வக்கிரத்துக்கு வக்காலத்து!

உச்சநீதிமன்றம் சமீபத்தில் வழங்கி இருக்கும் ஒரு தீர்ப்பு பரவலான கண்டனத்திற்கும், எதிர்ப்புக்கும் உள்ளாகி இருக்கிறது. இந்தத் தீர்ப்பு ஒரு குடிமகனின் ஜீவாதார உரிமைக்கு எதிரான ஒன்று என ஊடகங்களும் சித்திரிக்க முற்பட்டிருக்கின்றன.
Updated on
2 min read

உச்சநீதிமன்றம் சமீபத்தில் வழங்கி இருக்கும் ஒரு தீர்ப்பு பரவலான கண்டனத்திற்கும், எதிர்ப்புக்கும் உள்ளாகி இருக்கிறது. இந்தத் தீர்ப்பு ஒரு குடிமகனின் ஜீவாதார உரிமைக்கு எதிரான ஒன்று என ஊடகங்களும் சித்திரிக்க முற்பட்டிருக்கின்றன.

பிரச்னையின் பின்னணி இதுதான். கடந்த 2009ஆம் ஆண்டு தில்லி உயர்நீதிமன்றம், 1860ஆம் ஆண்டிலிருந்து பிரிட்டிஷ் காலனிய ஆட்சியாளர்களால் கொண்டு வரப்பட்ட இந்திய தண்டனைச் சட்டத்தின் 14ஆவது அத்தியாயத்திலுள்ள 377ஆவது பிரிவை, அரசியல் சட்டத்திற்கு எதிரானது என்று ரத்து செய்து தீர்ப்பு வழங்கியது. அந்தத் தீர்ப்பு, இப்போது உச்சநீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டிருக்கிறது. இதுபோன்ற பிரச்னைகளை விவாதித்து, காலமாற்றத்திற்கு ஏற்ப குறிப்பிட்ட சட்டங்கள் தொடர வேண்டுமா, அகற்றப்பட வேண்டுமா என்பதை நாடாளுமன்றம் தீர்மானிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறியிருக்கிறது. அதற்குத்தான் இத்தனை எதிர்ப்பு.

ஆமாம், சட்டப் பிரிவு 377 என்ன கூறுகிறது? இயற்கைக்கு விரோதமாக ஆண், பெண், விலங்கினத்துடனான வக்கிரத்தனமான உடலுறவுகள் சட்டப்படி குற்றம் என்பதுடன், அப்படிப்பட்ட உறவுகளில் ஈடுபடுபவர்களுக்குக் குறைந்தபட்சம் பத்தாண்டு சிறைத்தண்டனையும், அபராதமும், அதிகபட்ச தண்டனையாக ஆயுள்தண்டனையும் விதிக்கப்படலாம் என்கிறது அந்தச் சட்டப் பிரிவு. இதன் மூலம் "கே' எனப்படும் தன்பாலின உறவாளர்கள் அல்லது ஓரினச் சேர்க்கையாளர்கள் சட்டப்படி தண்டனைக்கு உட்படுவார்கள்.

""நான் ஓரினச் சேர்க்கையாளன். மனம் விரும்பி ஓரினச் சேர்க்கையில் ஈடுபடும்போது அதை சட்டம் போட்டுத் தடுப்பது, எங்கள் சுதந்திரத்தில் அரசு தலையிடுவதாக இருக்கும். பதினெட்டு வயதானவர்களுக்கு வாக்குரிமை அளிக்கப்படலாமானால், நாங்கள் எப்படிப்பட்ட உறவு வைத்துக் கொள்ள வேண்டும் என்பதை அரசு கட்டாயப்படுத்த வேண்டிய அவசியம் என்ன?'' அந்தச் சட்டப் பிரிவு அகற்றப்பட வேண்டும்'' என்பதுதான் தன்பாலின உறவாளர்களின் வாதம்.

