இந்தியா சுதந்திரம் அடைந்து மூன்று ஆண்டுகளே ஆகியிருந்தன. அப்போதைய ஆட்சிப் பணி அதிகாரிகள் மற்றும் ஆட்சியில் அமர்ந்த அரசியல் தலைவர்கள் சிலரின் நடவடிக்கைகள் துணைப் பிரதமரும் உள்துறை அமைச்சருமான சர்தார் வல்லபபாய் படேலைத் திடுக்கிட வைத்தது.
""நமது நிர்வாகத்திலும் பொது வாழ்க்கையிலும் காணப்படுகின்ற சில நடவடிக்கைகளும் மனப்போக்கும் எனக்கு வேதனையை ஏற்படுத்துகிறது. பொது வாழ்வில் ஈடுபடுபவர்களின் மனவோட்டம் அதிர்ச்சி தருவதாக இருக்கிறது. நமது அதிகாரிகளும், அதிகாரம் கையில் கிடைத்திருக்கும் அமைச்சர்களும் இதுபோல் நடந்து கொள்ளும் விதம், நிர்வாகச் சீர்கேட்டின் தொடக்கமாக இருக்குமோ என்கிற அச்சத்தைத் தரும் விதத்தில் அமைந்திருக்கிறது. இன்றைய தேவை செயல்பாடு. ஆனால், நாம் நிறையப் பேசிக் கொண்டிருக்கிறோம். உங்களைச் சுற்றி நடக்கும் தவறுகளைத் தட்டிக் கேட்கவும், தவறான செயல்பாடுகளுக்கு எதிராகக் குரலெழுப்பவும் தயங்கக் கூடாது என்று நாட்டு மக்கள் அனைவரையும் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்'' என்று அவர் குறிப்பிட்டிருந்தார். அப்போதே நிலைமை அப்படி என்றால், இப்போது கேட்கவா வேண்டும்?
நிர்வாகம் தொடர்பான உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களும், உத்தரவுகளும் அரசியல் தலைமைக்கும், நிர்வாக இயந்திரத்திற்கும் இடையிலான பிரச்னையில் தலையிடுவதாகக் கருதுவது தவறு. உச்சநீதிமன்றத்தின் சமீபத்திய வழிகாட்டுதல், வாகனங்களில் சிவப்பு விளக்கு வைத்துக் கொள்வது பற்றியது. அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் மட்டுமல்ல, ஏதாவது வாரியம் அல்லது அரசு சார்ந்த கமிட்டி, ஆய்வுக் குழு போன்றவற்றில் நியமிக்கப்பட்டவர்களும் சிவப்பு விளக்கு சுழல வாகனங்களில் வளைய வருகிறார்கள். அரசுடைமையாக்கப்பட்ட வங்கி அதிகாரிகளும் கூடத் தங்கள் வாகனத்தில் அரசு வாகனம் என்பதாக எழுதிக் கொள்கிறார்கள். அச்சாபீஸ் வைத்திருப்பவர்கள்கூட பத்திரிகையாளராகத் தங்களது வாகனங்களை "பிரஸ்' என அடையாளம் காட்டுகிறார்கள்.
போதாக்குறைக்கு, அரசியல்வாதிகளுக்கு சிறப்புப் பாதுகாப்பு பெறுவது பெருமையாகி விட்டிருக்கிறது. "எக்ஸ்' பிரிவு பாதுகாப்பு என்றால் இரண்டு காவலர்களும், "ஒய்' பிரிவு என்றால் 11 காவலர்களும், "இசட்' பிரிவு என்றால் 22 பேரும், "இசட் ப்ளஸ்' என்றால் 36 பேரும் பாதுகாப்புக்கு அளிக்கப்படுகிறார்கள். சுதந்திர நாட்டில் பொது வாழ்க்கையில் ஈடுபட்டிருக்கும் இவர்களுக்கு, தங்கள் உயிருக்கு ஆபத்து என்று பாதுகாப்புக் கோருவது கேவலமாகத் தெரியவில்லையே, ஏன்?
