தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

முறைகேடு நிஜமா, பொய்யா?

ஆன்ட்ரிக்ஸ் என்ற சொல் இந்தியாவில் பலருக்கும் மறந்தே போயிருக்கலாம். இந்திய விண்வெளி ஆய்வுக் கழகத்தின் (ஐ.எஸ்.ஆர்.ஓ.) விற்பனைப் பிரிவுதான் ஆன்ட்ரிக்ஸ்.

Updated On :22 ஜூலை 2014, 8:26 pm

ஆன்ட்ரிக்ஸ் என்ற சொல் இந்தியாவில் பலருக்கும் மறந்தே போயிருக்கலாம். இந்திய விண்வெளி ஆய்வுக் கழகத்தின் (ஐ.எஸ்.ஆர்.ஓ.) விற்பனைப் பிரிவுதான் ஆன்ட்ரிக்ஸ்.

இந்த ஆன்ட்ரிக்ஸ் நிறுவனம் குறித்து ஜூலை 17-ஆம் தேதி மாநிலங்களவையில் மத்திய விண்வெளித்துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் ஒரு கேள்விக்கு பதிலளிக்கையில், ஆன்ட்ரிக்ஸ் நிறுவனம் மூலம் இதுவரை ரூ.4,408 கோடி வருவாய் கிடைத்துள்ளது என்று கூறியுள்ளார்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஆன்ட்ரிக்ஸ் - தேவாஸ்

ஒப்பந்த விவகாரம் கேள்விக்குள்ளானதில், ஐ.எஸ்.ஆர்.ஓ. முன்னாள் தலைவர் மாதவன் நாயர் உள்பட 4 விஞ்ஞானிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. மாதவன் நாயர் எந்த அரசுப் பதவியையும் வகிக்கக்கூடாது என்று அரசு தடை விதித்தது. இந்த ஒப்பந்த முறைகேடுகள் குறித்து விசாரிக்க கமிட்டி அமைக்கப்பட்டது. இந்த ஒப்பந்தத்தில் இருந்த முறைகேடுகள் கமிட்டியில் பட்டியலிடப்பட்டன. அமலாக்கப் பிரிவினர் களத்தில் இறங்கி, தேவாஸ் நிறுவனத்தில் முதலீடு செய்தவர்கள் யார் யார்? இதில் கருப்புப் பணம் மற்றும் பணச்சலவை நடைபெற்றுள்ளதா என்று காண முற்பட்டது. ஆனால், இப்போது எல்லாம் பழங்கதையாகிவிட்டது.

மத்திய அரசு 2000-ஆம் ஆண்டில் மேற்கொண்ட செயற்கைக்கோள் தகவல் தொடர்புக் கொள்கை (சாட்காம் பாலிசி) இந்திய

அறிவியல் வளத்தை வணிகமாக்க அனுமதித்தது. இதன்படி, தனியார் நிறுவனங்களை செயற்கைக்கோள் மூலம் தகவல்கள் பெற அனுமதித்து, அதற்காக கட்டணம் பெறலாம். தனியார் நிறுவனங்களை, வர்த்தக ரீதியில் அலைக்கற்றையைப் பயன்படுத்த உரிய கட்டணம் பெற்றுக்கொண்டு அனுமதிக்கலாம் என்று முடிவெடுத்தது.

இந்தக் கொள்கையின்படி, 2005-ஆம் ஆண்டில் ஆன்ட்ரிக்ஸ் - தேவாஸ் நிறுவனங்கள் ஒப்பந்தம் போட்டன. இதன்படி, விண்ணில் ஏவப்படவுள்ள ஜிசாட்-6, ஜிசாட்-6ஏ ஆகியவற்றின் 70 விழுக்காடு எஸ்-பாண்டு அலைவரிசையை தேவாஸ் பயன்படுத்திக் கொள்வதற்கான ஒப்பந்தம் போடப்பட்டது. அதாவது, இந்த இரண்டு செயற்கைக்கோள் முழுவதும் டிஜிட்டல் மல்டி மீடியா சர்வீஸஸ் பயன்பாட்டுக்காக தேவாஸ் நிறுவனத்துக்கு மட்டுமே ஒதுக்கப்பட்டுவிடும். இதற்கு ஆன்ட்ரிக்ஸ் நிர்ணயித்த கட்டணம் மிகக் குறைவு.

