பல்வேறு கூச்சல் குழப்பத்துக்கு இடையிலும் சில சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த மசோதாக்கள் 15ஆவது மக்களவையால்தான் நிறைவேற்றப்பட்டன என்பது அதிகம் பேசப்படுவதில்லை.
அரசியல் சாசன அதிகாரம் பெற்ற கண்காணிப்பாளர் என்கிற "லோக்பால்' அமைப்புக்கான கோரிக்கை, அண்ணா ஹசாரேயும், அரவிந்த் கேஜரிவாலும் முன்வைத்த ஒன்று என்கிற தவறான எண்ணம் நிலவுகிறது. உயர் பதவியில் இருப்பவர்களின் ஊழலையும் செயல்பாடுகளையும் கேள்வி கேட்க ஓர் அமைப்பு தேவை என்கிற கருத்தை முதன் முதலில் 1960ஆம் ஆண்டு, அன்றைய சட்ட அமைச்சர் அசோக்குமார் சென் நாடாளுமன்றத்தில் முன் வைத்தார். அந்த அமைப்புக்கு 1963இல் "லோக்பால்' என்று நாமகரணம் சூட்டியவர் காங்கிரஸ் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான அபிஷேக் சிங்வியின் தந்தையான பா.ஜ.க. தலைவர் எல்.எம். சிங்வி.
1968இல் சாந்திபூஷண்தான் முறையாக ஜன் லோக்பால் மசோதாவை நாடாளுமன்றத்தில் முன்மொழிந்தார். 1969இல் நான்காவது மக்களவை அதை நிறைவேற்றவும் செய்தது. ஆனால் மாநிலங்களவையில் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்படாததால் காலாவதியாகி விட்டது. அதன்பிறகு, 1971, 1977, 1985, 1989, 1996, 1998, 2001, 2005, 2008 ஆகிய ஆண்டுகளில் எல்லாம் லோக்பால் மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேறாமல் அவையின் ஆயுளுடன் சேர்ந்து காலாவதியானதுதான் இந்த மசோதாவின் சரித்திரம். 52 ஆண்டுகள் தொங்கலில் கிடந்த "லோக்பால்' மசோதாவை 2013 டிசம்பர் 18ஆம் தேதி சட்டமாக்கிய பெருமை 15ஆவது மக்களவைக்கு உண்டு.
15ஆவது மக்களவையால் நிறைவேற்றப்பட்டிருக்கும் இன்னொரு முக்கியமான மசோதா இடித்துரைப்பாளர்கள் பாதுகாப்பு மசோதா, "விசில் ப்ளோயர்ஸ்' என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இடித்துரைப்பாளர்கள், நிர்வாகத்திலும், அரசிலும் காணப்படும்
தவறுகளைத் தட்டிக் கேட்பவர்கள். இதுபோல, தவறைத் தட்டிக் கேட்கத் துணிபவர்களைத் தங்களது பதவி, அதிகார பலத்தால் துன்
புறுத்துவதும் மிரட்டுவதும் சகஜமாகிவிட்ட நிலையில், பல ஆண்டு கால சமூக சிந்தனையாளர்களின் போராட்டத்திற்கு 15ஆவது மக்களவைதான் விடை பகர்ந்திருக்கிறது.
தேசிய நெடுஞ்சாலை ஆணைய சாலைப் பணியில் நடைபெறும் முறைகேடுகளைத் தட்டிக் கேட்ட சத்யேந்திர துபே நவம்பர் 2003இல் கொல்லப்பட்டார். கலப்பட பெட்ரோல் விற்பனைக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முற்பட்ட இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் அதிகாரி சண்முகன் மஞ்சுநாத் 2005இல் கொல்லப்பட்டார். கூட்டுறவு சங்க நில ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடுகளை தட்டிக் கேட்ட மகன்தேஷ் என்கிற கர்நாடக மாநில அதிகாரி 2012இல் கொல்லப்பட்டார்.
இதுபோல, தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் பல தவறுகளை தட்டிக் கேட்ட, முறைகேடுகளை வெளிக்கொணர்ந்த 25க்கும் மேற்பட்ட சமுதாயப் போராளிகள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். நில ஆக்கிரமிப்புக்கு எதிராக, மணல் கொள்ளைக்கு எதிராக, காவல் துறையின் அத்துமீறலுக்கு எதிராகப் போராடிய பலர் துன்புறுத்தப்பட்டிருக்கிறார்கள்.
கடந்த பத்து ஆண்டுகளாக, இடித்துரைப்பாளர்களுக்கு சட்டப்படி பாதுகாப்பு வேண்டும் என்கிற கோரிக்கை இருந்து வந்தது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளாலும் நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டிருக்கும் இடித்துரைப்பாளர் பாதுகாப்பு மசோதா சட்டமாக்கப்பட்டால், அது 15ஆவது மக்களவையின் மிகப் பெரிய சாதனைகளில் ஒன்றாக இருக்கும்.
இலவச, கட்டாய கல்விக்கான உரிமைச் சட்டம் 2008, நிலம் கையகப்படுத்தல், மறுவாழ்வு, மாற்றுக் குடியிருப்பு தொடர்பான வெளிப்படைத் தன்மை மற்றும் இழப்பீடு உரிமைச் சட்டம் 2011, மனித மலக்கழிவு அகற்றுவோர் வேலைக்கு அமர்த்தல் தடுப்பு மற்றும் மறுவாழ்வுச் சட்டம் 2012, பணியிடங்களில் பெண்களுக்கு பாதுகாப்பு மற்றும் பாலியல் தொந்தரவுத் தடுப்புச் சட்டம் 2010, தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் 2013, தெருவோர வியாபாரிகள் வாழ்வுரிமைப் பாதுகாப்பு மற்றும் தெருவோர வியாபார முறைப்படுத்துதல் சட்டம் 2013 ஆகியவை 15ஆவது மக்களவையில் நிறைவேற்றப்பட்ட முக்கியமான, வரவேற்புக்குரிய சில மசோதாக்கள்.
நாடாளுமன்றக் கூட்டத் தொடரை ஒரு நிமிடம் நடத்த ரூ.2.5 கோடி செலவாகிறது. கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் நாடாளுமன்றத்தை நடத்துவதற்காக சுமார் ரூ.1,500 கோடி செலவாகி இருக்கிறது. இவ்வளவு வரிப்பணம் செலவழித்தாலும், நல்ல பல சட்டங்
களும் 15ஆவது மக்களவையால் நிறைவேற்றப்பட்டிருக்கிறதே, அந்த வரையில் மகிழ்ச்சி!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.