

"கண்கள் காணாத உலகிற்கு விரல்கள் வாசிக்கும் மொழி தந்தவன்" லூயிஸ் பிரெய்லி. ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 4 ஆம் நாள், உலக பிரெய்லி நாள் கொண்டாடப்படுகிறது.
ஏன் ஜனவரி 4?
லூயிஸ் பிரெய்லி (Louis Braille) 1809 ஜனவரி 4ஆம் தேதி பிறந்தார். பார்வைத் திறனற்றோருக்கான வாசிப்பு–எழுத்து முறையான பிரெய்லி எழுத்து முறையை உலகிற்கு அளித்தார். எனவே, அவரது பிறந்தநாளை நினைவுகூரும் வகையிலும அவருக்கு மரியாதை செலுத்தும் வகையிலும் 2018 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை (UN) ஜனவரி 4-ஐ உலக பிரெய்லி நாளாக அறிவித்தது.
உலக பிரெய்லி நாளின் முக்கியத்துவம்: அணுகலின் உரிமை (Right to Accessibility)
பிரெய்லி எழுத்து முறை என்பது வெறும் புள்ளிகள் அல்ல. அது கல்வி, அறிவு, சுயநம்பிக்கை ஆகியவற்றைத் திறக்கும் கதவு. பார்வைத் திறனற்றோரின் கல்வி உரிமை அது.
இந்த நாள், பார்வைத் திறனயற்ற குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் சமமான கல்வி வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்பதை உலகிற்கு நினைவூட்டுகிறது. சுயமரியாதையும் சுயாதீனமும் பிரெய்லி வாசிக்கத் தெரிந்த ஒருவர், பிறர் உதவியின்றி நூல்கள் வாசிக்கவும் எழுதவும் சிந்திக்கவும் முடியும். அதுவே மரியாதையுடன் வாழும் உரிமை. சமத்துவ சமூகத்தின் அடையாளம் உள்ள இந்த நாள், "ஊனமுற்றவர்" என்ற பார்வையில் அல்ல;"“வேறுபட்ட திறன் கொண்டவர்" என்ற மனிதநேயப் பார்வையை வளர்க்கிறது. லூயி பிரெய்லுக்கு செலுத்தும் மரியாதை இது.
லூயிஸ் பிரெய்லி ஒரு பிரெஞ்சு கண்டுபிடிப்பாளர். அவர் பாரிஸைச் சேர்ந்தவர். பிரெய்லி எழுத்து முறையைக் கண்டுபிடித்தவர்.
வாழ்க்கை
லூயிஸ் பிரெய்லி பாரிஸ் அருகிலுள்ள கூப்வ்ரே என்ற சிறிய ஊரில் 1809 ஆம் ஆண்டு ஜனவரி 4 ஆம் நாள் பிறந்தார். அவரது தந்தை பெயர் சிமோன்-ரெனே; அன்னையின் பெயர் மோனிக் பிரெய்லி. அவரது தந்தை தோல் செருப்புகள் உருவாக்கும் தொழில் செய்தார்; சேணமும் உருவாக்கினார். ஓரளவு வசதியான குடும்பம். இந்த தம்பதியருக்கு நான்கு மகன்கள். அவர்களில் கடைசி மகனாகப் பிறந்தார் லூயிஸ் பிரெய்லி.
லூயிஸ் தந்தையின் பட்டறையில் ஏற்பட்ட விபத்திற்குப் பிறகு குழந்தை லூயிஸ் பார்வையை இழக்க நேரிட்டது. பின்பாரிஸ் பார்வையற்றோருக்கான பள்ளியில் மாணவராக இருந்தபோது, சார்லஸ் பார்பியரின் "இரவு எழுத்து" முறையை மேம்படுத்துவதன் மூலம் அவர் தனது தொட்டுணரக்கூடிய பிரெய்லி குறியீட்டை உருவாக்கினார். 15 வயதிற்குள், அவர் உயர்த்தப்பட்ட புள்ளிகளின் அமைப்பை இறுதி செய்தார். இது பார்வையற்றவர்கள் தொடுதல் மூலம் படிக்கவும் எழுதவும் அனுமதிக்கிறது. இன்று உலகளவில் பயன்படுத்தப்படுகிறது. அவர் ஓர் ஆசிரியராகவும் இசைக்கலைஞராகவும் பணியாற்றினார். 1852 இல் இறக்கும் வரை தனது கண்டுபிடிப்புக்காக வாதிட்டார்.
