ஆ...சிறியர்!

தொடக்கப் பள்ளிகளில் பட்டம் படித்தவர்கள் ஆசிரியர்களாக நியமிக்கப்படுவது 41% உயர்ந்திருக்கிறது. ஆசிரியர்களுக்கு சம்பளம் காலதாமதமாக வழங்கப்படும் நிலை இன்றில்லை. இதில் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. எல்லாப் பள்ளிகளிலும் பெற்றோர் - ஆசிரியர் கழகங்கள் உள்ளன. இத்தனை முன்னேற்றமான சூழல் ஏற்பட்டபோதிலும்,
Updated on
2 min read

உலக வங்கியின் சார்பில் 2003 முதல் 2010 வரை இந்தியாவில் 1,200 கிராமப் பள்ளிகளில் நடத்தப்பட்ட திடீர் ஆய்வுகளில், 23.6% ஆசிரியர்கள் பள்ளிக்கு வருவதில்லை அல்லது வந்திருந்தாலும் பள்ளியில் இருப்பதில்லை என்பது தெரியவந்துள்ளது.
 இத்தகைய ஆசிரியர்களால் இந்திய அரசுக்கு ஏற்படும் இழப்பு 1.5 பில்லியன் அமெரிக்க டாலர் (ரூ.10,071 கோடி) என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. கல்வி செஸ் வரிவிதிப்பின் மூலம் ஆண்டுதோறும் அரசு வசூலிக்கும் தொகையில் இந்தத் தொகை 60% ஆகும்.
 தொடக்கப் பள்ளிகளில் பட்டம் படித்தவர்கள் ஆசிரியர்களாக நியமிக்கப்படுவது 41% உயர்ந்திருக்கிறது. ஆசிரியர்களுக்கு சம்பளம் காலதாமதமாக வழங்கப்படும் நிலை இன்றில்லை. இதில் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. எல்லாப் பள்ளிகளிலும் பெற்றோர் - ஆசிரியர் கழகங்கள் உள்ளன. இத்தனை முன்னேற்றமான சூழல் ஏற்பட்டபோதிலும், பள்ளிகளில் ஆசிரியர்கள் பணியில் இல்லாத நிலைமை 23.6%-ஆக இருப்பது கல்விச் சூழலைக் கேள்விக்குரியதாக மட்டுமல்ல, கேலிக்குரியதாகவும் செய்கிறது.
 கண்காணிப்புகள் இருக்கும் இடங்களில் இந்த நிலைமையில் சற்று மாற்றம் இருப்பதாகவும், இத்தகைய கிராமப்புறப் பள்ளிகளில் ஆசிரியர்கள் பணிக்கு வராமல் ஏமாற்றும் நிலைமை 6.5% குறைவாக இருப்பதாகவும் இந்த ஆய்வு தெரிவிப்பதால், பள்ளிகளுக்கு ஆசிரியர்கள் வருகையைக் கண்காணிக்க அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்று உலக வங்கி பரிந்துரை செய்கிறது. ஆனால், இந்தக் கண்காணிப்பு பயன் தருமா; குறிப்பாக, இந்திய மனநிலைக்குச் சரிப்பட்டு வருமா என்பதுதான் கேள்வி.
 தற்போது தமிழகத்தைப் பொருத்தவரை, இவ்வாறு தொலைவில் உள்ள பள்ளிகள், கிராமப் பள்ளிகளில் ஆசிரியர் வருகையை செல்லிடப்பேசி மூலம் வருகையைப் பதிவிடும் முறை அமல்படுத்தப்பட்டாலும், அதிலும்கூட முறைகேடுகள் நடந்துகொண்டிருக்கின்றன. எப்படித்தான் இதைக் கண்காணிக்க முடியம் என்று தெரியாத குழப்பம் நிலவுகிறது.
 இந்தியாவில் இந்தப் பிரச்னைக்கு மிகவும் அடிப்படையான காரணம், ஆசிரியர்களிடம் அர்ப்பணிப்பு உணர்வு இல்லாமல் போயிருப்பதுதான். கற்பித்தல் என்பது சேவை என்பதைக் காட்டிலும், வருமானத்துக்கான மற்றொரு தொழில் என்பதாக மாறிவிட்டது. சமுதாயத்தில் ஆசிரியர்கள் மீதான மரியாதை குறைந்ததற்கும் இதுதான் காரணம்.
