அமைதி நிலவ வேண்டும்!

எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பு, பெரும் வன்முறை இவற்றுக்கிடையே வங்கதேசத்தில் நாடாளுமன்றத் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. மொத்தமுள்ள 300 இடங்களில் பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான ஆளும் அவாமி லீக் கட்சி நான்கில் மூன்று பங்கு இடங்களைக் கைப்பற்றி ஆட்சி அமைக்கவிருக்கிறது.
Updated on
2 min read

எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பு, பெரும் வன்முறை இவற்றுக்கிடையே வங்கதேசத்தில் நாடாளுமன்றத் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. மொத்தமுள்ள 300 இடங்களில் பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான ஆளும் அவாமி லீக் கட்சி நான்கில் மூன்று பங்கு இடங்களைக் கைப்பற்றி ஆட்சி அமைக்கவிருக்கிறது.

முன்னாள் பிரதமர் பேகம் கலீதா ஜியாவின் வங்கதேச தேசியக் கட்சி (பி.என்.பி.) தலைமையிலான எதிர்க்கட்சிகளின் கூட்டணி இந்தத் தேர்தலைப் புறக்கணித்ததால், 153 தொகுதிகளில் ஆளும் அவாமி லீக் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்கள் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். தேர்தல் நடைபெற்ற 147 தொகுதிகளில், 139 இடங்களுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், ஆளும் அவாமி லீக் 104 இடங்களில் வென்றுள்ளது. 127 இடங்களில் இந்தக் கட்சி வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். மொத்தம் 231 இடங்களைக் கைப்பற்றியுள்ள அவாமி லீக் மீண்டும் ஆட்சி அமைக்கவிருக்கிறது.

1971-இல் பாகிஸ்தானுடன் போரிட்டு வங்கதேசம் உருவாவதற்குக் காரணமான இந்தியாவுடன் நட்புறவு கொள்ளவே அந்த நாட்டு மக்களில் பெரும்பாலானோர் விரும்புகின்றனர். ஆனால், நம்முடன் நீண்ட காலமாகவே விரோதம் பாராட்டி வரும் பாகிஸ்தானும், வங்கதேசத்திலிருந்து செயல்படும் ஜமாத்-இ-இஸ்லாமி உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளும் அதை விரும்பாதது இயல்பானதே.

மதப் பழைமைவாதத்தை நிலைநிறுத்த விரும்பும் ஜமாத்-இ-இஸ்லாமி பயங்கரவாத அமைப்புடன் கூட்டணி ஏற்படுத்திக் கொண்டு, முன்னாள் பிரதமர் கலீதா ஜியா, தற்போது ஆட்சியில் உள்ள ஷேக் ஹசீனா அரசுக்கு நெருக்கடி கொடுத்து வருகிறார்.

கலீதா ஜியா இந்தியாவுக்கு எதிரான போக்கையே கடைப்பிடித்து வருபவர் என்பதால், அவர் ஆட்சிக்கு வருவது நல்லது என ஜமாத்-இ-இஸ்லாமி உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகள் கருதுகின்றன.

ஷேக் ஹசீனா பிரதமர் பதவியிலிருந்து விலகிய பிறகு, நடுநிலையான இடைக்கால அரசு மூலம் நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என கலீதா ஜியா வலியுறுத்துகிறார். எனினும், தனது தலைமையிலான இடைக்கால அரசில் கலீதா ஜியாவின் பி.என்.பி. உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகளும் இடம் பெறலாம் என்றும், அத்தகைய இடைக்கால அரசு மூலம் நாடாளுமன்றத் தேர்தலை நடத்த தான் தயாராக இருப்பதாகவும் ஷேக் ஹசீனா ஏற்கெனவே அறிவித்தார். அவருடைய யோசனையை ஏற்காமல் எதிர்க்கட்சிகள் தேர்தலைப் புறக்கணித்துவிட்டன.

இதனால், எதிர்பார்த்தபடியே வாக்குப்பதிவின்போது பெருமளவில் வன்முறைச் சம்பவங்கள் அரங்கேறின. பல வாக்குச்சாவடிகளில் ஒருவர்கூட வாக்களிக்காத நிலையும் ஏற்பட்டது. எந்தவிதமான சமரசத்துக்கும் உடன்படாத எதிர்க்கட்சிகளின் நிலைப்பாடு காரணமாக, எப்படியாவது இந்தத் தேர்தலை நடத்தியாக வேண்டும் என்ற நிலைக்கு பிரதமர் ஷேக் ஹசீனா தள்ளப்பட்டார்.

இதனிடையே, ஜமாத்-இ-இஸ்லாமி பயங்கரவாத அமைப்புடனான கூட்டணியை முறித்துக் கொண்டு அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த கலீதா ஜியா முன்வந்தால், அடுத்த தேர்தலை சுமுகமாக நடத்த தான் தயாராக இருப்பதாக, தேர்தல் வெற்றிக்குப் பிறகு அளித்த பேட்டியில் பிரதமர் ஷேக் ஹசீனா குறிப்பிட்டுள்ளார். இதன்மூலம், வங்கதேசத்தில் மீண்டும் தேர்தலை நடத்த வாய்ப்பு இருப்பதை ஹசீனா சூசகமாகக் குறிப்பிட்டிருக்கிறார்.

எனினும், நடந்து முடிந்த தேர்தலைக் கண்டித்து வேலை நிறுத்தத்துக்கு எதிர்க்கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளன. வங்கதேசம் உருவானதிலிருந்து அந்த நாட்டில் தொடர்ந்து நடைபெற்று வரும் வேலை நிறுத்தங்கள் மற்றும் பாகிஸ்தான் உளவு அமைப்புகளின் உதவியுடன் செயல்பட்டு வரும் மதப் பழைமைவாதிகள், பயங்கரவாதிகளின் தூண்டுதலால் நடைபெறும் கலவரங்களால் அந்த நாடு பொருளாதார ரீதியாக மோசமான நிலையில் உள்ளது.

இந்தியாவைப் பொருத்தவரையில், வங்கதேசத்தில் ஜனநாயக ரீதியிலான ஓர் அரசு நீடிக்க வேண்டியது மிகவும் முக்கியமானதாகும். வங்கதேசம் உருவாக இந்தியாதான் காரணம் என்ற போதிலும், அந்த நாட்டிலிருந்து அகதிகள் என்ற பெயரில் நமது நாட்டுக்குள் ஊடுருவும் பயங்கரவாதிகள் பிரச்னை, நீண்டகாலமாக தீர்க்கப்படாமல் உள்ள தீஸ்தா நதீ நீர்ப் பிரச்னை ஆகியவற்றை நாம் எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

வங்கதேசத்தில் அமைதி நிலவ வேண்டியது குறித்து அமெரிக்கா உள்ளிட்ட ஏனைய மேலை நாடுகள் கவலை கொள்ளாமல் இருக்கலாம். ஆனால், நம்முடன் நட்புறவை விரும்பும் மிக முக்கியமான அண்டை நாடு என்பதாலும், பண்பாட்டு ரீதியாக நம்முடன் தொடர்புடையது என்பதாலும் வங்கதேசத்தின் நலனில் இந்தியா அக்கறை கொள்ளாமல் இருக்க முடியாது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com