மக்களவைத் தேர்தலின்போது, பிரதமர் நரேந்திர மோடியும், பாரதிய ஜனதா கட்சியும் முன்வைத்த கருத்துகளில் ஒன்று, நிர்வாகச் சீர்திருத்தத்திற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்பது. நிர்வாக நடைமுறைகள், ஊழலுக்கும் முறைகேடுகளுக்கும் துணை புரிவதாகவும், வளர்ச்சிப் பணிகளைத் தாமதப்படுத்தும் வகையில் இருப்பதாகவும் பா.ஜ.க. தெரிவித்திருப்பது வரவேற்புக்குரியது என்பதில் சந்தேகமே இல்லை.
இந்திய அரசுப் பணியில் தலைமைப் பொறுப்பில் இருக்கும் அமைச்சரவைச் செயலரில் தொடங்கி, அடிமட்டத்திலுள்ள நான்காம் பிரிவு அரசு ஊழியர் வரை, செயல்பாடு, திறமை ஆகியவற்றால் எடை போடப்படாமல், பணி மூப்பு அடிப்படையில் மட்டுமே எடை போடப்படும் இவர்கள்தான், இந்திய அரசின் "நிர்வாக இயந்திரம்'. இவர்களது மெத்தனப் போக்குதான் இந்தியாவின் வளர்ச்சிக்கு மிகப் பெரிய தடையாக இருந்து வருகிறது என்கிற குற்றச்சாட்டு நீண்ட நாள்களாகவே எழுப்பப்பட்டு வருகிறது.
அரசு ஊழியர்களுக்கும், அதிகாரிகளுக்கும் "பணி நிரந்தரம்' என்கிற சலுகை அளிக்கப்பட்டிருப்பது, அவர்கள் அரசியல் தலைமையால் பழிவாங்கப்பட்டுவிடக் கூடாது என்பதற்காகத்தான். பணி நிரந்தரப் பாதுகாப்பு இருப்பதால்தான், முதுகெலும்புள்ள சில அதிகாரிகளும், ஊழியர்களும் அரசியல் தலைமையின் கட்டளைக்குக் கீழ்படிந்து, முறைகேடுகளில் ஈடுபடவோ, அவற்றுக்குத் துணை போகவோ மறுக்கின்றனர். ஆனால், இதே பணி நிரந்தரப் பாதுகாப்பு, பெருவாரியான அரசு ஊழியர்களை மெத்தனமாகச் செயல்படவும், லஞ்ச ஊழலில் ஈடுபடவும், சாமானிய மக்களின் அடிப்படை உரிமைகளை வழங்குவதற்குக்கூடக் கையூட்டுப் பெறுவதற்கும் வழிகோலுகிறது.
மாநில அரசுகளுடனான கலந்தாலோசனைக்குப் பிறகு, மத்திய அரசு அகில இந்தியப் பணி (செயல்பாடு) விதிகள் 1968-இல் சில மாற்றங்களைச் செய்திருக்கிறது. மத்திய அரசுப்பணி அதிகாரிகள் எதைச் செய்யலாம், எதைச் செய்யக்கூடாது என்கிற 19 அம்ச பட்டியலை அந்த விதியில் இணைத்திருக்கிறார்கள்.
சட்டத்திற்குப் புறம்பான, அல்லது புறம்பாக மாறக்கூடிய செயல்களில் ஈடுபடாமல் இருப்பது; மக்கள் நலத்தை மட்டுமே கருத்தில் கொண்டு முடிவெடுப்பது; நேர்மையாகவும், நியாயமாகவும் செயல்பட்டு பதவியின் கண்ணியத்தைக் காப்பாற்றுவது, பாரபட்சமில்லாமல் நடந்து கொள்வது போன்றவை விதிகளில் சேர்க்கப்பட்டிருக்கின்றன. இவை சேர்க்கப்பட்டிருப்பதால் மட்டும் நிர்வாக இயந்திரம் சுறுசுறுப்பாகவும், பாரபட்சமில்லாமலும், ஊழலற்றதாகவும் மாறிவிடும் என்று சொல்லிவிட முடியாது. ஆனாலும், தங்களது செயல்பாடுகள் தொடர்பான விதிமுறைகளைப் படிக்கும்போதாவது, அது அவர்களைத் தவறிழைக்காமல் தடுக்கக் கூடும் என்கிற நம்பிக்கையில் இவை சேர்க்கப்பட்டிருக்கலாம்.
நரேந்திர மோடி அரசு, அமைச்சர் குழுக்களைக் கலைத்து, ஒவ்வொரு அமைச்சகத்தையும் தன்னிச்சையாகச் செயல்பட அனுமதித்திருப்பதும், அந்தந்த அமைச்சகத்தின் முடிவுகளுக்கு சம்பந்தப்பட்ட அமைச்சர்களைப் பொறுப்பாக்கியிருப்பதும் வரவேற்புக்குரிய மாற்றம்தான்.
அதேநேரத்தில், பெரிய அளவிலான நிர்வாகச் சீர்திருத்தத்தில் ஈடுபடாமல், இதுபோன்ற சிறிய நடவடிக்கைகளால் மாற்றங்கள் ஏற்பட்டுவிடாது. நிர்வாகம் செம்மையாகச் செயல்பட, கண்டிப்பும், கண்காணிப்பும் மட்டுமே போதாது. அமைப்பு ரீதியிலான நிர்வாக முறையும் இருந்தால்தான் அது சாத்தியமாகும்.
2005-இல் வீரப்ப மொய்லி தலைமையில் அமைக்கப்பட்ட இரண்டாவது நிர்வாகச் சீர்திருத்த அணையத்தின் அறிக்கை, இந்தப் பிரச்னையை விலாவாரியாக ஆய்வு செய்து, பல பரிந்துரைகளை வழங்கி இருக்கிறது. உதாரணமாக, எந்தவொரு முடிவையும் எடுப்பதற்கு கால வரையறை ஏற்படுத்துவது. ஒரு பரிந்துரை, குறிப்பிட்ட காலத்துக்குள் முடிவு எட்டப்பட்டு, அறிவிக்கப்படா விட்டால்,
அந்தக் கோரிக்கை அல்லது விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட்டதாகவே கருதப்பட வேண்டும். இதுபோன்ற வரைமுறை, கையூட்டல் பெறுவதற்காகக் கோப்புகளில் கையெப்பமிட தாமதப்படுத்துவதைத் தடுக்கும்.
சிறப்புச் சலுகை முடிந்தவரை தவிர்க்கப்பட வேண்டும் என்பதும், தகுந்த காரணங்கள் குறிப்பிடப்படாமல் யாருக்காகவும் விதிகள் தளர்த்தப்படக் கூடாது என்பதும் இன்னொரு பரிந்துரை. இதுபோன்ற பரிந்துரைகளை உடனடியாக நடைமுறைப்படுத்தினாலே, நிர்வாக இயந்திரம் விரைவாகவும், நியாயமாகவும் செயல்படத் தொடங்கும்.
நிர்வாகச் சீர்திருத்தம் அரசின் கவனத்தைக் கவர்ந்திருக்கிறது என்பதே நமக்கு ஆறுதலான செய்தியாக இருக்கிறது. நல்லது நடக்கட்டும்!