அமளிக்குப் பின்னே..!

அரசில் நடைபெறும் முறைகேடுகளைத் தட்டிக் கேட்காமல், மசோதாக்களை நிறைவேற்றுவதற்கு ஒத்துழைப்பதற்கு எதிர்க்கட்சி என்கிற ஒன்றோ, நாடாளுமன்றமோ தேவையே இல்லையே. மசோதாக்களை விவாதித்து நிறைவேற்றுவதற்கு முன்னுரிமை தந்து, அரசின் ஊழல்கள், முறைகேடுகள், தவறுகள் போன்றவற்றை
Updated on
2 min read

நாடாளுமன்ற ஜனநாயகத்தில், நாடாளுமன்றம் முறையாக நடத்தப்படுவது என்பது ஆளும் கட்சியின் கடமை. அதனால்தான், அமைச்சரவையிலேயே நாடாளுமன்ற விவகாரத்திற்காகவே ஒரு கேபினட் அமைச்சர் செயல்படுகிறார். ஆட்சியில் இருக்கும் கட்சி அல்லது கூட்டணி, நாடாளுமன்றத்தில் உள்ள அனைத்து உறுப்பினர்களையும் ஒருங்கிணைத்து, ஒத்த கருத்தை ஏற்படுத்தி அரசு கொண்டுவரும் மசோதாக்களையும், திட்டங்களையும் நிறைவேற்ற வேண்டும் என்பதுதான் எதிர்பார்ப்பு.

அரசில் நடைபெறும் முறைகேடுகளைத் தட்டிக் கேட்காமல், மசோதாக்களை நிறைவேற்றுவதற்கு ஒத்துழைப்பதற்கு எதிர்க்கட்சி என்கிற ஒன்றோ, நாடாளுமன்றமோ தேவையே இல்லையே. மசோதாக்களை விவாதித்து நிறைவேற்றுவதற்கு முன்னுரிமை தந்து, அரசின் ஊழல்கள், முறைகேடுகள், தவறுகள் போன்றவற்றை அவையில் எழுப்பாமல் இருப்பதற்காகவா எதிர்க்கட்சிகள் இருக்கின்றன? தவறுகள் முறைகேடுகள் நடந்தால், எதிர்க்கட்சிகள் பிரச்னை செய்யக்கூடும். அதனால் மசோதாக்கள் நிறைவேறுவது தடைபடும் என்கிற பயத்துடன் அரசு செயல்பட்டால்தான் முறையான ஆட்சி நடைபெறும் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

அவையில் கூச்சல் குழப்பம், மசோதாக்கள் நிறைவேற்றப்படவில்லை எனும்போதுதான் பிரச்னை அவைக்கு வெளியேயும் விவாதப் பொருளாகி, மக்கள் மன்றத்தின் கவனத்தை ஈர்க்கிறது.

நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டில் மிகப்பெரிய முறைகேடு நடந்திருக்கிறது. அதில் பிரதமர் உள்ளிட்ட பலருக்கும் தொடர்பு இருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. நீதிமன்றம் அதை விசாரித்துத் தனக்கு அறிக்கை தாக்கல் செய்யச் சொல்லி உத்தரவிட்டால், சி.பி.ஐ. அந்த அறிக்கையைப் பிரதமர் அலுவலக அதிகாரிகளிடமும், சட்ட அமைச்சரிடமும் காட்டி ஒப்புதல் பெற்ற பிறகு நீதிமன்றத்தில் தாக்கல் செய்கிறது. இப்படி ஒரு மோசடி நடந்திருக்கிறது எனும்போது, சம்பந்தப்பட்ட அமைச்சர் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோருவதில் என்ன தவறு காண முடியும்?

அதேபோல, ரயில்வே அமைச்சரின் நெருங்கிய உறவினர் பதவி மாற்றத்திற்காக லஞ்சம் வாங்கி கையும் களவுமாகப் பிடிபட்டிருக்கிறார். இந்த நிலையில் அமைச்சர் பதவியில் தொடர்ந்தால் விசாரணை முறையாக நடைபெறாது என்பது தெளிவு. நியாயமாகப் பார்த்தால், தார்மிக அடிப்படையில் இரண்டு அமைச்சர்களும் பதவி விலகியிருக்க வேண்டும். அதைச் செய்யாமல், எதிர்க்கட்சிகள் கூச்சலும் குழப்பமும் ஏற்படுத்தி, மசோதாக்கள் நிறைவேறுவதைத் தடுக்கின்றன என்று ஆளும் கூட்டணி ஓலமிடுவதில் என்ன நியாயம் இருக்க முடியும்?

