நீண்ட நாள் போராட்டத்துக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருக்கிறது. 1969இல் மாரி சென்னா ரெட்டி தலைமையிலான தெலங்கானா பிரஜா சமிதியால் அடைய முடியாத தெலங்கானாவை, 2014இல் கே.சந்திரசேகர ராவின் தலைமையிலான தெலங்கானா ராஷ்டிர சமிதி வெற்றிகரமாக வென்றெடுத்து, ஆட்சியும் அமைத்துள்ளது. ஆந்திர மாநிலம் உருவானது போலவே, தெலங்கானாவும் அரசியல் காரணங்களுக்காக உருவாக்கப்பட்டிருக்கிறது.
மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்படுவதில் பிரதமர் ஜவாஹர்லால் நேருவுக்கு ஆரம்ப முதலே உடன்பாடு கிடையாது. ஏனைய காங்கிரஸ் தலைவர்கள் சுட்டிக்காட்டிய அரசியல் நிர்பந்தங்கள்தான், பண்டித ஜவாஹர்லால் நேருவை மொழிவாரி மாநிலங்கள் அமைவதை, குறிப்பாக ஆந்திரப் பிரதேசம் உருவாவதை ஏற்றுக்கொள்ள வைத்தது.
ஒன்றுபட்ட சென்னை ராஜதானியின் பகுதியாக இருந்த தெலுங்கு பேசும் ஆந்திர மாநிலப் பகுதிகளில் இடதுசாரிகளின் செல்வாக்கு அதிகரித்து, காங்கிரஸ் 1952 பொதுத்தேர்தலில் பல இடங்களில் தோல்வியைத் தழுவ நேர்ந்தது. ஹைதராபாத் நிஜாமின் ஆளுகைக்கு உள்பட்ட பகுதியிலுள்ள தெலுங்கு பேசும் பகுதியையும், சென்னை ராஜதானியிலுள்ள தெலுங்கு பேசும் பகுதியையும் இணைத்து ஆந்திரப் பிரதேசம் உருவாக்குவதன் மூலம் கம்யூனிஸ்ட்டுகளின் மேலாதிக்கத்தையும், வளர்ச்சியையும் தடுத்து விடலாம் என்று காங்கிரஸ் தலைவர்கள் பிரதமர் நேருவுக்கு ஆலோசனை
கூறினார்கள்.
ஏற்கெனவே இந்தியாவுடன் இணைந்த காஷ்மீர், பிரச்னையில் சிக்கியிருந்ததால், அதேபோல, நிஜாமின் ஆளுகைக்குள்பட்ட ஹைதராபாத் சமஸ்தானமும் பிரச்னையாகாமல் இருக்க அதைக் கூறுபோடுவதுதான் புத்திசாலித்தனம் என்றும் அறிவுரை வழங்கினார்கள். மராத்தி பேசும் பகுதிகள் மகாராஷ்டிர மாநிலத்துடனும், கன்னடம் பேசும் பகுதிகள் கர்நாடக மாநிலத்துடனும், தெலுங்கு பேசும் பகுதிகள் புதிதாக உருவான ஆந்திரத்துடனும் இணைக்கப்பட்டன.
ஆந்திர மாநிலத்தில், ஒன்பது ஆண்டுகள் மட்டுமே தெலங்கானாவைச் சேர்ந்த ஒருவர் முதல்வராகப் பதவி வகித்திருக்கிறார். 48 ஆண்டுகள் சீமாந்திரா பகுதியைச் சேர்ந்தவர்கள்தான் முதல்வராக இருந்திருக்கிறார்கள். வளர்ச்சி என்று சொன்னாலும், சீமாந்திரா வளர்ச்சி அடைந்த அளவுக்கு தெலங்கானா வளர்ச்சி பெறவில்லை. இவையெல்லாம்தான், "தல்லி தெலுங்கானா' (தனித் தெலங்கானா) போராட்டத்திற்குக் காரணமாக அமைந்தன. 1983இல் என்.டி. ராமராவின் அரசியல் பிரவேசம் தெலங்கானா பிரச்னைக்கு தாற்காலிக முற்றுப்புள்ளி வைத்தது. அதன் பிறகு, ராமராவ் போன்ற செல்வாக்குள்ள தலைவர்கள் இல்லாமல் போனதும், தெலங்கானா கோரிக்கைக்கு வலு சேர்த்தது.
இந்தியாவின் கூட்டாட்சித் தத்துவத்துக்கு மொழிவாரி மாநிலங்கள் வலு சேர்க்குமா, பலவீனமாக்குமா என்கிற கேள்வி ஏறத்தாழ ஒரு நூற்றாண்டு காலமாக இருந்து வரும் கேள்வி. ஐரோப்பாவைப்போல அல்லாமல், இந்தியா மொழியால் பிரிந்து கிடந்தாலும் உணர்வால் ஒன்றுபட்ட தேசம் என்பதை 1920 முதலே உணர்ந்து செயல்பட்டவர் மகாத்மா காந்திதான். பிராந்திய ரீதியான காங்கிரஸ் கமிட்டிகள் மொழிவாரியாக அமைக்கப்பட்டது அவரது வலியுறுத்தலால்தான்.
மொழிவாரிப் பிரிவுகளை மீறி, தேர்தலுக்குத் தேர்தல் மக்கள் வாக்களிக்கிறார்கள் என்பது அண்ணல் காந்தியடிகளின் தீர்க்கதரிசனத்தை உறுதிப்படுத்துகிறது. ஐரோப்பாவில் மொழிவாரியாக தேசங்கள் அமைந்திருக்கின்றன. இந்தியாவில் நம்மால் தேசத்தையும் மொழியையும் பிரித்துப் பார்க்க முடிந்திருக்கிறது என்பதுதான் உண்மை. அதற்கு, நரேந்திர மோடியின் வெற்றி சமீபத்திய உதாரணம்.
தெலங்கானாவைத் தொடர்ந்து கூர்க்காலாந்து, போடோலாந்து, விதர்பா என்று மேலும் பல கோரிக்கைகள் வலுப்பெறக்கூடும். உத்தரப் பிரதேசமே நான்காகப் பிரிக்கப்பட வேண்டிய ஒன்று என்று பகுஜன் சமாஜ் கட்சி வலியுறுத்தி வருகிறது. மொழிவாரி மாநிலங்கள் இந்தியாவின் ஒற்றுமையை இத்தனை நாள் உறுதிப்படுத்தின என்றால், இனிமேல் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்படுவதன் மூலம்தான் இந்திய ஒற்றுமை நிலைநிறுத்தப்படும் என்றுகூட அரசியல் நோக்கர்கள் சிலர் கருத்துத் தெரிவிக்கிறார்கள்.
ஜாதி, மதம், இனம், மொழி இவையெல்லாம் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் தடையாக இருக்குமானால், மக்கள் அதைத் தூக்கி எறிந்துவிட்டு வளர்ச்சியை நோக்கிப் பயணிக்கத் தயாராகி விடுவார்கள். ஒன்றுபட்ட ஆந்திர ஆட்சியாளர்கள் தெலங்கானாவின் வளர்ச்சியில் போதிய அக்கறை காட்டியிருந்தால், இந்தியாவின் 29ஆவது மாநிலமாக தெலங்கானா உருவாகி இருக்காது. தெலுங்கு பூமி துண்டாடப்பட்டிருக்காது.
அரசியல்வாதிகளுக்கும் ஆட்சியாளர்களுக்கும் தெலங்கானா தெரிவிக்கும் செய்தி இதுதான்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.