காலவரம்பு தேவைதானா?

பணியிடத்தில் பாலியல்தொல்லை தொடர்பான புகாருக்கு ஆளான தருண் தேஜ்பால், நீதியரசர் ஏ.கே. கங்குலி ஆகியோர் மீதான நடவடிக்கைகளிலும், தற்போது இதே புகாருக்கு ஆளாகியுள்ள நீதியரசர் ஸ்வதேந்தர் குமார் மீதான நடவடிக்கையிலும் மூன்றுவிதமான அணுகுமுறையை பார்க்க முடிகிறது.
Updated on
2 min read

பணியிடத்தில் பாலியல்தொல்லை தொடர்பான புகாருக்கு ஆளான தருண் தேஜ்பால், நீதியரசர் ஏ.கே. கங்குலி ஆகியோர் மீதான நடவடிக்கைகளிலும், தற்போது இதே புகாருக்கு ஆளாகியுள்ள நீதியரசர் ஸ்வதேந்தர் குமார் மீதான நடவடிக்கையிலும் மூன்றுவிதமான அணுகுமுறையை பார்க்க முடிகிறது.

தருண் தேஜ்பால் தனது குற்றத்தை தெஹல்கா நிறுவனத் தலைவரிடம் ஒப்புக்கொண்டார். நீதிமன்றத்திடமும் விசாரணைக்கு ஒத்துழைப்பதாகக் கூறினார். ஆனால் இன்றுவரை அவருக்கு ஜாமீன்கூட வழங்கப்படவில்லை. அதைப் பற்றி கேள்வி கேட்கவும் தயாராக இல்லை.

இதே குற்றச்சாட்டுக்கு உள்ளான நீதியரசர் ஏ.கே.கங்குலியின் பெயர்கூட முதலில் வெளியாகவில்லை. உச்சநீதிமன்ற நீதிபதி என்ற அளவில்தான் தெரிவிக்கப்பட்டது. நீதிபதிகள் குழு விசாரணை நடத்தி, அவரது "பேச்சில்' பாலியல்தொல்லை இருந்தது என்று அறிக்கை அளித்தது. நீதிபதி கங்குலி இதை மறுத்தார். மேற்கு வங்க மனித உரிமைகள் கழகத்தின் தலைவர் பதவியிலிருந்து விலக மறுத்தார்.

இது தொடர்பான பிரச்னை பெரிதாகி, குடியரசுத் தலைவர் பரிந்துரைக்கு அனுப்பப்படும் நிலை உருவானபோதுதான் தனது பதவி விலகல் கடிதத்தை அளித்தார். நீதிமன்றம் தன்னை மோசமாக நடத்தியது என்று வெளிப்படையாகக் குற்றம் சாட்டினார். இதுவரை அவர் மீது நடவடிக்கையோ அல்லது நீதிமன்ற கண்டனமோ இல்லை.

இப்போது, நீதிபதி ஸ்வதேந்தர் குமார் மீதான புகார் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் மனுதாரரிடம் கேட்கிறது: "ஓய்வுபெற்று இரண்டு ஆண்டுகளாகிவிட்ட ஒரு நீதிபதி மீது காலம்தாழ்ந்து புகார் கொடுப்பது ஏன்?' அதுமட்டுமல்ல, பணியிடத்தில் பாலியல் தொல்லை தொடர்பான புகாரை எத்தனை நாளுக்குள் தரவேண்டும் என்பதை வரன்முறைப்படுத்துதல், இத்தகைய புகார்களுக்கு நீதித் துறையில் நிரந்தர அமைப்பு ஏற்படுத்துதல் குறித்து மத்திய அரசு 4 வாரங்களில் விளக்கம் தர கூறியுள்ளது நீதிமன்றம்.

