கேரளத்தின் கோயில் திருவிழா வெடிவிபத்தின் தழும்புகள் மறையாத நிலையில், மகாராஷ்டிர மாநிலத்தில் புல்கான் என்ற இடத்தில் அமைந்துள்ள ராணுவ ஆயுதக் கிடங்கில் பின்னிரவில் ஏற்பட்ட விபத்தில் 2 அதிகாரிகள் உள்பட 18 பேர் இறந்திருப்பது வேதனைக்குரியது.
பொழுது விடிவதற்கு முன்னால் அதிகாலையில் தொடங்கிய இந்த விபத்தின் கோரத்தைத் தணிக்கப் பத்து தீயணைப்பு வண்டிகள் ஏறத்தாழ ஐந்து மணி நேரம் போராட வேண்டி வந்தது. அந்த வெடி மருந்துக் கிடங்கைச் சுற்றியிருந்த பகுதியில் வசிக்கும் மக்களை அகற்றி வேறு இடத்திற்கு பத்திரமாகக் கொண்டு சேர்த்தார்கள்.
நாகபுரியிலிருந்து 110 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இந்த ராணுவக் கிடங்கு இந்தியாவிலேயே மிகப் பெரியது. சுமார் 7,000 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ள இந்த ஆயுதக் கிடங்கில் பல வகையான வெடிகள், அதற்கென அமைக்கப்பட்டுள்ள குடில்களில் தனித்தனியாக குவித்து வைக்கப்படுவது வழக்கமாக உள்ளது. இந்த வெடிவிபத்து எவ்வாறு நேர்ந்தது என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இருப்பினும், காயமடைந்த வீரர்கள் சிலர் குறிப்பிடும்போது, தேவையில்லாத, பழைய வெடிகுண்டுகளை அப்புறப்படுத்துவதற்காகத் தனித்துக் குவித்து வைக்கப்பட்டிருந்ததாகவும், அந்தத் தொகுப்பில்தான் தீ பரவி, வெடிகள் வெடிக்கத் தொடங்கியதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
பொதுவாக, வெடிகுண்டுகளை இடம் மாற்றும்போதோ அல்லது வெடிகுண்டுகளை செயலிழக்கச் செய்யும் பணியின்போதோ ஆயுதக் கிடங்குகளில் இத்தகைய விபத்து ஏற்படுவது உண்டு. ஆனால், யாருமே பணியில் இல்லாத பின்னிரவு நேரத்தில் வெடிகுண்டுகள் தானாகத் தீப்பிடித்து, வெடிப்பது என்பது நம்பவியலாத ஒன்று.
தமிழ்நாட்டில் குன்னூர் அருகே உள்ள அரவங்காடு கார்டைடு தொழிற்சாலையில் அடிக்கடி வெடிவிபத்துகளும் உயிரிழப்பும் நடைபெறுவது வழக்கம் என்றாலும், இவை பணி நேரத்திலேயே பெரும்பாலும் நடைபெற்றுள்ளன. தற்போது புல்கான் ஆயுதக் கிடங்கில் பின்னிரவில் நடைபெற்றிருக்கிறது.
பா.ஜ.க. அரசின் இரண்டாம் ஆண்டு வெற்றிவிழா பல மாநிலங்களில் கோலாகலமாக நடைபெற்று வரும் வேளையில், குறிப்பாக மகாராஷ்டிரத்தில் பா.ஜ.க. ஆளும் கட்சியாக இருப்பதால் சிறப்பான விழா ஏற்பாடுகள் நடந்து வருகையில், ஆயுதக் கிடங்கில் இரவில் தீவிபத்தும் வெடிகள் வெடிப்பதும் நடைபெறுவது சாதாரண விவகாரமாகத் தெரியவில்லை. இது சதிச்செயலாக இருக்கவும் கூடும்.
7,000 ஏக்கர் பரப்பளவு உள்ள இந்த ஆயுதக் கிடங்கில் மிகக் குறைந்த அளவிலான வெடிகளை மட்டும் ஒவ்வொரு குடிலிலும், போதுமான இடைவெளியில் குடில்கள் அமைத்து, பாதுகாப்பாக வைக்க முடியும். இத்தகைய விபத்துகள் நேரிட்டால், ஒரு குறிப்பிட்ட குடிலோடு இந்த தீவிபத்து முடிந்து போகவும், மற்றவற்றுக்கு பரவாமல் தடுப்பதும் இயலும். ஆனால், தற்போதைய தீவிபத்து பரவலாகவும், மிகப்பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலும் அமைந்திருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது.
