எந்தவிதமான கட்டண உயர்வும் இல்லாத ரயில் நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்திருக்கிறார் ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு. ரயில்வே ஊழியர் சம்பளம், ஓய்வூதியம் ஆகியவற்றுக்கு மட்டுமே மொத்த வருவாயில் சற்றொப்ப 50% செலவிடப்படுகிறது.
எனினும், 7-ஆவது ஊதியக் குழு பரிந்துரையை அமல்படுத்துவதால் கூடுகின்ற செலவாலும், குறைந்துவரும் பயணிகள் எண்ணிக்கை மற்றும் சரக்குகள் கையாளுகை ஆகியவற்றால் நேரிடும் வருவாய் இழப்பாலும், ரயில்வே இரு சுமைகளை ஒரு சேர ஏற்றாக வேண்டும். இதை எவ்வாறு சாதிக்கப் போகிறார் என்பதை அமைச்சர் சுரேஷ் பிரபு விரிவாக விளக்கவில்லை.
பயனில்லாமல் இருக்கும் ரயில்வே இடங்களைக் குத்தகைக்கு விடுவதன் மூலமும், ரயில் நிலையங்களில் வணிக வளாகங்கள் அமைத்து வாடகைக்கு விடுவதன் மூலமும் இந்த செலவுகளை ஈடுகட்ட அவர் நினைக்கிறார் என்று எண்ண இடமிருக்கிறது. இது எந்த அளவுக்கு நடைமுறைக்கு உகந்ததாக மாறுகிறது என்பதை அடுத்த நிதிநிலை அறிக்கையின்போது தெரிந்துகொள்ளலாம்.
மேலும், தற்போது பயணிகள் கட்டணத்தை உயர்த்தவில்லையே தவிர, முன்பதிவுகளை ரத்து செய்வதற்கான கட்டண விகிதங்கள் இரு மடங்குக்கு மேலாக உயர்த்தப்பட்டு அமலுக்கும் வந்துவிட்டது. மின்சாரத்தை நேரடியாகக் கொள்முதல் செய்யும் நடவடிக்கைகள் மூலம் ரூ.3,000 கோடி மிச்சப்பட்டுள்ளதாக கூறியிருக்கிறார். வரவேற்புக்குரியது. 2015-16 நிதியாண்டில் பயணிகள் கட்டணம் மூலம் ரூ.51,012 கோடியும், சரக்கு கட்டணம் மூலம் ரூ.1,10,690 கோடியும் கிடைத்துள்ளது. சரக்கு போக்குவரத்தில் நுட்பமான கவனமும், முறைகேடுகளைத் தடுக்க அதிக அக்கறையும் செலுத்தினால் வருவாய் பெருகும்.
முதல்முறையாக சரக்கு ரயில்களை, பயணிகள் ரயில்போல அட்டவணை நேரப்படி இயக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சரக்கு ரயில்களின் நடைகளை அதிகரிக்கவும், வருவாய் அதிகரிக்கவும் வாய்ப்புகள் உள்ளன. சரக்கு ரயில்கள் மூலம்தான் கணிசமான வருவாய் ஈட்ட முடியும் என்பதால், அதில் கவனம் செலுத்துவதைப் பாராட்டலாம்.
சரக்குப் போக்குவரத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் முறைகேடுகளை எவ்வாறு குறைக்கப் போகிறார் என்பதைப் பொருத்துத்தான் இதன் வெற்றி அமையும். அண்மையில், தமிழகத்தில் சிமெண்ட் ஆலைகளிலிருந்து சிமெண்ட் மூட்டைகளை ஏற்றிச் செல்லும் சரக்குகளை எடைபோடும் இயந்திரத்தில், மோசடியாக அளவைக் குறைத்து எடைபோடும் வகையில் கணினி நிரல்களை திருத்தியிருந்தது கண்டறியப்பட்டது. இதனால், ஒவ்வொரு பெட்டியிலும் அனுமதிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் கூடுதலாக சிமென்ட் மூட்டைகள் ஏற்றப்பட்டு வந்துள்ளன.
