ஜாட் சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு வழங்கும் மசோதா ஹரியாணா சட்டப் பேரவையின் அடுத்த கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படும் என்று பிப்ரவரி 21-ஆம் தேதி உறுதி தெரிவித்தும்கூட, ஜாட் போராட்டம் ஓயவில்லை, தொடர்கிறது. பிப்ரவரி 22-ஆம் தேதி ஹரியாணாவின் பல பகுதிகளில் மீண்டும் கலவரம், தீ வைப்பு, 65 ரயில்கள் ஓடவில்லை. கடந்த எட்டு நாள்களாக இவர்கள் நடத்தி வந்த போராட்டத்தினால் இதுவரை ரூ.20,000 கோடி மதிப்பிலான வணிக இழப்புகள், பொருள் இழப்புகள் ஏற்பட்டுள்ளதாக அசோசெம் மதிப்பீடு செய்துள்ளது. இதுவரை 12-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
சில மாதங்களுக்கு முன்பு குஜராத் மாநிலத்தில் படேல் சமூகத்தினர் இடஒதுக்கீடு கேட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆந்திரத்தில் காபு இனத்தவரும், மகாராஷ்டிரத்தில் மராத்தாக்களும் கூட இதுபோல இடஒதுக்கீடு கோரிக்கையை முன்வைத்திருக்கிறார்கள். அஸ்ஸாம் மாநிலத்தில் அஹோம் பிரிவினர் தங்களை ஆதிவாசிப் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று கோருகிறார்கள். தற்போது ஜாட் சமூகத்தினர் இடஒதுக்கீட்டுக்காகப் போராட்டத்தில் இறங்கி இருக்கிறார்கள்.
ஹரியாணா மாநிலத்தின் மக்கள் தொகையில் 25 சதவீதத்தினர் ஜாட் இனத்தவர்கள். 90 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 30 தொகுதிகளில் பெரும்பான்மையினராக இருப்பவர்கள். மாநிலத்தில் இரண்டு முக்கிய எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், இந்திய தேசிய லோக் தளம் இரண்டின் தலைமைப் பொறுப்பிலும் இருப்பவர்கள் ஜாட் இனத்தவர்கள்தான். இப்படி இருந்தும் ஜாட் இனத்தவர்கள் இடஒதுக்கீடு கோரிப் போராட்டத்தில் இறங்கி இருப்பதற்குப் பின்னால் அரசியலும் இருக்கிறது.
2014 சட்டப்பேரவைத் தேர்தலிலும் மக்களவைத் தேர்தலிலும் ஜாட்டுகள் பாஜகவுக்கு ஆதரவளித்து ஹரியாணாவில் ஆட்சிப் பொறுப்பையும் ஒப்படைத்தார்கள். ஹரியாணா மாநிலம் உருவான பிறகு பதவி வகித்த பத்து முதல்வர்களில் ஏழு பேர் ஜாட் இனத்தைச் சேர்ந்தவர்கள். கடந்த 20 ஆண்டுகளாகத் தொடர்ந்து ஜாட் இனத்தைச் சேர்ந்த ஒருவர் முதல்வராக இருந்ததுபோய், தங்கள் ஜாதியைச் சாராத, பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மனோஹர்லால் கட்டாரை, பிரதமர் நரேந்திர மோடி முதல்வராகத் தேர்ந்தெடுத்ததில் ஜாட் இனத்தவர் மத்தியில் நீறுபூத்த நெருப்பாக அதிருப்தி இருந்து வந்தது. அது இப்போது இடஒதுக்கீடு என்கிற வடிகாலை ஏற்படுத்திக்கொண்டு கொழுந்து விட்டு எரியத் தொடங்கி இருக்கிறது. இதற்கு, எதிர்க்கட்சி காங்கிரஸ், இந்திய தேசிய லோக் தளத்தின் ஜாட் தலைமைகள் மறைமுக ஆதரவை அளிக்கின்றன.
முந்தைய மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசு, 27 சதவீத வரம்புக்கு மேலாக உயர்கல்வியில் ஜாட்டுகளுக்கு இடஒதுக்கீடு வழங்க 2014 மார்ச் மாதம் முடிவெடுத்தது. இந்த முடிவை உச்சநீதிமன்றம் நிராகரித்தது. சமூக, பொருளாதார பிற்பட்ட நிலைமையை நிர்ணயிக்க "ஜாதி' மட்டுமே காரணமாக இருக்க முடியாது என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டது.
