கால்நடைக்கும் ஆயுர்வேதம்

கால்நடைகள், விலங்குகள், பறவைகள், வீட்டுப் பிராணிகள் அனைத்துக்கும் ஆங்கில மருத்துவம்தான் அளிக்கப்பட வேண்டுமா?
Updated on
2 min read

கால்நடைகள், விலங்குகள், பறவைகள், வீட்டுப் பிராணிகள் அனைத்துக்கும் ஆங்கில மருத்துவம்தான் அளிக்கப்பட வேண்டுமா? மனிதர்கள் தங்களது நோயைக் குணப்படுத்த சித்தா, ஆயுர்வேதா போன்ற இந்திய மருத்துவத்தை விரும்புவதைப் போல, நம் பாரம்பரிய மருத்துவ முறைகளில் மற்ற உயிரினங்களுக்குச் சிகிச்சை அளிக்க முடியாதா?

நிச்சயமாக முடியும். இதற்கான நூல்கள் பல இந்தியாவில் இருந்தன. இப்போதும் இருக்கின்றன. அவற்றின் எண்ணிக்கை குறைவு. அவற்றைப் படித்து பயன்படுத்துவோரும் குறைவு. ஆகவே, கால்நடைகளுக்கு நம் பாரம்பரிய மருத்துவமுறைகளைப் பயன்படுத்தத் தவறிவிட்டோம். மறந்துபோனோம்.

தற்போது கால்நடைகளுக்கும் நாய்கள் போன்ற வீட்டுப் பிராணிகளுக்கும் ஆயுர்வேத மருத்துவத்தில் சிகிச்சை அளிக்கும் நடைமுறைகள் பரவலாகி வருகின்றன.

கடந்த நவம்பர் மாதம், கேரள மாநில அரசு, கோட்டக்கல் ஆயுர்வேத மருத்துவ நிலையம், கேரள கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகம் ஆகிய மூன்றும் இத்தகைய ஆயுர்வேத கால்நடை மருத்துவமுறைகளை மீட்டெடுக்கவும், சிகிச்சை அளித்தல், அதற்கான பயிற்சி அளித்தல் ஆகியவற்றில் கவனம் செலுத்தவும் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளன.

மத்திய அரசும்கூட இந்த விஷயத்தில் இணக்கமாகவே உள்ளது. ஊக்கப்படுத்தவும் செய்கிறது. இது தொடர்பாக சில தினங்களுக்கு முன்பு மாநிலங்களவையில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் விளக்கம் அளித்தார். அதாவது, ""விலங்குகளுக்கு ஏற்படும் தோல் நோய்களுக்கான மருந்து குறித்து ஆயுர்வேத மருத்துவ மத்தியக் குழுமம் ஆய்வு செய்கிறது. லக்னெü நகரில் உள்ள ஒரு ஒரு கல்வி நிறுவனத்துக்கு கால்நடைக்கான தேசிய ஆயுர்வேத மருந்து ஆராய்ச்சி மையம் மற்றும் மருத்துவமனை என்று பெயர் சூட்டியுள்ளது. இத்தகைய ஆயுர்வேத மருந்துகள் ஆய்வுக்காக ஒரு துணைக் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த துணைக்கமிட்டி 22 தொன்மையான ஆயுர்வேத புத்தகங்களையும், 50 வகையான மருந்துக் கலவைகளையும் அடையாளம் கண்டுள்ளது என்று கூறியுள்ளார்.

இத்தகைய ஆயுர்வேத கால்நடை மருத்துவத்துக்கு வெளிநாடுகளில் அதிக வரவேற்பு இருக்கிறது. நச்சு கலவாத உணவு, ரசாயனம் கலவாத காய்கறிகள், ஆடை வண்ணங்கள் என இயற்கைக்கு அதிக முக்கியத்துவம் தரும் மேலை நாட்டினர் தங்களது வளர்ப்புப் பிராணிகளுக்கு, அதிக பின்விளைவுகளைத் தரும் ஆங்கில மருந்துகளைக் காட்டிலும், பின்விளைவுகள் இல்லாத ஆயுர்வேத மருந்துகளை அளித்து குணப்படுத்தவே முன்னுரிமை தருகின்றனர் எனப்படுகிறது.

இதற்கான கால்நடை ஆயுர்வேத மருந்துகளைக் காப்புரிமை செய்யும் நடவடிக்கைகளும் ஒரு பக்கம் நடந்துகொண்டிருக்கின்றன.