அரசின்மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்ல முடியாத நிலையில் வழக்கம்போல, பிரச்னைகளைத் திசைதிருப்ப அரசு உணவுப் பாதுகாப்பு மசோதாவைத் தாக்கல் செய்திருக்கிறது. இந்தியாவிலுள்ள அனைவருக்கும் உணவு உறுதிப்படுத்தப்படும் என்கிற மாயத்தோற்றத்தை ஏற்படுத்தி, ""நாங்கள் ஏழை எளிய மக்களுக்கு உணவுப் பாதுகாப்புத் தருவதற்காகக் கொண்டுவரும் மசோதாவை எதிர்க்கட்சிகள் நிறைவேறவிடாமல் தடுக்கின்றன பார்த்தீர்களா?'' என்று அரசியல் ஆதாயம் தேட முற்பட்டிருக்கிறது அரசு.

உணவுப் பாதுகாப்பு மசோதா என்பது முழுமையானது மட்டுமல்ல. இதற்காக, நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கப்பட்டிருப்பது வெறும் 1,000 கோடி ரூபாய் மட்டுமே. இந்த ஒதுக்கீட்டில் இந்தியாவில் 30 விழுக்காடுப் பகுதிகளுக்குக்கூட உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியாது. 1967-இல் திமுக அரசு கொண்டு வந்த ரூபாய்க்கு மூன்று படி அரிசித் திட்டத்தைப் போன்ற வாக்குறுதிதான், இப்போது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி கொண்டு வந்திருக்கும் உணவுப் பாதுகாப்பு மசோதாவும். தேர்தல் நேர வாக்குறுதி - வெற்றி பெற்றால் லாபம். தோல்வி அடைந்தால் மக்கள் மறந்து விடுவார்கள் என்கிற தைரியம்தான்.

இன்னொரு கேள்வி. முதலாவது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அமைந்தபோது உருவாக்கப்பட்ட குறைந்தபட்சத் திட்டங்களில் ஒன்றாக இருந்த இந்த உணவுப் பாதுகாப்பு மசோதா, கடந்த ஒன்பது ஆண்டுகளாக மறக்கப்பட்டு, இப்போது இரண்டு பெரிய முறைகேடுகள் அரசை எதிர்நோக்கும்போது கேடயமாகப் பயன்படுத்தப்படுகிறதே, அது ஏன் என்பதுதான் அது. அதுவும், தேர்தல் நெருங்கும்போது; மசோதா நிறைவேறினாலும் உடனடியாகச் செயல்படுத்த முடியாது எனும்போது இப்போது, அவசர அவசரமாக இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.

எதிர்க்கட்சிகள் அவையை நடத்த அனுமதிப்பதில்லை என்பதைவிட, அவையை நடத்த ஆளும் கட்சிக்குத் தெரியவில்லை என்பதுதான் சரியாக இருக்கும். பண்டித ஜவாஹர்லால் நேருவின் காலத்தில், முந்த்ரா ஊழல் எழுப்பப்பட்டது. நிதியமைச்சர் டி.டி. கிருஷ்ணமாச்சாரி பதவி விலகினார். அவை தொடர்ந்து நடந்தது. இன்று பிரதமரே குற்றவாளியாக்கப்பட்டும், அவரோ அவரது அமைச்சர்களோ தார்மிகப் பொறுப்பை ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. அதனால் கூச்சல் குழப்பத்தில் அவை முடங்கிக் கிடக்கிறது.

பிரச்னைகளைத் திசைதிருப்புவதன் மூலம் மன்மோகன் சிங் அரசு பதவியில் ஒட்டிக்கொண்டிருக்கிறது என்பதுதான் உண்மை நிலை. எதிர்க்கட்சிகள் அவையை முடக்குவதை விட்டுவிட்டு, அவர்கள் பதவி விலகி விடலாமே? செய்ய மாட்டார்கள். அவர்களது சம்பளம், படி, தொகுதி மேம்பாட்டு நிதி, ஓய்வூதியம் எல்லாமே நின்று போய்விடும். சரி, பாஜகவோ, மூன்றாவது அணியோ ஆட்சிக்கு வந்தால் எப்படி இருக்கும்? அப்போது, 13-வது நாடாளுமன்றத்தில் நடந்ததுபோல, காங்கிரஸ் கூச்சல் குழப்பங்களை ஏற்படுத்தி அவையை முடக்கும். அவையை முடக்கும் உத்தியை உருவாக்கியதே அவர்கள்தான். அதுவும் சோனியா காந்தியின் தலைமையில்தான்!

ஆட்டுமந்தையாம் என்றே நம்மை இவர்கள் எண்ணி விட்டார்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com