ஹரியாணாவில் ஜாட் இனத்தவரும் சரி, குஜராத்தில் படேல்களானாலும் சரி, மகாராஷ்டிரத்தில் மராத்தாக்கள் ஆனாலும் சரி, இவர்கள் எல்லோருமே சமூக, பொருளாதார ரீதியில் பெரும் தனவந்தர்களாக இல்லாவிட்டாலும், நடுத்தர, மேல்தட்டு வர்க்கத்தினராகத்தான் இருக்கிறார்கள். தமிழகத்திலும்கூட, பிராமணர் அல்லாத உயர் ஜாதிப் பிரிவினர் பலரும் பிற்பட்டோர் பட்டியலில் சேர்க்கப்பட்டுவிட்ட காரணத்தால்தான், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்று பிரிவினை ஏற்படுத்தி அவர்களுக்கு சமூக நீதியை வழங்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது என்பதையும் இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.
மண்டல் கமிஷன் அறிக்கைக்குப் பிறகு, 27% இடஒதுக்கீட்டின் மூலம் இன்றைய அரசுத் துறையிலும், தொழிற்கல்விப் பிரிவிலும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரால் அதிக இடங்களைப் பிடிக்க முடிந்திருக்கிறது. ஆனால், ஜாட், படேல் போன்ற இடைநிலை சமூகத்தினரால் இந்த இடங்களைப் பெற முடியவில்லை. ஏனென்றால், அவர்கள் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இல்லை.
தாழ்த்தப்பட்டோருக்கு 18%, பழங்குடியினருக்கு 1%, பிற்படுத்தப்பட்டோருக்கு 27% போக, மீதமுள்ள 54% இடங்கள் பொதுப் பிரிவினருக்குத்தானே என்ற கேள்வி எழும். ஆனால், அந்த 54% என்பதில் பொதுப் பிரிவினர் தங்களுக்கான இடத்தைப் பெற முடியவில்லை என்ற நடைமுறைச் சிக்கலே, இன்று அனைத்து ஜாதியினரும் தங்களை பிற்படுத்தப்பட்டோராக அல்லது மிகவும் பிற்படுத்தப்பட்டோராக தாழ்த்திக் கொள்ள வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஒட்டுமொத்தமாக 100 விழுக்காட்டில் எத்தனை பேர் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் என்று கணக்கிடும்போது, இந்த எண்ணிக்கை சற்றொப்ப 75%-யை தாண்டிவிடுகிறது.
ஜாட், படேல், மராத்தா போன்ற இனத்தவர்களில் கணிசமானவர்கள் விவசாயத்தில் ஈடுபடுபவர்கள். விவசாயம் லாபகரமாக இல்லை. வேலைவாய்ப்பு குறைந்து வருகிறது. இந் நிலையில் கல்வி வாய்ப்பிலும், வேலைவாய்ப்பிலும் இடஒதுக்கீட்டு வளையத்திற்குள் வரமுடியாததால், வாய்ப்புகளை இழப்பதை அவர்கள் கண்கூடாகப் பார்க்கிறார்கள். அதனால் கொதிப்படைகிறார்கள்.
பிற்படுத்தப்பட்ட நிலைமைக்கு இடஒதுக்கீடு என்பது மட்டுமே தீர்வாகாது. கல்வியும், வேலைவாய்ப்பும் அனைவருக்கும் கிடைப்பதுதான் இதற்குத் தீர்வாக இருக்கும். இடஒதுக்கீட்டின் அளவை அதிகரிப்பதை மாற்றிப் படிப்படியாகக் குறைப்பதும், அனைவருக்கும் வேலைவாய்ப்பை அதிகரித்து உறுதி செய்வதும் மட்டுமே இந்தப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வாக இருக்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நகா்மன்ற பெண் உறுப்பினா் மீது தோ்தல் நடத்தை விதிமீறல் வழக்கு

ஐஆா்எஸ் அதிகாரியின் மகள் பாலியல் - கொலை: குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு ஆண்மைப் பரிசோதனை
ரேஷன் அரிசி பதுக்கியவா் கைது

இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்தவா் உயிரிழப்பு
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

