தலையங்கம்:தூற்றுதல் ஒழி!

திருநங்கைகளுக்குத் தேவையான அனைத்தையும் செய்து தருவதில் தமிழகத்தை மிஞ்சிட வேறு மாநிலம் இல்லை என்றே சொல்லிவிட முடியும். திருநங்கைகளுக்குத் தனியாக குடும்ப அட்டைகள் வழங்குவது தொடங்கி, ...
தலையங்கம்:தூற்றுதல் ஒழி!

செங்கல்பட்டை அடுத்த நடராஜபுரத்தில், இ.சி.ஐ. தேவாலயத்தில் போதகராகக் கடந்த சில மாதங்களாக இறையியல் பணியில் ஈடுபட்டு வரும் திருநங்கை பாரதி, ஆயர் பதவிக்கும் தன்னை தயார்ப்படுத்தி வருகிறார் என்பது, திருநங்கைகளின் வாழ்க்கையில் ஏற்பட்டு வரும் மாற்றங்களுக்கு ஓர் உதாரணம்.

இரு நாள்களுக்கு முன்பு கர்நாடக உயர் நீதிமன்றத்தில், திருநங்கை சி.அனு என்பவருக்கு பணியாணை வழங்கப்பட்டது. திருநங்கைகளின் முன்னேற்றத்துக்காகப் பாடுபட்ட 24 வயதான இவர், ஆறாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார். எனினும், இவர் ஆற்றியுள்ள சமுதாயப் பணியைக் கணக்கில்கொண்டும், இவர் தன்னைப் போன்ற திருநங்கைகளுக்கு ஊக்கமாக இருப்பார் என்பதாலும் இப்பணி வழங்கப்பட்டுள்ளது என்று கர்நாடக உயர் நீதிமன்றப் பதிவாளர் பி.கிருஷ்ண பட் கூறியிருக்கிறார். இத்தகைய அவருடைய முயற்சி பாராட்டுக்குரியது.

திருநங்கைகளுக்குத் தேவையான அனைத்தையும் செய்து தருவதில் தமிழகத்தை மிஞ்சிட வேறு மாநிலம் இல்லை என்றே சொல்லிவிட முடியும். திருநங்கைகளுக்குத் தனியாக குடும்ப அட்டைகள் வழங்குவது தொடங்கி, தேர்தலில் போட்டியிடுவது வரை திருநங்கைகள் பல உரிமைகள் பெற்றுள்ளனர். திருநங்கைகளில் சிலர் பொறியியல் பட்டதாரிகளாகவும் வலம் வருகின்றனர். சிலர் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் நடத்தி வருகின்றனர். ஊடகத்திலும் திருநங்கை ரோஸ் தனக்கான திறமையையும் சமூக அக்கறையையும் வெளிப்படுத்தினார். இன்னும் நிறைய செய்திகள் நம்பிக்கை தருவனவாகவே உள்ளன.

இந்து மதத்தில் ஆணாகிப் பெண்ணாகி நின்ற அர்த்தநாரி- உமையொருபாகன்-கடவுளாக வழிபடப்படுகிறார். இரு பாலின உணர்வும் சமநிலை பெறுவது, இறைநிலை உணர்வுக்கு அதிமுக்கியமாக இருக்கிறது. விவிலியத்திலும்கூட,  'சிலர் பிறவியிலேயே மணஉறவுக்கு தகுதி இல்லாதவர்களாக (ஆங்கிலத்தில் EUNUCH என்றே குறிக்கப்படுகிறது) பிறக்கிறார்கள். சிலர் மனிதர்களால் அவ்வாறு ஆக்கப்படுகிறார்கள். சிலர் விண்ணகத்தின் பொருட்டு அந்நிலையை தாங்களாகவே ஏற்றுக்கொள்கிறார்கள்' (மத்தேயு 19:12) என்றே சொல்லப்பட்டுள்ளது.     

இந்திய சமுதாயத்தில் திருநங்கைகளுக்கு அவர்களுக்கான இடம் கொடுக்கப்பட்டிருந்தது. அரண்மனைகளில் அந்தப்புர பணியாளர்களாக திருநங்கைகள் இருந்திருக்கிறார்கள். பெரும் தனவந்தர்களின் வீடுகளில் பெண்களுக்குப் பாதுகாவலர்களாக இருந்திருக்கிறார்கள். கோவில் பணிகளில், நாடகங்களில், கலைத்துறையில் ஒப்பனைப் பணிகளில் என பல்வேறு பணிகளிலும் திருநங்கைகள் இடம்பெற்றிருந்த காலம் இருந்தது. அவர்கள் எந்த வேலைக்கும் தகுதியில்லாதவர்கள் போல சமூகத்திலிருந்து ஒதுக்கப்படும் சூழல் பின்னாளில்தான், அதிலும் குறிப்பாக பிரிட்டிஷ் காலனி ஆட்சிக்குப் பிறகுதான் நேர்ந்தது.

