என்னே இவ்வரசாட்சி...!

ரயில்வே அமைச்சர் பவன் குமார் பன்சாலின் உறவினர் விஜய் சிங்லா லஞ்சம் வாங்கியதாக நிரூபணமாகி இருக்கிறது. "எனது சகோதரியின் மகன் என் பதவியில் எந்த வகையிலும் செல்வாக்கு செலுத்திட முடியாது; என் முடிவுகளில் தாக்கத்தை ஏற்படுத்த முடியாது.
Updated on
2 min read

ரயில்வே அமைச்சர் பவன் குமார் பன்சாலின் உறவினர் விஜய் சிங்லா லஞ்சம் வாங்கியதாக நிரூபணமாகி இருக்கிறது. "எனது சகோதரியின் மகன் என் பதவியில் எந்த வகையிலும் செல்வாக்கு செலுத்திட முடியாது; என் முடிவுகளில் தாக்கத்தை ஏற்படுத்த முடியாது. அவர் லஞ்சம் வாங்கியதற்கும் எனக்கும் சம்பந்தமே இல்லை' என்று ரயில்வே அமைச்சர் பவன் குமார் பன்சால் தனக்கும் அதற்கும் தொடர்பே இல்லாததுபோல அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

ரூ.90 லட்சம் லஞ்சம் வாங்கிய அமைச்சரின் உறவினர் விஜய் சிங்லா, அமைச்சரின் தொகுதியில் அவருடைய மேலாளர் போலவே செயல்பட்டு வருவதாக காங்கிரஸ் தரப்பிலேயே சொல்லப்படும் நிலையில், அமைச்சரின் சமாளிப்புகள் அர்த்தமற்றவை. அதுமட்டுமல்ல, எந்த அளவுக்கு ரயில்வே துறையில் லஞ்சம் புரையோடிப் போயிருக்கிறது என்பதையும் இந்த ஊழல் வெளிப்படுத்துகிறது.

2012 டிசம்பர் மாதம், மத்திய லஞ்ச ஒழிப்புத்துறை அறிவிப்பின்படி, நாட்டிலேயே அதிக எண்ணிக்கையில் லஞ்சப் புகார்கள் வந்திருப்பது ரயில்வே துறைமீதுதான். 8,800 லஞ்சப் புகார்கள் வந்துள்ளன. அதற்கு அடுத்த நிலையில் வங்கித் துறை 8,400 புகார்கள். அதற்கு அடுத்ததாக வருமான வரித்துறை 5,000 புகார்கள்.

"அவசரகால ஒதுக்கீடு' வழங்கும் அதிகாரிகள், டிராவல் ஏஜன்ஸிக்கு முன்னுரிமை தரும் அதிகாரிகள், ரயில்வே பாலம் கட்டும் கான்ட்ராக்ட் வழங்க லஞ்சம் கேட்பவர்கள் என்று சாதாரணமான, சிற்றூழல் மட்டுமின்றி, ரயில்வே பொதுமேலாளர், வாரிய உறுப்பினர் அளவில் பேரூழல் கோடிக்கணக்கில் நடைபெறுகின்றன. எப்போதோ சில நேரங்களில் மட்டுமே உயர் அதிகாரிகள் சிக்குகிறார்கள்.

2002-இல் தெற்கு ரயில்வே பொதுமேலாளராக இருந்த கீர்த்திவாசன் இல்லத்தில் சி.பி.ஐ. நடத்திய திடீர் சோதனையின்போது, கணக்கில் காட்டமுடியாத பணம் ரூ.38 லட்சம் கைப்பற்றப்பட்டது. 2010-ஆம் ஆண்டு அந்த வழக்கில் ஆஜராகாத முன்னாள் பொதுமேலாளருக்கு "பிடிவாரண்ட்' என்று ஒரு செய்தி வெளியானது. அதன் பிறகு அந்த வழக்கு என்னானது என்பது பற்றி எந்தச் செய்தியும் பத்திரிகைகளில் வெளிவரவில்லை.

ரயில்வே வாரியத்தில் உறுப்பினராக உள்ள மகேஷ் குமார், தற்போது தனக்கு அளிக்கப்பட்டுள்ள பணியாளர் நியமன பொறுப்பிலிருந்து மின்துறை பொறுப்புக்கு மாற்றுவதற்காக ரயில்வே அமைச்சரின் உறவினரிடம் ரூ.10 கோடி பேரம் பேசி, ரூ.90 லட்சத்தை முதல்கட்டமாக கொடுத்திருக்கிறார். லஞ்சமே 10 கோடி என்றால், ஆதாயம் 100 கோடிக்குக் குறையாமல் இருக்கும் என்ற நம்பிக்கைதான் இதற்குக் காரணமாக இருக்க முடியும்.

