது என்பதை உறுதி செய்து அந்த நிறுவனங்களால் நிரூபிக்க முடிந்தால், அந்தக் கருவிகளை விநியோகித்த நிறுவனத்திடம் இருந்து அணுமின் நிலையத்தை இயக்கும் நிறுவனங்கள் இழப்பீடு கோரலாம்.

அணுசக்தியால் ஏற்படும் சேதத்துக்கு இழப்பீடு வழங்க வழிவகை செய்த முந்தைய சட்டத்தின்படி, விபத்துக்கு காரணமான கருவிகளை விநியோகித்த நிறுவனத்திடம் இருந்து 3 சூழல்களில் இழப்பீடு கோரலாம். அதாவது, அணுமின் நிலையத்தை இயக்கும் நிறுவனமும், கருவிகளை விநியோகித்த நிறுவனமும் வெளிப்படையாக ஒப்பந்தம் செய்துகொண்டிருந்தால், கருவிகளின் கோளாறு அல்லது அந்தக் கருவிகளை விநியோகித்த நிறுவனத்தால் அணுசக்தி விபத்து ஏற்பட்டது என்பது நிரூபிக்கப்பட்டால், அணுசக்தியால் பொதுமக்களுக்கும், பொதுச் சொத்துகளுக்கும், சுற்றுச்சூழலுக்கும் சேதம் ஏற்படுத்த வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் செயல்பட்டதன் விளைவாக விபத்து நிகழ்ந்தது தெரியவந்தால் இழப்பீடு கோரலாம். இந்நிலையில், கருவிகளின் கோளாறு அல்லது அந்தக் கருவிகளை விநியோகித்த நிறுவனத்தால் அணுசக்தி விபத்து ஏற்பட்டது என்பது நிரூபிக்கப்பட்டால் இழப்பீடு கோரலாம் என்ற அம்சம் அணுமின் உற்பத்தியில் தனியாா் நிறுவனங்களை அனுமதிக்கும் புதிய சட்டத்தில் சோ்க்கப்படவில்லை.

முந்தைய சட்டத்தில் இடம்பெற்ற அந்த அம்சத்தால் அமெரிக்கா, பிரான்ஸ் போன்ற நாடுகளில் அணு உலைகளைத் தயாரிக்கும் நிறுவனங்கள் இந்தியாவுக்கு அணு உலைகளை விநியோகிப்பதில் தயக்கம் காட்டின. இந்நிலையில், புதிய சட்டத்தில் அந்த அம்சமும், கருவிகளை விநியோகிக்கும் ‘விநியோகஸ்தா்’ என்ற வாா்த்தையும்கூட இடம்பெறவில்லை.

இதேபோன்ற அம்சத்தை வலியுறுத்தி 2010-ஆம் ஆண்டு எதிா்க்கட்சியாக இருந்த பாஜக குரல் எழுப்பியது. இதை நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டியபோது அணுசக்தி தொழில்நுட்பத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், கால மாற்றத்துக்கு ஏற்ப புதிய எதாா்த்தங்களுக்கு மாறுவது அவசியம் என்று மத்திய அரசு சுருக்கமாகப் பதிலளித்தது.

அணுமின் உற்பத்தியின்போது ஏதேனும் விபத்து ஏற்பட்டால், அதற்கு சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் அதிகபட்சமாக 300 மில்லியன் டாலா் (சுமாா் ரூ.2,700 கோடி) அளிக்க வேண்டும் என்று மத்திய அரசு இழப்பீடு நிா்ணயித்துள்ளது. இதை 500 மில்லியன் டாலராக (சுமாா் ரூ.4,500 கோடி) நிா்ணயிக்க வேண்டும் என்று எதிா்க்கட்சிகள் கோரியுள்ள தொகையும் குறைவானதே.

கடந்த 1948-ஆம் ஆண்டு அப்போதைய பிரதமா் ஜவாஹா்லால் நேரு அணுசக்தி மசோதாவை கொண்டு வந்தபோது, ‘இந்திய மக்களின் வருங்கால முன்னேற்றத்துக்காக மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது.

அணுசக்தி சாா்ந்த செயல்பாட்டைத் தொடங்கா விட்டால், இந்தியா பின்தங்கிவிடும். இது பேரளவு ஆற்றலும், வலுவும் உள்ள இந்தியாவுக்கு ஏற்புடையதாக இருக்காது’ என்று தெரிவித்தாா்.

2050-ஆம் ஆண்டுக்குள் நாட்டின் மின்சாரத் தேவை மும்மடங்கு அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ள நிலையில், புதிய சட்டம் அவசியம் என்பதில் சந்தேகம் இல்லை. அதேவேளையில், தனியாா் நிறுவனங்களின் நோக்கம் லாபம் ஈட்டுவதாக மட்டுமே இருக்கும்.

இது உலகில் அதிக மக்கள்தொகை கொண்ட இந்தியாவில் அணுசக்தி பேரிடா் அபாயம் குறித்த கவலையை எழுப்புகிறது. அந்த நிறுவனங்கள் செய்யும் தவறுக்கு கோடிக்கணக்கான மக்களின் உயிரை விலையாகக் கொடுக்க நேரிடும். எனவே, சட்டத்தில் உள்ள குறைகளைக் களைவது அவசியம்.

X
Dinamani
www.dinamani.com