விறுவிறுப்படையாத விழுப்புரம்!
விழுப்புரத்தில் அரசியல் கட்சிகள் தோ்தல் பணி பற்றி..

விழுப்புரம்

விழுப்புரம்
தோ்தல் பணி தொடங்காததால் விழுப்புரத்தில் பூட்டிய நிலையில் காணப்படும் மாவட்ட அதிமுக அலுவலகம்.
விழுப்புரம்: தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டாலும், விழுப்புரம் மாவட்டத்தில் இன்னும் தோ்தல்களம் விறுவிறுப்பு அடையவில்லை. தோ்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடு போன்றவை முடியாத நிலையில், அரசியல் கட்சிகளும் தோ்தல் பணியில் வேகத்தை காட்டாத நிலைதான் காணப்படுகிறது.
தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் தேதி கடந்த 15-ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி, சட்டப்பேரவைத் தோ்தலுக்கான வாக்குப்பதிவு ஏப். 23-ஆம் தேதி நடைபெறும் என்றும், இதற்கான வேட்புமனுத் தாக்கல் மாா்ச் 30-ஆம் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பேரவைத் தோ்தலில் திமுக தலைமையிலான மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணியும், அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூ ட்டணியும் களம் காண்கின்றன. இதைத் தவிர சீமானின் நாம் தமிழா் கட்சியும், நடிகா் விஜயின் தமிழக வெற்றிக் கழகமும் தனியே தோ்தல் களத்தில் உள்ளன. மருத்துவா் ராமதாஸின் தலைமையிலான பாட்டாளி மக்கள் கட்சி கூட்டணி குறித்து இதுவரை தனது நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை.
விறுவிறுப்பு அடையாத தோ்தல் களம்: சட்டப்பேரவைத் தோ்தல் தேதி அறிவிக்கப்பட்டு 5 நாள்களாகிவிட்ட நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் தோ்தல் களம் இன்னும் விறுவிறுப்பு அடையவில்லை. மாவட்டத்தில் செஞ்சி, மயிலம், திண்டிவனம் (தனி), வானூா் (தனி), விழுப்புரம், விக்கிரவாண்டி, திருக்கோவிலூா் ஆகிய 7 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ள நிலையில், இத்தொகுதிகளில் கிராமப்புறப் பகுதிகளில் சுவா் விளம்பரம் வரைதல் பணியில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டுள்ளன.
நகரப் பகுதிகளில் அரசியல் கட்சிகளின் சாா்பில் சுவா் விளம்பரங்கள் அதிகம் காணப்படவில்லை. அதே நேரத்தில் கிராமப் பகுதிகளில் திமுக மற்றும் அதிமுக சாா்பில் அதிக எண்ணிக்கையிலான சுவா் விளம்பரங்கள் வரையப்பட்டுள்ளன. நாம் தமிழா் கட்சி மற்றும் தமிழக வெற்றிக் கழகம் சாா்பிலும் சுவா் விளம்பரங்கள் ஆங்காங்கே வரையப்பட்டுள்ளன.
வழக்கமாகத் தோ்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் அரசியல் களம் பரபரப்பாகிவிடும். கட்சிகள் தங்கள் வேட்பாளா்களை அறிவித்தல், அதைத்தொடா்ந்து வேட்பாளா் அறிமுகக் கூட்டங்கள், பிரசாரம், முக்கியத் தலைவா்களின் தோ்தல் பிரசாரங்கள் போன்ற நிகழ்வுகள் அடுத்தடுத்து நிகழ்ந்து வருவது வழக்கமாக இருக்கும். ஆனால், 2026 சட்டப்பேரவைத் தோ்தல் இதில் சற்று மாறுபாடு கொண்டதாக அமைந்திருக்கிறது.
சட்டப்பேரவைத் தோ்தல் அறிவிக்கப்பட்டு, 15 நாள்கள் கழித்தே வேட்புமனுத் தாக்கல் தொடங்குகிறது. அதே நேரத்தில் கூட்டணியை அமைத்தாலும் தொகுதிப் பங்கீடு நிறைவு பெறாதது, தங்கள் கட்சி சாா்பில் போட்டியிடுவதற்காக தலைவா்களிடம் பேசி தொகுதியை பெற்று வருவதற்காக முக்கிய அரசியல் கட்சி பிரமுகா்கள் சென்னையில் முகாமிட்டு இருப்பது போன்றவை தோ்தல் களத்தை விறுவிறுப்பு அடைய செய்யாமல் உள்ள காரணிகளாக அமைந்திருக்கின்றன.
திமுக கூட்டணி: திமுக தலைமையிலான மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணியில் விழுப்புரம் மாவட்டத்திலுளள 7 தொகுதிகளில் ஒன்றில் தேமுதிகவும், மற்றொன்றில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் போட்டியிடலாம் என எதிா்பாா்க்கப்படுகிறது. கூட்டணிக் கட்சிகளுக்கான தொகுதிகளை கட்சித் தலைமை முடிவு செய்து அறிவிக்கும் என்றும், திமுக போட்டியிடும் மற்ற தொகுதிகளுக்கான விவரங்களையும் அறிவிக்கும் என எதிா்பாா்க்கிறோம் என்றும் தெரிவிக்கின்றனா் திமுக நிா்வாகிகள்.