மூன்று வயதில் பார்வை இழந்த ஓர் இளைஞன், லூயிஸ் பிரெய்லி உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்களுக்கு ஒளி தந்த வரலாற்றுச் சின்னமாக நினைவுகூரப்படுகிறார்.
பார்வை இழந்த லூயிஸ்!
“கண்கள் காணாதவர்களுக்கு,
விரல்கள் பேசும் மொழி – பிரெய்லி.”
லூயிஸ் பிரெய்லி, பெரும்பாலும் தோல் மற்றும் கருவிகளால் சூழப்பட்ட தனது தந்தையின் பட்டறையில் விளையாடுவார். மூன்று வயதில் ஆணி தோலில் துளையிட முயற்சிக்கும்போது கருவி நழுவி, அவரது கண்ணில் குத்தி காயம் ஏற்பட்டது.
அப்போது அது பத்தொன்பதாம் நூற்றாண்டு மட்டுமே, மருத்துவம் கண்டுபிடிக்கப்படவில்லை. அப்போது அந்த காலத்தில் மருத்துவம் அவ்வளவாக முன்னேறவில்லை. எனவே லூயிஸின் தந்தைஅவரைக் குணப்படுத்த உள்ளூர் வைத்தியரிடம் அழைத்துச் சென்றனர். அவர் அதற்கு ஒரு கடு போட்டார். ஆனால் மருத்துவர் லூயிஸ் பிரெய்லியின் காயத்தைக் குணப்படுத்த முடியவில்லை. காயமடைந்த கண்ணில் கடுமையான தொற்று ஏற்பட்டது. மேலும், தொற்று அவரது இடது கண்ணுக்குப் பரவியது. இந்த நிலை சிம்பேடிக் ஆப்தால்மியா(Sympatic Opthalmia) என்று அழைக்கப்படுகிறது.
விளைவு, அவரது பார்வைத் திறனைப் பாதித்தது. ஐந்து வயதிற்குள் லூயிஸ் பிரெய்லி முற்றிலும் பார்வையை இழந்தார். ஆனால் அந்த இருள்தான் அவரால் உலகிற்கு ஒளியாக மாறியது.
அவரது பெற்றோர் அவருக்குத் தகவமைத்துக் கொள்ள உதவுவதற்காக உழைத்தனர். ஒலி மற்றும் தொடுதல் மூலம் வழிசெலுத்தவும் கற்றுக்கொள்ளவும் அவருக்குக் கற்றுக் கொடுத்தனர். அதே காலத்தில் அவரது புத்திசாலித்தனம் ஆசிரியர்களையும் புரோகிதர்களையும் கவர்ந்தது.
1800களில் துரதிர்ஷ்டவசமாக, ஒருவர் பார்வைத் திறனற்றவராக இருந்தால், உதவியற்றவராகவே இருக்க நேரிடும். மேலும் பலர் உண்மையில் வாழ்க்கையைச் சந்திக்க பிச்சை எடுப்பார்கள்.
பெரும்பாலும் மிகவும் பணக்கார குடும்பங்களில் பிறந்தவர்களால் மட்டுமே கல்வி கற்க முடிந்தது. லூயிஸின் அப்பாவுக்கு வெற்றிகரமான தோல் வியாபாரம் இருந்தது. மூன்று குழந்தைகளுக்கு உணவளிக்க வேண்டியிருந்தது. ஆனால் அவர்கள் பணக்காரர்களாக இல்லை.