ஆனால், தமிழ்நாட்டில் எந்தவொரு இடத்திலும் மாடுகளுக்கு நமது பாரம்பரிய வைத்திய முறைகளைப் பயன்படுத்துவோர் இல்லாத நிலைமை ஏற்பட்டுவிட்டது.

தென்னகத்தில் யானைகளுக்கும் குதிரைகளுக்கும் மாடுகளுக்கும் தனித்தனியாக மருத்துவமுறைகள் இருந்துள்ளன. ஜெயமோகனின் விஷ்ணுபுரம் நாவலில் யானைகளுக்கு அளிக்கப்படும் மருத்துவம் குறித்த பெரிய வர்ணனை இதனைப் புலப்படுத்தும்.

குதிரைகள் போரிலும், வண்டியிலும் ஈடுபடுத்தப்பட்டபோது அவற்றுக்கான மருத்துவ முறைகளும் சாதாரண மக்களிடம் இருந்தன. மாடுகளுக்கும் அவ்வாறே. ஆனால், அவை காலத்தால் புறக்கணிக்கப்பட்டுவிட்டன.

இன்று யானைகள் மதம் கொண்டால், குதிரைகள் தோல்நோய் கொண்டு அகோரமாகத் திரிந்தால் நாம் அவற்றுக்கு அளிக்கும் மருத்துவச் சிகிச்சை ஆங்கில முறையில்தான் இருக்கிறது. மாடுகளுக்கும் அப்படியே!

தமிழ்நாட்டில் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு வரையிலும்கூட மாட்டு வைத்தியம்தெரிந்த குடும்பங்கள் ஒவ்வொரு ஊரிலும் இருந்தன. மாடுகள், பசுக்கள் எங்கும் நிறைந்திருந்தன.

காஞ்சிபுரம் வரும் பயணிகள் சின்னக் காஞ்சிபுரம் மற்றும் பெரிய காஞ்சிபுரத்துக்கும் திருவரங்கம் வரும் பக்தர்கள் திருச்சிக்கும் திருவரங்கத்துக்கும் சென்றுவர அந்த நாளில் மாட்டு வண்டிகளைத்தான் பயன்படுத்தினர். நிறைய மாட்டு வண்டிகள், நிறைய மாடுகள் இருந்தன. மாடுகளுக்கான வைத்தியம் பார்க்கும் குடும்பத்தினரும் இருந்தனர். பேருந்துகள் வந்த பிறகு மாட்டு வண்டிகள் புறக்கணிக்கப்பட்டன. பாரம்பரிய மாட்டு வைத்தியக் குடும்பங்கள் வேறு கூலி வேலைக்குப் போனார்கள். மிகப்பெரிய மருத்துவ சொத்தினை, அனுபவ அறிவை நாம் இழந்தோம்.

இப்போது பசுமாடுகளுக்கு நாம் பாரம்பரிய மருத்துவம் அளிக்க வேண்டிய தேவை இருக்கிறது. வெறும் பால் உற்பத்திக்காக மட்டுமல்ல. ஆங்கில மருத்துவத்தால் அதன் இரத்தத்தில் நஞ்சு கலந்தால், அந்தப் பாலை அருந்தும் மனிதர்களுக்கும் அதே நஞ்சு வந்து சேரும். இன்றைய வாழ்க்கை முறையில் குழந்தை முதல் பெரியவர் வரை அனைவரும் பால்பொருள்களைப் பயன்படுத்துகிறோம். ஆகவே, மீண்டும் நாம் கறவை மாடுகள், ஆடுகளைப் பொருத்தவரை பாரம்பரிய மருத்துவத்துக்கு மாற வேண்டியது மிகமிக அவசியம்.

இதற்கான நூல்கள், சுவடிகள் இன்னும் ஆங்காங்கே இருக்கின்றன. அவற்றை முறைப்படி சொல்லித்தர ஆட்கள் இல்லை.

இன்றைய சித்தா, ஆயுர்வேதம் படிக்கும் மாணவர்களில், விருப்பமுள்ளவர்களுக்கு இத்தகைய பாரம்பரியக் கால்நடை மருத்துவத்திலும் பயிற்சி அளித்தால், நம்முடைய கறவை மாடுகள் நஞ்சு கலவா அமுதைப் பொழியும். அதை அருந்தும் நாமும் நலம் பெறுவோம்.

தமிழக அரசு இதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com