இது எப்படி சரி?

மேற்கு வங்க மாநிலத்தில், "சாரதா சிட்பண்டு' என்கிற சீட்டு நிதி நிறுவனம் சில ஆயிரம் கோடி ரூபாய் ஏமாற்றியுள்ள புகாரைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட சிறு முதலீட்டாளர்களுக்காக ரூ.500 கோடி நிவாரண நிதியை அரசு வழங்கும் என்று முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.
Updated on
2 min read

மேற்கு வங்க மாநிலத்தில், "சாரதா சிட்பண்டு' என்கிற சீட்டு நிதி நிறுவனம் சில ஆயிரம் கோடி ரூபாய் ஏமாற்றியுள்ள புகாரைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட சிறு முதலீட்டாளர்களுக்காக ரூ.500 கோடி நிவாரண நிதியை அரசு வழங்கும் என்று முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். புகையிலை மீது இப்போதுள்ள 25 சதவீத விற்பனை வரியை 10 சதவீதம் மேலும் அதிகரிப்பதன் மூலம் 150 கோடி ரூபாய் கூடுதலாக வசூலிக்கப்படும். இதன் மூலம் சிறு முதலீட்டாளர்களுக்குத் தேவைப்படும் நிதி திரட்டப்படும் என்று அறிவித்துள்ளார். இது எந்த வகையிலும் நியாயமானது அல்ல.

சுனாமி, புயல் போன்ற பேரிடர் காலங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்காகவும், பெருவிபத்துகளில், ஏன் சாலை விபத்துகளில்கூட பாதிக்கப்பட்ட மக்களுக்காகவும் அரசு நிவாரண உதவித் தொகை வழங்குவது இன்றியமையாதது. அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு, "சாரதா' சீட்டு நிதி நிறுவனத்தில் முதலீடு செய்து பணத்தை இழந்தவர்களுக்கெல்லாம் பணத்தைத் திருப்பி அளிப்பது, தவறான முன்னுதாரணமாகிவிடும்.

""மாதம்தோறும் ரூ.2,000 செலுத்தினால் 15-ஆவது மாதத்தில் ரூ.35,000 கிடைக்கும். ஒரு லட்சம் ரூபாய் வைப்புநிதியாகச் செலுத்தினால் மாதம் ரூ.2,000 வட்டி கிடைக்கும்''. இப்படித்தான் சொன்னார்கள்; சொன்னதைப் போலவே சிலருக்கு சிலகாலம் கொடுத்தார்கள்!

அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகளில் இதே ஒரு லட்சத்தை வைப்பு நிதியாக வைத்தால் மாதம் ரூ.800 மட்டுமே கிடைக்கும்; ஆனால், இத்தனைக் காலம் ரூ.2,000 அதிக வட்டி கிடைத்த மகிழ்ச்சியில் இருந்த இந்த முதலீட்டாளர்கள், இப்போது கண்ணீர் வடிக்கிறார்கள், தற்கொலை முயற்சியில் ஈடுபடுகிறார்கள் என்பதற்காக அரசு நிவாரணம் அளிக்கலாமா?

ஏற்கெனவே இதுபோன்ற தனியார் சீட்டு நிதி நிறுவனங்களில், வாழ்க்கை முழுதும் சேமித்த தொகையை வைப்புநிதியாக வைத்திழந்த சம்பவங்கள் பல நடந்துள்ளன. தமிழ்நாட்டிலும் நடைபெற்றது. அப்போது, அந்த நிறுவனங்களின் சொத்துகளைப் பறிமுதல் செய்தும், வங்கிக் கணக்குகளை முடக்கியும், புகார் தந்தவர்களுக்கு மிகச் சிறிய முதலீட்டுத்தொகை ஓரளவுக்குத் திரும்ப வழங்கப்பட்டது. அதிலும்கூட முழுமையாக நடைபெறவில்லை. ஆனால் எந்த நேர்வுகளிலும் அரசாங்கம், தனியாருக்கு நிவாரண நிதி அறிவிக்கவில்லை.

குறிப்பாக, இந்த விவகாரத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி.க்கள் இருவருடைய பெயரை, சாரதா சிட்பண்டு நிறுவனத் தலைவர் சுதீப்த சென் காவல்துறையிடம் விளக்கக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ள நிலையில், இத்தகைய நிவாரணத் தொகை, மக்கள் வரிப்பணத்தை எடுத்து மக்கள் வாயை மூட எத்தனிப்பதாகவே அமையும்.

