வெளிப்படைத்தன்மைக்கு வழி!

நிகழ் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று, மாநிலங்களவையில் நிறைவேறிய தீர்மானங்களில் மிக இன்றியமையாத ஒன்று, மனை வணிக ஒழுங்காற்றுச் சட்டம். நாடாளுமன்ற நிலைக்குழு தெரிவித்த சில பரிந்துரைகளுடன், நுகர்வோருக்கு பயனளிக்கும் சில திருத்தங்களுடன் நிறைவேறியுள்ள இந்தச் சட்டம், மனை வணிகத்தில் இதுவரை இல்லாத வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவரும்.
Published on
Updated on
2 min read

நிகழ் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று, மாநிலங்களவையில் நிறைவேறிய தீர்மானங்களில் மிக இன்றியமையாத ஒன்று, மனை வணிக ஒழுங்காற்றுச் சட்டம். நாடாளுமன்ற நிலைக்குழு தெரிவித்த சில பரிந்துரைகளுடன், நுகர்வோருக்கு பயனளிக்கும் சில திருத்தங்களுடன் நிறைவேறியுள்ள இந்தச் சட்டம், மனை வணிகத்தில் இதுவரை இல்லாத வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவரும்.

இந்த சட்டத்தின் மிக முக்கியமான அம்சம் என்னவெனில், "ஒவ்வொரு மாநிலத்திலும் மனை விற்பனை ஒழுங்காற்று ஆணையம் அமைக்கப்படும். இந்த ஆணையத்தில் அடுக்குமாடி மற்றும் வீடு கட்டி விற்பனை செய்யும் அனைத்து மனை வணிக நிறுவனங்களும் பதிவு பெற்றிருக்க வேண்டும்'. வீடுகளை விற்பனை செய்யும் முகவர்கள் அல்லது தரகர்களும்கூட இந்த ஆணையத்தில் பெயரைப் பதிவு செய்ய வேண்டியது கட்டாயமாகிறது.

அதுமட்டுமல்ல, வீடு கட்டித் தரும் நிறுவனம், தேர்வு செய்துள்ள இடம், அதில் கட்டவிருக்கும் கட்டடத்தின் அளவு, வசிப்பிடத்தின் அளவு, அதில் வழங்கப்படவுள்ள வசதிகள், எந்தப் பொறியாளர் அல்லது கட்டுமான நிறுவனத்திடம் இந்தப் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது உள்ளிட்ட விவரம், இந்த அடுக்குமாடி அல்லது வீட்டுக்கான உள்ளாட்சி அமைப்புகள் வழங்கிய அங்கீகார விவரம், நிலம் தொடர்பான ஒப்பந்தம் அனைத்தையும் அதன் இணையதளத்தில் வெளியிட்டாக வேண்டும். மனை விற்பனையில் முழுமையான வெளிப்படைத் தன்மை இதன்மூலம் ஓரளவுக்கு உறுதி செய்யப்படுகிறது.

இந்தியாவில் விவசாயத்துக்கு அடுத்தபடியாக, கட்டுமானத் தொழிலில்தான் அதிகப்படியான தொழிலாளர்கள் ஈடுபடுகிறார்கள். இந்தியாவில் மனை விற்பனை நிறுவனங்கள் மொத்தம் 76,044 உள்ளன (தமிழ்நாட்டில் 3,004). இந்தியாவில் 27 நகரங்களில் ரூ.13.7 லட்சம் கோடி ரூபாய் மனை வணிகத்தில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இத்தனை இன்றியமையாச் சட்டம் கடந்த 2013-ஆம் ஆண்டு முதலாக மாநிலங்களவையில் நிறைவேற்ற முடியாமல் கிடந்தது என்பதே இந்திய அரசியலின் அவலத்துக்கு ஓர் எடுத்துக்காட்டு.

மனை விற்பனை நிறுவனங்கள், வீடு வாங்கும் நுகர்வோரிடம் வசூலிக்கும் பணத்தில் 70% தொகையை அந்த திட்டத்துக்காக மட்டுமே செலவிடும் வகையில், தனியாக வங்கிக் கணக்கில் வைத்திருக்க வேண்டும். இதில் முறைகேடு கண்டுபிடிக்கப்பட்டால் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை உண்டு. இந்த அளவை 50%-ஆக குறைக்க வேண்டும் என்று மனை விற்பனை நிறுவனங்கள் கோரின. சில நகரங்களில் கட்டுமானச் செலவைவிட, நிலத்தின் மதிப்புதான் அதிகமாக இருக்கிறது என்பதால், திட்டத்துக்கு நுகர்வோர் செலுத்தும் பணத்தில் பெரும்பகுதியை வங்கிக் கணக்கில் வைக்கும்போது, நிறுவனத்துக்கு நட்டம் ஏற்படும் என்றனர். நிலைக்குழுவும்கூட 50%-ஆகக் குறைக்கப் பரிந்துரைத்தது. ஆனாலும், அரசு 70% தொகையை கட்டுமான செலவுக்காக மட்டுமே செலவிட வேண்டும் என்று சட்டத்தில் இடம்பெறச் செய்துள்ளது.

