கடைசி நேர எதிர்பார்ப்பு!

அரசியல் ரீதியாகத் தொடர்ந்து பின்னடைவுகளையும், ஒன்றன் பின் ஒன்றாக சர்ச்சைகளையும் எதிர்கொள்ளும் நரேந்திர மோடி அரசுக்கு இன்று நிதியமைச்சர் அருண் ஜேட்லி மக்களவையில் தாக்கல் செய்ய இருக்கும் மத்திய அரசின் 2016-17 ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை ஆறுதலளிப்பதாக அமைந்தால் மட்டுமே வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தல்களை பா.ஜ.க. துணிவுடன் எதிர்கொள்ள முடியும்.
Updated on
2 min read

அரசியல் ரீதியாகத் தொடர்ந்து பின்னடைவுகளையும், ஒன்றன் பின் ஒன்றாக சர்ச்சைகளையும் எதிர்கொள்ளும் நரேந்திர மோடி அரசுக்கு இன்று நிதியமைச்சர் அருண் ஜேட்லி மக்களவையில் தாக்கல் செய்ய இருக்கும் மத்திய அரசின் 2016-17 ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை ஆறுதலளிப்பதாக அமைந்தால் மட்டுமே வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தல்களை பா.ஜ.க. துணிவுடன் எதிர்கொள்ள முடியும்.
 ÷மத்திய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், குழப்பமாக இருக்கும் சர்வதேசப் பொருளாதாரச் சூழலுக்கு இடையிலும் இந்தியப் பொருளாதாரம் ஓரளவுக்கு வலுவாகவே இருப்பதாகத் தெரிவிக்கிறார். அது உண்மையும்கூட. அதற்குப் பல காரணங்கள் உண்டு என்றாலும், மிகவும் பயப்படும் நிலையில் நமது பொருளாதாரம் இல்லைதான்.
 ÷கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்டிருக்கும் கடும் சரிவு ஓரளவுக்கு இந்தியப் பொருளாதாரத்தின் ஸ்திரத்தன்மையைக் காப்பாற்றி இருக்கிறது. பிரேசில், ரஷியா, இந்தோனேஷியா உள்ளிட்ட பல நாட்டு நாணயங்களின் மதிப்பு கடும் பாதிப்பையும், ஏற்ற இறக்கங்களையும் சந்தித்து வரும் வேளையில், ரூபாயின் மதிப்பு பெரிய பாதிப்பை எதிர்கொள்ளாமல் இருப்பதற்குக் கச்சா எண்ணெய் விலையின் சரிவு ஒரு முக்கியக் காரணம் என்பதை மறுப்பதற்கில்லை. மென்பொருள் ஏற்றுமதியில் தொடங்கி ஏனைய சேவைத் துறைகள் அனைத்துமே வளர்ச்சியையும், லாபத்தையும் காண்பதால், தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக 2016-17 நிதியாண்டிலும் இந்தியப் பொருளாதாரம் 7% வளர்ச்சியை எட்டும் என்பது பரவலான நம்பிக்கை.
 ÷இது ஒட்டுமொத்தப் பொருளாதாரத்தின் பாராட்டுக்குரிய அம்சம் என்றாலும், துறை வாரியாக நமது வளர்ச்சி எப்படி இருக்கிறது என்பதைப் பார்த்தால் ஆங்காங்கே பலவீனங்களும், தேக்கமும் பல்லிளிக்கவே செய்கின்றன. அதிலும் குறிப்பாக மிகவும் முக்கியமான வேளாண் துறை மிகப்பெரிய பின்னடைவையும்,அழுத்தங்களையும் எதிர்கொள்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாகப் பருவமழை தொடர்ந்து பொய்த்து வருவதாலும், இந்தியாவின் பல மாநிலங்களில் கடுமையான வறட்சி நிலவுவதாலும், உணவு உற்பத்தி குறைந்து வருகிறது. அதுமட்டுமல்ல, விவசாயத் தொழிலாளர்கள் கூலி இழப்பை எதிர்கொள்வதால் வறுமையில் வாடுகிறார்கள்.
 ÷அரவிந்த் சுப்பிரமணியம் தாக்கல் செய்திருக்கும் பொருளாதார அறிக்கையின் குறிப்பிடத்தக்க அம்சங்கள், உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதும், விவசாயத்தை லாபகரமாக்கி விவசாயிகளின் வருமானத்தை உறுதிப்படுத்துவதும். படிப்பதற்கும் கேட்பதற்கும் இது நன்றாக இருந்தாலும் நடைமுறையில் அவ்வளவு எளிதில் சாத்தியமானதல்ல.
