குஜராத் மாநிலம், ஆனந்த் நகரில் தேசிய பால் பொருள் மேம்பாட்டு வாரிய பொன் விழாவின் தொடக்க நாளில் மத்திய வேளாண் அமைச்சர் ராதா மோகன் சிங் கூறிய செய்தி, நம் வயிற்றில் பால் வார்க்கிறது.
நிகழாண்டில் 13.70 கோடி டன் பால் உற்பத்தி செய்து, மிகப்பெரும் சாதனையை இந்தியா நிகழ்த்தியுள்ளது. 2000-ஆம் ஆண்டுக்கு முன்புவரை, நாம் அமெரிக்காவுக்கு இணையாக பால் உற்பத்தி செய்த நிலை மாறி, ஒவ்வொரு ஆண்டும் பால் உற்பத்தி உயர்ந்துகொண்டே வருகிறது. 1951-ஆம் ஆண்டில் 2 கோடி டன்னாக இருந்த இந்தியாவின் பால் உற்பத்தி, இன்று இந்த அளவுக்கு உயர்ந்துள்ளதென்றால், அதில் வெண்மைப் புரட்சி விழிப்புணர்வுக்கு மிக முக்கியப் பங்கு உள்ளது.
சுமார் 65,000 டன் வரை பால் பவுடர் ஏற்றுமதியிலும், பாலாடைக் கட்டி, ஐஸ்கிரீம் ஆகிய ஏற்றுமதியிலும் இந்தியா ஈடுபட்டிருந்தாலும், தற்போது சீனா - நியூஸிலாந்து இடையிலான வர்த்தக உறவுக்குப் பின்னடைவு ஏற்பட்டுள்ளதால், அதிக அளவுக்கு சீனாவுக்கும் நாம் ஏற்றுமதியை விரிவுபடுத்த முடியும்.
இருந்தாலும், நமது பால் பொருளை நமது இலச்சினையுடன் சீனாவில் விற்க அனுமதி இல்லை. ஆகவே, அவர்கள் நமது பால்பவுடரை வாங்கி அவர்களது வணிக இலச்சினையுடன் அதிக விலைக்கு விற்கிறார்கள். இதனால், நமக்கு மிகக் குறைந்த அளவு லாபமே கிடைக்கிறது. இத்தகைய தடைகள் மாறும்போது பால் உற்பத்தி, ஏற்றுமதியில் இந்தியாவுக்கு அதிக வருவாய் கிடைக்கும்.
பால் உற்பத்தியில் இந்தியா சிறந்து விளங்கினாலும், இதில் தமிழ்நாட்டின் பங்கு என்ன என்று பார்த்தால், மிகவும் குறைவு. கடந்த ஆண்டு (2012-13) இந்தியாவின் பால் உற்பத்தி 13.24 கோடி டன்னாக இருந்தபோது தமிழ்நாட்டின் பங்கு 70 லட்சம் டன் மட்டுமே. ஆனால், ராஜஸ்தான் அதிகபட்சமாக 1.40 கோடி டன், குஜராத் 1 கோடி டன், ஆந்திரம் 1.3 கோடி டன் பால் உற்பத்தி செய்கின்றன என்பதைப் பார்க்கும்போது, ஏன் தமிழ்நாட்டில் பால் உற்பத்தி மிகவும் குறைவாக இருக்கிறது என்ற கேள்வி எழுகிறது.
தமிழ்நாட்டில் உள்ள கறவை மாடுகளின் எண்ணிக்கை 59 லட்சம்தான். கறவை மாடுகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதாலும், அவை கறக்கும் பால் அளவை அதிகரிக்கும் வகையில் சத்தான தீவனங்களை வழங்குவதாலும், ஊரகப் பகுதிகளில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் ஒரு கறவை மாடு இருக்கும் வகையில்,
மகளிர் சார்ந்த தொழிலாக பால் உற்பத்தியை மாற்றுவதன் மூலமும் தமிழ்நாட்டின் பால் உற்பத்தியை உயர்த்த முடியும்.
தமிழ்நாட்டின் பரப்பையும், வளம் மற்றும் இயற்கைச் சூழலையும், ராஜஸ்தான் மாநிலத்தோடு ஒப்பிடும்போது நாம் அதிக வாய்ப்புகளைப் பெற்றிருக்கிறோம். ஆனாலும், கறவை மாடுகள் எண்ணிக்கை, ராஜஸ்தான், குஜராத்தைக் காட்டிலும் தமிழகத்தில் குறைவாக இருக்கிறது.
தற்போது தமிழக அரசு விலையில்லா கறவை மாடுகளை வழங்கி வருகிறது. இதுமட்டுமன்றி, ஊரக மகளிரை கறவை மாடுகள் பராமரிப்பிலும், பால் உற்பத்தியிலும் ஈடுபடும்படி ஊக்கப்படுத்தும்போது, குறிப்பாக உயர் ரக பசுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்போது பால் உற்பத்தி தானே பெருகும்.
அமுல் என்ற இலச்சினையுடன் சந்தையில் இடம்பெறும் குஜராத் கூட்டுறவு பால் உற்பத்தி சம்மேளனத்தின் பொருள்கள் இந்தியா முழுவதும் கிடைக்கிறது. 2014-ஆம் ஆண்டு முதல் அமெரிக்காவில் பால் மற்றும் பால் பொருள் விற்பனையை அது தொடங்கியுள்ளது. ஆனால், நமது ஆவின் நிறுவனத்தால் தமிழக எல்லையைத் தாண்ட முடியவில்லை என்பது மட்டுமல்ல, தமிழ்நாட்டின் அனைத்து நகரங்களிலும் கிடைப்பதும்கூட அரிதாக இருக்கிறது.
அமுல் அளவுக்கு ஆவின் உயர்வதற்கான வழிகளை ஏற்படுத்துவதும், தற்போது ஆவின் பால் உற்பத்தியில் கண்டறியப்பட்ட முறைகேடுகளுக்கு காரணமானவர்களைத் தண்டித்து, நிறுவனத்தை மேலும் சிறப்பாகச் செயல்பட அனுமதிப்பதாலும்தான் ஆவின் தரத்தாலும் விற்பனையாலும் உயர முடியும்.
ஆவின் பால் விலை குறைவாக இருந்தபோது, அந்தப் பாலை தனியார் பால் நிறுவனங்கள் கொள்முதல் செய்து, தங்கள் வணிக இலச்சினையுடன் பாக்கெட்டில் அடைத்து விற்றதாகப் புகார்கள் உள்ளன. ஆவின் பால் விலைக்கு மானியம் கொடுப்பதால் இதை தனியார் நிறுவனங்கள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகின்றன.
ஆவின் நிறுவனம் முறைகேடுகள் இல்லாமல் சிறப்பாகச் செயல்பட்டு, தமிழகம் முழுவதும் ஆவின் பால் கிடைக்கும் நிலை உருவாக வேண்டும்; அமுல் போல ஆவின் வணிக இலச்சினையும் பரந்துபட்ட அளவில் பிரபலப்படுத்தப்பட வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.