இந்தியக் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி இந்த மாதத் தொடக்கத்தில் நாகாலாந்து மாநிலம் உருவான பொன்விழா நிகழ்ச்சியில் கலந்துகொள்ளச் சென்றது, வடகிழக்கு மாநிலங்களின் உணர்வுகளுக்கு நாம் முக்கியத்துவம் அளிக்கத் தொடங்கி இருப்பதற்கான அறிகுறியாகத் தெரிகிறது. அதிலும் பிரணாப் முகர்ஜி குடியரசுத் தலைவராகப் பதவி ஏற்றபின், கடந்த 16 மாதங்களில் அஸ்ஸாம், நாகாலாந்து மாநிலங்களுக்கு இரண்டு முறையும், அருணாசலப் பிரதேசம், மணிப்பூர், மேகாலயா, திரிபுரா மாநிலங்களுக்கு எல்லாம் ஒரு முறையும் விஜயம் செய்திருக்கிறார். விரைவிலேயே மிசோரத்திற்கும் விஜயம் செய்துவிட்டால், அவரது வடகிழக்கு மாநில சுற்றுப்பயணம் முழுமையடையும்.
அருணாசலப் பிரதேசம் இந்தியாவிலிருந்து பிரிக்க முடியாத, விவாதத்திற்கு அப்பாற்பட்ட பகுதி என்கிற பிரணாப் முகர்ஜியின் கூற்றை, சீனா மறுத்து அறிக்கை வெளியிட்டிருக்கிறது என்றாலும், கடந்த 2009-இல் பிரதமர் மன்மோகன் சிங்கின் அருணாசலப் பிரதேச விஜயத்திற்குக் கண்டனம் தெரிவித்ததுபோல, வன்மையான எதிர்ப்பை இப்போது காட்டாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.
மேற்கு வங்காளத்தில் 20 முதல் 40 கி.மீ. அகலமே உள்ள சிலிகுரி இடைவெளிதான் இந்தியாவையும் வடகிழக்கு மாநிலங்களையும் இணைக்கும் நிலப்பரப்பு. சிலிகுரி இடைவெளியின் ஒருபுறம் நேபாளமும் இன்னொருபுறம் வங்கதேசமும் இருக்கின்றன. வங்கதேசம், பூடான், சீனா, மியான்மர், நேபாளம் என்று இந்தியாவின் ஐந்து அண்டை நாடுகளுடனான எல்லைப்பகுதிகளை வடகிழக்கு மாநிலங்கள் தொட்டுக் கொண்டிருப்பதால், இந்த ஏழு மாநிலங்களின் முக்கியத்துவம் மேலும் அதிகரிக்கிறது.
ஏறத்தாழ 4,500 கி.மீ. சர்வதேச எல்லைகளை உள்ளடக்கிய, அதேநேரத்தில் வெறும் 40 கி.மீ. மட்டுமே ஏனைய இந்தியாவுடனான தொடர்பில் இருக்கும் பகுதி இது. அதனால், வடகிழக்கு மாநிலங்களை நாம் இழந்துவிடாமல் இருக்க பாதுகாப்பில் செலுத்தும் கவனத்தை, அங்கு வாழும் மக்களின் மனதை வென்றெடுப்பதிலும் செலுத்த வேண்டும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
வடகிழக்கு மாநிலங்களுக்கும் ஏனைய இந்திய மாநிலங்களுக்கும் இடையேயான கலாசார உறவுகள் குறைவு என்பது அம் மாநிலங்கள் இந்தியாவுடன் அதிகத் தொடர்பில்லாமல் இருப்பதற்கு காரணமாக இருக்கலாம். ஆனால், அந்த மாநிலங்களின் வளர்ச்சி குறைந்து காணப்படுவதற்கு, இங்கிருந்து தேர்ந்தெடுக்கப்படும் மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைவு என்பதுதான் காரணம். மேலே குறிப்பிட்ட இரண்டு காரணங்களுமே, வடகிழக்கு மாநிலங்களை நாம் புறக்கணிப்பதையும், அந்த மாநிலங்களின் வளர்ச்சியிலும், இந்தியாவுடனான ஒருங்கிணைப்பிலும் கவனம் செலுத்தாமல் இருப்பதையும் நியாயப்படுத்திவிடாது.
