குஜராத்தைச் சேர்ந்த சுற்றுச்சூழல் பாதுகாப்பு சமிதி என்ற அமைப்பு ஆறுகள் உள்பட நீர் நிலைகள் மாசுபடுவதைத் தடுப்பது தொடர்பாக தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் மத்திய அரசு, சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம், தமிழ்நாடு உள்பட 19 மாநிலங்களின் தலைமைச் செயலர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
நாடு முழுவதும் உள்ள 88 தொழில் நிறுவன குழுமங்கள் (இன்டஸ்டிரியல் கிளஸ்டர்) அடங்கிய பகுதிகளை மத்திய சுற்றுச்சூழல் கட்டுப்பாட்டு வாரியம், மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை அமைச்சகத்தின் ஆலோசனையுடன் தேர்ந்தெடுத்து அந்தப் பகுதிகளில் சுற்றுச்சூழல் மாசுபடுவது குறித்த ஆய்வை மேற்கொண்டது.
அதில், மிகமிக மோசமான பாதிப்புக்குள்ளான பகுதியாக குஜராத்தில் உள்ள அங்க்லேஷ்வர் 88.50 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. தமிழ்நாட்டில் வேலூர் மாவட்டம் 81.79 புள்ளிகளுடன் 8-வது இடத்தில் உள்ளது. வேலூர் மாவட்டத்தில் காற்று, நீர், நிலம் ஆகிய மூன்றுமே மிகமிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கை கூறுகிறது.
கடலூர் 77.45 புள்ளிகளுடன் இந்திய அளவில் 16-வது இடத்திலும், சென்னை அருகே உள்ள மணலி 76.32 புள்ளிகளுடன் 20-வது இடத்திலும், கோவை 72.38 புள்ளிகளுடன் 34-வது இடத்திலும், திருப்பூர் 68.38 புள்ளிகளுடன் 51-வது இடத்திலும், மேட்டூர் 66.98 புள்ளிகளுடன் 56-வது இடத்திலும், ஈரோடு 58.19 புள்ளிகளுடன் 78-வது இடத்திலும் உள்ளன.
இந்தப் பட்டியலில் இடம்பெறாத நகரங்கள் மாசுபடவில்லை என்று பொருள் அல்ல. மேலே குறிப்பிட்டுள்ள நகரங்கள் அளவுக்கு மிக மோசமாக பாதிக்கப்படவில்லை அவ்வளவே!
வேலூரில் தோல் தொழிற்சாலை கழிவுகளும், மணலியில் பல்வேறு விதமான தொழிற்சாலைகளின் கழிவுகளும், திருப்பூரில் சாயப் பட்டறைத் தொழிற்சாலைகளின் கழிவுகளும் நிலம், நீர், காற்றை மிகமிக மோசமாக பாதித்துள்ளன. இன்னும் சில பத்தாண்டுகளில் பாதிக்கப்பட்ட இந்த ஏழு நகரங்கள் மனிதர்கள் வாழ்வதற்கே தகுதியில்லாதவையாக மாறிவிடக் கூடிய அபாயம் உள்ளது. அப்படி அங்கு வாழும் நிலையில் பல்வேறு நோய்களுக்கு மக்கள் ஆளாகும் நிலை ஏற்படும்.
புனிதமாகப் போற்றப்படும் கங்கை, 11 மாநிலங்களில் இந்தியாவின் 40 சதவீதம் மக்களுக்கு குடிநீரை வழங்குகிறது. கங்கையில் மூழ்கினால் பாவம் கழியும் என்பது நம்பிக்கை. ஆனால், அப்படிப்பட்ட கங்கை இப்போது கழிவுகளால் மிகவும் மோசமான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. உலகிலேயே அதிகம் மாசுபட்ட ஆறுகளில் 5-வது இடத்தில் கங்கை உள்ளது.
கங்கையைத் தூய்மைப்படுத்த வேண்டும் என்பதற்காக பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று அதற்காக 1986-லேயே பணிகள் துவங்கப்பட்டு சில ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் செலவானதுதான் மிச்சம். கங்கை தூய்மையடைவதாக இல்லை.
தமிழ்நாட்டிலும் மேலே குறிப்பிடப்பட்டுள்ள நகரங்களில் நீர்நிலைகளைப் பாதுகாக்க பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. நீதிமன்றங்களிலும் வழக்குகள் தொடரப்பட்டன. நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் நடவடிக்கை எடுத்தாலோ பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் பாதிக்கப்படுகின்றனர் என்கிற ஓலம் எழுகிறது. ஒரு சிலரின்பாதிப்பா, ஒட்டுமொத்த அழிவா என்கிற கேள்விக்கு விடை காண முடியாமல் அரசு தவிக்கிறது.
நமது முன்னோர்கள் இயற்கையைக் காக்கும்பொருட்டு, நீர் நிலைகளைத் தாயாகக் கருதும் எண்ணத்தை உருவாக்கினர். அதனால்தான் கங்கா மாதா, காவிரித் தாய் என்று ஆறுகளைத் தாயாக வழிபட்டனர். ஆனால், அது கட்டுப்பெட்டித் தனம் என்ற எண்ணம் திட்டமிட்டு உருவாக்கப்பட்டதுடன், வளர்ச்சி என்பது சுற்றுச்சூழல் பாதிப்பில்லாமல் சாத்தியமில்லை என்கிற கருத்து முன்வைக்கப்பட்டிருக்கிறது. பெருகிவரும் மக்கள்தொகைக்கும், அதிகரித்துவரும் மனித குலத்தின் எதிர்பார்ப்புகளுக்கும் ஈடுகொடுக்க வேண்டிய கட்டாயம் இயற்கைக்கு ஏற்பட்டிருப்பதுதான் இந்த அவலத்துக்கு அடிப்படைக்
காரணம்.
வளர்ச்சி என்பது வருங்கால சந்ததியினரைப் பாதிக்கும் விதத்தில் அமையுமேயானால், அதனால் யாருக்கென்ன லாபம்? சுற்றுச்சூழல் பாதிப்பு அடுத்த தலைமுறைக்காகக் காத்திருக்கும் என்று எண்ணுவது பேதைமை. உச்சநீதிமன்றத்தின் எச்சரிக்கையை கவனத்தில் கொள்ளத் தவறினால், மாசுபட்டுப் பாழாகப்போவது நதிகளும், நீர்நிலைகளும் மட்டுமல்ல; மனித குலம் முழுமையும்தான் என்பதை உணர வேண்டிய தருணம் இது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.