இருப்பினும், லூயிஸுக்கு 9 வயதாக இருந்தபோது இவரின் கதையைக் கேள்விப்பட்ட ஒரு பெண் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு, பாரிஸில் உள்ள ராயல் இன்ஸ்டிடியூட் ஃபார் தி பிளைண்ட் பள்ளியிடம் (உலகின் முதல் பார்வையற்றோர் பள்ளி அது) அவரை ஒரு மாணவராக அழைத்துச் செல்லுமாறு வேண்டிக்கொண்டார். விரைவில், லூயிஸ் தனது முதல் நாளை, பள்ளியில் தொடங்க பாரிஸுக்குச் சென்றார். பின்னர் லூயிஸ் பிரெய்லி 10வது வயதில், பாரிஸில் உள்ள ராயல் இன்ஸ்டிடியூஷன் ஃபார் பிளைண்ட் யூத்தில்(Royal Institution forBlind Youth) உதவித்தொகை பெற்றுப் படித்தார். உலகின் முதல் பார்வையற்றோருக்கான பள்ளிகளில் ஒன்றாகும்.
பார்வையற்றோருக்கான ராயல் நிறுவனம் உலகிலேயே முதன்முதலில் நிறுவப்பட்டிருந்தாலும் அந்தக் கட்டிடம் உண்மையில் ஈரமான, இருண்ட, பாழடைந்த பழைய சிறைச்சாலையாக இருந்தது. மாணவர்களுக்கு அதிக உணவு வழங்கப்படவில்லை. அவர்கள் மாதத்திற்கு ஒரு முறை மட்டுமே குளிக்க முடியும்; மேலும் நிறைய விதிகள் மற்றும் கடுமையான தண்டனைகள் இருந்தன.
லூயிஸ் பெரிய எழுத்துக்களைக் கண்டுபிடித்து படிக்கவும் எழுதவும் கற்றுக்கொண்டார்
பள்ளியின் நிறுவனர் வலென்டின் ஹாவியின் உயர்த்தப்பட்ட எழுத்துகளால் (ஹாவி முறை) படிக்க கற்றுக்கொண்டார். ஆனால், அது மெதுவாகவும், எழுதுவதற்கு சிரமமாகவும் இருந்தது. புத்தகங்கள் அரிதாகவும், அதிக விலைக்குமாகவும் இருந்தன. லூயிஸுக்குக்கு பள்ளிப் படிப்பு அவ்வளவு மோசமாக இல்லை. அவர் நிறைய புதிய பாடங்களை (இலக்கணம், இசை மற்றும் அறிவியல் போன்றவை) கற்றுக்கொள்ள முடிந்தது. மேலும் அவர் நீண்ட காலமாக விரும்பிய புத்தகங்களைப் படிக்கவும் முடிந்தது.
சிறப்பாகத் தயாரிக்கப்பட்ட புத்தகங்களில் உயர்த்தப்பட்ட எழுத்துக்களைக் கண்டுபிடிக்க தனது விரல்களைப் பயன்படுத்துவதன் மூலம்கூட அவர் படிக்கக் கற்றுக்கொண்டார்.
அவருக்கு புத்தகங்கள் சற்று சோர்வாக இருந்தன. இருப்பினும் - உரை மிகப் பெரியதாக இருந்தது. ஒவ்வொரு வாக்கியமும் ஒரு முழுப் பக்கத்தை எடுத்துக் கொண்டது. லூயிஸ், இது போதாது என எழுதவும் விரும்பினார்!
எனவே, அவர் தடிமனான தோல் துண்டுகளால் ஆன எழுத்துக்களைப் பெற்றார். இது மெதுவான மற்றும் சிக்கலான செயல்முறையாக இருந்தது. ஆனால், அவர் தோல் எழுத்துக்களை மையில் கண்டுபிடித்து எழுதத் தொடங்கினார்.
