தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

இந்தியா செய்தது தவறு!

கடந்த வாரம் ஜெனீவாவில் நடந்த உலக வர்த்தக அமைப்பின் வர்த்தக நடைமுறை ஒப்பந்தம் கையெழுத்தாவதை இந்தியா தடுத்து நிறுத்தி இருக்கிறது.

Updated On :7 ஆகஸ்ட் 2014, 7:55 pm

கடந்த வாரம் ஜெனீவாவில் நடந்த உலக வர்த்தக அமைப்பின் வர்த்தக நடைமுறை ஒப்பந்தம் கையெழுத்தாவதை இந்தியா தடுத்து நிறுத்தி இருக்கிறது. சர்வதேச வர்த்தகத்திற்கான கட்டமைப்பு வசதிகளை அதிகரிப்பதும், சுங்க வரிகளை எளிமைப்படுத்துவதும்தான், கடந்த ஜூலை மாதம் 31-ஆம் தேதிக்குள் கையெழுத்தாகி இருக்க வேண்டிய இந்த ஒப்பந்தத்தின் நோக்கம். நியாயமாகப் பார்த்தால், இந்த ஒப்பந்தம் இந்தியாவுக்கு மிகவும் நன்மை பயக்கக் கூடியது என்பதுதான் உண்மை.

1988-இல் ராஜீவ் காந்தி அரசு, உலக வர்த்தக அமைப்பின் விவசாயம் சார்ந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு ஆதரித்திருக்கிறது. அந்த ஒப்பந்தத்தின்படி, முறையான வர்த்தகத்தை மானியங்கள் பாதிக்கும் என்பதால், அவை அனுமதிக்கப்படவில்லை.

மானியங்கள் பிரச்னையை கடந்த டிசம்பர் மாதம் பாலித்தீவில் கூடிய உலக வர்த்தக அமைப்பின் கூட்டத்தில் இந்தியா எழுப்பியது. அடுத்த நான்கு ஆண்டுகளில் மானியம் தொடர்பான பிரச்னைக்கு முடிவு காணப்படும் என்று அப்போது முடிவெடுக்கப்பட்டது.

மானியப் பிரச்னையையும் வர்த்தக நடைமுறை ஒப்பந்தத்தையும் இணைத்துப் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. உலக வர்த்தக ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திடாமல் இருப்பதை ஒத்துக்கொள்ளும் வேளையில், வர்த்தக நடைமுறை ஒப்பந்தத்தை மானியப் பிரச்னைக்காக இந்தியா தடுத்து நிறுத்துவது, உலகளாவிய அளவில் இந்தியாவுக்குக் கெட்ட பெயரைத்தான் ஏற்படுத்தும். கடந்த 19 ஆண்டுப் பேச்சுவார்த்தைகள் ஒரு முடிவை எட்டியிருக்கும் வேளையில், வர்த்தக நடைமுறை ஒப்பந்தம் தடைபட்டிருப்பது, உலக வர்த்தக அமைப்பின் வருங்காலத்தையேகூடக் கேள்விக்குறியாக்கினால் ஆச்சரியப்படுவதற்கில்லை.

வர்த்தக நடைமுறை ஒப்பந்தம் கையெழுத்தாகி நடைமுறைக்கு வந்தால், நிர்வாக ரீதியான பல தடைகள் அகற்றப்பட்டு, ஏற்றுமதி, இறக்குமதி சுலபமாகி இருக்கும். இந்த ஒப்பந்தத்தின் மூலம் உலகப் பொருளாதாரத்திற்கு சுமார் 50 லட்சம் கோடி ரூபாய் பற்று வரவு அதிகரித்திருக்கும் என்பது மட்டுமல்ல, இரண்டு கோடிக்கும் அதிகமான வேலைவாய்ப்புகள் உருவாகி இருக்கும். அதில் பெரும் பகுதி வளர்ச்சி அடையும் நாடுகளில்தான் ஏற்பட்டிருக்கும்.

ஆரம்பம் முதலே, நாடுகளுக்கு இடையேயான ஒப்பந்தங்கள் அகற்றப்பட்டு, சர்வதேச ஒப்பந்தங்கள் ஏற்பட வேண்டும் என்று இந்தியா குரல் கொடுத்து வந்திருக்கிறது. இதன்மூலம் அமெரிக்கா போன்ற வளர்ச்சி அடைந்த நாடுகள், தங்களுக்கு ஒரு சட்டம், ஏனைய நாடுகளுக்கு ஒரு சட்டம் என்கிற போக்கைக் கடைப்பிடிப்பது தடுக்கப்படும் என்பதுதான் இந்தியாவின் நிலைப்பாட்டுக்குக் காரணம்.

உலக வர்த்தக அமைப்பு மானியங்களுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுப்பதற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது. அரிசி, கோதுமை போன்றவை அரசால், அரசு நிறுவனங்களால் வாங்கப்பட்டு, மானிய விலையில் விநியோகிக்கப்படும்போது, அந்த மானிய தானியங்கள் ரேஷன் கடைகளிலிருந்து வெளிச்சந்தைக்கும், ஏற்றுமதிக்கும் திருட்டுத்தனமாக எடுத்துச் செல்லப்படுகிறது. இது சர்வதேச வர்த்தகத்தைப் பாதித்து, உலகச் சந்தையில் தவறான போட்டிக்கு வழிகோலுகிறது.

வர்த்தக நடைமுறை ஒப்பந்தத்தில் மானியப் பிரச்னையைக் காரணம் காட்டி இந்தியா கையெழுத்திடாமல் போனது, இந்தியாவின் அநாகரிகமான அச்சுறுத்தல் என்று குற்றம்சாட்டப்படுகிறது. மானியங்கள் வழங்குவதிலும், முறையான உணவுப் பொருள் விநியோகம் இல்லாமல் இருப்பதிலும் பல குளறுபடிகளை வைத்துக்கொண்டு, இந்தியா வர்த்தக நடைமுறை ஒப்பந்தத்தை நிறுத்திவைத்ததுதான், பல நாடுகளுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

உணவு உற்பத்தியில் 10 விழுக்காட்டிற்கு மேல் எந்தவொரு நாடும் சேமிப்பு என்கிற பெயரில் உணவு தானியங்களைச் சேர்த்து வைக்கக்கூடாது என்கிற உலக வர்த்தக அமைப்பின் கூற்றில் நியாயம் இருக்கிறது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. உணவுக் கிடங்குகளில் தேங்கி வீணாவதற்கும், பெருச்சாளிகள் தின்று அழிப்பதற்கும், மழையில் நாசமாவதற்கும் இந்தியா உணவு தானியங்களைச் சேர்த்து வைக்கிறது என்றால், அமெரிக்கா போன்ற நாடுகள் உணவு தானியங்களைப் பதுக்கி வைத்து உலகச் சந்தையில் செயற்கையான தட்டுப்பாட்டை ஏற்படுத்தி விலையை அதிகரிக்கச் செய்கின்றன. அதைத் தடுப்பதற்கான வழிமுறையை, நமது உணவுப் பாதுகாப்புச் சட்டத்திற்கு எதிரானது என்று கூறித் தடுத்து நிறுத்தி இருக்கிறோம்.

மானியப் பிரச்னையைத் தீர்த்துக் கொள்ள நான்கு ஆண்டு அவகாசம் இருக்கும்போது, வர்த்தக நடைமுறை ஒப்பந்தத்தைத் தடுத்து நிறுத்தியது தவறு. இந்தியாவின் அணுகுமுறை சரியல்ல!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.