இந்தோனேசிய சுற்றுலா சொர்க்கமான பாலித் தீவில் நடந்த உலக வர்த்தக அமைப்பின் கூட்டம், தோஹா மாநாட்டின் வளர்ச்சி திட்டத்தின் தொடர்ச்சியாக ஐந்து அம்ச அறிவிப்புடன் முடிந்திருக்கிறது. வளர்ச்சி பெற்ற நாடுகளின் நன்மையை முன்னிலைப்படுத்தி, வளர்ச்சி அடையும் நாடுகளின் சந்தையைக் குறிவைத்து நகர்த்தப்படும் உலக வர்த்தக அமைப்பின் வலையில் இந்தியா வசமாக விழுந்து விட்டிருக்கிறது என்பதுதான் சோகம்.
இந்தியா விழுந்திருந்தால்கூடப் பரவாயில்லை. இந்தியாவின் தலைமையை ஏற்று தங்கள் சார்பில் இந்தியாவைப் பேசப் பணித்த 33 (இப்போது 46) வளர்ச்சி அடையும் நாடுகளுமல்லவா, பாவம், ஏமாற்றப்பட்டிருக்கின்றன.
உலக வர்த்தக நிறுவனம், விவசாய பொருள்களுக்கு எந்த அளவுக்கு குறைந்தபட்ச விலையை நிர்ணயிக்கலாம் என்பதற்கு சில வரம்புகளை விதிக்கப் பணிக்கிறது. அதாவது, அந்த விவசாயப் பொருளின் மொத்த உற்பத்தியில் 10% வரைதான் மானியம் வழங்க முடியும். சந்தை விலையைவிட, அரசு நிர்ணயிக்கும் விலை எப்போதும் குறைவாகவே இருப்பதால், உணவுப் பாதுகாப்பு மசோதாவும், அதிகரித்த விவசாயப் பொருள்களின் சந்தை விலையும் இந்த வரம்பை மீறிய நிலைமைக்கு நிச்சயமாக நம்மை தள்ளிவிடும். அதனால்தான் இந்த வரம்பு விதிப்பு ஒன்பது ஆண்டுகளுக்கு தள்ளி வைக்கப்பட வேண்டும் என்பது இந்தியாவின் தலைமையிலான 33 வளர்ச்சி அடையும் நாடுகளின் கோரிக்கையாக இருந்து வந்தது.
உணவுப் பாதுகாப்பு மசோதாவைப் பொருத்தவரை, நாம் விவசாயிக்கு எந்தவித மானியமும் அளித்துவிடவில்லை. மாறாக, வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ள குடிமக்களுக்கு மானிய விலையில் உணவுப் பொருள்களை வழங்குகிறோம். இது எப்படி உலக வர்த்தக அமைப்பின் நிபந்தனைகளில் குறுக்கிடும் என்பது புரியவில்லை.
இந்தியாவைப் போன்ற அதிக மக்கள்தொகை உள்ள, வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழ்பவர்கள் பெருமளவில் உள்ள நாடுகளில், சந்தைப் பொருளாதார முறையில் உணவுப் பொருள்கள் விற்கப்பட்டால், பாதிக்கும் மேற்பட்டவர்கள் பட்டினி கிடக்க வேண்டிய நிலைதான் ஏற்படும் என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இப்போதே உணவுப்பொருளின் விலை கட்டுக்கடங்காமல் இருக்கும் நிலையில், மானியம் வழங்காமல் உணவுப் பொருள்கள் சந்தை விலையில் விற்கப்பட வேண்டும் என்பது சாத்தியமே இல்லாத நடவடிக்கை.
ஒப்பந்தத்தின் இந்தப் பகுதியை ஏற்றுக்கொள்ள நான்காண்டு கால அவகாசத்தை இந்தியா கோரிப் பெற்றிருக்கிறது. அதைத்தான் மிகப்பெரிய வெற்றி என்று வர்த்தக அமைச்சர் ஆனந்த் சர்மா கொண்டாடுகிறார். நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு சர்வதேசச் சந்தையிலிருந்து குறைந்த விலைக்கு உணவுப் பொருள்கள் இங்கே கொட்டப்படும் என்பதும், இந்தியவிவசாயம் முற்றிலுமாக அழிந்துவிடும் என்பதும் அவருக்குத் தெரியாது என்று நம்பவா முடிகிறது?
நமது உணவுக்காக வெளிநாட்டு இறக்குமதியை நம்புவது என்பதுதான் எல்லைப் பாதுகாப்பைவிட மோசமான அச்சுறுத்தல். நமது உற்பத்திச் செலவு அதிகமாகவே இருந்தாலும், இந்தியா தனது உணவு உற்பத்தியைத் தன்னிறைவு உள்ளதாக வைத்துக் கொண்டாக வேண்டுமே தவிர, அந்நிய நாடுகளை நம்பி இருப்பது என்பது தவறான அணுகுமுறை. அதற்காக, மானியம் செலவழிப்பதையும் குறைக்க முடியாது, கூடாது.
அடுத்தபடியாக, இந்திய நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட உணவுப் பாதுகாப்பு மசோதா பற்றி விவாதிப்பதும், உலக வர்த்தக அமைப்பின் கட்டுப்பாடுகளை நிபந்தனைகளுடன் ஏற்றுக் கொள்வதும் மிகப்பெரிய தவறு. நியாயமாகப் பார்த்தால் இதற்காகவே நமது வர்த்தக அமைச்சர் மீதும் அமைச்சரவை அதிகாரிகள் மீதும் நாடாளுமன்ற அவமதிப்புக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வளர்ச்சி அடையும் நாடுகள் தங்களது விவசாயிகளுக்கு மானியம் வழங்குவதால், சர்வதேசச் சந்தையில் அவர்கள் குறைந்த விலைக்குத் தங்களது உணவுப் பொருள்களை விற்பனைக்குக் கொண்டுவந்து விடுவார்கள் என்கிற வளர்ச்சி பெற்ற நாடுகளின் அச்சத்தால் ஏற்படுத்தப்பட்டிருக்கும் நிபந்தனை இது. இங்கே உணவுப் பொருட்களின் விலை அதிகமாக இருந்தால்தான் தங்கள் நாடுகளில் உற்பத்தியாகும் உணவுப் பொருட்களை வளர்ச்சி அடையும் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து தங்கள் நாட்டு விவசாயிகளுக்கு உதவ முடியும் என்கிற உள்நோக்கமும் இதன் பின்னணியில் இருக்கிறது.
தெரிந்துதான் செய்தார்களா, தெரியாமல் செய்தார்களா என்கிற விவாதத்திற்கு வரவில்லை. வளர்ச்சி அடைந்த நாடுகள் இந்தியாவை ஏமாற்றி இருக்கின்றன. இந்தியா, நம்மை நம்பிய வளர்ச்சி அடையும் நாடுகளை வஞ்சித்திருக்கிறது. இதுதான் "வர்த்தக' உண்மை!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
இன்றைய ராசி பலன் (24.04.2026) - மகரம்
இன்றைய ராசி பலன் (24.04.2026) - மிதுனம்
இன்றைய ராசி பலன் (24.04.2026) - மேஷம்
இன்றைய ராசி பலன் (24.04.2026) - விருச்சிகம்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