அனுமதிக்கப்பட்ட எடை அளவைவிடக் கூடுதலான சரக்குகளுடன் செல்லும் பெட்டிகளால் ரயில் தண்டவாளம் பாதிப்படைந்து, தளர்ந்து, விலகுகிறது. அத்தடத்தில் வரும் ரயில்கள் கவிழ்வதும், குறிப்பாகப் பயணிகள் ரயில் கவிழ்ந்து உயிரிழப்புகள் ஏற்படுவதும் நேர்கிறது. ரயில்வே துறையில் ஒட்டுமொத்தமாக 20% விபத்துகள் குறைந்துள்ளன என்றாலும், இதுபோன்ற சரக்கு ரயில் மோசடிகளால் தண்டவாளம் பாழடைவதைத் தடுத்தாக வேண்டும். இதன் மூலம் விபத்துகள் எண்ணிக்கை மேலும் குறையும்.
மொத்தம் 65,000 படுக்கை அடுக்குகள் அதிகரிக்கப்படும் என்றும்; பெண்கள், முதியோருக்கான கீழ் அடுக்கு படுக்கைகள் ஒதுக்கீடு அதிகரிக்கப்படும் என்றும் கூறியுள்ளார். ரயில்பெட்டிகளின் அனைத்து கீழ் அடுக்குப் படுக்கைகளும் பெண்கள் மற்றும் முதியோருக்கானவை என்று மாற்றுவதே சிறந்தது. அவர்களுக்குப் போக மீதமிருந்தால் மற்றவர்களுக்கு ஒதுக்கப்படும் என்ற நடைமுறையை, ஏன் கொண்டுவரக் கூடாது? சென்ற ஆண்டு உறுதிகூறியதைப் போலவே, இ-டிக்கட் முன்பதிவுத் திறன்அளவு கூட்டப்பட்டுள்ளது. ஒரு நிமிடத்தில் 2,000 டிக்கட் என்பது தற்போது 7,200 டிக்கட் முன்பதிவு செய்ய இயலும், ஒரே நேரத்தில் 1.2 லட்சம் பேர் முன்பதிவு இணைப்பில் இடம்பெற முடியும். இந்த ஆண்டு 100 ரயில் நிலையங்களிலும் அடுத்த ஆண்டு 400 ரயில் நிலையங்களிலும் வை-ஃபை வசதி அளிக்க உள்ளனர்.
இந்த நிதிநிலை அறிக்கையில் சாதாரண மக்களுக்குக் கிடைத்துள்ள பயன்: அந்தியோதயா ரயில். பல முக்கிய வழித்தடங்களில், முன்பதிவு செய்தால் மட்டுமே இனிய பயணம் சாத்தியம் என்ற சூழலில், முன்பதிவு செய்யாதவர்களுக்காக இத்தகைய வழித்தடத்தில் அந்தியோதயா ரயில்கள் விடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான குறைந்தபட்ச பயணிகள் எண்ணிக்கை, வழித்தடத் தொலைவு ஆகியவற்றைப் பற்றி குறிப்பிடவில்லை என்றாலும், தமிழ்நாட்டைப் பொருத்தவரை, நெல்லை - சென்னை, கோவை - சென்னை இடையே அந்தியோதயா ரயில் இரவு நேரத்தில் இயக்கப்படுமேயானால், பெரும் வரவேற்பை பெறும். இதற்கு தமிழக எம்.பி.க்கள் முயற்சி எடுக்க வேண்டும்.
அதேபோன்று, முன்பதிவில்லா பயணிகளுக்காக, தேவைப்படும் ரயில்களில் தீனதயாள் பெட்டிகள் இரண்டு முதல் நான்கு வரை கூடுதலாக இணைக்கப்படும் என்ற அறிவிப்பும் சாதாரண மக்களின் பயணத்தை எளிதாக்கும்.
அடுத்த ஐந்தாண்டுகளில் ரயில்வே துறையில் ரூ.8.5 லட்சம் கோடி புதிய முதலீடு; ரயில்களிலும், ரயில் நிலையங்களிலும் சுத்தத்திற்கு முன்னுரிமை அளிப்பது; நான்கு மாதங்களுக்கு முன்பாகவே முன்பதிவு செய்யும் வசதி என்று பல வரவேற்கத்தக்க அறிவிப்புகளை ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு இந்த நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் வெளியிட்டிருக்கிறார்.
மக்கள் அதிரடி மாற்றத்தையும், செயல்பாட்டையும் எதிர்பார்க்கிறார்கள். அந்த எதிர்பார்ப்புகளைக் கட்டண உயர்வு இல்லை என்பதன் மூலம் தீர்த்துவிட முடியாது. மாற்றம் பளிச்சென்று புலப்பட வேண்டும். அப்போதுதான் சுரேஷ் பிரபுவுக்கு வெற்றி!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.