இதுதான் தருணம்!

தமிழகத்தின் மேட்டூர் அணை 1934-ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. அதுதொடங்கி, கடந்த எண்பது ஆண்டுகளில் காவிரி டெல்டா விவசாயிகள் மேட்டூர் அணையால் பெற்றுவரும் நன்மைகளைச் சொல்லி மாளாது.
Updated on
2 min read

தமிழகத்தின் மேட்டூர் அணை 1934-ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. அதுதொடங்கி, கடந்த எண்பது ஆண்டுகளில் காவிரி டெல்டா விவசாயிகள் மேட்டூர் அணையால் பெற்றுவரும் நன்மைகளைச் சொல்லி மாளாது. தற்போது காவிரி டெல்டா சாகுபடி முடிவுக்கு வந்துவிட்ட நிலையில் முதல் முறையாக இந்த அணையைத் தூர்வார வேண்டியதன் அவசியம் குறித்து தமிழக அரசு கவனம் செலுத்த வேண்டும்.

மேட்டூர் அணையோடு தொடர்புடைய நீர்வழிகள், பாசனக் கால்வாய்கள் ஆகியவற்றைச் சில ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்கவும் தூர்வாரவும் செப்பனிடவும் தேவையான நடவடிக்கைகளைப் பொதுப்பணித் துறை மேற்கொள்கிறது. ஆனால் அணைக்கு உள்ளே தூர்வாரும் பணி இதுவரை மேற்கொள்ளப்படவில்லை.

120 அடி உயரம் வரை நீர் தேக்கி வைக்கக்கூடிய இந்த அணையின் முழுக் கொள்ளளவு 93.5 டிஎம்சி. ஆனால் அதே அளவு தண்ணீரைத்தான் இப்போது தேக்க முடிகிறதா என்றால், நிச்சயமாக இல்லை. கடந்த எண்பது ஆண்டுகளாக வண்டல் மண் சேர்ந்து சேர்ந்து அணையின் கொள்ளவு குறைந்தபட்சம் 10 டிஎம்சி குறைந்திருக்கிறது என்பதே பொறியாளர்களின் கணிப்பு.

2004-ஆம் ஆண்டு மேட்டூர் அணையில் ஓரு ஆய்வு நடத்தப்பட்டது. எந்த அளவுக்கு வண்டல் மண்படிவு ஏற்பட்டுள்ளது, இதை எவ்வாறு அகற்றுவது என்பது குறித்துப் பொறியாளர்கள் குழு ஆய்வு செய்தது. ஆனால் அதன் பிறகு நடவடிக்கைகள் ஏதும் மேற்கொள்ளப்படவில்லை. அப்போதைய கணக்கின்படி அணை பரப்பில் 24 சதவீதம் வண்டல்மண்படிவு இருப்பதாகக் கண்டறிந்தனர்.

வெள்ளமாகப் புரண்டு வரும் காவிரி நீர் தன்னோடு எடுத்துவரும் வண்டல் மண்ணின் பெரும்பகுதி, தண்ணீரிலேயே கரைந்து, கலங்கிய நீராக வெளியேறிக்கொண்டே இருக்கும். அதுவும் அணையிலிருந்து தண்ணீர் அதிகமாக வெளியேற்றப்படும் நாள்களில்தான் இவ்வாறாக நிகழும். அணையிலிருந்து வெளியேற்றப்படும் நீர் அளவு குறையும்போது, நீரில் கரைந்து மிதக்கும் வண்டல் மண் மெல்ல அணையின் அடியில் சென்று தங்கும். இவ்வாறாக, தண்ணீரில் கரைந்து வெளியேறிய வண்டல் போக, அடியில் தங்கிய வண்டல் மண், அணைப்பரப்பில் 24 சதவீதம் இருக்கிறது என்பதே ஆய்வு தரும் புள்ளிவிவரம்.

இப்போது மீண்டும் ஒரு ஆய்வு செய்து, வண்டல் மண்படிவை அகற்ற வேண்டிய அவசர அவசியம் நேரிட்டுள்ளது. கடந்த பத்து ஆண்டுகளில் எந்த அளவுக்கு வண்டல் மண்படிவு கூடியுள்ளது என்பதை எளிதில் கண்டறிந்துவிடலாம்.

சுமார் 1,700 மீட்டர் நீளமும், 59.25 சதுர மைல் பரப்பும் கொண்ட மேட்டூர் அணையில் ஆய்வு நடத்துவதே பெரும்பாடு. வண்டல் மண்படிவை அகற்றுவது அதனினும் பெரும்பாடு. இருப்பினும், இன்றைய நவீனத் தொழில்நுட்ப உதவியுடன் இந்த ஆய்வை ஓரிரு நாள்களில் இப்போது செய்துவிட முடியும். வண்டல் மண்படிவைச் சில வாரங்களில் அகற்றிவிடவும் முடியும்.

