திடீர் ஞானோதயம்!

ஆட்சியாளர்களின் வரம்பு மீறிய வற்புறுத்தல்களிலிருந்து அதிகாரிகளைப் பாதுகாக்க, மத்திய - மாநில அமைச்சர்களின் நடத்தை விதிகளில் சில மாற்றங்களை ஏற்படுத்தும் சட்டத் திருத்தத்திற்கு ஒப்புதல் அளித்திருக்கிறது மத்திய அமைச்சரவை.
Updated on
2 min read

ஆட்சியாளர்களின் வரம்பு மீறிய வற்புறுத்தல்களிலிருந்து அதிகாரிகளைப் பாதுகாக்க, மத்திய - மாநில அமைச்சர்களின் நடத்தை விதிகளில் சில மாற்றங்களை ஏற்படுத்தும் சட்டத் திருத்தத்திற்கு ஒப்புதல் அளித்திருக்கிறது மத்திய அமைச்சரவை. உத்தரப் பிரதேச மாநிலத்தில் துர்காசக்தி நாக்பால் என்கிற பெண் அதிகாரி மீதான பணியிடை நீக்கத்தைத் தொடர்ந்து, அகில இந்திய அளவில் அரசுப் பணி அதிகாரிகள் மத்தியில் ஏற்பட்டிருக்கும் பரவலான அதிருப்திக்கு விடை காண இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது என்று தெரிகிறது. ஆட்சியிலிருக்கும் அரசியல்வாதிகளின் தலையீட்டால், நிர்வாகத்தின் நடுநிலையும், சட்டத்தின் அடிப்படையிலான செயல்பாடுகளும் தடம் மாறிவிடாமல் இருப்பதற்காகத்தான் இந்த முடிவு என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவிக்கிறது.

அமைச்சர்கள் தங்களது நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ளும் வகையில் உத்தரவுகளைப் பிறப்பிக்க அதிகாரிகளை வற்புறுத்துவதிலிருந்து பாதுகாக்கவும் இதன் மூலம் வழிகோலப்படும் என்கிறது உள்துறை அமைச்சகத்தின் வரைவு. "இந்திய அரசுப்பணி ஊழியர்களின் நடுநிலையான செயல்பாடுகளை பாதிக்கும் விதத்திலோ, அரசு ஊழியர்கள் சட்டப்படி தங்களது கடமைகளைச் செய்யவிடாமல் தடுக்கும் விதத்திலோ அமைச்சர்கள் நடந்துகொள்ளக் கூடாது' என்கிறது அந்த வரைவு.

இது மட்டுமல்லாமல், மத்திய - மாநில அமைச்சர்களாக பதவி வகிக்கும் அமைச்சர்களுக்கு மேலும் பல புதிய நிபந்தனைகளையும், கட்டுப்பாடுகளையும் இந்தச் சட்டத்திருத்தத்தின் மூலம் மத்திய உள்துறை அமைச்சகம் கொண்டுவர இருக்கிறது. மத்திய அமைச்சரவையில் இடம்பெறும் அமைச்சர்கள் பதவி ஏற்றுக் கொண்டவுடன், தங்களுடைய சொத்துகள், வியாபாரத் தொடர்புகள், நடவடிக்கைகள், முதலீடுகள், கடன் பாக்கிகள் போன்றவற்றை மட்டுமல்லாமல் தங்களது குடும்பத்தினரின் பொருளாதார விவரங்களையும் பிரதமருக்குத் தெரிவிக்கக் கடமைப்படுகிறார்கள். அதேபோல, மாநில அமைச்சரவையில் பதவி ஏற்போரும் மேலே குறிப்பிட்ட தகவல்களையும் விவரங்களையும் மாநில முதலமைச்சருக்கு தெரிவிக்கக் கடமைப்படுகிறார்கள்.

