தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புஇலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்தமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைவாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

விரயமாகும் நிதி!

தொகுதி வளர்ச்சிக்காக ஒதுக்கீடு செய்யப்படும் நிதியை பெரும்பாலான எம்.பி.க்கள் முழுமையாகப் பயன்படுத்தவில்லை என மத்திய புள்ளிவிவரம் மற்றும் திட்ட அமலாக்கத் துறை அமைச்சகத்தின் சமீபத்திய அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

News image
Updated On :2 பிப்ரவரி 2014, 6:21 am

தொகுதி வளர்ச்சிக்காக ஒதுக்கீடு செய்யப்படும் நிதியை பெரும்பாலான எம்.பி.க்கள் முழுமையாகப் பயன்படுத்தவில்லை என மத்திய புள்ளிவிவரம் மற்றும் திட்ட அமலாக்கத் துறை அமைச்சகத்தின் சமீபத்திய அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 15ஆவது மக்களவையின் பதவிக் காலம் முடிவுக்கு வரவிருக்கும் நிலையில், ஏறத்தாழ அனைத்து மாநிலங்களிலும் தொகுதி வளர்ச்சி நிதியை எம்.பி.க்கள் முழுமையாகப் பயன்படுத்தாத நிலையே காணப்படுகிறது.

இந்த நிதியை முழுமையாகப் பயன்படுத்தாத மாநிலங்களில் உத்தர பிரதேசம் முதலிடத்தில் உள்ளது. இந்த மாநிலத்தைச் சேர்ந்த எம்.பி.க்களுக்கு மொத்தம் ரூ. 1,306 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் ரூ. 332.87 கோடி இன்னும் செலவிடப்படவில்லை. இதேபோல, ஹரியாணா மாநிலத்தைச் சேர்ந்த எம்.பி.க்களுக்கு ஒதுக்கப்பட்ட மொத்தம் ரூ. 178.64 கோடியில் 24.15% நிதி பயன்படுத்தப்படாமல் உள்ளது. பஞ்சாபில் 25% நிதி பயன்படுத்தப்படவில்லை.

வேகமாக வளர்ச்சியடையும் மாநிலம் எனக் கூறப்படும் குஜராத்தில் எம்.பி.க்களின் தொகுதி வளர்ச்சிக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் 25.50% (ரூ. 101.57 கோடி) இன்னமும் பயன்படுத்தப்படவில்லை. ராஜஸ்தானில் ரூ. 92 கோடி நிதி பயன்படுத்தப்படவில்லை.

தொகுதி வளர்ச்சி நிதியைப் பயன்படுத்துவதில் வடகிழக்கு மாநிலங்களான மிசோரம், மணிப்பூர் ஆகியவை முன்னணியில் உள்ளன. இந்த மாநிலங்களில் சுமார் 6.19% நிதி மட்டுமே பயன்படுத்தப்படாமல் உள்ளது. தொகுதி வளர்ச்சி நிதியைப் பயன்படுத்துவதில் வட மாநிலங்களைவிட தென் மாநிலங்கள் ஓரளவு சிறப்பாகச் செயல்படுவதாக இந்த அறிக்கை தெரிவிக்கிறது.

கடந்த 1993 ஆம் ஆண்டு, அப்போதைய பிரதமர் பி.வி.நரசிம்ம ராவ் ஆட்சிக் காலத்தில்தான் முதன்முதலாக எம்.பி.க்களின் தொகுதிகளில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்வதற்காக, ஆண்டுக்கு தலா ஒரு கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. கடந்த 20 ஆண்டுகளில் இந்தத் திட்டத்துக்கான நிதி ஒதுக்கீடு படிப்படியாக அதிகரிக்கப்பட்டு, தற்போது ஒரு எம்.பிக்கு ஓராண்டுக்கு ரூ. 5 கோடி என்ற அளவில் நிலை பெற்றுள்ளது.

இந்த நிதியை எந்தெந்தத் திட்டங்களுக்கு, எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என பல்வேறு விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. ஆனால், பெரும்பாலான எம்.பி.க்கள் இந்த விதிமுறைகளை முறையாகப் பின்பற்றாமல், தங்களது உறவினர்களால் தொடங்கப்பட்ட அறக்கட்டளைகள் மற்றும் சங்கங்களுக்கு தொகுதி வளர்ச்சி நிதியை மடைமாற்றிவிட்டு, முறைகேடுகளில் ஈடுபடுவதாக இந்திய தலைமை கணக்குத் தணிக்கை அதிகாரியின் (சிஏஜி) அறிக்கையில் பலமுறை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும், இந்த நிதியைப் பயன்படுத்துவதில் வெளிப்படைத்தன்மை இல்லை என்றும், இந்த நிதியின் மூலம் மேற்கொள்ளப்படும் பணிகள் தரம் குறைந்ததாக உள்ளன என்றும், இந்தத் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்றும் சிஏஜி அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. எனினும், எம்.பி.க்களை திருப்திப்படுத்துவதற்காக இந்தத் திட்டத்தை மத்திய அரசு தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது.

மூத்த எம்.பி.க்களில் பலரும், இடதுசாரிக் கட்சிகளின் எம்.பி.க்களும் இந்தத் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். நாடாளுமன்றத்தில் மக்கள் பிரச்னைகளை விவாதித்து அவற்றுக்குத் தீர்வு காண்பதும், புதிய சட்டங்களை இயற்றுவதும்தான் எம்.பி.க்களின் முக்கியப் பணியாகும். இதைவிடுத்து, மக்களுக்கான அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதில் கவனம் செலுத்துவது தேவையற்றது என்றும், இந்தப் பொறுப்புகளை மாவட்ட, கிராம அளவிலான ஊராட்சிகளிடம் விட்டுவிடுவதுதான் சரியாக இருக்கும் என்றும் இந்த எம்.பி.க்கள் கருதுகின்றனர்.

கிராமப்புற ஊரக வேலைவாய்ப்புத் திட்டம், உணவுப் பாதுகாப்புச் சட்டம், பெட்ரோலியப் பொருள்கள், சமையல் எரிவாயுக்கான மானியம் ஆகியவற்றுக்காக பல்லாயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டியுள்ளது. இதனால், நடப்புக் கணக்கு பற்றாக்குறை அதிகரித்து, பொருளாதாரம் மோசமாக உள்ள நிலையில், எம்.பி.க்களின் தொகுதி வளர்ச்சிக்காக ஒதுக்கீடு செய்யப்படும் நிதி முறையாகப் பயன்படுத்தப்படாமல் விரயமாக்கப்படுவது தேசத் துரோகமாகும்.

15ஆவது மக்களவையின் கடைசி கூட்டத் தொடரில் மன்மோகன் சிங் அரசு நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொகுதி வளர்ச்சி நிதியை ரத்துச் செய்யும் தீர்மானத்தை நிறைவேற்றினால், அது இந்த அரசின் மிகப்பெரிய சாதனையாக போற்றப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.