அறிவியல் அற்புதம்!

1916-ஆம் ஆண்டு அறிவியல் மேதை ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் வெளியிட்ட சார்பியல் கோட்பாட்டில், நான்காவது பரிமாணமாகிய காலமும் வெளியும் ஒன்றே என்றும் (சூரியனைவிட பல மடங்கு) பெருநிறை கொண்ட பொருள்கள் பேரண்டத்தில் நெருங்கிச் சுழலும்போதோ இணைந்து வெடிக்கும்போதோ ஈர்ப்பாற்றல் அலைகள் உண்டாகும் என்றும் தெரிவித்திருந்தார். இதை நிரூபிக்க இயலாது என்றும்,
Updated on
2 min read

இந்த நூற்றாண்டின் மிகச் சிறந்த கண்டுபிடிப்பாக - ஈர்ப்பாற்றல் அலைகளை ஒலி வடிவில் ஏறக்குறைய "காணும்'படி செய்துள்ளனர் லிகோ அறிவியல் அறிஞர்கள்.
 1916-ஆம் ஆண்டு அறிவியல் மேதை ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் வெளியிட்ட சார்பியல் கோட்பாட்டில், நான்காவது பரிமாணமாகிய காலமும் வெளியும் ஒன்றே என்றும் (சூரியனைவிட பல மடங்கு) பெருநிறை கொண்ட பொருள்கள் பேரண்டத்தில் நெருங்கிச் சுழலும்போதோ இணைந்து வெடிக்கும்போதோ ஈர்ப்பாற்றல் அலைகள் உண்டாகும் என்றும் தெரிவித்திருந்தார். இதை நிரூபிக்க இயலாது என்றும், அத்தகைய அலைகள் மிகவும் நுட்பமானவை என்றும் அவர் கூறியிருந்தார். ஆனால், இப்போது அணுவைத் துளைக்கும் அறிவியல் ஆய்வுகள், ஈர்ப்பாற்றல் அலையையும் கண்டறிந்துள்ளன.
 அமெரிக்காவில் உள்ள "லிகோ' (கஐஎஞ) என்று சுருக்கமாக அழைக்கப்படும் ஈர்ப்பாற்றல் அலைக் கூர்நோக்கு ஆய்வகத்தில் செய்தியாளர்களுக்கு காட்டப்பட்ட கணினி வரைக்காட்சியானது, அறிவியலைப் பாமரரும் மிகத் துல்லியமாகப் புரிந்துகொள்ள உதவியதுடன் இந்த அலைகளின் ஒலியைக் கேட்கவும் வழிவகை செய்தது. அந்த ஆய்வுக் குழுவின் அனைவருக்கும், அதில் இந்தியர்களும் இடம் பெற்றிருக்கிறார்கள் என்கிற மகிழ்ச்சியுடன், பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தினமணி சார்பில் தெரிவிக்கின்றோம்.
 இந்தக் கண்டுபிடிப்பால் என்ன பயன் என்று கேட்கலாம். இதுவரை நாம் மிகப்பெரிய, அதிநுட்பத் தொலைநோக்கிகளின் உதவியுடனும், செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவியும் பார்த்த பேரண்டம் என்பது ஒளி பரவிய உலகம் மட்டுமே. ஒளிராத கருப்பு இடங்கள் இந்தப் பேரண்டத்தில் அதிகம். அத்தகைய கருந்துளைகளை ஆய்வு செய்ய இந்த ஈர்ப்பாற்றல் அலைகள் உதவும். மேலும், இந்தப் பேரண்டம் ஒரு பொருளில் அல்லது ஓர் அசாதாரண நிகழ்வில் தொடங்கி, விரிந்து பரவியிருக்க வேண்டும் என்பதே பல ஆராய்ச்சியாளர்களின் முடிவு. அதைப் பெருவெடிப்பு (ஆண்ஞ் ஆஹய்ஞ்) என்று சொல்கிறார்கள். அந்த "ஒன்று' எது என்பதைக் கண்டறிவதற்கான ஆய்வுகளை முன்னெடுத்துச் செல்ல இந்த அலைகள் உதவும்.
 ரேடியோ அலைகள் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு இயற்பியலில் மிகப்பெரிய மாற்றம் நிகழ்ந்தது. தகவல் தொழில்நுட்பத்தில் மெல்ல, மெல்லப் பல மாற்றங்கள் ஏற்பட்டு இன்று உலகம் முழுவதும் இணைய வலைக்குள் பின்னிக்கிடக்கிறது. அதேபோன்று, ஈர்ப்பாற்றல் அலைகளின் அடுத்தகட்ட ஆய்வுகள் பயனுறு அறிவியலாக மாறும்போது வானவியலில் மிகப்பெரும் மாற்றம் ஏற்படும். நாம் கனவிலும் நினைத்திராத, அல்லது சில அறிவியல் புதினங்களில் நாம் படிக்க நேர்ந்த யாவும் நடைமுறை வாழ்வில் வந்தாலும் வரலாம்.
