இங்கே கண்கூடாகத் தெரியும் பாதிப்புகளுக்கேகூட, நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து அதற்கு இழப்பீடு பெறுவது என்பது பெரும்பாடு. ஆனால், அமெரிக்கா போன்ற மேற்கத்திய நாடுகளில் அப்படியல்ல. அழகு சாதனப் பொருள் காரணமாக புற்றுநோய்க்கு ஆளான பெண்ணின் குடும்பத்துக்கு அமெரிக்காவில் 7 கோடி அமெரிக்க டாலர் இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது என்கிற தகவல் வியப்பை ஏற்படுத்துகிறது.
மிúஸாரி மாகாணத்தில், ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்துக்கு எதிரான வழக்கில் இரண்டு நாள்களுக்கு முன் வெளியான இத்தீர்ப்பைத் தொடர்ந்து, இறந்துபோன பெண்மணி ஜாக்குலின் ஃபாக்ஸ் குடும்பத்துக்கு இழப்பீடாக ஒரு கோடி டாலர், தண்டனைத் தொகை 6 கோடி டாலர் என மொத்தத் தொகையும் கொடுத்துள்ளனர். இவ்வாறு தண்டனைத் தொகையையும் சேர்த்து வழங்குவது என்பது அமெரிக்காவிலேயேகூட இதுவே முதல்முறை என்றும் கூறப்படுகிறது. இறந்துபோன பெண்மணி பல ஆண்டு காலமாக ஜான்சன் அண்ட் ஜான்சன் பேபி பவுடர் மற்றும் வேர்க்குரு தவிர்ப்புக்கான ஷவர் அண்ட் ஷவர் பவுடரை பயன்படுத்தியதால்தான் அவருக்கு புற்றுநோய் வந்தது என்பதுதான் தீர்ப்பின் முடிவு.
சிகரெட் பிடிக்கும் ஒரு நபரோ அல்லது மது அருந்தும் நபரோ, தான் இந்த இலச்சினை கொண்ட பொருளை இத்தனை ஆண்டுகளாகத் தொடர்ந்து பயன்படுத்தியதால் தனக்குப் புற்றுநோய் வந்தது என்று நமது நாட்டில் இழப்பீடு கோருவது சாத்தியமே இல்லை.
அப்படி நிரூபிப்பதற்கான வசதிகள் இங்கே கிடையாது என்பது மட்டுமல்ல, நியாயம் பெற வேண்டும் என்பதற்காக நேரத்தையும், பணத்தையும் செலவழித்து, நீதி கேட்டு நெடும்பயணம் நடத்தும் பொறுமையும் நம்மில் எவருக்குமே இல்லை. ஆகவேதான் பன்னாட்டு நிறுவனங்களால் நாம் சுரண்டப்படுகிறோம்.
ஒரு பொருளைத் தொடர்ந்து பயன்படுத்தினேன் என்று சொல்ல சான்றுகள் நம் வசம் இருந்தாலும்கூட, நாம் பயன்படுத்திய அந்தப் பொருள்தான் நமக்கான நோய்க்குக் காரணி என்று நிரூபிக்கும் ஆய்வு முடிவுகள் தேவை. இதற்கு இந்தியாவில் வாய்ப்புகள் மிகமிகக் குறைவு.
அண்மையில் இரண்டு நிமிட நூடுல்ஸ் தடை செய்யப்பட்டபோது, அந்த உணவுப் பொருளில் அனுமதிக்கப்பட்ட அளவுக்கு அதிகமான காரீயம் இருந்தது என்று கூறப்பட்டது. மீண்டும் அவர்கள் அந்தப் பொருளில் அனுமதிக்கப்பட்ட அளவுக்குத்தான் காரீயம் இருக்கிறது என்று நிரூபித்து, தற்போது மீண்டும் சந்தைக்கு வந்துவிட்டார்கள். சரி, அனுமதிக்கப்படும் அளவு என்பது எதை வைத்து முடிவு செய்யப்படுகிறது? அப்படியானால், முதலில் அதிகமான காரீயம் இருந்தது என்று கூறப்பட்டது பொய்யா? அப்படி பொய்யான தகவலைத் தந்து தடை பெற்றவர்கள் மீது ஏன் இழப்பீடு கோரி நூடுல்ஸ் நிறுவனம் வழக்குத் தொடுக்கவில்லை?