மேலும், வெடிபொருள்களுடன் அதிக பரிச்சயம் உள்ள ராணுவ வீரர்கள் 18 பேர் இறந்திருப்பதும் 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதும், இவர்களுக்கு வெடிமருந்துக் கிடங்குத் தீவிபத்துகளில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்கிற குறைந்தபட்ச பயிற்சிகூட இல்லாதது போலவே தோன்றுகிறது. அவ்வாறான பயிற்சி இருந்திருப்பின், இத்தனை பேர் இறந்திருக்க வாய்ப்பில்லை. சாதாரண சிவகாசி பட்டாசு ஆலை விபத்தில் செயல்படும் அப்பாவித் தொழிலாளர்களைப் போல செயல்பட்டிருக்கமாட்டார்கள்.
சாதாரண சிவகாசி தொழிற்கூடத்தில் பட்டாசு வெடிவிபத்து என்றால் ஆயிரம் கேள்விகள், பல அதிகாரிகளின் விசாரணை, ஆய்வு, அறிக்கை, நடைமுறைகளைப் பின்பற்றாததற்காக சில ஊழியர்கள், உரிமையாளர்கள் கைது என்றெல்லாம் களேபரப்படும். ஆனால், ராணுவ ஆயுதக் கிடங்குகளில் என்ன நடந்தாலும் அப்படியே அமுங்கி விடுகின்றன. மாவட்ட, மாநில அதிகாரிகள் அதனுள்ளே சென்று உண்மைகளைக் கண்டறிவதில் பெரும் சிக்கலும், அதிகார வரம்புகளின் தடைகளும் இருக்கின்றன.
சாதாரண வெடிவிபத்தில், எவ்வாறு பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றாதவர்கள் தண்டிக்கப்படுகிறார்களோ அதே நடைமுறை ராணுவ ஆயுதக் கிடங்குகள், ராணுவ தளவாட உற்பத்தி மையங்களில் இருக்க வேண்டும். ஆனால், ராணுவத்தினர் அதனை தங்களுக்குள்ளான விசாரணையாக மாற்றி, ராணுவ நீதிமன்றத்திலேயே அதற்கான தீர்ப்புகளையும் முடித்துக்கொள்கிறார்கள். ஆகவே, ஆயுதக் கிடங்கு விபத்துகளைப் பற்றிய உண்மைகள் எதுவுமே வெளி உலகுக்கு தெரிய வருவதே இல்லை.
மகாராஷ்டிர மாநில முதல்வராக பட்நவீஸ் பொறுப்பேற்ற பின்னர், "இந்தியாவில் தயாரிப்போம்' நிகழ்ச்சிக்காக அமைக்கப்பட்டிருந்த மிகப்பிரமாண்ட மேடை, கலைநிகழ்ச்சி நடைபெற்றுக்கொண்டிருக்கும்போது தீப்பிடித்து எரிந்தது. பிரதமர் மோடியின் அரசு 2-ஆம் ஆண்டு சாதனைகள், பேரணிகளை இந்தியா முழுவதும் நடத்திக்கொண்டிருக்கும் வேளையில், வெடிமருந்துக் கிடங்கில் விபத்து ஏற்பட்டிருக்கிறது.
கடந்த சில ஆண்டுகளில் இந்திய கப்பற்படை பல விபத்துகளை எதிர்கொள்ள நேர்ந்திருக்கிறது. பதான்கோட் சம்பவம், நமது ராணுவ முகாம்கள் ஊடுருவ முடியாதவை அல்ல என்பதை வெளிச்சம்போட்டுக் காட்டியது. இப்போது புல்கானில் அரங்கேறியிருக்கும் வெடிகுண்டு விபத்தும் அதுபோல பயங்கரவாதிகளின் சதியா என்பதைத் தீர விசாரிக்க வேண்டிய அவசியம் இருக்கிறது.
"இதுவும் கடந்து போகும்' என்கிற மனநிலை வேதாந்திகளுக்கு வேண்டுமானால் சரியாக இருக்கலாம். ஆனால், அது நல்ல நிர்வாகத்திற்கு அழகல்ல!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.