இப்படியே போனால் எப்படி?

தேர்தலுக்கு முன்னால், இடைக்கால நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்ய நாடாளுமன்றம் கூட்டப்படும் என்றாலும், பிரச்னைகளை விவாதித்து மசோதாக்களை நிறைவேற்றும் ...
Updated on
2 min read

தேர்தலுக்கு முன்னால், இடைக்கால நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்ய நாடாளுமன்றம் கூட்டப்படும் என்றாலும், பிரச்னைகளை விவாதித்து மசோதாக்களை நிறைவேற்றும் பதினைந்தாவது நாடாளுமன்றத்தின் கடைசி கூட்டத்தொடர் இப்போதைய குளிர்காலக் கூட்டத் தொடராகத்தான் இருக்கும்.

கடந்த பதினைந்து ஆண்டுகளாக, நாடாளுமன்றம் கூட்டப்படுவது பிரச்னைகளை விவாதிப்பதற்காகவும், சட்டங்களை இயற்றுவதற்காகவும் என்கிற நிலைமையே மாறிவிட்டிருக்கிறது. அரசுத் தரப்பு, கூட்டத் தொடருக்கு முன்னதாக ஏதாவது சர்ச்சைக்குரிய பிரச்னையைக் கிளப்புவதன் மூலம் அவை முடக்கப்படுவதையும், விவாதமே இல்லாமல் மசோதாக்கள் நிறைவேற்றப்படுவதையும்தான் விரும்புவதாகத் தெரிகிறது. எதிர்க்கட்சிகளும் ஆட்சியாளர்கள் விரிக்கும் வலையில் தெரிந்தோ தெரியாமலோ விழுவதும், அவையின் நடவடிக்கைகளை முடக்குவதும் வாடிக்கையாகி விட்டன.

நாடாளுமன்றம் கூடும் நாள்களின் அளவு தொடர்ந்து குறைந்தவண்ணம் இருக்கிறது. 1971 வரையிலுமான முதல் ஐந்து நாடாளுமன்றங்களின் போதும் ஆண்டுதோறும் குறைந்தது 120 முதல் 140 நாள்கள் வரை நாடாளுமன்றம் கூடுவதும், பல்வேறு பிரச்னைகள் விவாதிக்கப்படுவதும் வாடிக்கையாக இருந்தது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் விவாதங்களில் கலந்து கொள்வதையும், கூட்டத் தொடரில் தவறாமல் பங்கேற்பதையும் தங்களது கடமையாகவும், மக்கள் பணியாகவும் கருதிச் செயல்பட்டனர்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமல்ல, பிரதமர்களாக இருந்த பண்டித ஜவஹர்லால் நேரு, லால்பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி போன்றவர்கள் நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடக்கும்போது, தவறாமல் அவைக்கு வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். அத்தனை அமைச்சர்களும், ஆளுங்கட்சி உறுப்பினர்களும் தவறாமல் கூட்டத் தொடரில் கலந்து கொண்டனர்.

இப்போதெல்லாம் நிலைமையே மாறிவிட்டது. பிரதமரே பல நாள்கள் அவைக்கு வருவதில்லை. அமைச்சர்களும் சரி, அவரவர் துறை சார்ந்த விவாதங்கள் இல்லாமல் போனால், சற்று நேரம் பெயருக்கு அவையில் இருந்துவிட்டுப் போய்விடுகிறார்கள். ஆளும் கட்சி உறுப்பினர்கள், கட்சித் தலைவி சோனியா காந்தியோ, துணைத்தலைவர் ராகுல் காந்தியோ அவைக்கு வரும்போதுதான் முழு என்ணிக்கையில் நாடாளுமன்றத்திற்கு வருகிறார்கள். ஆளும் தரப்பு நிலைமையே இது என்றால், எதிர்க்கட்சி உறுப்பினர்களைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். போதாக்குறைக்கு அவை கூடும் நாள்களும் முன்பிருந்ததில் பாதியாகக் குறைக்கப்பட்டு, ஆண்டுக்கு 70 அல்லது 80 நாள்கள் கூடினாலே அதிகம் என்றாகி விட்டிருக்கிறது.

பிரதமர் ஜவஹர்லால் நேரு, ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கு அளிக்கப்படுவதைவிட அதிக நேரத்தை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசுவதற்கு ஒதுக்கும்படி வலியுறுத்துவாராம். அதுமட்டுமல்ல, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசுவதை அவரே குறிப்பெடுத்துக் கொண்டு ஆக்கபூர்வமான ஆலோசனைகளுக்கு நன்றி கூறுவது, தவறுகள் சுட்டிக் காட்டப்பட்டால் வருத்தம் தெரிவிப்பது, எதிர்க்கட்சியினரின் கூற்றில் தவறு இருந்தால், வினயத்துடன் பதிலளிப்பது போன்ற ஆரோக்கியமான ஜனநாயக நடைமுறைகளுக்கு பண்டித நேரு இலக்கணம் வகுத்துக் கொடுத்த காலம் அது.

15-ஆவது நாடாளுமன்றம் ஆரம்பம் முதலே பிரச்னைகளில் சிக்கிய ஒன்றாகத்தான் இருந்து வந்திருக்கிறது. அலைக்கற்றை ஒதுக்கீடு பற்றி விசாரிக்க ஜே.பி.சி. அமைப்பது பற்றிய கருத்து வேறுபாட்டில் ஓராண்டும், லோக்பால் அமைப்பது பற்றிய சர்ச்சையில் இன்னொரு ஆண்டும், நிலக்கரிச் சுரங்க ஊழல் ஒதுக்கீடு பற்றிய குற்றச்சாட்டில் இன்னொரு ஆண்டுமாக அவை கூடி விவாதித்ததைவிட, முடங்கிக் கிடந்த நாள்கள்தான் இந்த நாடாளுமன்றத்தின் சாதனை.

மழைக்காலக் கூட்டத் தொடர் முடிவுக்கு வந்தபோது, 122 மசோதாக்கள் நிறைவேற்றப்படாமல் இருந்தன. அவற்றில் எத்தனை மசோதாக்கள் குளிர்காலக் கூட்டத் தொடரின் இந்த 12 நாள்களில் நிறைவேற்றப்படும் என்பது தெரியவில்லை. இந்த மசோதாக்கள் இந்தத் தொடரில் நிறைவேற்றப்படாமல் போனால், காலாவதியாகிவிடும். அடுத்து தேர்ந்தெடுக்கப்படும் நாடாளுமன்றத்தில், அடுத்தாற்போல அமையும் அரசு விரும்பினால் மீண்டும் அவற்றை தாக்கல் செய்தாக வேண்டும்.

2005-இல் முன்மொழியப்பட்ட வகுப்புவாத வன்முறை தடுப்பு சட்ட மசோதா எட்டு ஆண்டுகளாகத் தூங்கிக் கொண்டிருந்தது. அதைப்பற்றி கவலையேபடாத மன்மோகன் அரசு இப்போது அதை தேர்தல் ஆதாயத்திற்காகவும், எதிர்க்கட்சிகளைத் தூண்டிவிட்டு சபை நடவடிக்கையை முடக்கவும் தூசு தட்டி எடுத்துக் கொண்டிருக்கிறது.

ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் மட்டும் நடத்திவிட்டு, சட்டப் பேரவையோ, நாடாளுமன்றமோ கூடாமல், விவாதமோ, எதிர்ப்போ விமர்சனமோ இல்லாமல் ஆட்சி நடத்த வேண்டும் என்பதுதான் ஆட்சியாளர்களின் விருப்பம் என்று தெரிகிறது. வாழ்க ஜனநாயகம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com