நரேந்திர மோடி அரசின் முதலாவது நிதிநிலை அறிக்கைக் கூட்டத் தொடர் இன்று தொடங்க இருக்கிறது. வருகிற 10ஆம் தேதி இந்த ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் அருண் ஜேட்லி தாக்கல் செய்ய இருக்கிறார். கடந்த பல ஆண்டுகளில்
இல்லாத அளவுக்கு தற்போது ஏற்பட்டிருக்கும் பெரும் எதிர்பார்ப்பையும், இக்கட்டான பொருளாதார சூழலையும் முன் அனுபவம் இல்லாத புதிய நிதியமைச்சர் எப்படி எதிர்கொண்டு சமாளிக்கப் போகிறார் என்கிற ஆர்வத்தை அது ஏற்படுத்தி இருக்கிறது.
பிரதமர் நரேந்திர மோடி கூறியிருப்பதைப்போல, ஆட்சியில் அமர்ந்து நிலைமையை முழுமையாகப் புரிந்து கொண்டு, அதை எதிர்கொள்ளத் திட்டம் வகுப்பதற்கு வழக்கமாகத் தரப்படும் ஆறுமாத அவகாசம்கூட இப்போதைய தேசிய ஜனநாயகக் கூட்டணி
அரசுக்குத் தரப்படவில்லை என்பது உண்மையே. பதவிக்கு வந்து நிர்வாகத்தில் அமர்ந்தவுடன் பிரதமர் நரேந்திர மோடி எல்லாவற்றையும் மாற்றிக் காட்டுவார், விலைவாசியைக் குறைத்து திடீர் வளர்ச்சிக்கு வழிகோலுவார் என்பது போன்ற, அளவுக்கு அதிகமான எதிர்பார்ப்பை அவரது தேர்தல் பிரசாரம் ஏற்படுத்திவிட்டதுதான் அதற்குக் காரணம்.
புதிதாக ஆட்சிக்கு வரும் கட்சியால் உடனடியாக மாற்றங்களை செய்துவிட முடியாவிட்டாலும், அதற்கான நடவடிக்கைகளிலாவது புதிய ஆட்சியாளர்கள் இறங்கியாக வேண்டும். அந்த வகையில் நரேந்திர மோடி அரசின் செயல்திட்டங்கள் எப்படி இருக்கப்போகின்றன என்பதை நிதியமைச்சர் அருண் ஜேட்லி தாக்கல் செய்ய இருக்கும் அவரது முதல் நிதிநிலை அறிக்கை வெளிப்படுத்தும் என்று எதிர்பார்ப்பதில் தவறு ஒன்றும் இல்லை.
பொருளாதார வளர்ச்சியிலும், அன்னியச் செலாவணிக் கையிருப்பிலும், வாஜ்பாயி தலைமையிலான முந்தைய தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு வலுவான நிதி நிலைமையில் விட்டுச் சென்றதுபோல அல்லாமல், மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, மிகப் பெரிய பொருளாதார நெருக்கடியை நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுக்கு விட்டுச் சென்றிருக்கிறது. இதை மாற்றியமைப்பது நிதி அமைச்சர் அருண் ஜேட்லிக்கு சுலபமாக இருக்கப் போவதில்லை. அதுமட்டுமல்ல, அவருடைய நிலைமை பல கோணங்களில் தர்மசங்கடமானதாகவும் தெரிகிறது.
நிதிப்பற்றாக்குறை என்பதே தவறான பொருளாதார பாதிப்பு என்று கூறிவிட முடியாது. பிரதமர் ஜவாஹர்லால் நேரு காலத்திய பற்றாக்குறையுடனான நிதிநிலை அறிக்கைகளுக்கும், மன்மோகன் சிங் ஆட்சியில் தாக்கல் செய்யப்பட்ட பற்றாக்குறை நிதிநிலை அறிக்கைகளுக்கும் பெருத்த வேறுபாடு உண்டு. பண்டித நேரு காலத்தில் பெறப்பட்ட அன்னியக் கடன்களும், பற்றாக்குறையுடனான நிதிநிலை அறிக்கைகளும் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்காக ஏற்படுத்தப்பட்டவை. அன்றைய பற்றாக்குறையும், அன்னியக் கடன்களும் காலப்போக்கில் தேசத்தில் சொத்துக்களான மாறின. அவை வீடு கட்டுவதற்காக கடன் வாங்குவது போன்றவை.
மன்மோகன் சிங் அரசால் ஏற்பட்ட நிதிப்பற்றாக்குறை, மானியங்களுக்கு செலவிடப்பட்டதால் ஏற்பட்டது. இதனால் நீடித்த வளர்ச்சிக்கான அடித்தளம் போடப்படவில்லை. முந்தைய அரசு கடன் வாங்கி, மானியங்கள் என்கிற பெயரில் வாரி வழங்கிக் கொண்டிருந்தது. ஒருபுறம் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சாதகமான தனது கொள்கைகளை மக்கள் பார்வையிலிருந்து மறைப்பதற்கும், சாமானியர்களின் வாக்கு வங்கியை குறிவைத்தும் செலவிடப்பட்ட மானியங்கள் அவை.
முந்தைய அரசு அள்ளி வழங்கிய இலவசங்களையும் மானியங்களையும் புதிய அரசு நிறுத்த முற்பட்டால், மக்களின் அதிருப்திக்கு இன்றைய ஆட்சியாளர்கள் ஆளாகக்கூடும். அதே நேரத்தில், தேவையற்ற மானியங்களை நிறுத்தாமல் போனால், பொருளாதாரத்தைக் கட்டுக்குள் கொண்டுவர முடியாது. அப்படியொரு சிக்கலான சூழ்நிலையில்தான் நிதியமைச்சர் அருண் ஜேட்லி தனது நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்யப் போகிறார்.
மேலும் கடன் வாங்குவதோ, பற்றாக்குறை நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்வதோ, புதியதொரு சிக்கலில் அரசைக் கொண்டுபோய் சேர்க்கும். கடனும் பற்றாக்குறையும் விலைவாசி அதிகரிக்கக் காரணமாகும். விலைவாசியைக் குறைக்க முடியாவிட்டாலும் கட்டுக்குள்ளாவது வைத்திருக்க வேண்டும். இல்லாவிட்டால், இந்த அரசு மக்களின் நம்பிக்கையை இழந்துவிடும்.
துணிந்து நடவடிக்கை எடுத்தால் மக்கள் பாதிக்கப்படுவார்கள். எடுக்காவிட்டால் கொதித்து விடுவார்கள். சர்க்கஸில் ஊஞ்சல் விளையாட்டில் ஈடுபட்டிருப்பவரின் நிலையில் இருக்கிறார் நிதியமைச்சர் அருண் ஜேட்லி. ஒன்றைப் பிடித்தால், மற்றது நழுவுகிறது!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வார பலன்கள் (ஏப். 24 - 30) - கன்னி

வார பலன்கள் (ஏப். 24 - 30) - சிம்மம்

வார பலன்கள் (ஏப். 24 - 30) - கடகம்

வார பலன்கள் (ஏப். 24 - 30) - மிதுனம்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