 தகுதித் தேர்வு இல்லாமல், வேலைவாய்ப்பு, பணி மூப்பு அடிப்படையில் நியமனம் பெறுவோர் பெரும்பாலும் மணமானவர்கள். இவர்கள் கிராமப்புறங்களில் பணி நியமனம் பெறும்போது, குடும்பத்தைக் குடிபெயர்த்தாமல் தான் மட்டும் கிராமத்துக்கு வந்து பணியாற்றும் ஆசிரியர்களாக இருக்கிறார்கள். முதலில் நேரம் தவறாமல் பள்ளிக்கு வந்தாலும்கூட, காலப்போக்கில் பள்ளிக்குத் தாமதமாக வந்து, சீக்கிரமே ஊருக்கு வண்டியைப் பிடிப்பதில்தான் அவர்களது கவனம் இருக்கிறது. இதுவே போகப்போக, பள்ளிக்கு வராமலேயே ஏமாற்றும் வரை வளர்ந்துவிடுகிறது.
 பெற்றோர் - ஆசிரியர் கழகங்கள் மூலம் இந்த ஆசிரியர்கள் மீதான புகார்களைக் கல்வித் துறைக்கு அனுப்பலாம். இதற்கான நடவடிக்கை எடுக்கக் கோரலாம். ஆனாலும், பெரும்பாலான நேர்வுகளில் வெறும் பணியிட மாற்றம் மட்டுமே தண்டனையாக அளிக்கப்படுகிறது. பல நேரங்களில் அதுவும்கூட இல்லை. ஆகவே, இந்த ஆசிரியர்கள் தங்கள் விருப்பத்தின்படி இயங்குகிறார்கள் என்பதே உண்மை.
 இந்தப் பிரச்னைக்கு மெய்யான தீர்வு என்பது, தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள் அனைத்தையும் உள்ளாட்சிகளின் பொறுப்பில் விட்டுவிடுவதாகவே இருக்க முடியும். இந்த நடைமுறையானது, ஆசிரியர்கள் அதே பகுதியில் வசிக்க வேண்டிய கட்டாயத்தை உருவாக்குவதோடு, ஆசிரியர்கள் பள்ளிக்கு வருவதையும் உறுதி செய்யும். ஏமாற்றும் ஆசிரியர்கள் மீதான நடவடிக்கையை மேற்கொள்ளும் அதிகாரமும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு கிடைக்குமானால், தொடக்கப் பள்ளிகளில் மிகவும் சீரிய முறையில் கற்பித்தல் பணி நிகழும்.
 தற்போது கிராமக் குழந்தைகள் தனியார் பள்ளிகளைத் தேடி நகரங்களுக்கும், புறநகர்ப் பகுதிகளுக்கும் வாகனங்களில் சென்று, மிக அதிக பணம் செலவழித்துப் படிக்க நேர்வதன் காரணம், தங்கள் கிராமத்தில் உள்ள பள்ளிக்கு ஆசிரியர்கள் சரியாக வருவதில்லை, சரியாகக் கற்பிப்பது இல்லை என்பதுதான். கிராமத்தில் ஆசிரியர் தினமும் வருவார், பாடம் சொல்லித் தருவார் என்ற நிலை உருவானால், அவர்கள் தங்கள் குழந்தைகளை நகரங்களுக்கு அனுப்பத் தேவையில்லை.
 தமிழ்நாட்டைப் பொருத்தவரை 34,180 தொடக்கப் பள்ளிகளும், 9,938 நடுநிலைப் பள்ளிகளும் உள்ளன. இவற்றில் பெரும்பாலானவை கிராமப்புறங்களில் அமைந்துள்ளன. இத்தனைப் பள்ளிகளும் உள்ளாட்சி அமைப்புகளின் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டால், நகரங்களைத் தேடி வரும் குழந்தைகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறையும்.
 தற்போது செயல்வழிக் கற்றல் உத்திகள் அறிமுகம் செய்யப்பட்டு, அனைத்துப் பள்ளிகளிலும் கற்றல் என்பது ஒன்றுபோல நிகழ்த்தப்படுகின்றன. இந்தக் குழந்தைகள் தாய்மொழியில் கல்வியைக் கற்கத் தடைகள் ஏதுமில்லை; செலவும் இல்லை. தாய்மொழியில் கல்வி கற்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்போது, புரிந்து படிக்கும் வழக்கமும், ஆழ்ந்த அறிவும், தனிப்பட்ட சிந்தனையும் உள்ள இளையோர் கூட்டம் பெருகும்.
 ஆங்கிலமும் தெரியாமல், தமிழிலும் புலமை இல்லாமல் தடுமாறும் இளைய சமுதாயத்தில் மாற்றம் ஏற்பட வேண்டுமானால், தொடக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளிகளை அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளின் பொறுப்பில் விட்டுவிடுவதும், கண்காணிப்பை அவர்களே நடத்துவதும் அவசியம். அதுமட்டுமே இந்தப் பிரச்னைக்குத் தீர்வாக இருக்கும்.
 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com