ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தொடர்ந்து எழுப்பப்படும் குற்றச்சாட்டு ராணுவத்தின் அத்துமீறல் பற்றியதாகத்தான் இருந்து வருகிறது. எல்லையைப் பாதுகாக்க வேண்டிய ராணுவம் காஷ்மீர்வாழ் மக்களுக்கு அச்சுறுத்தலாக ஆங்காங்கே நிறுத்தப்பட வேண்டிய அவசியம் என்ன என்று கேள்வி எழுப்பப்படுகிறது.
ஒட்டுமொத்தமாக காஷ்மீரத்திலிருந்து ராணுவத்தை விலக்கிக் கொள்வது என்பதும், உள்நாட்டுப் பாதுகாப்பிலும், கண்காணிப்பிலும் ராணுவத் தலையீடே இல்லாமல் இருப்பதும் தீவிரவாதக் குழுக்களின் செயல்பாடுகளுக்கு உதவுவதாகத்தான் அமையும். அதேநேரத்தில், ராணுவத்தின் செயல்பாடுகள், குறிப்பாக, ராணுவ வீரர்களின் அத்துமீறல்கள் பற்றிய மறுசிந்தனையும், முறைப்படுத்தலும் தேவைப்படுகிறது என்பதை மாச்சில் என்கவுன்டர் நிகழ்வு தெளிவுபடுத்துகிறது. இந்தப் பிரச்னையில் அரசும் ராணுவமும் பொறுப்புடனும் கடமையுணர்வுடனும் நடந்து கொண்டிருப்பதையும் பாராட்டியாக வேண்டும்.
ஏப்ரல் 30, 2010-ஆம் ஆண்டு நடந்த மாச்சில் என்கவுன்டர் நிகழ்வு மிகவும் வருந்தத்தக்க ஒன்று. காஷ்மீர் மாநிலம், பாராமுலா மாவட்டத்தைச் சேர்ந்த நதிஹால் கிராமத்து இளைஞர்களான ரியாஸ் அகமது, முகம்மது ஷாபி, ஷாசத் அகமது மூவரையும் ராணுவத்தில் வேலை வாங்கித் தருவதாக ஆசைகாட்டி, பஷீர் அகமது லோன் என்பவரும் நண்பர்களும் மாச்சிலுக்கு அழைத்துச் சென்றனர். அந்த மூவரையும் தீவிரவாதிகள் என்று ராணுவத்தினரிடம் பொய் கூறி, தீவிரவாதிகளைப் பிடித்துக் கொடுத்ததற்காகத் தலைக்கு 50,000 ரூபாய் பெற்றுக் கொண்டனர். தீவிரவாதிகளை அடையாளம் காட்டுபவர்களுக்கும், பிடித்துக் கொடுப்பவர்களுக்கும் எந்தக் கேள்வியோ விசாரணையோ இல்லாமல் தலைக்கு 50,000 ரூபாய் ராணுவம் அளிக்கிறது என்பதே அதிர்ச்சி தரும் செய்தியாக இருக்கிறது.
மூன்று இளைஞர்களையும் இந்திய - பாகிஸ்தான் எல்லைக் கோட்டுக்கு அருகில் அழைத்துச் சென்று அவர்களைச் சுட்டுக் கொன்றிருக்கிறார்கள் ராணுவத்தினர். அவர்களைப் பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்குள் ஊடுருவும் தீவிரவாதிகள் என்று கூறி, அடையாளம் காண முடியவில்லை என்றுகூறி புதைக்கவும் செய்து விட்டனர். இந்த என்கவுன்டர் தொடர்பாக ராணுவம் தாக்கல் செய்த முதல் தகவல் அறிக்கையில் பல முரண்பாடுகளைப் பார்த்த காவல்துறையினருக்குச் சந்தேகம் வந்திருக்கிறது.