பெருவாரியாக ஆதிவாசிகளும், புத்த மதத்தினரும் வசிக்கும் வடகிழக்கு மாநிலங்களில், கிறிஸ்துவ மிஷனரிகளின் தீவிரமான சேவையால் பரவலாகவே கல்வி, மருத்துவ வசதிகள் பெருகி இருக்கின்றன. இதன் மூலம் கணிசமான மதமாற்றம் ஏற்பட்டிருக்கிறது என்றாலும்கூட, அரசு செய்யத் தவறிய கடமையை கிறிஸ்துவப் பாதிரிமார்கள் செவ்வனே செய்து வருகிறார்கள் எனும்போது அதைப் பாராட்டுவதுதானே நியாயம்? அந்த வகையில் அவர்களது மதமாற்ற முயற்சியையும் நாம் நியாயப்படுத்தாமல் எப்படி இருப்பது?
அடுத்த பத்து ஆண்டுகளில் அதிகபட்சமாக வடகிழக்கு மாநிலங்களில் உருவாகக்கூடிய வேலைவாய்ப்பு 26 லட்சம் என்றால், படித்து வேலைக்காகக் காத்திருப்போரின் எண்ணிக்கை இரண்டு கோடியாக இருக்கும். நல்ல சாலைகள் கிடையாது. ரயில் வசதி கிடையாது. விமானப் போக்குவரத்து இல்லை. மின் உற்பத்தியும் மிகவும் குறைவு. போதாக்குறைக்கு ஆங்காங்கே தீவிரவாதமும் காணப்படுகிறது.
இருபது ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததுபோல பிரிவினைவாத கோஷங்கள் இப்போது இல்லை என்றாலும், தன்னாட்சி உரிமை கோரும் அமைப்புகள் தீவிரமாகவே செயல்படுகின்றன. ராணுவத் தலையீடு அகல வேண்டும் என்கிற கோரிக்கையும் அதிகரித்து வருகிறது. நாகாலாந்து அரசு, தன்னிடமுள்ள இயற்கை வளங்களை பயன்படுத்திக் கொள்ள அனுமதி கேட்டால் மத்திய அரசு மறுக்கிறது. காரணம், நாகாலாந்திலுள்ள எண்ணெய் வளத்தை ஆராயும் உரிமை மாநில அரசுக்கு இல்லை என்கிற சட்டப்பிரிவு 371-ஐ நீட்டுகிறது.
இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் வசிக்கும் மக்கள் நம்மை இந்தியர்கள் என்றும் அந்நியர்கள் என்றும் பார்க்கிறார்கள் என்று சொன்னால், அதற்குக் காரணம் நாம் அவர்களை நம்மில் ஒருவராகப் பார்க்காததுதான் என்பதை நாம் உணர மறுக்கிறோம். இப்படிப்பட்ட சூழலில், குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் விஜயம், வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சியை அதிகரிக்கவும், தீவிரவாத இயக்கங்கள் அரசியல் நீரோட்டத்தில் கலக்கும் நிலை ஏற்படவும் உதவுமேயானால், அது இந்தியாவுக்கும் நல்லது அந்தந்த மாநில மக்களுக்கும் நல்லது!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திமுகவின் வெற்றி உறுதி: அமைச்சா் பி. மூா்த்தி

பழங்குடியினா் தோ்தல் புறக்கணிப்பு: பேச்சுவாா்த்தைக்குப் பின் சமரசம்
மக்கள் மாற்றத்தை விரும்புகிறாா்கள்: ஹெச். ராஜா

தில்லியில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டும் சம்பவங்கள் குறைவு: போக்குவரத்துத் துறை அமைச்சா் தகவல்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

