எரியும் பிரச்னை!

மானியம் அல்லாத சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை திடீரென ரூ.220 உயர்த்தி ஏழை, நடுத்தர மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது மத்திய அரசு. ஏற்கெனவே கடும் விலைவாசி உயர்வாலும், தொழில்கள் நசிவாலும் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு இந்த விலை உயர்வு பேரிடியாகும் என்பதை மறுப்பதற்கில்லை.
Updated on
2 min read

மானியம் அல்லாத சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை திடீரென ரூ.220 உயர்த்தி ஏழை, நடுத்தர மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது மத்திய அரசு. ஏற்கெனவே கடும் விலைவாசி உயர்வாலும், தொழில்கள் நசிவாலும் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு இந்த விலை உயர்வு பேரிடியாகும் என்பதை மறுப்பதற்கில்லை.

சமையல் எரிவாயுவை மானிய விலையில் அளிப்பதால் அரசுத் துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு பெரும் இழப்பு ஏற்படுவதாகக் கூறி, மானிய விலை சிலிண்டர்களுக்கு ஏற்கெனவே கட்டுப்பாடு விதித்துள்ளது மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சகம். நுகர்வோருக்கு மானிய விலையில் ஆண்டுக்கு 6 சிலிண்டர்கள் மட்டுமே வழங்கப்படும் என கடந்த 2012-ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் மத்திய அரசு அறிவித்தது. இதற்குக் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, 2013 ஜனவரியில் மானிய விலை சிலிண்டர்களின் எண்ணிக்கையை 9 ஆக உயர்த்தியது. நான்கு பேர் கொண்ட ஒரு குடும்பத்துக்கு மாதத்துக்கு ஒரு சிலிண்டர் எனக் கணக்கிட்டாலும், ஆண்டுக்கு மொத்தம் 12 சிலிண்டர்கள் தேவைப்படும். இத்தகைய குடும்பத்தினர் ஆண்டுக்கு 9 மானிய விலை சிலிண்டர்கள் போக, எஞ்சிய 3 சிலிண்டர்களை இனி தலா ரூ.1,241 கொடுத்துத்தான் பெற முடியும்.

மானியம் அல்லாத சிலிண்டர் விலையானது சர்வேதச நிலவரம், டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு ஆகியவற்றுக்கு ஏற்ப ஒவ்வொரு மாதமும் முதல் தேதியன்று அரசுத் துறை எண்ணெய் நிறுவனங்களால் மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. ஏற்கெனவே கடந்த டிசம்பர் மாதம் 1-ஆம் தேதி மானியம் அல்லாத சிலிண்டர் விலையில் ரூ.63 உயர்த்தப்பட்டது. பின்னர், அதே மாதம் 11 ஆம் தேதி விநியோகஸ்தர்களுக்கான கமிஷன் தொகை உயர்த்தப்பட்டதையடுத்து, இந்த சிலிண்டர் விலையில் மீண்டும் ரூ.3.50 உயர்த்தப்பட்டது.

இந்த நிலையில்,ஆதார் எண்ணுடன் வங்கிக் கணக்கு எண்ணை சமையல் எரிவாயு விநியோகஸ்தரிடம் கொடுத்து முறையாக விண்ணப்பித்தால் மட்டுமே சிலிண்டருக்கான மானியத் தொகையை நுகர்வோர் பெற முடியும் என மத்திய பெட்ரோலிய அமைச்சகம் தற்போது நாளிதழ்களில் வெளியிட்டு வரும் விளம்பரங்களால் மேலும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. அதாவது, ஆதார் எண் இல்லாதவர்கள் இனி மானிய விலை சிலிண்டர்களை பெற முடியாது என பெட்ரோலிய அமைச்சகம் நுகர்வோரை அச்சுறுத்துகிறது.

அரசின் சலுகைகளைப் பெறுவதற்கு ஆதார் எண்ணை கட்டாயமாக்கக் கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும்கூட, பெட்ரோலிய அமைச்சகம் இதுபோன்ற விளம்பரங்களை வெளியிடுவது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாகும். ஆனால், இதுபற்றி மத்திய அரசோ, மாநில அரசுகளோ எந்த விளக்கத்தையும் அளிக்காததால், ஏற்கெனவே ஆதார் எண்ணை பெற்றுள்ள பொதுமக்கள் அதைப் பதிவு செய்வதற்காக சமையல் எரிவாயு விநியோக மையங்களில் நீண்ட வரிசைகளில் காத்திருக்கின்றனர்.

மானியத்துடன் கூடிய சிலிண்டர்களைப் பெறும் நுகர்வோரின் எண்ணிக்கையைக் குறைக்கும் நோக்கத்துடன் பெட்ரோலிய அமைச்சகம் இதுபோன்ற மக்கள் விரோத நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. ஆனால், அரசியல்வாதிகளுக்கு மானிய விலை சிலிண்டர்கள் கட்டுப்பாடு இன்றி வழங்கப்படுவது நியாயமானதா என்ற கேள்விக்கு பதில் இல்லை.

பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய், சமையல் எரிவாயு உள்ளிட்டவற்றை மானிய விலையில் அளிப்பதால் அரசுத்துறை நிறுவனங்களுக்கு ஆண்டுதோறும் பல்லாயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படுவதாகவும், இதனால் நடப்புக் கணக்கு பற்றாக்குறை அதிகரித்துக் கொண்டே போவதாகவும் மத்திய அரசு கூறுகிறது. இந்த வாதத்தை முன்வைத்துதான் சர்வதேச சந்தை நிலவரம், டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் அரசுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை மாற்றி அமைத்து வருகின்றன. ஆனால், பெட்ரோல், டீசல் விலையை அடிக்கடி உயர்த்துவதால் விலைவாசி கட்டுக்கடங்காமல் அதிகரித்து வருவது குறித்து மத்திய அரசு கவலைப்படுவதாகவே தெரியவில்லை.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் இரண்டாவது ஆட்சிக் காலத்திய செயல்பாடுகள் அனைத்துமே வாக்கு வங்கியைக் குறிவைத்து செய்யப்படுபவையாகவே உள்ளன. கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டம், உணவுப் பாதுகாப்பு சட்டம் போன்ற தேர்தல் கண்ணோட்டத் திட்டங்களால் வாக்குகளைப் பெற்று மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடலாம் என காங்கிரஸ் கட்சி போடும் கணக்கை விலைவாசி உயர்வும், ஒன்றன்பின் ஒன்றாக வெளிப்படும் ஊழல்களும் தடம்புரளச் செய்துவிடும். ஒட்டகத்தின் முதுகில் ஏற்றப்படும் கடைசி இறகு, அடிக்கடி உயர்த்தப்படும் பெட்ரோலியப் பொருள்களின் விலை ஏற்றம். அதிலும் குறிப்பாக, சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பு. இதில், பாதிக்கப்படுவது சாமானியன்தானே, ஆட்சியாளர்களுக்கு என்ன கவலை?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com