எந்தப் பதவியும் இல்லாத சாதாரண அரசியல்வாதியும் கூடத் துப்பாக்கியுடன் இரண்டு காவலர்கள் தன்னுடன் வருவது பெருமை என்று நினைக்கும் அவலம் இந்த நாட்டில் மட்டுமே காணப்படும் முரண். மக்களுக்காகப் பொது வாழ்க்கையில் இருப்பதாகச் சொல்லிக் கொண்டு மக்களின் வரிப் பணத்தை வீணாக்கும் இந்தப் போக்கைக் கண்டித்திருப்பதுடன், வாகனங்களில் சிவப்பு விளக்குப் பொருத்திக் கொள்ளும் கலாசாரத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்க உச்ச நீதிமன்றம் வலியுறுத்தி இருக்கிறது.
சுதந்திர இந்தியாவில் நமது அரசியல்வாதிகள், காலனிய கவர்னர்களையும், அதிகாரிகளையும் போல வாழ்க்கை வசதிகளை அனுபவிக்கவும், அதிகார போதையில் செயல்படவும் தயங்கமாட்டார்கள் என்பது அண்ணல் காந்தியடிகளுக்கு முன்பே தெரிந்திருந்தது. அதனால்தான், அவர் பொது வாழ்க்கையில் ஈடுபடுபவர்கள் எப்படி இருக்க வேண்டும் என்று வாழ்ந்து காட்டினார். கடைசிவரை ரயிலில் பயணிக்கும்போதுகூட சாதாரண பெட்டியில்தான் பயணம் செய்தார்.
அரசு ஊழியர்களை சொந்த வேலைகளுக்கு பயன்படுத்தாத ஐ.ஏ.எஸ். அதிகாரிகளையும், வீட்டில் பூட்ஸ் பாலிஷ் செய்யவும், நாயைக் குளிப்பாட்டவும்கூட காவல்துறையினரை பயன்படுத்தாத ஐ.பி.எஸ். அதிகாரிகளையும் விரல் விட்டு எண்ணிவிடலாம்.
இப்போது நமது அரசியல் தலைவர்களுக்கும், ஆட்சியாளர்களுக்கும், அதிகாரிகளுக்கும் விமானம் தேவைப்படுகிறது. ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள் கேட்கிறது. அவர்கள் நிர்வகிக்கும் அரசு மருத்துவமனையின்மீது நம்பிக்கை இல்லாமல் தனியார் மருத்துவமனைகளை நாட வைத்திருக்கிறது. வீட்டுமனை ஒதுக்கீட்டிலிருந்து அனைத்திலுமே சிறப்புச் சலுகை பெறப்படுகிறது.
பாதுகாப்புக்கு காவலர்கள் வைத்துக் கொள்வது, வாகனத்தில் சிவப்பு விளக்கை சுழல விட்டுக் கொள்வது, எப்போதும் தன்னைச் சுற்றி பத்து இருபது பேருடன் வளைய வருவது போன்றவை அரசியல் தலைவர்களின் அடையாளமாகக் கருதப்படுகிறது. இந்த ஜமீன்தாரிய மனப்போக்கு குடியரசு நாட்டில் இருக்கலாகாது.
முன்னாள், இந்நாள் குடியரசுத் தலைவர்கள், பிரதமர்கள், முதலமைச்சர்கள், ஆளுநர்கள் தவிர ஏனையோருக்கு எந்தவித சிறப்புச் சலுகையும் தரப்படக்கூடாது என்பதை எப்போது நாம் சட்டமாக்கி நடைமுறைப்படுத்துகிறோமோ, அப்போதுதான் இந்தியா நிஜமாகவே ஒரு குடியரசாக செயல்படுகிறது என்று அர்த்தம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
இன்றைய ராசி பலன் (24.04.2026) - மகரம்
இன்றைய ராசி பலன் (24.04.2026) - மிதுனம்
இன்றைய ராசி பலன் (24.04.2026) - மேஷம்
இன்றைய ராசி பலன் (24.04.2026) - விருச்சிகம்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

