மக்களாட்சியில், எல்லாமே எழுதப்பட்ட சட்டதிட்டங்களால் மட்டும் வரையறுக்கப்பட்டு விடுவதில்லை. மரபுகள் வழியும் சில நடைமுறைகள் பேணப்படுகின்றன. அவற்றில் முதன்மையானது, ஆட்சி மாற்றம் ஏற்படும்போது, முந்தைய அரசால் செய்யப்பட்ட அரசியல் நியமனங்கள் மாற்றப்படுவது. மாற்று அரசு பதவி ஏற்றதுமே, முந்தைய அரசால் முக்கியமான பதவிகளில் நியமிக்கப்பட்ட அரசியல்வாதிகள் தாங்களாகவே பதவி விலகுவது என்பது மரபாகக் கடைபிடிக்கப்பட்டுவருகிறது.
ஆளுநர்களாகவும் பல்வேறு நாடுகளில் தூதர்களாகவும் அரசியல் சார்பற்ற அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருந்தால், அவர்கள் மாற வேண்டும் என்று எந்தவொரு அரசும் எதிர்பார்க்காது. அதே நேரத்தில் அந்தப் பதவிகளில் முன்பு ஆட்சியிலிருந்த கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதிகள் நியமிக்கப்பட்டிருந்தால், அவர்கள் விலக வேண்டும் என்று புதிய அரசு எதிர்பார்ப்பதில் என்ன தவறு காண முடியும்?
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எந்தவொரு மாநில அரசும், அந்த அரசுக்கு நெருக்கடியும், தலைவலியும் கொடுக்கும் ஆளுநர் அமையக்கூடாது என்று விரும்புவது எவ்வளவு நியாயமோ, அதேபோல நடுவண் அரசும் ஆளுநர்கள் தங்களது பிரதிநிதிகளாகச் செயல்பட வேண்டும் என்று எதிர்பார்ப்பதும் நியாயம்தான். இல்லாமல் போனால் 29 மாநிலங்களைக் கொண்ட இந்தியாவின் இறையாண்மையையும், ஒருமைப்பாட்டையும் உறுதிப்படுத்த முடியாது.
பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்திலிருந்தே ஆளுநர் பதவி என்பது விமர்சனத்திற்குட்பட்டதாகவே இருந்து வந்திருக்கிறது. சுதந்திரம் அடைவதுவரை, காங்கிரஸ் கட்சியே ஆளுநர் பதவியை பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் ஆயுதம் என்று கேலி பேசியது உண்டு. 1967 வரை, எல்லா மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சியே ஆட்சியில் இருந்ததால் ஆளுநர் பதவி சர்ச்சைக்குள்ளாகவில்லை.
அரசியல் நிர்ணய சபையில் சர்தார் வல்லபபாய் படேல் தலைமையில் அமைந்த மாநில அரசியலமைப்புக் குழு, ஆளுநர்கள் சட்டப்பேரவை உறுப்பினர்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று பரிந்துரைத்தது. முறைகேடு, தவறான நடத்தை ஆகியவற்றிற்காக ஆளுநரை அகற்றுவதாக இருந்தால்கூட, அதற்கு சட்டப்பேரவையில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஒப்புதல் பெற வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டது.
இந்தப் பரிந்துரைகளை அன்றைய பிரதமர் நேருவும், சட்ட அமைச்சர் அம்பேத்கரும் ஏற்கவில்லை. அரசியல் சட்டத்தின் 155ஆவது பிரிவின்படி குடியரசுத் தலைவரால் மாநில ஆளுநர்கள் நியமிக்கப்படுகிறார்கள். சட்டப் பிரிவு 156இன் படி, அவர்கள் குடியரசுத் தலைவரின் விருப்பத்துக்கிணங்க மட்டுமே பதவி வகிப்பார்கள். அதாவது, மத்திய அரசின் விருப்பப்படி பதவி வகிப்பார்கள் அப்படியில்லையெனில் அகற்றப்படுவார்கள்.
ஆளுநர் பதவி என்பது அறிஞர் அண்ணா குறிப்பிட்டதுபோல, தேவையில்லாத ஆட்டுத் தாடி என்கிற வாதம் ஏற்புடையதல்ல. மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையில் பாலமாக இருப்பதற்கும், மாநிலத்தில் குழப்பம், சட்டப் பேரவையில் யாருக்கும் பெரும்பான்மை இல்லாத நிலைமை போன்ற நேரங்களில் ஆட்சியைக் கலைத்து, குடியரசுத் தலைவரின் சார்பில் நிர்வாகத்தை ஏற்றுக் கொள்ளும் ஆளுநர் பதவி இன்றியமையாதது.÷"ஆளுநர் பதவி என்பது தீயணைப்பு வாகனம் போன்றது. தேவையில்லாமல் நின்று கொண்டிருக்கிறதே என்று தீயணைப்பு வாகனங்களே வேண்டாம் என்றா சொல்லிவிட முடியும்? தீ விபத்து வரும்போது, தீயை அணைக்க தீயணைப்பு வாகனம் தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருப்பதுபோல, பிரச்னைகள் வந்தால் தலைமை இல்லாமல் சட்டம் ஒழுங்கு தகர்ந்து விடாமல் காப்பதற்கு ஆளுநர்கள் அவசியம்' என்கிற மூதறிஞர் ராஜாஜியின் கருத்துத்தான் சரியானது.
உத்தரப் பிரதேசம், சத்தீஸ்கர், நாகாலாந்து மாநில ஆளுநர்கள் பதவி விலகி இருக்கும் நிலையில், கடந்த ஆட்சியில் நியமிக்கப்பட்ட அரசியல் சார்ந்த ஆளுநர்கள் அவர்களே வலியப் பதவி விலகுவதுதான் நாகரிகம். அதைவிடுத்து, பதவி நாற்காலியைக் கெட்டியாக பிடித்துக் கொண்டிருப்பது, அவர்களது பதவி மோகத்தைத்தான் வெளிச்சம் போடுகிறது.
2004இல் ஆட்சிக்கு வந்தபோது, முந்தைய தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் நியமிக்கப்பட்ட ஆளுநர்களைப் பதவி விலகுமாறு வற்புறுத்திய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள், இப்போது பதவி விலக மாட்டேன் என்று வெட்கமில்லாமல் முரண்டு பிடிப்பதுகூடப் பரவாயில்லை, காங்கிரஸ் தலைமை அதை நியாயப்படுத்துகிறதே, அதுதான் வேடிக்கையாக இருக்கிறது. ஆளுநர்கள் மட்டுமல்ல, முந்தைய அரசால் நியமிக்கப்பட்ட எல்லா அரசியல் நியமனங்களும் மாற்றப்படுவதுதான் புதிய அரசின் இடையூறில்லாத செயல்பாட்டை உறுதி செய்யும்.