பிரதமரேயானாலும்...

முறையான அனுமதி தராமல் சுரங்கங்களை ஏலம் விட்ட அரசு செய்தது தவறா, இல்லை, அனுமதி கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை என்று ஏலம் எடுத்த நிறுவனங்கள் மீது தவறா? சுற்றுச்சூழலை பாதிக்கும் என்ற தெரிந்தும் நிலக்கரிச் சுரங்கங்களை ஒதுக்கீடு செய்ய அரசு ஏன் முன்வந்தது? இப்படி பல கேள்விகள் எழுகின்றன. மத்திய தணிக்கைக் குழுவின் அறிக்கைப்படி, அரசின் நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டின் மூலம் தனியார்
Updated on
2 min read

நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டு முறைகேடு பற்றிய விசாரணையின்போது, "நல்ல எண்ணத்தால் எடுக்கப்பட்ட முடிவுகளில் சில தவறுகள் நேர்ந்துவிட்டது' என உச்சநீதிமன்றத்தில் அட்டர்னி ஜெனரல் வாகனவதி கூறியிருப்பது வேடிக்கையாகவும் இருக்கிறது; வேதனையாகவும் இருக்கிறது. தவறு நடந்திருக்கிறது என்பதை அப்படியே ஏற்றுக் கொண்டால், கிரிமினல் குற்றத்தை ஒப்புக்கொண்டதாகிவிடும் என்பதால், நல்லெண்ணத்துடன்தான் ஒதுக்கீடுகள் செய்யப்பட்டிருப்பதாக அவர் சப்பைக்கட்டு கட்டுகிறார் என்பது தெளிவு.

  நல்லெண்ணத்துடன் எடுக்கப்பட்ட முடிவாக இருந்தாலும், தவறு நடக்கிறது என்று தெரிந்ததும், தவறைத் திருத்த முயற்சித்திருக்க வேண்டும் அரசு. அதற்கு பதிலாக மூடிமறைக்க முற்பட்டது ஏன் என்கிற கேள்வி வரும்போது, நல்ல எண்ணம் என்பதன் பின்னணியில் கெட்ட எண்ணம் இருந்திருக்கிறது என்றுதானே எடுத்துக்கொள்ள முடியும்?

ஏற்கெனவே 40 ஒதுக்கீடுகள் ரத்து செய்யப்பட்டுவிட்டன. ஒதுக்கீடு செய்யப்பட்டு இன்னும் வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதி கிடைக்காததால் வேலைகள் தொடங்காமல் இருக்கும் சுரங்கங்களின் ஒதுக்கீடுகளை ஏன் ரத்து செய்யக்கூடாது என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பி இருக்கிறது.

ஆரம்பம் முதலே நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டில் பல முறைகேடுகள். பொதுவான ஏலத்திற்கு உத்தரவிடாமல், வெளிப்படைத்தன்மை இல்லாமல் பரிசீலனைக் குழுவால் சுரங்கங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது முதல் தவறு. ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்திருப்பது பற்றிய விசாரணை தொடங்கியபோது, இது தொடர்பான கோப்புகள் மாயமாய் மறைந்தன. சுரங்கங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டபோது, பிரதமர் மன்மோகன் சிங்கே நேரடியாக சம்பந்தப்பட்ட துறைக்குப் பொறுப்பேற்றிருந்ததால், ஒதுக்கீட்டில் அவரது தொடர்பு என்ன என்கிற கேள்வி எழுகிறது.

உச்சநீதிமன்றத்திற்கு சிபிஐ அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். ஆனால், அந்த அறிக்கையை சட்ட அமைச்சரும், பிரதமர் அலுவலக அதிகாரிகளும் சரிபார்த்து, திருத்தங்கள் செய்து சமர்ப்பித்திருக்கிறார்கள் என்றால், பிரதமருக்கோ அரசுக்கோ தொடர்பில்லாமல் இருக்குமா என்கிற சந்தேகம் எழுகிறது. ஒருபுறம், நிலக்கரி அமைச்சகம் சுரங்கங்களுக்கு அனுமதி வழங்குகிறது. இன்னொருபுறம், சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி வழங்க மறுக்கிறது.

முறையான அனுமதி தராமல் சுரங்கங்களை ஏலம் விட்ட அரசு செய்தது தவறா, இல்லை, அனுமதி கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை என்று ஏலம் எடுத்த நிறுவனங்கள் மீது தவறா? சுற்றுச்சூழலை பாதிக்கும் என்ற தெரிந்தும் நிலக்கரிச் சுரங்கங்களை ஒதுக்கீடு செய்ய அரசு ஏன் முன்வந்தது? இப்படி பல கேள்விகள் எழுகின்றன.

மத்திய தணிக்கைக் குழுவின் அறிக்கைப்படி, அரசின் நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டின் மூலம் தனியார் நிறுவனங்கள் அடைந்திருக்கும் லாபம் ஏறத்தாழ 1.86 லட்சம் கோடி ரூபாய். இது வெறும் அனுமானம்தான் என்று அரசு சொன்னாலும், பெரிய அளவில் தனியார் லாபமடைந்திருக்கிறார்கள் என்பதை அரசு மறுக்கவில்லை. சமீபத்திய பத்திரிகையாளர் சந்திப்பில், பிரதமர் மன்மோகன் சிங்கே சில முறைகேடுகளும் தவறுகளும், நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டில் நடந்திருப்பதை ஒப்புக் கொண்டிருக்கிறார்.

மத்திய அரசு ஒரு விசித்திரமான வாதத்தை உச்சநீதிமன்றத்தில் பதிவு செய்தது. அனுமதி வழங்கப்பட்ட நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடுகள் ரத்து செய்யப்பட்டால், வருங்கால அந்நிய முதலீடுகள் அதனால் பாதிக்கப்படும் என்பதுதான் அது. அப்படியானால் தவறுகள் திருத்தப்படக்கூடாது, வரைமுறையில்லாமல் முறைகேடுகள் நடந்தால் அது விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு கேள்வி கேட்கப்படக்கூடாது என்று அரசு கூறுகிறதா?

மத்திய - மாநில அரசுகளின் ஏனைய அனுமதிகள் கிடைக்காததால்தான், சுரங்க வேலைகள் தொடங்கவில்லை என்பதும், ஏற்கேனவே வங்கிகளும் தொழில் நிறுவனங்களும் சுரங்க வேலைகளுக்காகச் செய்திருக்கும் முதலீடுகள் வீணாகிவிடும் என்பதும், அனுமதியை ரத்து செய்யக்கூடாது என்பதற்காக முன்வைக்கப்படும் வாதங்கள். உச்சநீதிமன்றம் கேட்டிருப்பதுபோல, முறையான அனுமதிகளைப் பெறாமல் ஒதுக்கீடு பெற்றது யார் தவறு? என்ன தைரியத்தில் அந்த நிறுவனங்கள் ஒதுக்கீடுகளைப் பெற்றன?

அலைக்கற்றை ஒதுக்கீட்டில் செய்தது போல, முறைகேடான ஒதுக்கீடுகள் ரத்து செய்யப்பட வேண்டும். மறு ஏலம் நடத்தப்பட்டாக வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக, முறைகேடான நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டுக்கு யார் காரணம் என்பது தெரிந்தாக வேண்டும். பிரதமரேயானாலும் மௌனம் கலையத்தான் வேண்டும்! சட்டம் தனது கடமையைச் செய்யத்தான் வேண்டும்!!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com