ராணுவ பாணியில் கற்றல்
லூயிஸ் 12 வயதில், சார்லஸ் பார்பியர் என்பவர் உருவாக்கிய "இரவுப் பொருள் எழுத்து" (night writing) எனும் ராணுவத் துறை ரகசியக் குறியீடு மூலமாக ஈர்க்கப்பட்டார். இதுவே பிரெய்லி எழுத்தின் விதையாக அமைந்தது.
லூயிஸ் பள்ளிக்குச் சென்றபோது, ஓய்வுபெற்ற ராணுவத் தலைவர் சார்லஸ் பார்பியர், ராணுவ வீரர்கள் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ளப் பயன்படுத்திய ரகசியமான ஒரு முறையைப் பற்றி மாணவர்களுக்குச் சொன்னார். கூர்மையான கருவியைப் பயன்படுத்தி தடிமனான காகிதத்தில் புள்ளிகள் மற்றும் கோடுகளை குத்துவதன் மூலம் குறியீட்டில் ஒரு செய்தியை எழுதுவது இந்த முறையின் நோக்கமாகும். எதிரியிடம் அவர்கள் தங்களை விட்டுக்கொடுக்காமல் இருக்கவும் அமைதியாகவும் வெளிச்சம் இல்லாத இடத்தில் படிக்கவும்(night writing) இந்த முறையைப் பயன்படுத்தினர். இருப்பினும் இந்த முறை, ராணுவத்தில் ஒருபோதும் பிரபலமடையவில்லை என்றாலும் (வீரர்கள் அதை மிகவும் சிக்கலானதாகக் கண்டனர்), அது லூயிஸுக்குத் தேவையான உத்வேகத்தை அளித்தது. அவர் இறுதியாகப் படிக்கவும் எழுதவும் முடியும் என்பதற்கான ஒரு வழியாக இதுபோன்ற ஒரு குறியீட்டைக் கண்ட லூயிஸ், ஒரு சிறந்த அமைப்பை உருவாக்கும் பணியில் ஈடுபட்டார்.
விரல்களின் அறிவு – கண்களுக்குச் சமம்
அவர் நம்பியது ஒன்றே, "பார்வை இல்லை என்பதற்காக அறிவும் கல்வியும் மறுக்கப்படக் கூடாது". அதனால், விரல்களால் வாசிக்கக்கூடிய எழுத்து முறையை உருவாக்கும் கனவு அவருள் விதைக்கப்பட்டது. எனவேதான், பிரெய்லி எழுத்து முறை இன்றும் இது மாற்றமின்றி உலகெங்கும் பயன்படுத்தப்படுகிறது.
15 வயதில் உருவான புரட்சி
அதிர்ச்சிகரமான உண்மை என்னவென்றால் 15 வயதிலேயே பிரெய்லி எழுத்துமுறையின் அடிப்படை வடிவத்தை அவர் உருவாக்கினார்.
பிரெய்லி முறையின் பிறப்பு 1821 ஆம் ஆண்டுதான். அவர், சார்லஸ் பார்பியர்யின் 12 புள்ளி குறியீட்டை அறிந்தார். அதை மேம்படுத்தி, 6 புள்ளிகளைக் கொண்ட உயர்த்தப்பட்ட புள்ளி முறையை உருவாக்கினார். லூயிஸ் 1824 ஆம் ஆண்டில் (15 வயது) முதல் பிரெய்லி அமைப்பை தோராயமாக வெளிப்படுத்தினார். இது ஒரு மொழி அல்ல. லூயிஸ் பிரெய்லி, இரண்டு வருட காலப்பகுதியில், பல இரவுகளுக்குப் பிறகு, லூயிஸ் தனது புதிய முறையை உருவாக்குவதில் கடுமையாக உழைத்தார். அவர் தனது 15-வது வயதில், இறுதியாக குறியீட்டை உடைத்தார். பிரெய்லி பார்பியரின் குறியீட்டை எளிமைப்படுத்தி மாற்றியமைத்து, 1824 வாக்கில் மிகவும் திறமையான அமைப்பை உருவாக்கினார்.
