தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

அரசியல் மோசடி!

அரசியல் சட்ட நியமனங்கள், பதவிகள் ஆகியவற்றின் மரியாதை குலைந்து, கௌரவமான அந்தப் பதவிகள் சர்ச்சைக்குரியவையாக மாறிவிட்டதற்கான முழுப் பொறுப்பையும் காங்கிரஸ் கட்சிதான் ஏற்றுக்கொண்டாக வேண்டும்.

Updated On :7 மார்ச் 2014, 8:18 pm

அரசியல் சட்ட நியமனங்கள், பதவிகள் ஆகியவற்றின் மரியாதை குலைந்து, கௌரவமான அந்தப் பதவிகள் சர்ச்சைக்குரியவையாக மாறிவிட்டதற்கான முழுப் பொறுப்பையும் காங்கிரஸ் கட்சிதான் ஏற்றுக்கொண்டாக வேண்டும். அதிலும் குறிப்பாக, ஆளுநர் பதவி என்பது கட்சியிலிருக்கும் வயதான தலைவர்களுக்கு அளிக்கப்படும் சிறப்புப் பரிசாகவும், விசுவாசமான அதிகாரிகளுக்குத் தரப்படும் ஓய்வுக்குப் பிறகான சிறப்பூதியமாகவும் மாறிவிட்டிருப்பதற்கும் காங்கிரஸ்தான் காரணம்.

அடுத்த சில மணி நேரங்களில் தேர்தல் அறிவிப்பு வரப்போகிறது என்று தெரிந்து, அவசர அவசரமாக கேரளம் மற்றும் உத்தரப் பிர

தேசத்திற்கு ஆளுநர்களை மத்திய அரசு நியமித்து உத்தரவு பிறப்பித்திருப்பது போன்ற அரசியல் மோசடி வேறு எதுவும் இருக்க முடியாது. இது தார்மிக ரீதியாகத் தவறு என்று தெரிந்தும், மனசாட்சிக்கு விரோதமாக கட்சித் தலைமையின் கட்டளையை நிறைவேற்றிய பிரதமர் மன்மோகன் சிங்கின் பத்தாண்டு பிரதமர் சரித்திரத்தில் மிகப்பெரிய களங்கமாக இது இருக்கும்.

மூதறிஞர் ராஜாஜி, ஆளுநர் பதவியை தீயணைப்பு வாகனத்துடன் ஒப்பிட்டார். தினசரி தேவைப்படுவதில்லை என்பதால் எப்படி தீயணைப்புப் படையின் இன்றியமையாமையைக் குறைத்து மதிப்பிட முடியாதோ அதேபோல அன்றாட அரசு நிர்வாகத்திற்கு ஆளுநரின் பங்களிப்பு அவசியமில்லை என்பதால் அந்தப் பதவியின் முக்கியத்துவத்தைக் குறைத்து மதிப்பிட்டுவிட முடியாது என்றார் அவர்.

அரசியல் சட்டப்படி, ஆளுநர் என்பவர்தான் மாநில அரசின் தலைமைப் பொறுப்பு வகிப்பவர். மாநிலக் கட்சிகளின் வளர்ச்சியும், மாநிலப் பிரச்னைகள் முன்னுரிமை பெறுவதும் மத்திய, மாநில உறவில் பல்வேறு பிரச்னைகளை எழுப்புகின்றன. அதிலும் குறிப்பாக, மத்தியிலும் மாநிலங்களிலும் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் கட்சிகள் எதிர் எதிர் அணியைச் சேர்ந்த, அல்லது, ஒருமித்த கருத்து இல்லாத நிலை ஏற்படும்போது, மத்திய, மாநில அரசுகளுக்கிடையே உரசல்களைத் தவிர்ப்பதற்கும் நல்லுறவுக்கும் ஆளுநர்களின் பங்களிப்பு அவசியம் தேவைப்படுகிறது.