இந்தக் குறைந்த கட்டணத்தால் தேவாஸ் நிறுவனத்துக்கு அதிக லாபமும், அரசுக்கு ரூ.2 லட்சம் கோடி இழப்பும் ஏற்படும் என்று சி.ஏ.ஜி. சுட்டிக்காட்டிய பிறகுதான் இந்த ஒப்பந்தம் வெளியே தெரிய வந்தது. அன்றைய எதிர்க்கட்சியான பா.ஜ.க. மிகக் கடுமையாக எதிர்த்தது. இதன் பின்னணியில் உள்ள அரசியல்வாதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமளியில் இறங்கியது. ஆன்ட்ரிக்ஸ் - தேவாஸ் ஒப்பந்தத்தை மத்திய அரசு ரத்து செய்தது. அத்துடன் இந்த விவகாரம் மறக்கப்பட்டு விட்டது.

ஆனால், இந்த விவகாரத்தை ஆராய்ந்த 5 நபர் கமிட்டியின் அறிக்கை சில கேள்விகளை எழுப்பியிருந்தது.

பெங்களூருவில் இருக்கும் தேவாஸ் நிறுவனம் எப்படி சர்வதேச நிறுவனமாகக் கருதப்பட்டது? மிகக் குறைந்த அளவில் முதலீடு காட்டிய இந்நிறுவனத்துக்கு எப்படி முதலீடு பல ஆயிரம் மடங்கு உயர்ந்தது?

செயற்கைக்கோள் அலைக்கற்றையைத் தனியாருக்கு வாடகைக்கு விடும்போது, இன்சாட் ஒருங்கிணைப்புக் குழுவிடம் விவாதிக்க வேண்டும். மத்திய அமைச்சரவைக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும். இவற்றைச் செய்யத் தவறியது ஏன்?

மொரீஷியஸ் நாட்டின் இரண்டு நிறுவனங்கள் எவ்வாறு தேவாஸ் நிறுவனத்தில் பங்குதாரர்களாக மாறினார்கள்? இதன் பங்குதாரர்கள் யார் யார்? பணப்பரிமாற்றம் என்ன? இதன் பங்குகளைத் தனியாரும் சில அலுவலர்களும் வாங்கியது எப்படிச் சாத்தியமாயிற்று?

ஜிசாட்-6 செயற்கைக்கோளுக்காக மத்திய அமைச்சகத்திடம் அனுமதி பெற்றபோது, இது தனியாருக்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளதை ஏன் தெரிவிக்கவில்லை?

இந்தக் கேள்விகள் எதற்கும் முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பதில் சொல்லவே இல்லை. இப்போது ஆட்சியில் அமர்ந்துள்ள பா.ஜ.க. அரசு இந்தக் கேள்விக்கான பதில்களை தெரிவிக்குமா? எதிர்க்கட்சியாக இருக்கும்போது இருக்கும் ஆவேசம், ஆளும்கட்சியானதும் காணாமல் போகிறது. நடவடிக்கை எடுத்தாலோ, அதுபற்றிய விசாரணையில் இறங்கினாலோ, உடனே பழிவாங்கும் நடவடிக்கையாகக் கருதப்படுமோ என்று பயந்து, வாளாவிருந்துவிடுகிறார்கள். கேள்விகள் கேள்விகளாகவே தொடர்கின்றன.

ஆன்ட்ரிக்ஸ் - தேவாஸ் ஒப்பந்தமும் அந்தப் பட்டியலில் சேரப் போகிறதா, இல்லை உண்மை உலகுக்குத் தெரியவரப் போகிறதா?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.