பிரெய்லி முறை சோதனை
தனது புதிய முறையைச் சோதிக்க, லூயிஸ் பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் ஒரு செய்தித்தாளில் இருந்து ஒரு கட்டுரையைப் படிக்கச் சொன்னார். வார்த்தைகள் வாசிக்கப்பட்டவுடன், லூயிஸ் தனது பிரெய்லி முறையைப் பயன்படுத்தி ஒவ்வொரு வார்த்தையையும் பதிவுசெய்து, பின்னர் அதை மீண்டும் மீண்டும் கூறினார். தலைமை ஆசிரியரிடம் வார்த்தைக்கு வார்த்தை திரும்பத் திரும்பச் சொன்னார். பார்வையற்றோருக்கான ஒரு புதிய வாசிப்பு மற்றும் எழுதும் முறையை உருவாக்குவதில் தான் வெற்றி பெற்றதை நிரூபித்தார். தலைமை ஆசிரியருக்கோ மகிழ்ச்சியோ மகிழ்ச்சி .
6 புள்ளிகளால் ஆன இந்த முறை, எழுத்துகள், எண்கள், இசை, கணிதம் அனைத்தையும் வாசிக்க உதவியது. ராணுவ குறியீட்டில் இருந்து கல்வி மொழி பிரெய்லி முறை, பிரெஞ்சு ராணுவத்தின் “Night Writing” எனும் ரகசிய குறியீட்டிலிருந்து ஊக்கம் பெற்றது.
6 புள்ளிகளின் மாயம்: அவர் உருவாக்கிய அற்புதமான கண்டுபிடிப்பு 6 புள்ளிகள் மட்டுமே! 3x2 அமைப்பில் அமைந்த இந்தப் புள்ளிகள், 64 வெவ்வேறு சேர்க்கைகளால் எழுத்துக்கள், எண்கள், இசைக்குறிகள் அனைத்தையும் குறிக்கின்றன! அவரது அமைப்பு விரல்களால் உணரக்கூடிய ஒன்று முதல் ஆறு உயர்ந்த புள்ளிகளின் வடிவங்களைப் பயன்படுத்துகிறது.
6 புள்ளிகள் மட்டுமே கொண்ட பிரெய்லி மொழி அமைப்பை, எளிமையாகவும், வேகமாகவும் மாற்றி, உலகளாவிய கவி மொழியாக மாற்றியவர் பிரெய்லி. அவர் உயிருடன் இருக்கும்போது அவ்வளவாக அவருக்கு அங்கீகாரம் இல்லை. லூயிஸ் பிரெய்லி 15 வயதிலேயே இந்த முறையை உருவாக்கி இவ்வளவு பெரிய கண்டுபிடிப்பை, சாதனையைச் செய்திருந்தாலும் லூயிஸ் பிரெய்லி உயிருடன் இருந்த காலத்தில், அவரது முறை அதிகாரப்பூர்வமாக இந்த சமூகத்தால் ஏற்கப்படவில்லை.
தனது கண்டுபிடிப்பின் தாக்கத்தைக் காணும் முன்பே லூயிஸ் இறந்துவிட்டார். லூயிஸுக்கு 19 வயது இருக்கும்போது அவர் பார்வையற்றோருக்கான ராயல் நிறுவனத்தில் முழுநேரமாக கற்பித்துக் கொண்டிருந்தார்.
பள்ளியின் இயக்குனர் லூயிஸைப் போற்றி மதித்தாலும், பிரெய்லி முறை பார்வையற்ற மாணவர்கள் 'மிகவும் சுதந்திரமாக' மாற அனுமதிக்கும் என்றும், இனி அவர்களின் ஆசிரியர்கள் தேவையில்லை என்றும் அவர் கவலைப்பட்டார். எனவே பல ஆண்டுகளாக இந்த மொழி இன்னும் அறிமுகப்படுத்தப்படவில்லை.