 ÷இந்திய விவசாயி எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால் பாசன வசதி. மிக அதிகமாகப் பருவ மழையை மட்டுமே நம்பி விவசாயத்தில் ஈடுபடும் அவர்களுக்குப் பருவமழை பொய்த்துவிட்டால், அந்த பாதிப்பிலிருந்து மீள முடியாத சூழல் ஏற்பட்டு விடுகிறது. இந்தியாவில் இப்போது பாசன வசதியுடைய விளைநிலங்கள் என்று பார்த்தால் வெறும் 33.9% மட்டுமே. மிகப்பெரிய அளவில் முதலீடு செய்யப்படாமல் இந்த நிலைமையில் மாற்றத்தை ஏற்படுத்துவது என்பது இயலாது.
 ÷இந்தியாவில் கூட்டுறவுப் பண்ணை விவசாயம் என்பது தோல்வி அடைந்துவிட்ட நிலையிலும், பெரிய "கார்ப்பரேட்' பண்ணை விவசாயம் சாத்தியமில்லாத சூழலிலும், அதிக அளவு உணவுப் பொருள் உற்பத்தி என்பது மிகப்பெரிய சவால். மேற்கத்திய நாடுகளைப் போல, இந்தியாவில் விவசாயம் என்பது லாபத்தைக் குறியாகக் கொண்ட தொழிலல்ல. இது பல குடும்பங்களுக்கும் வாழ்வாதாரம். இந்தக் கட்டமைப்பைக் "கார்ப்பரேட்' பண்ணை விவசாயம் மூலம் குலைக்க முற்பட்டால், பல லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்த வேண்டிய அவலம் ஏற்படும். பல குடும்பங்களின் வாழ்வாதாரம் சிதைக்கப்படும்.
 ÷நமது நாட்டின் 58% கிராமப்புறக் குடும்பங்கள் விவசாயத்தில் ஈடுபட்டுள்ளன. இதில் மூன்றில் இரண்டு பங்கினர் விவசாயத்தை மட்டுமே நம்பி உயிர் வாழ்பவர்கள். ஏறத்தாழ 65% விவசாயிகள் ஒரு ஹெக்டேருக்கும் குறைவான நிலம் வைத்திருப்பவர்கள். இன்றைய நிலவரப்படி, ஒரு விவசாயக் குடும்பத்தின் சராசரிக் கடன் ரூ.47,000. பல விவசாயிகள் ஒரு பருவ மழை தவறியதால் ஏற்பட்ட கடனைத் திருப்பிக் கொடுக்க முடியாமல் போவதன் தொடர்விளைவால், பெரும் கடனாளியாகிக் கடைசியில் அதிலிருந்து மீளவே இயலாத நிலையில் தொடர்ந்து தத்தளித்து வருகிறார்கள். பெரும்பான்மை விவசாயக் குடும்பங்களின் சராசரி மாத வருமானம் ரூ.6,400 மட்டுமே என்கிறது தேசிய மாதிரிக் கணக்கெடுப்பு அலுவலகம்.
 ÷2014-15இல் வேளாண் துறை - 0.2% என்ற அளவில் பின்னடைவை எதிர்கொண்டது. 2015-16 இந்த நிலையில் மாற்றம் கண்டு 1.1% வளர்ச்சியை எட்டியிருக்கிறது. சீனாவை முந்திக் கொண்டு 2015-16இல் இந்தியாவின் பொருளாதர வளர்ச்சி 7.6% வளர்ந்திருக்கிறது என்பதும், நமது இலக்கு 8% வளர்ச்சி என்பதும் மகிழ்ச்சியளிக்கிறது. ஆனால் அந்த வளர்ச்சியைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டுமானால், வேளாண் துறை குறைந்தது 4% வளர்ச்சியைக் காண வேண்டும்.
 ÷பிரதமர் மோடி, வேலைவாய்ப்பை உருவாக்கும் துறையாக விவசாயம் வளர்ச்சி காண வேண்டும் என்று பேசியிருப்பது இனிக்கிறது. கிராமப்புறங்கள் செழிப்படையாமல் பொருளாதர வளர்ச்சி சாத்தியமில்லை என்கிற அவரது கருத்தும் வரவேற்புக்குரியது. இதெல்லாம் இன்று நிதியமைச்சர் தாக்கல் செய்ய இருக்கும் நிதிநிலை அறிக்கையில் பிரதிபலிக்க வேண்டும் என்பதுதான் நமது கடைசி நிமிட எதிர்பார்ப்பு!
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com