அதற்காக, ஆளுநர் பதவியை மத்தியில் ஆளும் கட்சியின் கைப்பாவையாகவோ, பிரதிநிதியாகவோ கருதிவிட முடியாது. "மத்திய அரசின் ஆட்சியில் இருக்கும் கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதிகளை ஆளுநர்களாக நியமிப்பது தவிர்க்கப்பட வேண்டும். அதுமட்டுமல்லாமல், அரசியல் சட்டத்தில் தகுந்த திருத்தங்களை ஏற்படுத்தி, மாநில அரசிடம் முறையாகக் கலந்தாலோசித்து மத்திய, மாநில அரசுகளுக்கு ஏற்புடைய ஒருவர்தான் ஆளுநராக நியமிக்கப்பட வேண்டும்' என்று மத்திய, மாநில உறவுகள் பற்றிய சர்க்காரியா கமிஷனின் அறிக்கை தெளிவாகவே குறிப்பிடுகிறது.

உத்தரப் பிரதேச ஆளுநராக பதவி நீட்டிப்புப் பெற்றிருக்கும் பன்வாரிலால் ஜோஷி, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஆட்சிக்கு வந்தது முதல், கடந்த பத்தாண்டுகளாக ஆளுநராகத் தொடர்கிறார். இப்போது இன்னும் ஐந்து ஆண்டுகள் லக்னௌ ராஜ்நிவாசில் சுகவாசம் நடத்த அவருக்கு வாய்ப்பளிக்கப்பட்டிருக்கிறது.

ஆளுநர் பி.எல். ஜோஷியின் ஆளுநருக்கான தகுதி என்ன தெரியுமா? காவல்துறை அதிகாரியான இவர் ஆரம்ப காலத்திலிருந்து இந்திரா காந்திக்கு விசுவாசமானவர் என்பதுதான். இந்திய காவல்துறை பணியிலிருந்து 1991-இல் விருப்ப ஓய்வு பெற்று அமெரிக்காவில் குடியேறிய இவருக்கு அமெரிக்காவின் மிகப்பெரிய இரண்டு மென்பொருள் நிறுவனங்களுடன் தொடர்பு உண்டு. இவர் கலிபோர்னியாவிலுள்ள ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் இயக்குநரும்கூட. அந்தத் தொண்டு நிறுவனத்திற்குப் பல பில்லியன் டாலர் நன்கொடை வந்து குவிந்துகொண்டே இருக்கிறது.

இவர் சோனியா காந்தியின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர். அதனால் ஆளுநராக பதவி நீட்டிப்புப் பெறுகிறார். இவரது தொண்டு நிறுவனத்திற்கு எங்கிருந்து, எப்படி பணம் வந்துகொண்டே இருக்கிறது என்று ஆளுநராக இருக்கும் இவரிடம் விசாரணை நடத்த முடியாது.

சமீபத்தில் நடந்த தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்வியைத் தழுவிய தில்லியின் முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் கேரள ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்கிறார். இனிமேல் இவரிடம் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் உள்ளிட்ட எந்த ஊழல் மற்றும் முறைகேடுகளுக்காகவும் விசாரணை நடத்த முடியாது. இவர் ஆளுநராகி விட்டார், தவறு, ஆளுநராக்கப்பட்டு விட்டார்!

தங்கள் கட்சிக்கும் ஆட்சிக்கும் விசுவாசமாக இருக்கும் அரசியல்வாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் ஆளுநர் பதவியை அளித்து அவர்களையும் தங்களையும் விசாரணை வளையத்தில் சிக்காமல் காப்பாற்றிக் கொள்ள நினைக்கிறது காங்கிரஸ் தலைமை. இதை பத்து நாள்களுக்கு முன்னாலேயே செய்திருந்தால்கூடப் பரவாயில்லை. தேர்தல் அறிவிப்புக்கு சில மணி நேரம் முன்னால் செய்திருப்பதன் மூலம், தங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காக, அந்தப் பதவியின் மரியாதையையே குலைத்து விட்டார்களே, அடுக்குமா இந்த அடாவடி?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.