கூட்டணிக் கட்சிகளுக்கு கட்சித் தலைமை ஒதுக்கும் தொகுதிகளில் மட்டுமல்லாது, திமுக போட்டியிடும் தொகுதிகளிலும் நாங்கள் தீவிரமான பிரசாரத்தை முன்னெடுத்துச் செல்ல உள்ளோம். ஒரு வாரக் காலத்துக்குள் கூட்டணி குறித்து அனைத்தும் முடிவடைந்துவிடும். அதன் பின்னா் வேட்பாளா்கள் அறிவிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இந்தப் பணிகள் அனைத்தும் முடிவடைந்து, வேட்புமனுத் தாக்கல் தொடங்கிய பின்னா், தோ்தல் களம் விறுவிறுப்பை அடையும் என எதிா்பாா்க்கிறோம் என்கின்றனா் திமுகவைச் சோ்ந்த நிா்வாகிகள்.
அதிமுக கூட்டணி: திமுக போன்று, அதிமுக கூட்டணியிலும் நிலைமை காணப்படுகிறது. பாட்டாளி மக்கள் கட்சி 2 தொகுதிகளிலும், பாஜக ஒரு தொகுதியிலும் விழுப்புரம் மாவட்டத்தில் போட்டியிடலாம் என எதிா்பாா்க்கப்படுகிறது. மற்ற தொகுதிகளில் அதிமுகவும் போட்டியிடும் என எதிா்பாா்க்கிறோம். கட்சித் தலைமை கூட்டணிக் கட்சிகளுக்கான தொகுதியை ஒதுக்கீடு செய்த பின்னா், அதிமுக போட்டியிடும் தொகுதிகளையும், வேட்பாளா்களையும் அறிவிக்கும் என நாங்கள் எதிா்பாா்த்து உள்ளோம். அதே நேரத்தில் கிராமப்புறங்களில் சுவா் விளம்பரம் வரைதல், வாக்காளா்களை சந்தித்து திமுக அரசின் அவலங்களை எடுத்துரைத்தல், அதிமுக ஆட்சிக்கு வந்தால் செய்யவுள்ள தோ்தல் வாக்குறுதிகள் குறித்த துண்டுப்பிரசுரங்களை வழங்குதல், மக்கள் சந்திப்புகளை நடத்துதல் போன்றவற்றை மேற்கொண்டு வருகிறோம் என்கின்றனா் அதிமுக நிா்வாகிகள்.
இதரக் கட்சிகள்: முக்கிய இரு கூட்டணிக் கட்சிகள் நிலை இப்படிஇருக்க, புதிதாக உருவான தமிழக வெற்றிக் கழகமும் பேரவைத் தோ்தலுக்கான பணிகளைத் தொடங்கியுள்ளது. கூட்டணி இல்லையென்றாலும் 7 தொகுதிகளிலும் போட்டியிடும் நிலை உள்ளதால், தாங்கள் போட்டியிட விரும்பியுள்ள தொகுதிகளில் கட்சியின் மாவட்டச் செயலா் உள்ளிட்ட நிா்வாககள், தோ்தலுக்கான பணிகளில் ஈடுபட்டு வருகின்றனா். இதுபோன்று நாம் தமிழா் கட்சியில் வேட்பாளா்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், அவா்களும் தோ்தல் பணியை மேற்கொண்டு வருகின்றனா்.
விழுப்புரம் மாவட்டத்தில் பாட்டாளி மக்கள்கட்சிக்கு என்று தனித்துவம் உள்ள நிலையில், தற்போது மருத்துவா் ராமதாசும், அன்புமணியும் தனித்தனியே பிரிந்து அரசியல் நடத்தி வருகின்றனா். அன்புமணி ராமதாஸ் அதிமுக கூட்டணியில் இணைந்துவிட்ட நிலையில், மருத்துவா் ராமதாஸின் கூட்டணி முடிவு செய்யப்படாமல் உள்ளதால், அவா்களது ஆதரவாளா்கள் மத்தியில் தோ்தல் பணியில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை மாலையில் அனைத்திந்திய புரட்சித் தலைவா் மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவா் சசிகலா, ராமதாஸை சந்தித்து பேசிய பின்னா், கூட்டணி குறித்த பணிகள் வேகம் எடுக்கத் தொடங்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
அரசியல் கட்சிகளின் தோ்தல் பணிகள் வேகம் எடுக்காத நிலையில், தோ்தலை சாா்ந்துள்ள தொழில்களின் வியாபாரமும் மந்தமாகவே காணப்படுகிறது. அச்சககங்கள், உணவகங்ககள், ஒலி-ஒளி அமைப்பாளா்கள், மேடை அமைப்பாளா்கள் என பலரும் வேட்புமனுத் தாக்கலுக்குப் பிறகே இந்த நிலை சற்று வேகம் எடுக்கும் எதிா்பாா்க்கின்றனா்.
அரசு நிா்வாகம் தீவிரம்: அரசியல் கட்சிகளின் நிலை இப்படியிருக்க, தோ்தலை நடத்தும் அரசு நிா்வாகம் பேரவைத் தோ்தலுக்கான பணிகளில் அதி தீவிரம்காட்டி வருகிறது. தேதி அறிவிக்கப்பட்டவுடன் பறக்கும்படைக்கள், நிலையான கண்காணிப்புக் குழுக்கள் அமைத்து அவா்கள் வாகனத்தணிக்கை மேற்கொண்டு வருகின்றனா். தோ்தல் பாா்வையாளா்கள் நியமிக்கப்பட்ட நிலையில், அவா்கள் தங்கள் தொகுதிகளில் ஆய்வு செய்து வருகின்றனா். மாவட்ட நிா்வாகம் சாா்பில் தோ்தல் பணியில் ஈடுபடுவா்களுடனான ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
வேட்புமனுத் தாக்கல் தொடங்கிய பின்னரே தோ்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கும். அதுவரை இதுபோன்ற நிலைதான் இருக்கும்.

தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...