
இதுவரை தேசிய அரசில் அங்கம் வகிக்காதவர், வெளிவிவகாரக் கொள்கை பற்றிய சரியான புரிதல் இல்லாதவர் என்றெல்லாம் கருதப்பட்ட ஒரு மாநிலத்தின் முன்னாள் முதல்வர் இந்த அளவுக்கு ராஜதந்திரமாகத் தனது பிரதமர் பொறுப்பில் செயல்படுவார் என்பதை யாருமே எதிர்பார்த்திருக்க முடியாது. தீவிர இந்துத்துவா கொள்கையாளர், பாகிஸ்தானிய எதிர்ப்பாளர் என்றெல்லாம் நரேந்திர மோடி மேலைநாட்டு ஊடகங்களால் வர்ணிக்கப்பட்டும், அவர் பிரதமரானால் இந்திய பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே அணு ஆயுத யுத்தம் ஏற்படக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டும் இருந்த வேளையில், அதிர்ச்சி வைத்தியம் அளித்திருக்கிறார் பிரதமராகப் பொறுப்பேற்க இருக்கும் நரேந்திர மோடி.
தனது தேர்தல் பிரசாரத்தில் வளர்ச்சிப் பாதையில் இந்தியாவை இட்டுச் செல்வேன் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்த மோடி, இந்தியாவைப் பொருளாதார வல்லரசாக்க அண்டை நாடுகளுடனான சுமுக உறவு இன்றியமையாதது என்று புரிந்து வைத்திருக்கிறார் என்பது தெரிகிறது. கடந்த 2012-13, 2013-14 நிதியாண்டுகளில் பாதுகாப்புக்காக நமது நிதி நிலை அறிக்கைகளில் செய்யப்பட்டிருந்த ஒதுக்கீடு முறையே ரூ.1,93,407 கோடியும், ரூ.2,03,672 கோடியும். ஆண்டுதோறும் ஏறத்தாழ 2 லட்சம் கோடி ரூபாயை ராணுவத்துக்காக நாம் செலவிடுகிறோம். அண்டை நாடுகளுடன் இந்தியா சுமுகமான உறவை ஏற்படுத்திக் கொள்ளுமேயானால், இந்த ஒதுக்கீட்டில் பாதித்தொகை நமது கட்டமைப்பு வசதிகளுக்குப் பயன்படும். இதை நரேந்திர மோடி உணர்ந்திருக்கிறார் என்று தெரிகிறது.
ஐரோப்பிய நாடுகள் ஒருங்கிணைந்து ஐரோப்பிய நாடுகளின் கூட்டமைப்பை ஏற்படுத்தி விட்டன. மத்திய ஆசிய நாடுகள் "எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகள்' என்கிற பெயரில் ஒருங்கிணைந்திருக்கின்றன. கிழக்காசிய நாடுகள் "ஆசியான்' என்கிற அமைப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன. இப்படி அண்டை நாடுகள் ஒன்றுபட்டால் மட்டுமே இன்றைய சர்வதேச அரங்கில் எந்தவொரு பகுதியும் வளர்ச்சிப் பாதையில் செல்ல முடியும் என்கிற நிலைமை. இந்தியாவில் இந்திரா காந்திக்குப் பிறகு துணிவும், திறமையுமுள்ள ஒரு நல்ல தலைமை அமையாமல் போனதால்தான் தெற்கு ஆசியா மட்டும் பிரிந்து கிடக்கிறது.
நரேந்திர மோடியின் நல்லெண்ணத்தை, அவரால் தொடர்ந்து விமர்சிக்கப்பட்ட பாகிஸ்தான் புரிந்துகொண்டு, பாகிஸ்தானின் பிரதமர் நவாஸ் ஷெரீப் பதவி ஏற்பு விழாவுக்கு வர இருக்கும் நிலையில், இலங்கை அதிபர் ராஜபட்ச பதவி ஏற்பு விழாவுக்கு வருவதற்கு தமிழகத்திலிருந்து எதிர்ப்புக் குரல்கள் வருவது மிகவும் வருத்தத்திற்குரியது. நரேந்திர மோடிக்கு விசா வழங்க மறுத்த அமெரிக்க அரசு, அவர் பிரதமரானவுடன் ராஜாங்க ரீதியிலான அழைப்பு விடுத்திருப்பதை நமது தமிழகத் தலைவர்கள் கருத்தில் கொள்ள வேண்டும்.
இலங்கை அதிபர் ராஜபட்ச ஒரு போர்க் குற்றவாளி என்று உலக நாடுகளுடன் சேர்ந்து இந்தியாவும் குரல் கொடுக்கலாம். ஆனால் அவர் இலங்கை அதிபரல்ல என்று ஆகிவிடுமா? அவருடன் பேசமாட்டோம், அவரை அழைக்க மாட்டோம் என்று நாம் முடிவெடுத்தால், போருக்குப் பின் வாழத் துடிக்கும் லட்சக்கணக்கான தமிழர்கள் ஈழத்தில் உயிருடன் இருக்கிறார்களே, அவர்கள் கதி என்ன? நாளும் பொழுதும் நமது மீனவர்கள் சிறைபிடிக்கப் படுகிறார்களே, அவர்களைப் பாதுகாப்பது எங்ஙனம்? கோடிக்கணக்கில் இலங்கையின் வடக்குப் பகுதியைப் புனர் நிர்மாணம் செய்ய இந்தியா வழங்கிய பணம், இலங்கையின் தென் பகுதியை வளப்படுத்துவதாகக் கூறப்படுகிறதே, அதைக் கண்காணித்துத் தட்டிக் கேட்பது எப்படி?
அதிபர் ராஜபட்சவின் செயல்பாடுகள் ஏற்புடையவை அல்லதான். அதற்குத் தீர்வு இலங்கையுடன் போர் தொடுப்பதல்ல, அவரை அழைத்துப் பேசுவது, பணிய வைப்பது.
அதிபர் ராஜபட்சவுடன் பேசாமல் இருப்பதாலோ இலங்கையை முற்றிலுமாகப் புறக்கணிப்பதாலோ நாம் சாதிக்கப் போவது என்ன என்பதை தமிழக அரசியல் கட்சிகள் சிந்திக்க கடமைப்பட்டுள்ளன. கடைசியாக ஒரு வார்த்தை. நமக்குப் பிடிக்கிறதோ இல்லையோ, பாகிஸ்தானும் இலங்கையும் நமது அண்டை நாடுகள். அந்த நாடுகளுடன் நட்புறவு பாராட்டி நாம் இயங்கியாக வேண்டும். ஆப்பிரிக்காவுக்கு அப்பால், அல்லது அண்டார்டிக்காவுக்குப் பக்கத்தில் விலகிப் போ என்று சொல்ல முடியாது.
ஈழத்தில் போர் நடந்தபோது மத்திய அரசில் அங்கம் வகித்து மெளனம் காத்து துரோகம் இழைத்தவர்களையே நம்மால் ஒன்றும் செய்யமுடியவில்லை. இன்னொரு நாட்டு அதிபரான ராஜபட்சயை கண்டிக்க நினைக்கிறோமே, என்ன வேடிக்கை இது? புதிய பிரதமர் புத்திசாலித்தனமாகக் காயை நகர்த்த எத்தனிக்கிறார். அவரது ராஜதந்திர நடவடிக்கைக்கு, நமது தமிழக அரசியல் கட்சிகள் முட்டுக்கட்டை போடாமல் இருக்கக் கடவது!