குழந்தைகளையும் திருமணத் தம்பதிகளையும் திருநங்கைகள் வாழ்த்தினால் நல்லது என்ற வழக்கங்கள் இந்தியாவில் இருந்தன. இன்னமும் சில பகுதிகளில் திருமண நாளில் திருநங்கைகளை அழைத்துவந்து பாட வைக்கும் நிகழ்ச்சிகள் நடக்கின்றன. இன்னும் சில வியாபாரிகள், மிக அரிது என்றாலும், திருநங்கைகளிடம் முதல் வியாபாரம் செய்தால் அன்று நல்லபடியாக விற்பனையாகும் என்ற நம்பிக்கை கொண்டுள்ளனர். ஆனால், இவை யாவும் காலத்தின் வேகத்தில் மறைந்துபோயின.

கிராமங்களிலும் கூட்டுக் குடும்பங்களிலும் தனிமைப்படுத்துதல் இல்லாமல் ஆண்களுடனும் பெண்களுடனும் வேறுபாடின்றி பழகுபவர்களாக, வீட்டு வேலைகளைச் செய்துகொண்டு இருந்த திருநங்கைகள் தனிமைப்படுத்தப்பட்டபோது, அவர்களில் பலர் பாலியல் தொழிலாளியாக மாற நேர்ந்தது. திருநங்கைகள் அவர்தம் குடும்பத்தாராலேயே வெளியேற்றப்படும் அவலம்தான் அவர்கள் தெருவுக்கு வந்து, சமூகத்தை வன்மத்துடன் பார்க்கும் மனநிலைக்கு ஆளாக்கியது. பாலியல் தொழிலிலும்கூட, திருநங்கைகள் என்றால் மிகவும் கடைநிலையில் வைக்கப்பட்டு, வன்கொடுமைகளுக்கு ஆளாக்கப்படும் இழிநிலை, அவர்தம் துயரங்களை அறிந்தவர்களால் மட்டுமே உணரக்கூடியது.

திருநங்கைகளில் சிலர் நன்கு படித்து, தங்களைப் போன்ற திருநங்கைகளை மீட்கும் பணியில் ஈடுபடத் தொடங்கியிருப்பது புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. அவர்களது பிரச்னையை புத்தகங்களாக எழுதவும், சிறுபத்திரிகைகள் நடத்துவதும், பாதிக்கப்பட்ட திருநங்கைகளுக்காக பாதுகாப்பு இல்லம் மற்றும் மறுவாழ்வு இல்லம் நடத்துவதும் எனப் பன்முகப் பணிகளில் திருநங்கைகள் ஈடுபட்டு வருகிறார்கள்.

திருநங்கைகளுக்கு அவர்களுக்கு உரிய வேலைகளை அளிப்பதும், அவர்களை தனிமைப்படுத்தாமல் சமூகத்தில் ஓர் அங்கமாக வாழச் செய்வதும்தான் இன்றைய தேவை. கர்நாடக உயர் நீதிமன்றப் பதிவாளர் எடுத்துள்ள முன்மாதிரி முயற்சியைப் போல, கல்வித் தகுதியை முக்கியமாகக் கருதாமல், அவரவர் திறமைக்கேற்ப வேலை கிடைக்கச் செய்தால், அவர்களும் கெளரவமான வாழ்க்கையை ஏற்றுக்கொள்வார்கள்.

குழந்தைகளைத் தத்தெடுப்பதில் திருநங்கைகளுக்கு சிக்கல்கள் உள்ளன. இவற்றையும் போக்க வேண்டும். கெளரவமான வாழ்க்கை, அன்பு செலுத்த ஒரு குழந்தை என்றால் அவர்கள் இந்த சமூகத்தில் மிகவும் அற்புதமான அங்கமாக வலம் வருவார்கள்.

இருப்பினும், இவர்களையும் சேர்த்து எல்.ஜி.பி.டி (பெண்விழைபெண், ஆண்விழைஆண், இருபால்விழைஞர், திருநங்கைகள்) என்று ஒன்றாக வகைப்படுத்துதல் எந்த வகையில் பொருந்தும் என்று தெரியவில்லை. முதல் மூன்றும் மனப்பிறழ்வுகள், திருநங்கைகள் உடற்பிறழ்வுகள். இன்னும் தெளிவாகச் சொன்னால், முன்னவை மென்பொருள் சிக்கல், திருநங்கைகளோ, மெய்ப்பொருள் சிக்கல். இவர்கள் முறைதவிர் காமத்துக்குப் பயன்படுபவர்களே தவிர, பயனாளிகள் அல்லர்.

இதைத் திருநங்கைகள் உணர வேண்டும். இல்லையானால் அவர்கள் சமூகத்தில் தவறாக அடையாளப்படுத்துவதும் தொடரும். அவற்றுடன் துன்பங்களும் தொடரும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com