அதேபோன்று, 1,000 சதுர மீட்டர் பரப்பில் 12 அடுக்குமாடிகளுக்கு மேற்பட்ட மனை விற்பனை திட்டங்களுக்கு மட்டுமே இச்சட்டம் பொருந்தும் என்று நிலைக்குழு பரிந்துரைத்தாலும், 500 சதுர மீட்டர் பரப்பில் 8 அடுக்குமாடிகள் கட்டினாலும் இந்த சட்டம் பொருந்தும் என்று திருத்தப்பட்டுள்ளது. இதனால், மேலும் பல கட்டுமானத் திட்டங்கள் இச்சட்டத்தின் வரையறைக்குள் வந்துவிடுகின்றன.

கட்டுமானக் குறைபாடுகளுக்கு பொறுப்பேற்பதில், மனை விற்பனை நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த 2 ஆண்டு காலக்கெடு, 5 ஆண்டு காலம் என்று திருத்தப்பட்டிருக்கிறது. இதுவும் நுகர்வோருக்கு சாதகமானதே. இதுவரை இல்லாத வகையில், பட்டா காப்பீடு (இன்சூரன்ஸ் ஆஃப் லேண்டு டைட்டில் டீட்) செய்துகொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது நிலஉரிமை தொடர்பான தகராறுகளைத் தீர்க்க உதவும் என்று தெரிவிக்கப்பட்டாலும், கட்டுமானம் நடைபெறும்போதே ஏற்படும் இழப்புகளுக்கும் இந்தக் காப்பீடு பொருந்துமாறு செய்யப்படலாம்.

சென்னை மெளலிவாக்கத்தில் ஓர் அடுக்குமாடி கட்டடம் சரிந்து விழுந்தபோது, அதற்கு பணம் செலுத்தி வாங்கியவர்கள் பெருநட்டம் அடைந்தார்கள். அவர்கள் காப்பீடு செய்யவில்லை. அவர்கள் பெயருக்கு மனை மாற்றித்தரப்படாமல், வெறும் முன்பணம் மட்டுமே செலுத்தியிருந்த நிலையில், மனை விற்பனை நிறுவனத்தின் கருணை அல்லது நீதிமன்றத்தின் உத்தரவு மட்டுமே அவர்களுக்கு நியாயம் வழங்க முடியும். இத்தகைய நிலைமைக்கு கட்டுமானம் தொடங்கும்போதே, மனை வாங்கியவர்கள் பெயரிலேயே காப்பீடு செய்வதே உரிய தீர்வாக இருக்கும்.

உலகளாவிய அளவில், ஊழலுக்கும் முறைகேடுகளுக்கும் ஊற்றுக்கண்ணாக விளங்குவது மனை வணிகமாகத்தான் இருந்துவருகிறது. கருப்புப் பணம் அன்னிய முதலீடு என்ற பெயரில் விளையாடுவதும் இதில்தான். மனை வணிகத்தில் அரசியல்வாதிகளின் தொடர்பு கணிசமானது என்றால், அதிகாரிகளின் பங்கும் குறைந்ததல்ல. அடுக்குமாடிக் குடியிருப்புகளைக் கட்டுபவர்கள் நியாயமான கட்டணத்தைக் கட்டி அங்கீகாரம் வாங்குவது என்பது இயலாத ஒன்று என்பதுதான் யதார்த்த உண்மை. அதிகாரிகளாலும், ஆட்சியாளர்களாலும் அவர்கள் கசக்கிப் பிழியப்படும்போது, அந்த இழப்பை ஈடுகட்ட அவர்கள் வாடிக்கையாளர்களை வஞ்சிக்க முற்படுகிறார்கள். இதற்கு முடிவு கட்டாத வரையில், மனை வணிகத் துறையில் முறைகேடுகளை முழுமையாகக் கட்டுப்படுத்திவிட முடியாது.

மனை வணிகச் சட்டம் வெளிப்படைத்தன்மையைத் தந்துள்ளது. இன்னும் ஆரோக்கியமான சூழலையும் நம்பகத்தன்மையையும் உருவாக்க நாளாகும். இது முதல் கட்டம்தான்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com