
அ ரசின் உணவுக் கிடங்குகளில் வீணாகும் உணவு தானியங்களை ஏழை மக்களுக்கு விநியோகிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அளித்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்புக்குப் பின்னர் - 25 லட்சம் டன் தானியங்களை மத்திய அரசு மானிய விலையில் ஏழைகளுக்கு விநியோகிக்க முடிவெடுத்த பின்னர் - வீணாகும் தானியங்கள்பற்றி நாம் இன்னும் பேசிக்கொண்டிருக்கிறோம். ஆண்டுதோறும் அறுவடைக்குப் பிந்தைய ரூ. 70 ஆயிரம் கோடி மதிப்புள்ள உற்பத்திப் பொருள்களை இந்தியா வீணடித்துக்கொண்டிருக்கிறது.
உலக வங்கியின் கணக்குப்படி, உலகின் எடைகுறைவான குழந்தைகளில் 49 சதவீதத்தினர்; ஊட்டச்சத்துக் குறைவால் வளர்ச்சி தடைப்பட்டுள்ள குழந்தைகளில் 34 சதவீதத்தினர்; அடிக்கடி நோய்வாய்ப்படும் குழந்தைகளில் 46 சதவீதத்தினர் இந்தியக் குழந்தைகளாக இருக்கிறார்கள். உலகப் பட்டினிக் குறியீட்டில் இடம்பெற்றுள்ள 88 நாடுகளில் இந்தியா 66}வது இடத்தில் இருக்கிறது.
கசக்கக்கூடிய ஓர் உண்மை என்னவென்றால், பட்டினியின் அடையாளமாக நாம் பார்க்கும் பல ஆப்பிரிக்க நாடுகளைவிடவும் மோசமான நிலையில் இருக்கிறது நம்முடைய பல மாநிலங்களின் நிலை. இன்னமும் வறுமையும் பசியும் கோடிக்கணக்கான இந்தியக் குழந்தைகளை பள்ளிக்கூடங்களை நெருங்கவிடாமல் செய்துகொண்டிருக்கின்றன.
இந்நிலையில், நாம் ஏன் நம் நாட்டின் பயன்படுத்தப்படாத - வீணாகும் தானியங்களை நம்முடைய குழந்தைகளின் பசியைத் தீர்க்கப் பயன்படுத்தக்கூடாது?
பள்ளிச் சிறார்களுக்கு மதிய உணவு வழங்குவதன் மூலம், உலகின் மிகப்பெரிய உணவு வழங்கும் திட்டத்தை இந்தியாதான் செயல்படுத்தி வருகிறது. நம் நாட்டில் ஏறத்தாழ 12 கோடி குழந்தைகள் அரசின் மதிய உணவுத் திட்டத்தின் கீழ் உணவு பெறுகிறார்கள். நாட்டிலேயே தமிழகத்தில்தான் இத்திட்டத்தின் கீழ் சிறப்பான உணவு வழங்கப்படுவதாகக் கூறப்படுகிறது. ஆனால், ஒரு குழந்தைக்கான உணவுக்கு இங்கு அரசின் ஒதுக்கீடு எவ்வளவு தெரியுமா? தினமும் 100 கிராம் அரிசி, 15 கிராம் பருப்பு, 1 கிராம் எண்ணெய், 20 பைசா காய்கறிகள், 8.5 பைசா மளிகைப் பொருள்கள். தவிர, வாரம் 3 மூட்டைகள்; வாரத்தில் ஒரு நாள் 16 பைசா உருளைக்கிழங்கு, 20 கிராம் பாசிப்பயறு அல்லது கொண்டைக்கடலை, இவ்வளவுதான்.
இத்தகைய ஒதுக்கீட்டில் முறைகேடுகள் போக எஞ்சும் பொருள்களைக் கொண்டு சமைக்கப்படும் உணவின் தரத்தையும் ருசியையும் விவரிக்கத் தேவையில்லை. ஆனாலும், இந்தியாவில் மதிய உணவுக்கு 12 கோடி குழந்தைகள் பள்ளிக்கூடங்களை நம்பியிருக்கின்றனர் என்றால், இது அவர்களுடைய வறுமையையும் பசியையும் தவிர வேறு எதைக் காட்டுகிறது? இந்நிலையில், ஏன் நாம் இந்தக் குழந்தைகளுக்கு காலை உணவும் வழங்கக்கூடாது?
