காட்டுமிராண்டித்தனம்!

மக்களாட்சியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் சட்டப்பேரவை, மக்களவைக்கான உறுப்பினர்கள் மக்களின் சேவகர்கள்தான் என்பதையும், தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டதாலேயே அவர்களுக்கு கிரீடம் தலைக்கேறி, சர்வ வல்லமை கிடைத்துவிடுவதிவில்லை என்பதையும் தெரிந்து நடந்து கொள்ள வேண்டும்.
Updated on
2 min read

மக்களாட்சியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் சட்டப்பேரவை, மக்களவைக்கான உறுப்பினர்கள் மக்களின் சேவகர்கள்தான் என்பதையும், தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டதாலேயே அவர்களுக்கு கிரீடம் தலைக்கேறி, சர்வ வல்லமை கிடைத்துவிடுவதிவில்லை என்பதையும் தெரிந்து நடந்து கொள்ள வேண்டும்.

தில்லி, மகாராஷ்டிரா சதனத்தில் சமீபத்தில் நடந்திருக்கும் நிகழ்வில் சம்பந்தப்பட்டவர்கள் மேலே குறிப்பிட்ட உண்மையை உணர்ந்தவர்களாக இருந்திருந்தால், அப்படியொரு அநாகரிகம் அரங்கேறி இருக்காது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சிவசேனை கட்சியைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர்கள் நடத்திய தரக்குறைவான வன்முறைச் செயலைக் கண்டிப்பதைவிட, இப்படிப்பட்டவர்களைத் தேர்ந்தெடுத்திருக்கிறோமே என்று ஒவ்வொரு இந்தியனும் தலைகுனிவதுதான் சரியாக இருக்கும்.

எல்லா மாநிலங்களுக்கும், தில்லிக்கு அலுவல் நிமித்தம் பயணிக்கும் அமைச்சர்கள், அலுவலர்கள், சட்டப்பேரவை, மக்களவை, மாநிலங்களவையின் இந்நாள், முன்னாள் உறுப்பினர்கள் ஆகியோர் தங்குவதற்காக மாநில அரசின் சார்பில் தங்கும் இல்லங்கள் கட்டப்பட்டுள்ளன. எல்லா மக்களவை உறுப்பினர்களுக்கும் இன்னும் வீடுகள் ஒதுக்கப்படாத நிலையில் பல உறுப்பினர்கள் இதுபோன்ற அரசு இல்லங்களில்தான் தங்கி வருகிறார்கள். தமிழ்நாடு இல்லம், கேரள பவன், ஆந்திர பவன் போன்று மகாராஷ்டிர மாநில அரசின் தங்கும் இல்லம் மகாராஷ்டிரா சதன்.

மகாராஷ்டிரா சதனத்தில் தங்கியிருக்கும் சிவசேனை கட்சியைத் சேர்ந்த மக்களவை உறுப்பினர்கள் சிலர் உணவருந்த இல்லத்தின் உணவு விடுதிக்குச் சென்றிருக்கிறார்கள். அந்த உணவு விடுதியில் அன்று பரிமாறப்பட்ட உணவு அவர்களுக்குத் திருப்தி அளிப்பதாக இருக்கவில்லை. அவர்கள் மகாராஷ்டிரா சதனத்தின் ஆணையர் அறைக்குச் சென்று தங்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம்

பற்றிக் குறை கூறியதுடன் நின்று விட்டிருந்தால் பிரச்னை முடிந்திருக்கும். அந்த அலுவலரின் அறையை நாசப்படுத்தி, அங்கிருந்த சுவர்க் கடிகாரத்தைப் போட்டு உடைத்துத் தங்களது தகுதியையும், திறமையையும் நிலைநாட்டி இருக்கிறார்கள்.

அந்த சிவசேனை உறுப்பினர்களின் கோபம் அத்துடன் தணிந்தபாடில்லை. மீண்டும் உணவு விடுதிக்கு வந்தவர்கள், அங்கே உணவு பரிமாறிக் கொண்டிருந்த பணியாளர் மீது தங்களது அதிருப்தியையும், கோபத்தையும் காட்ட முற்பட்டிருக்கிறார்கள். மகாராஷ்டிரா சதனில் இந்திய ரயில்வேயின் உணவு மற்றும் சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தாரால் உணவு விடுதி நடத்தப்படுகிறது. வலுக்கட்டாயமாக அங்கே பரிமாறப்படும் சப்பாத்தியை உணவு விடுதி ஊழியர் ஒருவர் வாயில் திணித்து உண்ணப் பணிக்கப்பட்டிருக்கிறார்.

அந்த ஊழியர் இஸ்லாமியர் என்றும், அவர் ரமலான் நோன்பு நோற்பவர் என்றும் எங்களுக்குத் தெரியாது என்று மக்களவையின் சிவசேனை உறுப்பினர் ராஜன் விசாரே கூறுகிறார். இவர்கள் அவரை வலுக்கட்டாயப்படுத்தி சப்பாத்தியைச் சாப்பிட வற்புறுத்தினார்கள் என்பதற்கு இதைவிட வேறு சாட்சியங்கள் எதுவும் தேவையில்லை. யாரோ செய்த சப்பாத்தியை இவர்களுக்குப் பரிமாற வந்தவருக்கு இப்படி ஒரு தண்டனையைக் கொடுக்க இந்த உறுப்பினர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது?

தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் என்று சொன்னாலே, அவர்களுக்குக் கொம்பு முளைத்து விடுமா என்ன? தாங்கள் சொல்வது

சட்டம், போடுவது ஆணை என்று செயல்படும் அதிகாரத்தை நமது அரசியல் சட்டம் குடியரசுத் தலைவர், பிரதமருக்கே அளிக்காத நிலையில், சட்டத்தைத் தங்கள் கையில் எடுத்துக்கொள்ள இவர்

களுக்கு எப்படித் துணிவு வந்தது? "பெருக்கத்து வேண்டும் பணிவு' என்பதோ, தாங்கள் மக்களின் தொண்டர்கள் என்பதோ எத்தனை தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளுக்குத் தெரியும், உணர்ந்திருக்கிறார்கள் என்பதே சந்தேகமாக இருக்கிறது.

பிரதமர் நரேந்திர மோடியின் மகத்தான வெற்றிக்குக் காரணம், அவர் "இந்தியா முதலில்' என்பதுதான் தனது தாரக மந்திரம் என்றும், இந்திய அரசியல் சட்டம்தான் எனது புனித கீதை, பைபிள், திருக்குர்ரான் என்றும் கூறிய தேர்தல் பிரசார உறுதிமொழிகள்தான். மகாராஷ்டிரா சதன் சம்பவம் வன்மையாக பா.ஜ.க. தலைமையாலும் அரசாலும் கண்டிக்கப்படாவிட்டால், சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் துணிந்து நடைபெற வழிகோலக்கூடும். அதற்கு முற்றுப்புள்ளி வைப்பதுதான் பிரதமரின் தலையாய கடமை.

எல்லாவற்றிற்கும் மேலாக, மக்கள் பிரதிநிதிகள் காலனிய அதிகாரவர்க்க சிந்தனையிலிருந்து விடுபட வேண்டும். இல்லையென்றால், மாவோயிஸ்டுகளுக்கும், தீவிரவாதிகளுக்கும் வழிகோலியதாகிவிடும்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com