இந்தியாவில் நாமும் ஜான்சன் அண்ட் ஜான்சன் குழந்தை பவுடர் மட்டுமன்றி மற்ற நிறுவனங்களின் பவுடர்களையும் பயன்படுத்துகிறோம். ஆனால், இதை எத்தனை நாளைக்கு தொடர்ந்து பயன்படுத்தினால் எத்தகைய பாதிப்பு ஏற்படும் என்பது யாருக்கும் தெரியாது. இந்தியாவில் 10 லட்சம் பேர் ஆண்டுதோறும் புற்றுநோயால் இறக்கிறார்கள். இதில் 15% குழந்தைகள். 70% பேர் புற்றுநோய் முற்றிய நிலையில்தான் மருத்துவமனைக்கு வருகிறார்கள். நோய் முற்றிய நிலையில் வரும்போது அவர்களுக்கு வலிநிவாரணிகளும், நோய் பரவாமல் இருக்கும் நடைமுறைகளும் மட்டுமே சாத்தியமாகிறது. ஒவ்வொரு நோயாளிக்கும் ஏற்பட்ட நோய்க்கான காரணத்தை கண்டறியும் ஆய்வுமுறை நம்மிடம் இல்லை.
அமெரிக்காவைப் பார்த்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியதும், படிக்க வேண்டியதும் நிறையவே இருக்கின்றன. நுகர்வோர் பாதுகாப்பிலும் சரி, யார் எவர் என்கிற பாரபட்சமில்லாமல் சட்டம் தன் கடமையைச் செய்வதிலும் சரி, உலகில் அமெரிக்காவுக்கு நிகரான ஜனநாயக நாடு எதுவும் இல்லை எனும் அளவுக்கு அவர்கள் சட்ட திட்டங்களை வகுத்து, வழிமுறைகளை உருவாக்கி இருக்கிறார்கள்.
தவறான சிகிச்சைக்காக இங்கே தண்டனை பெறுவது என்பது குதிரைக் கொம்பு. 1995-இல் நடிகை ஸ்ரீதேவியின் தாயார் ராஜேஸ்வரி அய்யப்பன், மூளையின் இடது பக்கத்தில் உள்ள கட்டியை மன்ஹாட்டனில் உள்ள மெமோரியல் ஸ்லோன் கெட்டரிங் கேன்சர் சென்டர் என்கிற மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து அகற்ற அனுமதிக்கப்பட்டார். இன்னொரு நோயாளியின் எக்ஸ்ரேயை அடிப்படையாகக் கொண்டு அவருக்கு மருத்துவர்கள் மூளையின் வலதுபுறத்தில் தவறாக அறுவை சிகிச்சை செய்து விட்டனர். ராஜேஸ்வரி அய்யப்பன் நியூயார்க்கிலுள்ள இன்னொரு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு, அறுவை சிகிச்சை மூலம் அவரது கட்டி அகற்றப்பட்டது.
இந்தத் தவறான சிகிச்சைக்காக பல கோடி டாலர்கள் ஸ்ரீதேவிக்கு வழங்கப்பட்டது. இதுபோல, தவறுகளைத் தட்டிக் கேட்கவும், இழப்பீடு பெறவும் நுகர்வோர் நலன் பாதுகாக்கப்படவும் இந்தியாவில் இன்றுவரை வழியில்லை. அதனால்தான் மேற்கத்திய நாடுகளில் தடை செய்யப்பட்ட அல்லது தவிர்க்கப்படும் பலதும் இந்தியச் சந்தையைக் கைப்பற்றி இருக்கின்றன.
மேகி நூடுல்ஸ் ஆனாலும், ஜான்சன் அண்ட் ஜான்சன் ஆனாலும், வேறு எந்தப் பொருளாக இருந்தாலும் அதன் விளைவுகளைக் குறித்த சிந்தனையோ, தவறு நேர்ந்தால் தட்டிக் கேட்க வழிமுறையோ இல்லாத இந்தியாவில், இதுகுறித்துப் பேசி என்ன பயன்? நுகர்வோர் நலம் குறித்த விழிப்புணர்வை ஊடகங்கள் முன்னுரிமை கொடுத்து ஏற்படுத்தினால், ஒருவேளை இந்தியாவிலும் அமெரிக்காவில் இருப்பது போன்ற நிலைமை ஏற்படலாம். ஆனால், ஊடகங்களின் விளம்பர வருவாய் பாதிக்கப்படுமே...!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.