கோடை வந்துவிட்டது. இனி மழை வரப்போவதில்லை. காவிரி டெல்டா பகுதியில் அடுத்த நெல் சாகுபடி ஜூன் மாதத்தில்தான் தொடங்கும். இடைப்பட்ட இந்த காலகட்டத்தில், மேட்டூர் ஸ்டான்லி நீர்த்தேக்கத்தைத் தூர்வாரும் பணியை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். இதனால் நாம் நீரைச் சேமித்துவைக்கும் அளவு குறையாதபடி பார்த்துக்கொள்ள முடியும். தற்போது வண்டல் மண்படிவினால் குறைவதாகக் கணக்கிடப்படும் 10 டிஎம்சி தண்ணீர் என்பது, நாம் இழந்துகொண்டிருக்கும் மிகப்பெரும் சொத்து என்பதையும் இந்த வேளையில் கருத்தில் கொள்ள வேண்டும்.

அணை புனரமைப்பு மற்றும் பலப்படுத்துதல் பணிக்காக மத்திய அரசும் உலக வங்கியும் நிதியைத் தாராளமாக வழங்குகின்றன. அதை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ளலாம். அணையைத் தூர் வாருவதற்கு நிதி ஒரு தடையாக இருக்காது என்பது நிச்சயம்.

மேலும், தூர்வாரப்படும் வண்டல் மண் விவசாய நிலத்தின் மண்வளத்தை மேம்படுத்த மிகவும் உகந்தது. இந்த வண்டல் மண்ணை எடுத்துச் செல்ல விவசாயிகளிடையே போட்டா போட்டி நடைபெறும். வண்டல் மண்ணை எடுத்துச் செல்வதற்கு விவசாயிகளிடம் பணம் வசூலிக்கப்படுவதில்லை. ஆனாலும், இதனை "வல்லமை படைத்தவர்கள்' சிலர் மொத்தத்தையும் தாங்களே எடுத்துச்சென்று விற்பனை செய்யும் வாய்ப்புகள் அதிகம். ஆகவே இந்த வண்டல் மண், விவசாயிகளுக்கு மட்டுமே கிடைக்கும்படியான சான்றளிப்புகள் முறைப்படுத்த வேண்டும். இத்தகைய சான்றுகளை மாவட்ட ஆட்சியர் மற்றும் பொதுப்பணித் துறை அதிகாரிகள் வழங்குவதே வழக்கம்.

இந்த வண்டல் மண்படிவை அகற்றும் பணியை எந்த இடத்தில் தொடங்கி, எங்கு முடிப்பது, வாகனங்களை அணைக்குள் இறக்குவதை எந்தப் பக்கமாகச் செய்ய வேண்டும் என்பதையெல்லாம் பொறியாளர்கள் திட்டம்போட்டுக் கொடுத்தால், இதற்கான நிதியுதவியையும் உடனே அளித்தால், அணை தூர்வாரும் பணியை வேகமாக முடித்துவிடலாம்.

மேட்டூர் அணை மட்டுமின்றி, பவானி சாகர், அமராவதி அணை ஆகியவற்றிலும்கூட எந்த அளவுக்கு வண்டல்மண் படிவு உள்ளது என்பதை ஆய்வு செய்யவும், அவற்றை அகற்றவும் நடவடிக்கை எடுக்கலாம். காவிரி சார்ந்த கால்வாய்களோடு தொடர்புடைய குட்டைகள், குளங்கள் இன்று ஆக்கிரமிப்பால் மறைந்துவிட்டன. ஆனாலும், வருவாய்த்துறையின் 1924 புலச்சுவடியை (லேண்ட் மேப்) ஒப்பிட்டுப்பார்த்து, இவற்றை மீட்கவும், செப்பனிடவும், விவசாயத்துக்கான நீரைச் சேகரிக்கவும் முடியும்.

கடந்த நான்கு நாள்களில் மேட்டூர் அணையின் நீர்உயரம் 4.5 அடிக்கும் அதிகமாகக் குறைந்துவிட்டது. தற்போது அணையின் நீர்உயரம் 29.4 கனஅடி மட்டுமே. தோராயமாக 7 டிஎம்சி தண்ணீர்தான் அணையில் உள்ளது. இதுவே நல்ல தருணம். இந்த வாய்ப்பை அரசு நழுவ விடக் கூடாது!

நமது நதிநீர் உரிமைக்காக நாம் போராடுவது ஒருபுறம் இருந்தாலும், அணைகளையும், நீர் நிலைகளையும் பாதுகாக்கும் பணியிலும் கவனமாக இருப்பதுதான் புத்திசாலித்தனம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com