இதற்குள் எப்படியோ விஷயம் வெளியில் கசிந்து விட்டது. கொல்லப்பட்ட மூன்று இளைஞர்களின் குடும்பத்தினர் காவல்துறையிடம் புகார் கொடுக்க, காஷ்மீர் பள்ளத்தாக்கு முழுவதும் காட்டுத் தீபோல கலவரம் பரவத் தொடங்கியது. அந்தக் கலவரத்தில் மட்டும் ஏறத்தாழ 123 பேர் கொல்லப்பட்டனர். முதல்வர் ஒமர் அப்துல்லா நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர, மாச்சில் போலி என்கவுன்டருடன் தொடர்புடைய ராணுவ அதிகாரிகள் மற்றும் வீரர்கள் மீது நடவடிக்கை எடுப்பதுதான் ஒரே வழி என்பதால் வழக்குப் பதிவு செய்ய உத்தரவிடுகிறார்.
நான்காவது ராஜபுத்திர ரைபிள்ஸ் படையின் கர்னல் டி.கே. பத்தானியா உள்ளிட்ட 11 பேர் மீது கொலை, கடத்தல், சதி என்று பல்வேறு பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பிரச்னை ராணுவ வீரர்கள் தொடர்பானது என்பதால், ராணுவத்தாலேயே விசாரணை நடத்தப்பட்டது. இதில் கர்னல் பத்தானியா உள்ளிட்ட ஆறு பேர் குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கப்பட்டதைத் தொடர்ந்து இப்போது ராணுவ நீதிமன்றம் (கோர்ட் மார்ஷியல்) மேல் விசாரணை நடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.
இந்திய ராணுவ சரித்திரத்தில் இதுபோல கோர்ட் மார்ஷியல் நடத்தி தண்டிப்பது என்பது அரிதிலும் அரிதான ஒன்று. ஒரு ராணுவ வீரனுக்கு அதைவிட அவமானமும், அசிங்கமும் வேறு எதுவும் இல்லை. இந்திய ராணுவத்துக்கே தலைகுனிவை ஏற்படுத்தி இருக்கும் கர்னல் பத்தானியா, மேஜர் பூபீபேந்திர சிங், மேஜர் மௌரியா, சுபேதார் சத்வீர், ஹவல்தார் பீர்சிங், சிப்பாய்கள் சத்ராபான், ராஜேந்திர சிங், நரேந்திர சிங், அப்பாஸ் ஹஸ்ஸன் ஆகியோரில் ஒருவர்கூட தென்னிந்தியர்கள் இல்லை என்பதில் நமக்கு சற்று ஆறுதல்.
இறந்துபோன இளைஞர்களின் சடலத்தைத் தோண்டி எடுத்துப் பரிசோதனை செய்தபோது, மிக அருகில் துப்பாக்கியை வைத்து அவர்கள் கொடூரமாகச் சுடப்பட்டிருப்பது வெளியாகி இருக்கிறது. யாரோ ஒருவர் இவர்களைத் தீவிரவாதி என்று அடையாளம் காட்டியதை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு மூன்று அப்பாவி இளைஞர்களை ஈவிரக்கம் இல்லாமல் சுட்டுக் கொல்வது என்றால், எந்த அளவுக்கு அவர்கள் மனதில் வெறுப்பும் வெறியும் இருந்திருக்கும் என்பதை நினைக்கவே நடுங்குகிறது.
ராணுவம் காவல்துறையினர்போல செயல்பட முடியாதுதான். அவர்கள் ஈவு இரக்கம் பார்த்தால் தீவிரவாதிகளை எதிர்கொள்ள முடியாது என்பதும் நிஜம்தான். அதற்காக, அப்பாவிகளைக் கொன்று குவிப்பது என்ன நியாயம்?
மாச்சில் போலி என்கவுன்டர் வழக்கின் தீர்ப்பு, ராணுவத்திற்கு நல்லதொரு பாடமாக அமையட்டும்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.