ஆண்டுதோறும் ரயில்வே துறையில் செய்யப்படும் புனரமைப்பு மற்றும் புதிய வழித்தடம் அமைத்தல் போன்ற பணிகளுக்கு மட்டுமே குறைந்தது ரூ.60,000 கோடி செலவிடப்படுகிறது. சாதாரணமாக ரயில்பாதை ஒரு கிலோ மீட்டருக்கு அமைக்க வேண்டும் என்றால் ரூ.6 கோடி செலவாகிறது. அதற்கான மின்தடம் அமைக்க இதே அளவுக்குச் செலவாகிறது. இந்திய ரயில்வே ஆண்டுதோறும் குறைந்தபட்சம் 1,000 கிலோ மீட்டர் ரயில்பாதையை மின்தடத்திற்கு மாற்றிக்கொண்டிருக்கிறது. நிச்சயமாக மின்தடம் அமைத்தல் பணிக்காக ரூ.6,000 கோடி செலவிட வேண்டும். ஆகவே தன்னை எலக்ட்ரிகல் பிரிவுக்கு வாரிய உறுப்பினராக மாற்றிவிட லஞ்சமாக மகேஷ் குமார் ரூபாய் 10 கோடி பேரம் பேசியிருந்தால் அதிலொன்றும் வியப்பே இல்லை.

மேலும் இந்தியாவில் 6 வழித்தடங்களில் "புல்லட்' ரயில் திட்டம் அரசு-தனியார் பங்கேற்பில் (பி.பி.பி.) நடத்தப்படுவதாக உள்ளது. இதற்குத் தனியாக உயர்மேடை ரயில்பாதை அமைக்க, வழக்கத்தைவிட 10 மடங்கு செலவு அதிகம். இதற்கும் ரயில்வே துறையின் எலக்டிரிகல் பிரிவிடம் அனுமதி பெற்றுத்தான் "புல்லட்' ரயிலை இயக்க வேண்டும்.

ரயில்வே துறையின் ஒவ்வொரு பிரிவும் பணம் காய்க்கும் மரம்தான். ரயில் நிலைய பிளாட்பாரத்தில் தண்ணீர் பாட்டில் விற்க வேண்டுமா? அதற்குரிய அதிகாரிக்கு லஞ்சம் தர வேண்டும். கேன்டீன் நடத்த வேண்டுமா? ரயில் நிலையத்தைத் தூய்மையாக வைத்திருக்கும் ஒப்பந்தம் வேண்டுமா? பாலம் கட்ட வேண்டுமா? எல்லாவற்றுக்கும் லஞ்சம் கொடுத்தாக வேண்டும். இந்திய ரயில்வே பயன்படுத்தாமல் தூக்கிப்போடும் பழைய இரும்புகளின் மதிப்பே பல ஆயிரம் கோடி! இதில் ஏலம் எடுக்கவும் போட்டா போட்டி! லஞ்சம்!

பல ஆயிரம் கோடி ரூபாய் பணம் பார்க்க முடியும் என்பதால்தான் கூட்டணிக் கட்சிகள் ரயில்வே துறையைக் குறி வைத்துக் கேட்கின்றன. அவர்கள் கேட்கும் துறையை ஒதுக்கித்தரும் கூட்டணியின் தலைமை, ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ளத் தரும் விலைதான் அது.

ரயில்வே துறையில் ஊழல் என்பது புதிதல்லதான். ரயில்வே வாரியம்வரை லஞ்சம் புரையோடிப்போய் இருப்பது உண்மை. அதற்காக? ஏதாவது ஓரிடத்தில் இதற்கு முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டியது அவசியம். "அமைச்சரும், ரயில்வே வாரிய உறுப்பினர்களும் மேல் அதிகாரிகளும் லஞ்சம் வாங்குகிறார்கள்' என்று கீழ்மட்டத்திலும், "நாம் நேர்மையாக இருந்தால் கீழ்மட்டத்தில் லஞ்சம் ஒழிந்துவிடவா போகிறது?' என்று மேல்மட்டத்திலும் கேள்வி எழுப்பி லஞ்சத்தை நியாயப்படுத்துவதும், நிரந்தரப்படுத்துவதும் எத்தனை ஆண்டுகள் தொடரப்போகிறதோ தெரியவில்லை.

அமைச்சர் பதவி விலகுவதால் லஞ்சம் ஒழிந்துவிடப்போவதில்லைதான். ஆனால், அமைச்சரே ஆனாலும் பதவி விலக நேரிடும் எனும்பொழுது, முறைகேடுகள் குறையும். விசாரணை நேர்மையாக நடைபெற அது வழிகோலும். மக்கள் ஜனநாயகத்திலும் அரசின்மீதும் முழுமையாக நம்பிக்கை இழக்காமல் இருப்பார்கள்.

என்ன செய்வது? நமது அமைச்சர்கள் 50 வயதைத் தாண்டியவர்களாக இருக்கிறார்கள். பெரும்பாலோருக்கு ரத்த அழுத்தம் இருந்து தொலைக்கிறது; அதனால் உப்புச் சேர்த்து சாப்பிடுவதில்லை!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com