தமிழகம் இந்த விஷயத்தில் முன்மாதிரியாக இருக்கலாம். ஏனெனில், தமிழகத்தில் ஏற்கெனவே இந்தத் திட்டம் அறிமுகமாகிவிட்டது. ஏறத்தாழ ஒரு நூற்றாண்டு காலமாக மதுரை சௌராஷ்டிர மேல்நிலைப் பள்ளியில் "ராஷ்டிரபந்து' எல்.கே. துளசிராமின் வழிகாட்டுதலின்படி மதுரையைச் சுற்றியுள்ள கிராமப்புறங்களில் இருந்துவரும் மாணவர்களின் நலன்கருதி இதுபோன்றதொரு உணவுத் திட்டம் அங்கே செயல்பட்டு வருகிறது. இதைப் பார்த்துத்தான் காமராஜ், மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தியதாகக் கூறுவார்கள். திருச்சியிலுள்ள கி.ஆ.பெ.விசுவநாதம் பள்ளியில், அங்கு பணியாற்றும் ஆசிரியர்களின் பங்களிப்புடன் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக காலையில் உணவு வழங்குகிறார்கள். மிக எளிய உணவு: பொன்னி குறுநொய்க் கஞ்சி; புதினா துவையல். இதன் அடுத்த பரிணாமமாக, ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த கல்வியாளர் எஸ். சிவக்குமாரின் முன்முயற்சியில், தனியார் பங்களிப்புடன் திருச்சி பகுதியில் ஏறத்தாழ 38 பள்ளிகளில் இன்றைக்கு காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அவரவர் வசதிக்கேற்ப உணவு வழங்குகிறார்கள்.
தமிழகத்தில் பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கிய பகுதிகளில் ஒன்றான புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசல் கிழக்கு கிராமத்திலுள்ள அரசுப் பள்ளித் தலைமையாசிரியர் ர. கருப்பையன் இன்னும் ஒருபடி மேலே போய் நாட்டுக்கே வழிகாட்டுகிறார். தனியார் பங்களிப்புடன் அவருடைய பள்ளியைச் சுற்றியுள்ள பகுதியில் விளையும் தானியங்களைக் கொண்டு தயாரிக்கப்படும் கஞ்சியை தன் மாணவர்களுக்கு காலை உணவாக அளிக்கிறார். பள்ளியில் படிக்கும் ஊட்டச்சத்துக்குக் குறைவான குழந்தைகள் உடல்நலத்தில் நல்ல மாற்றத்தை இந்த உணவு ஏற்படுத்தியிருப்பதாக அவர் தெரிவிக்கிறார்.
காலை உணவு வழங்கப்படும் அனைத்துப் பள்ளிகளிலுமே மாணவர்கள் சேர்க்கை, வருகைப் பதிவு அதிகரித்திருப்பதாகவும் வகுப்பில் மாணவர்கள் கூடுதல் கவனம் செலுத்துவதாகவும் கற்கும் திறன் மேம்பட்டிருப்பதாகவும் ஆசிரியர்கள் கூறுகின்றனர். இந்நிலையில் தமிழகம் ஏன் காலை உணவுத் திட்டத்திலும் முன்னோடியாக இருக்கக் கூடாது?
சென்னை மாநகராட்சியில் உள்ள பள்ளிக் குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கி 1923-ம் ஆண்டிலேயே மதிய உணவு வழங்கும் திட்டத்துக்கு அச்சாரம் இட்டுவிட்டது சென்னை மாகாண அரசு. ஆனாலும், தமிழகம் முழுவதும் முறைப்படுத்தப்பட்ட, முழுமையான புரட்சித் திட்டமாக மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தும் வாய்ப்பையும் வரலாற்றில் இடம்பெறும் பேற்றையும் காலம் பின்னாளில் முன்னாள் முதல்வர் காமராஜுக்குத்தான் வழங்கியது. அதேபோன்ற இன்னொரு வாய்ப்பை - காலை உணவுத் திட்டம் மூலம் - காலம் இப்போது முதல்வர் கருணாநிதிக்கு வழங்குகிறது.
அரசின் உணவுதானியக் கிடங்குகளில் அரிசியும் கோதுமையும் வீணாவதை, பள்ளிக் குழந்தைகளுக்குக் காலை உணவு வழங்கி பயன்படுத்திக் கொண்டால் என்ன? சத்துணவில் குழந்தைகளுக்கு அதிகப்படியாக உணவு வழங்கலாமே? இதன்மூலம் பள்ளிகளில் குழந்தைகளின் சேர்க்கை அதிகரிப்பது மட்டுமல்ல, பாதியில் படிப்பை நிறுத்துவதும் குறைக்கப்படுமே? ஊட்டச் சத்துள்ள உணவு ஆரோக்கியமான அடுத்த தலைமுறை உருவாக வழிகோலுமே.
மத்திய அரசு என்பது காங்கிரஸ் அரசல்ல. தி.மு.க.வும் பங்குபெற்றுள்ள ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு. முதல்வர் நினைத்தால் இந்தியாவுக்கே வழிகாட்ட ஒரு முன்மாதிரித் திட்டத்தைத் தமிழகம் நிறைவேற்றிக் காட்ட முடியும்!