புத்தக வெளியீடு
லூயிஸ் 1829 ஆம் ஆண்டு, முதல் புத்தகம் வெளியிட்டார். எழுத்து, இசை, கணிதம் என அனைத்திற்கும் ஏற்றது. புள்ளிகளை ஒரே விரல் தொடுதலில் வாசிக்கலாம். ஆசிரியர் மற்றும் இசைக் கலைஞர்பள்ளியில் சிறந்து விளங்கி, 1833 ஆம் ஆண்டு சரித்திரம், வடிவியல், மெய்தியல் ஆசிரியரானார்.
உலகுக்குப் பார்வை
அவர் பார்வையற்றிருந்தாலும், உலகுக்குப் பார்வை அளித்தவர்! "லூயிஸ் பிரெய்லின் கண்டுபிடிப்பு, மனிதாபிமானத்தின் வெற்றிக்கு ஒரு பொன்னான எடுத்துக்காட்டு
முதலில் தனது சக மாணவர்களுக்கே இந்த முறையைக் கற்றுக்கொடுத்தார். அவர்கள் மூலமாகவே இது பரவியது. இருந்தாலும் பிரான்சு அரசும் அதை அதிகாரப்பூர்வமாக ஏற்றுக் கொள்ளவில்லை. இரண்டு ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்தது! அவர் இறந்த பிறகே இது உலகளாவிய அங்கீகாரம் பெற்றது என்பது ரொம்பவும் வேதனையான விஷயம்தான்.
இசையிலும் கலக்கிய லூயிஸ் பிரெய்லி!
கண் பார்வை இழந்தபோதும் அவர் ஓர் இசை மேதை. ஆர்கனும் வயலினும் வாசிக்கக் கற்றுக்கொண்டார். பள்ளியில் மிகச் சிறந்த மாணவராக விளங்கினார். பலருக்குத் தெரியாத ஒரு தகவல் என்னவென்றால், லூயிஸ் பிரெய்லி ஒரு திறமையான இசைக்கலைஞர். செல்லோ, ஆர்கன் வாசித்து பிரபலமானார். பாரிஸ் தேவாலயங்களில் ஆர்கனி வாசித்தார். பார்வைத் திறனற்றவர்களுக்கான இசைக் குறியீட்டு (Music Braille) முறையையும் அவர் உருவாக்கினார். இன்றும் பார்வைத் திறனற்ற இசைக் கலைஞர்கள் இக்குறியீடுகளைப் பயன்படுத்துகின்றனர்
பிரெய்லி எழுத்து மொழியை மட்டுமல்ல, இசைக் குறியீடுகளையும் உருவாக்கினார்.
இளம் வயதில் மறைந்த ஒளி
உடல் நலக் குறைவால் (நுரையீரல் நோய்) 40 வயதில் ஆசிரியர் பதவியை விட்டார். லூயிஸ் பிரெய்லியின் வாழ்க்கையை வறுமையும் காசநோயும் வாட்டி வதைத்தது. இதன் காரணமாக நீண்ட போராட்டத்திற்குப் பிறகு, லூயிஸ் அவர் 43 வயதிலேயே 1852 ஆம் ஆண்டு ஜனவரி 6 அன்று 43 வயதில் தனது வேதனையையும், மூச்சையும் நிறுத்திகொண்டார். ஆனால் பார்வையற்றோருக்கான கதவுகளைத் திறக்கும் நீடித்த மரபை விட்டுச் சென்றார்.
இறப்புக்குப் பின் மரியாதை
இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு 1854 ஆம் ஆண்டு, மாணவர்களின் அதிகப்படியான தேவையால், அவரது மொழி முறை இறுதியாக ராயல் பார்வையற்றோருக்கான நிறுவனத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆனால் இன்று அவரது பெயர், உலகின் ஒவ்வொரு பார்வைத் திறனற்றவர்கள் படிக்கின்ற பள்ளியிலும் உயிரோட்டத்துடன் உள்ளது.