 இந்த அதிர்வலைகள் பேரண்டத்தை விரிக்கவும் சுருக்கவும் செய்கிறது என்பதை, கணினி வரைக்காட்சியில் லிகோ அறிவியலறிஞர்கள் விளக்கியபோது, நாம் வாழும் பூமி கொஞ்சம் வடிவம் மாறுவதான காட்சியானது பல நூறு மடங்கு மிகைப்படுத்தப்பட்ட காட்சியே என்றாலும், ஒளியற்ற இந்த சக்தி வெள்ளம் எத்தகையது என்பதை ஒரு நொடியில் உணர்த்திவிடுகிறது. இந்த அலைகளால் பேரண்டம் விரியவும் சுருங்கவும் செய்யும்போதுதான் பூமியில் நிலஅதிர்வுகள் உண்டாகிறதோ என்று பாமர மனதில் எண்ணம் தோன்றவே செய்யும்.
 ஐன்ஸ்டீனுக்கு முன்னதாகவே மைக்கேல் ஃபாரடே உள்ளிட்ட அறிவியலறிஞர்கள் இந்தப் பேரண்டம் குறித்துத் தங்கள் ஆச்சரியங்களை முன்வைத்துள்ளனர். ஒலி எவ்வாறு இந்தப் புவியின் மற்றொரு பகுதிக்குச் செல்கிறது, கடத்தியாக, ஊடகமாக செயல்படுவது எது என்பன போன்ற கேள்விகளை எழுப்பினர். பேரண்டத்தில் உள்ள கோள்கள் எதனால் தடம் மாறாமல் அந்தரத்தில் சுழலுகின்றன என்ற கேள்வியையும் எழுப்பினர். இந்தக் கேள்விகளுக்கு ஈர்ப்பாற்றல் அலைகள் ஒரு புதிய பதிலைக் கொடுக்கக்கூடும்.
 நியூட்டன் கண்டுபிடித்த புவியீர்ப்பு விசைக்கும் இதற்கும் வேறுபாடு உள்ளது என்பதால், கிராவிடேஷனல் வேவ்ஸ் என்பதை ஈர்ப்பாற்றல் அலைகள், அல்லது ஈர்ப்புக் கவர்ச்சி அலைகள் என்று தமிழாக்கம் செய்வது தவறு. "இயல்ஈர்ப்பு அலைகள்' என்று வேண்டுமானால் அழைக்கலாம். கிராவிடேஷன் என்பதற்கு சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் அகராதியில் ஈர்ப்பு என்ற சொல்லுடன், பாரிப்பு என்ற சொல்லும் முன்வைக்கப்படுகிறது. நாலாயிரத் திவ்யபிரபந்தத்தில் ஆழ்வார்கள் குறிப்பிடும் பாரிப்பு (ஆட்கொள்ளுதல் அல்லது அரவணைத்தல்) என்ற அர்த்தத்தில், அங்கிங்கெனாதபடி எங்கும் பரவியுள்ள இந்த அலைகளைப் பாரிப்பு அலைகள் என்றும் சொல்லலாம்தான்.
 சென்ற ஆண்டில் கடவுள் துகள் எனப்படும் ஹிக்ஸ் போசான் கண்டுபிடிக்கப்பட்டது. இப்போது ஈர்ப்பாற்றல் அலையைக் கண்டுபிடித்துள்ளார்கள். சர்வதேச அளவிலான இதுபோன்ற ஆராய்ச்சிகளில் இந்திய விஞ்ஞானிகள் பங்கேற்றிருப்பது பெருமிதத்தை ஏற்படுத்துகிறது. ஆனால், இந்தியாவிலேயே ஆய்வுகளை மேற்கொள்ள இதுவரை நாம் நமது விஞ்ஞானிகளுக்கு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கவில்லை என்பதை நினைத்தால் வேதனையாகவும் இருக்கிறது.
 சர்.சி.வி. ராமனுக்குப் பிறகு, கடந்த 80 ஆண்டுகளில் இந்தியாவில் ஆய்வு நடத்தி யாரும் நோபல் பரிசு பெறவில்லை. நோபல் பரிசு பெற்ற ஹர்கோவிந்த் குரானாவும், வெங்கட்ராமன் ராமகிருஷ்ணனும் அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் ஆய்வுகளை மேற்கொண்டவர்கள். எப்போது நாம் நமது விஞ்ஞானிகளுக்கு சர்வதேசத் தரத்திலான ஆய்வுக் கூடங்களை ஏற்படுத்தி, அறிவியல் கண்டுபிடிப்புகளை இங்கேயே மேற்கொள்ள வழிகோலப்போகிறோம் என்கிற ஆதங்கத்தையும் ஏற்படுத்துகிறது இந்தக் கண்டுபிடிப்பு!
 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com