கனவு!

சேலம் மாநகராட்சியில் அடிப்படை சுகாதார வசதி செய்து தரப்படவில்லை எனக்கூறி, அந்த மாநகராட்சிக்குள்பட்ட 3-ஆவது வார்டு பகுதி மக்கள் அண்மையில் ஒரு நூதன போராட்டத்தை மேற்கொண்டனர்.
Updated on
2 min read

சேலம் மாநகராட்சியில் அடிப்படை சுகாதார வசதி செய்து தரப்படவில்லை எனக்கூறி, அந்த மாநகராட்சிக்குள்பட்ட 3-ஆவது வார்டு பகுதி மக்கள் அண்மையில் ஒரு நூதன போராட்டத்தை மேற்கொண்டனர். நீண்ட காலமாக கோரிக்கை விடுத்தும், பொதுக் கழிப்பிடம் கட்டித் தரப்படவில்லை எனக் கூறி, அப் பகுதி மக்கள் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மலம் கழிக்கும் போராட்டத்தை நடத்த முயன்றனர். அவர்களை காவல்துறையினர் தடுத்து கைது செய்துள்ளனர்.

உண்ணாவிரதப் போராட்டம், உண்ணும் விரதப் போராட்டம், மறியல் போராட்டம் என போராட்டங்களில் பலவகை உண்டு. ஆனால், இந்த நூதன போராட்டமானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிர்ச்சி இருக்கட்டும். வெட்கி தலைகுனிய வேண்டியது, பொதுமக்கள் அல்ல, நிர்வாகம்!

இந்த அடிப்படைப் பிரச்னையானது, இப் பகுதியில் மட்டுமல்ல, ஊரெங்கும், நாடெங்கும் உள்ளது. இந்தியாவில் 53 சதவீத வீடுகளில் கழிப்பிட வசதி இல்லாததால், சுமார் 60 கோடி பேர் திறந்தவெளியை பயன்படுத்துவதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.

கழிப்பிட வசதியைப் பொருத்தவரையில், நகரங்களை விட கிராமங்கள் பின்தங்கிய நிலையிலேயே உள்ளன. நகரங்களில் 100-க்கு 10 வீடுகளில் கழிப்பறைகள் இருந்தால், கிராமங்களில் 5-க்கும் குறைவாகவே உள்ளன. கிராமப்புறப் பகுதிகளை எடுத்துக்கொள்வோமானால், புதுச்சேரி, ஒடிஸா, சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் உள்ளிட்ட 17 மாநிலங்களில் 5 சதவீதத்துக்கும் குறைவாகவே கழிப்பிட வசதிகள் உள்ளன என மக்கள்தொகை கணக்கெடுப்பு புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

ஆதார் எண் இருந்தாலே சமையல் எரிவாயுவுக்கான மானியத்தைப் பெற முடியும் என மத்திய அரசு அறிவித்தவுடன், அந்த எண்ணைப் பெறுவதில் பொதுமக்கள் முனைப்புக் காட்டி வருகின்றனர். அதேபோல, கழிப்பறை இல்லாத வீடுகளுக்கு ரேஷன் பொருள்கள் வழங்க முடியாது, மானியங்கள் கிடையாது, இலவச பொருள்கள் அளிக்கப்பட மாட்டாது என அதிரடி திட்டத்தை அரசு அறிவித்தால், நிலைமையில் மாற்றம் ஏற்படலாம். ஆனால், கழிப்பறைகளை அமைக்க செலவாகுமே, யார் தருவார் பணம்?

தனி நபர் கழிப்பறைகளை விட்டுவிடுவோம். பொதுக் கழிப்பறைகள் நிலை மிகவும் மோசமாக உள்ளது. இந்த கழிப்பறைகளாலேயே நோய் பரவுகிறது என்ற கூற்று பரவலாக உள்ளது. இதற்கு சாட்சி, பஸ் நிலையங்களில் அமைந்துள்ள கழிப்பறைகள். இவற்றை முறையாகப் பராமரிக்க எந்த உள்ளாட்சி, நகராட்சி, மாநகராட்சி அமைப்பும் அக்கறை காட்டுவதில்லை. கழிப்பறைகளை பெரும்பாலும் ஆளுங்கட்சியினர் அல்லது உள்ளூர் தாதாக்கள் ஏலத்துக்கு எடுத்து நடத்துவதால், அவற்றின் முறையான பராமரிப்பை உறுதிப்படுத்த அதிகாரிகளும் முனைப்பு காட்டுவதில்லை. பொதுமக்களும் தட்டிக் கேட்க துணிவதில்லை.

தற்போது ஊராட்சி நிதி, எம்.எல்.ஏ., எம்.பி. மேம்பாட்டு நிதி மூலம் கழிப்பறைகள் கட்டப்படுகின்றன. ஆனால், அவற்றை உரிய காலத்தில் திறப்பதுமில்லை. திறந்தாலும் முறையாக பராமரிப்பதுமில்லை. அதைப் பற்றி எந்தவொரு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினரும் கவலைப்படுவதுமில்லை.

நகர்ப்புறங்களில் ஆங்காங்கே கழிப்பறை இல்லாத நிலைமை இந்தியாவின் தனிச்சிறப்பு. நடைபாதைதான் பொதுக் கழிப்பறை, விளக்கு கம்பங்கள்தான் ஆண்கள் சிறுநீர் கழிக்கும் இடம் என்கிற அவலநிலை இந்தியாவெங்கும் தொடர்கிறது. பொதுக் கழிப்பறைகள் இல்லாமல் மகளிர் அனுபவிக்கும் அவலம் சொல்லி மாளாது.

காஷ்மீரையும், கன்னியாகுமரியையும் இணைக்க தங்க நாற்கர சாலைகள் அமைக்கிறோம். 12,500 கோடி ரூபாயில் மும்பையில் அமைந்திருப்பதுபோல பெருநகரங்களில் விமான நிலையங்களை அமைக்கிறோம். விதவிதமான கார்கள்; மோட்டார் சைக்கிள்கள்; ஊருக்கு ஊர் ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள்; அடிமட்ட கூலித் தொழிலாளி வரை கையிலே அலைபேசி; வீதிக்கு வீதி மதுபான கடைகள்; இவ்வளவு செல்வச் செழிப்போடு பொருளாதார மேம்பாடு அடைந்திருப்பதாக சொல்லிக் கொள்வதில் என்ன அர்த்தம் இருக்கிறது?

வீட்டுக்கு வீடு கழிப்பறையை உறுதிப்படுத்த முடியவில்லை. சரி, தெருவுக்கு தெரு வேண்டாம், வார்டு தோறும் முறையாக பராமரிக்கப்பட்ட பொதுக் கழிப்பறை அமைத்தாவது சுகாதாரத்தைப் பேணலாகாதா? இன்னும் எத்தனை காலம்தான் இந்தியாவில் மூக்கைப் பொத்திக் கொண்டு தெருமுனைகளை கடக்கப் போகிறோம்? மலக் கழிவுகளை மிதித்து விடாமல் பயந்தபடி சாலைகளில் நடக்க போகிறோம்?

2020இல் இந்தியா உலக வல்லரசாகப் போகிறது - நாம் கனவு காண்கிறோம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com