இந்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நாளிலேயே இதுகுறித்த விவாதத்தை நீதிமன்றமும் நீதித்துறை வல்லுநர்களும் முன் வைத்திருக்கலாம். 2ஜி வழக்கு உள்ளிட்ட முக்கிய வழக்குகளில் தொடர்புடைய ஏ.கே.கங்குலி, பசுமைத் தீர்ப்பாயத்திற்கு தலைமை தாங்கும் நீதிபதி ஸ்வதேந்தர் குமார் ஆகியோர் மீது பழிவாங்கலாக இத்தகைய புகார்கள் எழுகின்றனவோ என்ற சந்தேகத்தின் விளைவுதான், எத்தனை நாள்களுக்குள் இத்தகைய புகார்களைத் தர வேண்டும் என்ற காலவரம்புகளை நீதிமன்றம் கேட்டிருப்பது.

காலவரம்பு நிர்ணயிப்பதிலும், வழக்குகளை ஊடகங்கள் வெளியிடுவதிலும் சில கட்டுப்பாடுகளை, விதிமுறைகளை ஏற்படுத்த வேண்டிய அவசியம் தற்போது ஏற்பட்டுள்ளது.

பெண்கள் உடனடியாக புகார் அளிக்காமல் இருக்கக் காரணம் உயிர்அச்சமும் எதிர்கால வாழ்க்கை குறித்த கவலையும்தான். பாதுகாப்பான சூழல் இல்லாமல் ஒரு அரசியல்வாதி மீது ஒரு பெண் இத்தகைய புகாரைக் கொடுக்க முடியாது.

அதேபோன்று, முனைவர் பட்டம் கிடைக்கும் முன்பாக ஒரு பேராசிரியரின் பாலியல் தொல்லையை ஒரு மாணவி சொல்வதும் சாத்தியமில்லை. புகார் சொல்வதன் மூலம் அந்தப் பேராசிரியரை அம்பலப்படுத்தலாம். ஆனால், மாணவியின் முனைவர் பட்டம் பல சிக்கலுக்கு உள்ளாகும். மற்ற பேராசிரியர்களால் அவர் புறக்கணிப்படுவார். பாதிக்கப்பட்ட பெண் பணியிடத்தைவிட்டு வெளியேற முடியாதபடி சிறை வைக்கப்படும் சூழல்களும் வரலாம். ஆகவே இதுபோன்ற அச்சங்களும் சூழ்நிலைக் காரணங்களும் நியாயமானதாக இருந்தால், அத்தகைய புகார்கள் காலம் கடந்தும் ஏற்கப்படத்தான் வேண்டும்.

ஆகவே ஒரு பெண் எத்தனை நாள்களுக்குள் புகார் கொடுக்க வேண்டும் என்பதைக் காட்டிலும், காலம் கடந்த புகாருக்கான காரணம் நியாயமானதாக இருப்பின் ஏற்கப்படவேண்டும். அதுதான் நியாயமானது. பணியிடப் பாலியல் தொல்லை புகாரில், தொடர்புடைய பெண்ணின் பெயர் வெளியிடப்படுவது இல்லை. ஆனால் ஆண்களின் பெயரையும் அவர் சார்ந்துள்ள நிறுவனம் அல்லது துறையின் பெயரையும் வெளியிடும் போக்கு ஊடகங்களில் இருக்கிறது.

சந்தையில் தொழில்போட்டி காரணமாக, அல்லது தொழிலுக்கு தடையாக இருந்தார் என்பதற்காக ஒரு நிறுவனத்தின் மீதோ ஒரு அதிகாரி மீதோ பொய்ப்புகார் கொடுக்கப்படுவதற்கான சாத்தியம் இன்றைய தொழில், அரசியல் சூழலில் மேலதிகமாக உள்ளது. ஆகவே, நீதிமன்றம் விசாரணை நடத்தி, புகாரில் உண்மை இருக்கிறது என்று அறிவித்த பிறகுதான், அந்த நிறுவனம் அல்லது அரசுத் துறை பெயரையும் அந்த அதிகாரியின் பெயரையும் ஊடகங்கள் வெளியிட வேண்டும் என்ற கட்டுப்பாடுகளும் இன்று அவசியத் தேவை.

இந்தப் பிரச்னையில் தீவிர சிந்தனையும் விவாதமும் காலத்தின் கட்டாயம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com