உச்சநீதிமன்றத் தீர்ப்பு வேதனையளிப்பதாகவும், தீர்ப்பால் பாதிக்கப்பட்டவர்களின் அடிப்படை உரிமையை நிலைநாட்ட நாடாளுமன்றம் தயங்கக்கூடாது என்றும் காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி கருத்துத் தெரிவித்திருக்கிறார். இந்தத் தீர்ப்பை எதிர்ப்பதன்மூலம் நகர்ப்புற இளைஞர்களின் ஆதரவு கிடைக்கும், தன்பாலின உறவு வைத்துக் கொண்டிருப்பவர்களின் வாக்கு வங்கி மக்களவைத் தேர்தலில் உதவக்கூடும் என்கிற காங்கிரஸ் தலைமையின் அரசியல் வக்கிரத்தின் வெளிப்பாடு இது. தன்பாலினச் சேர்க்கையாளர்களும், இயற்கைக்கு எதிரான வக்கிரங்களை ஆதரிப்பவர்களும் கணிசமான வாக்கு வங்கிகளாக மாறி இருக்கும் நிலைக்கு இந்தியா தள்ளப்பட்டிருக்கிறது என்பதே அதிர்ச்சி தருவதாக இருக்கிறது.

இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் 13வது ஷரத்தின்படி, அடிப்படை உரிமைகளை மீறும் பிரிட்டிஷ் காலத்திய சட்டங்களை நீக்கவும் மாற்றவும் நாடாளுமன்றத்திற்கு உரிமை தரப்பட்டுள்ளது. பிரிட்டிஷ் காலத்திய சட்டமோ, சுதந்திர இந்திய அரசால் இயற்றப்பட்ட சட்டமோ எதுவாக இருந்தாலும், அது அடிப்படை உரிமைகளுக்கு எதிரானதாக இருந்தால் அதை ரத்து செய்ய நீதிமன்றத்திற்கும் அதிகாரம் உண்டு. அப்படிச் செய்தும் இருக்கிறது. அதனால், அரசியல் சட்டப் பிரிவு 377 விதிவிலக்காக இருக்க முடியாது.

அதே நேரத்தில், வக்கிரங்களுக்கு தனிமனித சுதந்திரம் என்கிற போர்வையில் சட்டபூர்வமான பாதுகாப்பு அளிப்பது ஆபத்து. சிறார்மீதான பாலியல் வன்முறைதான், தன்பாலின உறவு உணர்வின் தொடக்கம். இதுபோன்ற வக்கிரங்களுக்கு சட்டரீதியான பாதுகாப்பு அளித்தால், பாலியல் வன்முறையும்கூட ஒரு வக்கிரம்தானே, அதற்கு மரண தண்டனை கோருவது எப்படி நியாயமாகும்?

இயற்கைக்கு எதிரான எந்தவித செயலாக இருந்தாலும், அது வளர்ச்சி என்கிற பெயரிலான சுற்றுச்சூழல் பாதிப்பானாலும், தனிமனித சுதந்திரம் என்கிற பெயரிலான வக்கிரங்களானாலும், அது அழிவுக்கு வழிகோலும் என்பதில் சந்தேகம் வேண்டாம். அளவுக்கு அதிகமான தனிமனித சுதந்திரம், மேலைநாடுகளை இதுபோன்ற வக்கிரங்களை அனுமதிக்க வைத்திருக்கிறது. தன்பாலின உறவாளராக இருப்பதில் என்ன தவறு என்று தெருவில் இறங்கி கோஷமிடவும், உரிமை பேசவும் வைத்திருக்கிறது. தன்பாலின உறவுகளே போதுமென்றால் ஆண், பெண் என்கிற இனப்பாகுபாடே அவசியமற்றதே? பிழை படைப்பிலல்ல, இவர்களது மன ஓட்டத்தில்!÷

சட்டம் போட்டு குற்றங்களைத் தடுத்துவிட முடியாது என்றாலும், நிச்சயமாகக் குறைக்க முடியும். சமுதாயத்தில் வக்கிரங்கள் இருக்கத்தான் செய்யும். வக்கிரங்களை தெரிந்தும் தெரியாமல் இருந்துவிடுவதுதான் நல்லது. அதற்கு அங்கீகாரம் அளிப்பதும் தவறு. பெரிதுபடுத்தி விமர்சிப்பதும் தவறு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com