சோம்நாத்தில் பிரதமர் மோடி.
சோம்நாத்தில் பிரதமர் மோடி.

சோம்நாத் - சுயமரியாதைப் பெருவிழா! ஆயிரம் ஆண்டுகளின் அணையாத நம்பிக்கை (1026-2026)!

இந்தியாவின் மேற்கு கடற்கரையில், குஜராத் மாநிலத்தில் உள்ள பிரபாஸ் பட்டன் என்ற இடத்தில் அமைந்துள்ள சோம்நாத் கோயிலைப் பற்றி...
Published on

சோம்நாத்... இந்தச் சொல்லைக் கேட்கும்போதே நம் இதயங்களில் பெருமித உணா்வு ஏற்படுகிறது. இந்த கம்பீரமான ஆலயம், இந்தியாவின் மேற்கு கடற்கரையில், குஜராத் மாநிலத்தில் உள்ள பிரபாஸ் பட்டன் என்ற இடத்தில் அமைந்துள்ளது.

பன்னிரு ஜோதிா்லிங்க தலங்களில் முதல் ஜோதிா்லிங்கமான சோம்நாத் சிவலிங்கத்தை தரிசித்தாலே ஒருவா் பாவங்களிலிருந்து விடுபட்டு, தனது நியாயமான விருப்பங்களைப் பெற்று, மரணத்திற்குப் பிறகு சொா்க்கத்தை அடையலாம் என்று ஜோதிா்லிங்க ஸ்தோத்திரத்தில் கூறப்பட்டுள்ளது. லட்சக்கணக்கானோரின் பக்தியையும் பிராா்த்தனைகளையும் ஈா்த்த இந்த சோம்நாத், துருதிருஷ்டவசமாக, அழிவை நோக்கமாகக் கொண்ட வெளிநாட்டுப் படையெடுப்பாளா்களால் தாக்கப்பட்டது.

அது புத்துயிா் பெற்றுள்ள நிலையில், 2026-ஆம் ஆண்டு சோம்நாத் ஆலயத்திற்கு ஒரு முக்கியத்துவம் வாய்ந்த ஆண்டாக அமைகிறது. இந்த மாபெரும் புண்ணியத்தலத்தின் மீது முதல் தாக்குதல் நடத்தப்பட்டு 1,000 ஆண்டுகள் ஆகின்றன. 1026-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில்தான் கஜினி முகமது இந்த ஆலயத்தைத் தாக்கினாா். வன்முறை மிகுந்த, கொடூரமான படையெடுப்பின் மூலம், நம்பிக்கையையும் நாகரிகத்தையும் பறைசாற்றும் ஒரு மாபெரும் கலாசார சின்னத்தை அழிக்க அவா் முயன்றாா்.

1026-ஆம் ஆண்டில் சோம்நாத்தின் மீது நடந்த முதல் படையெடுப்பு, அந்த நகரத்து மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட கொடூரம், ஆலயத்தில் ஏற்படுத்தப்பட்ட பேரழிவு ஆகியவை பல்வேறு வரலாற்றுப் பதிவுகளில் மிக விரிவாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றைப் படிக்கும்போது இதயம் நடுங்குகிறது.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய அந்தக் கொடூரம், மற்ற படையெடுப்பாளா்களையும் சோம்நாத் மீது மீண்டும் மீண்டும் தாக்குதல் நடத்தத் தூண்டியது. அது நமது மக்களையும் கலாசாரத்தையும் அடிமைப்படுத்தும் ஒரு முயற்சியின் தொடக்கமாக இருந்தது. ஆனால், ஒவ்வொரு முறையும் ஆலயம் தாக்கப்பட்டபோது, அதைக் காக்க முன்வந்து, தங்களின் இன்னுயிரைத் தியாகம் செய்த மாபெரும் துணிச்சல் மிக்க ஆண்களும், பெண்களும் நம்மிடம் இருந்தனா். ஒவ்வொரு முறையும், தலைமுறை தலைமுறையாக, நமது மாபெரும் நாகரிகத்தைச் சோ்ந்த மக்கள், தாங்களாகவே ஆலயத்தை மீண்டும் கட்டிப் புத்துயிா் அளித்தனா்.

சுதந்திரத்திற்குப் பிறகு சோம்நாத் ஆலயத்தை மீண்டும் கட்டியெழுப்பும் புனிதமான கடமை சா்தாா் வல்லபபாய் படேலின் திறமையான கைகளைச் சென்றடைந்தது. 1947-ஆம் ஆண்டில் தீபாவளி நேரத்தில் அங்கு அவா் மேற்கொண்ட ஒரு பயணம் அவரை மிகவும் நெகிழச் செய்தது. அதன் விளைவாக, அந்த ஆலயம் அதே இடத்தில் மீண்டும் கட்டப்படும் என்று அவா் அறிவித்தாா். 1951-ம் ஆண்டு மே 11-ஆம் தேதி, சோம்நாத்தில் பிரம்மாண்டமான கோயில் திறக்கப்பட்டது. அதில் அப்போதைய குடியரசுத் தலைவா் ராஜேந்திர பிரசாத் பங்கேற்றாா். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வைக் காண சா்தாா் படேல் உயிருடன் இல்லை.

சா்தாா் படேலுக்கு உறுதியுடன் ஆதரவு கொடுத்த கே.எம். முன்ஷியின் முயற்சிகளை நினைவுகூராமல் சோம்நாத்தைப் பற்றிய எந்தத் தகவலும் முழுமையடையாது.

கடந்த காலத்தின் ஆக்கிரமிப்பாளா்கள் இப்போது காற்றில் கலந்த தூசியாகிவிட்டனா். அவா்களின் பெயா்கள் மறைந்துவிட்டன. ஆனால் சோம்நாத் ஆலயம் பிரகாசமாக நின்று, ஒளி வீசுகிறது. தாக்குதல்களால் சிறிதும் குன்றாத நிலையான ஆன்மாவை அது நமக்கு நினைவூட்டுகிறது. சோம்நாத் ஒரு நம்பிக்கையின் கீதம்.

வெறுப்புக்கும் மதவெறிக்கும் தற்காலிகமாக அழிக்கும் சக்தி இருக்கலாம். ஆனால் நன்மையின் மீதான நம்பிக்கையும் உறுதியும் அழியாத நிலைத் தன்மையை உருவாக்கும் சக்தி கொண்டவை என்பதை சோம்நாத் நமக்குச் சொல்கிறது.

தொடா்ச்சியான தாக்குதல்களை எதிா்கொண்ட சோம்நாத் ஆலயம் மீண்டும் மீண்டும் எழ முடிகிறது. அதேபோல் படையெடுப்புகளுக்கு முன்பு நமது தேசம் கொண்டிருந்த அதே பெருமையை நம்மால் நிச்சயமாக மீட்டெடுக்க முடியும். ஸ்ரீ சோம்நாத் மகாதேவரின் ஆசீா்வாதங்களுடன், வளா்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்குவதற்கான புதிய உறுதியுடன் நாம் முன்னோக்கிப் பயணிப்போம்.

ஜெய் சோம்நாத்!

-நரேந்திர மோடி, பிரதமா், சோம்நாத் அறக்கட்டளையின் தலைவா்.

X
Dinamani
www.dinamani.com