"சாரதா' சீட்டுநிதி நிறுவன முறைகேடுகள் பத்திரிகைகளில் வராமல் இருக்க வேண்டும் என்பதற்காக, தானே ஒரு தொலைக்காட்சி சேனலை ரூ.10 கோடிக்கு வாங்கி, ரூ.40 கோடியில் மேம்படுத்தியிருக்கிறார் சுதீப்த சென். ஒரு பத்திரிகையை வாங்கி நடத்தியிருக்கிறார். இந்த ஊடகங்களில் "சிறப்பு சேவைக்காக' திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்களுக்கு பதவிகள் தந்து "பல லட்சம் ரூபாய்' மாத ஊதியம் அளிக்கப்பட்டுள்ளது.

சாரதா சீட்டுநிதி நிறுவனத்தில் குறைந்தபட்சம் ரூ.2,000 கோடி மோசடி நடந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. "சாரதா ரியால்டி' என்ற நிறுவனத்தால் பல இடங்களிலும் சொத்துகள், மனைகள் வாங்கிப்போடப்பட்டிருப்பதால், முதலீடு செய்வோருக்கு எந்த வகையிலும் பாதிப்பு இருக்காது என்று கூறித்தான் இவர்கள் மக்களின் நம்பிக்கையைப் பெற்றார்கள்.

இந்த நிறுவனம் ரூ.1 லட்சம் வசூலித்தால், ஏஜன்ட் கமிஷன், அலுவலகச் செலவுகள் ஆகியவற்றுக்காக மட்டுமே 35 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை செலவாகிவிடும் என்பது அப்பட்டமாக தெரிந்த பின்பும், மீதியுள்ள தொகையை எங்கே எப்படி முதலீடு செய்து, நமக்கு 25 சதவீத வட்டி தரமுடியும் என்ற எண்ணமே இல்லாமல் முதலீடு செய்தவர்களின் செய்கை தற்கொலைக்கு ஒப்பானது.

மேலும், சாரதா சீட்டுநிதி நிறுவனம் மேற்கு வங்க மாநிலத்தில் மட்டுமே செயல்படவில்லை. "வட கிழக்கு' மாநிலங்களிலும் செயல்பட்டுள்ளது. அப்படியானால், மேற்கு வங்க மக்களின் வரிப்பணத்தை எடுத்து மற்ற மாநிலத்தவருக்கும் மம்தா பானர்ஜி தருவாரா, அல்லது இந்த நிவாரணம் வெறுமனே மேற்குவங்க மாநிலத்தவருக்கு மட்டுமானதா?

இதுபோன்ற சீட்டு நிதி நிறுவனங்களுக்கு அனுமதி அளிப்பது மாநில அரசு அல்ல என்று மம்தா பானர்ஜி மத்திய அரசைக் குறை கூறினார். சீட்டு நடத்தும் நிறுவனங்களைக் கண்காணிக்கும் பணி மத்திய அரசுக்குக் கிடையாது; அதனை அந்தந்த மாநில அரசுகள்தான் கட்டுப்படுத்த வேண்டும். இந்தியாவில் உள்ள சீட்டு நிறுவனங்கள், "சீட்டு நிதி நிறுவனச் சட்டம் 1982'-ன் கீழ் வருகின்றன. இச்சட்டத்தின்படி மாநில அரசுகளிடம் அந்த நிறுவனங்கள் பதிவு செய்து கொண்டு செயல்பட்டு வருகின்றன என்று மத்திய நிறுவனங்கள் விவகாரத் துறை விளக்கம் தெரிவித்துள்ளது.

இந்த மோசடியில் ஈடுபட்டவர்கள் தங்கள் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்றாலும் அல்லது வேறு யாராக இருந்தாலும் நடவடிக்கை மேற்கொண்டு, முதலீட்டுப் பணத்தை மீட்க, சொத்துகளைப் பறிமுதல் செய்வதும், சொத்துகளை விற்றுக் கிடைக்கும் தொகையை அவரவர் முதலீட்டுக்கு ஏற்ப குறிப்பிட்ட சதவீதம் திருப்பி அளிப்பதும் மட்டுமே நியாயமான செயலாக இருக்கும். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி செய்ய வேண்டிய பணிகளே இவைதான்.

÷"பல பேருடைய பணத்தை ஒரு சிலர் ஏமாற்றி ஏப்பம் விடுவார்கள். அதனால் ஏற்படும் இழப்பை அரசு கஜானாவிலிருந்து எடுத்து ஈடு செய்வார்கள்' என்றால் எப்படி? பேராசைப் பட்டவர்கள் பெரு நஷ்டம் அடைந்தால்தான், இதுபோன்ற ஏமாற்று நிறுவனங்கள் மீண்டும் மீண்டும் உருவாகாமல் இருக்கும். "சாரதா சிட்பண்ட்' நிறுவன அதிபர் மட்டுமல்ல, அத்துடன் தொடர்புடைய திரிணமூல் காங்கிரஸ் தலைவர்கள் உள்ளிட்ட அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவதுதான் நியாயம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com