அவரது முறை 1854இல் பள்ளியால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. 1878 ஆம் ஆண்டு, ஐரோப்பாவில் பரவியது; 1916லிருந்து அமெரிக்காவில். இன்று உலகமெங்கும் பயன்படுகிறது –
கண்டுபிடிப்புக்கு மரியாதை
பாரிஸ் பந்தியானில் லூயிஸ் பிரெய்லி சிலை வைக்கப்பட்டுள்ளது. ;
உலக அஞ்சல் தடங்கள்;
9969 என்ற விண்வெளி கல் ஒன்றுக்கு அவர் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
உலக பிரெய்லி நாள் (ஜனவரி 4).
இந்தியாவில் 2009இல் ரூ. 2, ரூ.100 நாணயங்கள் வெளியிடப்பட்டன
பிரெய்லியின் வார்த்தைகள்: "தொடர்பு என்பது அறிவு; அது நம்மை சமமாக்கும்." அவரது கண்டுபிடிப்பு இருளில் ஒளி பாய்ச்சியது.
பிரெய்லி - உலகின் மொழி
இன்று பிரெய்லி மொழி உலகின் மொழியாகிவிட்டது. இந்த அமைப்பு எழுத்துக்கள், எண்கள் மற்றும் இசைக் குறியீட்டைப் படிக்கவும் எழுதவும் அனுமதிக்கிறது. இது உலகம் முழுவதும் பயன்படுத்தப்படுகிறது, அல்பேனியன் முதல் ஜூலு வரை கிட்டத்தட்ட ஒவ்வொரு மொழியிலும் தழுவி எடுக்கப்பட்டது. இன்று 150-க்கும் மேற்பட்ட மொழிகளில் பிரெய்லி முறை பயன்படுத்தப்படுகிறது .இந்தியாவிலும், தமிழ் பிரெய்லி எழுத்து முறை, ஆயிரக்கணக்கான பார்வைத் திறனற்றோரின் கல்விக்குப் பெரிதும் துணை நிற்கிறது.
ஆறு புள்ளிகள் கொண்ட கலத்தை அடிப்படையாகக் கொண்ட அவரது அமைப்பு, உலகளவில் மில்லியன் கணக்கானவர்களுக்கு புத்தகங்கள், இசை மற்றும் அன்றாடப் பொருள்களைப் படிக்க அதிகாரம் அளிக்கிறது, இது சுதந்திரத்திற்கான ஓர் உலகளாவிய கருவியாக மாறியுள்ளது. தமிழ்நாட்டில் சென்னை, பார்வையற்றோருக்கான கிறிஸ்து குரு நிறுவனம் உள்ளிட்ட பல நிறுவனங்கள் பிரெய்லி எழுத்தைப் பயிற்றுவிக்கின்றன. தமிழ் பிரெய்லி குறியீடுகள் உருவாக்கப்பட்டு, பார்வையற்ற தமிழர்கள் படிக்கவும், எழுதவும் உதவுகின்றன. இன்று நாம் செல்லும் இடங்கள் எல்லாம், ரயில் பெட்டிகள், ஏடிஎம் அறை, வங்கிகள் என பொது மக்கள் பயன்படுத்தும் அனைத்து இடங்களிலும், பிரெய்லி உள்ளது.
“ஒரு மனிதன் உலகைப் பார்க்க முடியாமல் போகலாம்…
ஆனால் உலகம் அவனைப் பார்க்காமல் போகக் கூடாது.”
இதுதான் இன்று லூயிஸ் பிரெய்லின் வாழ்க்கை சொல்லும் மௌனப் பாடம்.
(ஜன. 6 - லூயிஸ் பிரெய்லி நினைவு நாள்)
[கட்டுரையாளர் - தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மேனாள் மாநிலத் தலைவர்]
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.