கேஜரிவாலுக்கு நன்றி!

கடந்த 2011 டிசம்பர் மாதமே மக்களவையால் நிறைவேற்றப்பட்ட லோக்பால் மசோதா மாநிலங்களவையில் சில மாற்றங்கள் பரிந்துரைக்கப்பட்டு, இப்போது மக்களவையால் மீண்டும் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
Updated on
2 min read

கடந்த 2011 டிசம்பர் மாதமே மக்களவையால் நிறைவேற்றப்பட்ட லோக்பால் மசோதா மாநிலங்களவையில் சில மாற்றங்கள் பரிந்துரைக்கப்பட்டு, இப்போது மக்களவையால் மீண்டும் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. அரை நூற்றாண்டு காலமாக, எட்டு முறை முட்டி மோதி முயன்று நிறைவேற்ற முடியாமல் தத்தளித்துக் கொண்டிருந்த லோக்பால் மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறி இருப்பது, புதியதொரு தொடக்கத்தின் அறிகுறி என்பதில் ஐயப்பாடே வேண்டாம். ஊழலுக்கும் முறைகேடுகளுக்கும் எதிராகப் போராட இன்னுமொரு ஆயுதம் பொதுமக்களுக்குக் கிடைத்திருக்கிறது.

பிரதமர் உள்ளிட்ட மேலான பதவி வகிப்பவர்கள் அனைவருமே லோக்பால் சட்டத்தின் வரம்பிற்குள் கொண்டுவரப்பட்டிருப்பது, நிர்வாகத்தின் வெளிப்படைத்தன்மையையும், முறைகேடுகளில் ஈடுபடுபவர்களை வெளிச்சம்போட்டுக் காட்டும் வாய்ப்பையும் உருவாக்கித் தந்திருக்கிறது. தகவல் பெறும் உரிமைச் சட்டம் ஊழலுக்கு எதிரான போராட்டத்தின் முதல் கட்டம் என்றால் லோக்பால் மசோதா நிறைவேறி இருப்பது அடுத்த கட்டம்.

""ஊழலை எதிர்த்துப் போராட லோக்பால் சட்டம் மட்டுமே போதாது. ஊழலுக்கு எதிரான, ஊழல் நடைபெறாமல் நடக்கக்கூடிய வழிமுறைகளை நமது நிர்வாகத்தில் புகுத்தினால் மட்டுமே, ஊழலையும் முறைகேடுகளையும் கட்டுக்குள் கொண்டுவர முடியும்'' என்கிற காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தியின் மக்களவை பேச்சு நூற்றுக்கு நூறு உண்மை. இது தொடர்பாக, நாடாளுமன்றத்தின் ஒப்புதலை எதிர்நோக்கிக் காத்திருக்கும் ஏனைய ஆறு மசோதாக்களும், காலதாமதமில்லாமல் இந்த குளிர்காலக் கூட்டத் தொடரிலேயே நிறைவேற்றப்படுமானால், தேர்தல் வெற்றி தோல்விகளுக்கு அப்பால், சுதந்திர இந்திய சரித்திரத்தில் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் மிகப்பெரிய சாதனையாக அது போற்றப்படும்.

மாநில அரசுகளின் வற்புறுத்தலுக்கு இணங்க லோக் ஆயுக்தா அமைப்பது பற்றிய ஷரத்து லோக்பால் மசோதாவிலிருந்து அகற்றப்பட்டிருக்கிறது. அடுத்த ஓராண்டுக்குள் மாநிலங்கள், ஊழலுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்க லோக் ஆயுக்தா அமைப்புகளை உருவாக்க வேண்டும் என்கிற நிபந்தனையுடன் தனது கடமையை மத்திய அரசு முடித்துக் கொண்டுவிட்டது. மாநிலங்கள் லோக் ஆயுக்தா அமைக்காமல் போனால் என்ன செய்வது என்பதைப் பற்றி மசோதாவில் தெளிவான விளக்கம் இல்லை.

லோக்பால் அமைப்புக்கு என்று தனியாக விசாரணை வசதிகள் இல்லாமல் இருப்பதை ஒரு குறையாக எடுத்துக்கொள்ள முடியாது. அதற்கான அவசியமும் கிடையாது. அப்படி ஒரு துறை இயங்குமானால், சிபிஐக்கு போட்டி அமைப்பாக மாறி நிர்வாகச் சிக்கல்களைத்தான் ஏற்படுத்தும்.

மத்திய புலனாய்வுத்துறை (சிபிஐ) லோக்பாலின் கண்காணிப்பு மற்றும் வழிகாட்டுதல்களின்படி, லோக்பாலின் கவனத்திற்குக் கொண்டுவரப்படும் வழக்குகளில் புலன் விசாரணை நடத்தி அறிக்கை அளிக்கும். லோக்பாலால் பரிந்துரைக்கப்பட்ட வழக்குகளில், குற்றம் சாட்டப்பட்டவர்கள்மீது விசாரணை நடத்த மத்திய - மாநில அரசுகளின் முன் அனுமதி இனிமேல் தேவையற்றதாகிறது. சிபிஐ இயக்குநர் நியமனத்தில்கூட லோக்பாலின் கருத்தும் கலந்தாலோசிக்கப்படும் என்பதும், லோக்பாலுக்கு என்று தனியான விசாரணை மற்றும் வழக்கு நடத்தும் பிரிவுகள் இருக்கும் என்பதும் அந்த அமைப்பின் அதிகார வரம்பை கணிசமாகவே உயர்த்தி இருக்கின்றன.

நாடாளுமன்றத்தில் லோக்பால் மசோதா நிறைவேற்றப்பட்டதுடன் பணி முடிந்துவிடவில்லை. லோக்பால், லோக் ஆயுக்தாக்களுக்கு அரசியல் சட்ட அங்கீகாரம் தரக்கூடிய சட்டத்திருத்தம் நிறைவேற்றப்பட வேண்டும். அதேபோல, குறித்த காலவரைக்குள் மக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுவது, குறைகள் களையப்படுவது போன்றவற்றுக்கான மசோதாக்களும் நிறைவேற்றப்பட்டால்தான், ஊழலுக்கும் முறைகேடுகளுக்கும் எதிரான நடவடிக்கைகள் முழுமை பெறும்.

தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் அரவிந்த் கேஜரிவாலின் ஆம் ஆத்மி கட்சிக்குக் கிடைத்த மிகப்பெரிய வரவேற்புதான் காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட எல்லா அரசியல் கட்சிகளையும் அவசர அவசரமாக லோக்பால் மசோதாவை நிறைவேற்ற வைத்திருக்கிறது. ஊழலுக்கு எதிரான எந்தவித நடவடிக்கையையும் எடுக்க அரசியல் கட்சிகள் தயங்குகின்றன என்கிற பொதுமக்களின் அதிருப்தியை இப்போதாவது நமது அரசியல் தலைவர்கள் புரிந்து கொண்டார்களே, அதுவரை மகிழ்ச்சி. தில்லி மக்கள் கேஜரிவாலுக்கு ஆதரவாக தீர்ப்பு அளித்திருக்கா விட்டால், இன்னும் பல ஆண்டுகள் இந்த மசோதா தூசு பிடித்துக் கொண்டிருக்குமே தவிர சட்டமாகி இருக்காது. அதற்காக நாம் அரவிந்த் கேஜரிவாலுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறோம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com