அமைச்சர்கள் தெரிவிக்க வேண்டிய விவரங்களில் அவர்களுக்கும், அவர்களது உறவினர்களுக்கும் இருக்கும் அசையாச் சொத்துகள், பங்குகள், நகைகள், முதலீடுகள் போன்ற அனைத்துமே அடங்கும். அவர்களுக்கு ஏதாவது வியாபார, தொழில் நிறுவனங்களுடன் தொடர்போ, அதன் இயக்குநர், நிர்வாக இயக்குநர், தலைவர் போன்ற பதவியோ இருக்குமானால், அமைச்சராகப் பதவி ஏற்றுக் கொள்வதற்கு முன்னால் அனைத்திலிருந்தும் அவர்கள் விலகி இருக்க வேண்டும். பதவி வகிக்கும் காலத்தில் அந்த நிறுவனங்களுடன் எந்தவிதத் தொடர்பும் இருக்கக் கூடாது.

அமைச்சராக இருப்பவரின் குடும்பத்தினரோ, நெருங்கிய உறவினரோ புதிதாக ஏதாவது தொழில் நிறுவனம் அல்லது வியாபார நிறுவனம் தொடங்குவதோ, அரசுத் துறைகளுடன் வேலை அல்லது ஒப்பந்தப்புள்ளி கோரி பொருள்கள் வழங்குதல் போன்ற எந்தவிதத் தொடர்பு வைத்துக்கொள்வதோ கூடாது. அறக்கட்டளை, தர்ம ஸ்தாபனம், அரசியல் கட்சி இவற்றுக்கான அதிகாரபூர்வ நன்கொடை தவிர வேறு எதற்காகவும் நிதி திரட்டுவதோ, நெருங்கிய உறவினர்கள் தவிர வேறு யாரிடமிருந்தும் விலைமதிப்புள்ள பொருள்களை அன்பளிப்பாகப் பெறுவதோ கூடாது என்பதும் இந்த வரைவில் குறிப்பிடப்பட்டிருக்கும் ஏனைய விதிமுறைகள்.

லஞ்சம் வாங்கக்கூடாது, ஆனால் கட்சிக்கு நிதி திரட்டலாம் என்கிற கருத்து, வேடிக்கையாக இருக்கிறது. உறவினர்களிடமிருந்து அன்பளிப்பு பெறலாம் என்றால், லஞ்சம் அவர்கள் மூலமாகத் தரப்படாதா? எதற்காக இந்த ஓட்டைகள்?

மத்திய - மாநில அமைச்சரவைகளில் இடம் பெற்றிருப்பவர்களின் மனைவி அல்லது கணவர் மற்றும் குழந்தைகள் இந்தியாவிலோ வெளிநாடுகளிலோ அன்னிய அரசில் பணிபுரியக் கூடாது. வெளிநாட்டு நிறுவனங்களில் பணிபுரிவதாக இருந்தால் அவர்கள் பிரதமரின் முன் அனுமதி பெற்றிருக்க வேண்டும் என்கிறது அந்த வரைவு.

விரைவில் மக்களவைத் தேர்தல் வர இருக்கிறது. மத்திய அரசு ஊழியர்கள் மட்டுமே ஏறத்தாழ 30 லட்சம் பேர் இருக்கிறார்கள். மாநில அரசுகளின் ஊழியர்களையும் கணக்கிலெடுத்தால் அதுவே ஒரு கணிசமான வாக்கு வங்கி. உயர் அதிகாரிகளின் உதவி, தேர்தல் நேரத்தில் ஆட்சியாளர்களுக்குத் தேவைப்படும். அதையெல்லாம் கணக்கில்கொண்டு, அவர்களை திருப்திப்படுத்த மத்திய உள்துறை அமைச்சகம் இப்படி ஒரு சட்டத்திருத்தம் கொண்டு வருகிறதோ என்னவோ?

தாங்கள் நேர்மையாளர்கள் என்று காட்டிக் கொள்ளச் செய்யப்படும் கண்துடைப்பு நாடகம் இது. நமது அமைச்சர்கள் தரும் விவரங்களை இணையதளத்தில் வெளியிடும் துணிவும், வெளிப்படைத்தன்மையும் இருந்தால், உள்துறை அமைச்சகத்தின் நோக்கத்தில் நேர்மை இருக்கிறது என்று பாராட்டலாம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com