தேர்தல் நடத்தை விதிகள் இன்னும் குறைந்தது 60 நாள்களுக்கு அமலில் இருக்கும். அன்றாடம் வாகனச் சோதனைகளும் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான ஆவணமில்லாப் பொருள்கள் மற்றும் ரொக்கம் பறிமுதல் செய்யப்படுவதும் தொடரும். இது முறைகேடு இல்லாத, வெளிப்படைத்தன்மைக்கு வழிவகுக்கும் ஆரோக்கியமான நடவடிக்கைதான் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அதை நடைமுறைப்படுத்துவதில் சிக்கல்கள் இருக்கின்றன.
÷காங்கயம் காளை சந்தை மேளா நடைபெறுவதையொட்டி ஒரு பிரச்னை. ஒரு காங்கேயம் காளை ரூ.80,000 வரை விலை போகும் என்பதால் ஒரு ஜோடி காளை ரூ.1.5 லட்சம் விற்கும். காளையை வாங்குபவரோ, காளையை விற்றவரோ எப்படி பணத்தைக் கொண்டுபோவது, இதற்கு என்ன சான்று தர முடியும்?
÷முன்னெப்போதும் இல்லாதபடிக்கு, வணிகர்கள் இந்தத் தேர்தலில் அதிகளவில் கூறும் புகார் என்னவென்றால், ஆவணங்களைக் கொண்டு வந்து காட்டி, பணத்தை விடுவிக்கக் கோரினாலும் லஞ்சம் தர வேண்டியிருக்கிறது என்பதுதான். உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ. 50,000க்கு மேல் ரொக்கம் கொண்டு செல்லக்கூடாது. பறிமுதலாகும் ரூ.1 லட்சம் வரையிலான பணத்துக்குச் சரியான ஆவணங்களைக் கொண்டு வந்து கொடுத்தால் 24 மணி நேரத்துக்குள் பணம் விடுவிக்கப்படும். அதேபோன்று, ரூ.5 லட்சம் வரையிலான பணத்தை மூன்று நாள்களுக்குள் விடுவிப்பார்கள். எல்லாம் சரி, ஆனால், இந்தப் பணத்தைத் திரும்பப் பெறுவதற்கு அதிகாரிகள் லஞ்சம் கேட்பதாக வணிகர்கள் புகார் கூறுகின்றனரே, அதற்குத் தேர்தல் ஆணையம் என்ன தீர்வு காணப் போகிறது?
÷அத்தகைய செயல்களில் ஈடுபடும் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழகத் தலைமைத் தேர்தல் ஆணையர் அறிவித்தபோதிலும், இதற்கும் வாகனச் சோதனை நடத்துவோருக்குமான தொடர்பு மிகக் குறைவு. பறிமுதல் செய்யப்படும் தொகை கருவூலத்தில் அன்றைய தினமே செலுத்தப்படுகிறது. ஆவணங்களைக் கொண்டு வந்து தேர்தல் அலுவலரிடம் காட்டிய பிறகு, அவரது ஒப்புகையுடன் கருவூலத்துக்குச் சென்று பணத்தைக் கேட்கும்போது, கருவூலப் பணியாளர்கள், ரொக்கத்தின் அளவுக்கேற்ப "சிறுதொகை' கேட்பதாகக் கூறப்படுகிறது. இதுதான் பிரச்னை.
÷தற்போதைய சூழலில் சில நடைமுறைகளை மாற்றுவதன் மூலம் இந்தப் புகார்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும். பறிமுதல் செய்யப்படும் பணத்துக்குரிய ஆவணங்களைக் காட்டினால், மாவட்ட தேர்தல் அலுவலரான ஆட்சியர் அலுவலகமே அதற்கான தொகையை உரிய நபரின் வங்கிக் கணக்குக்கு நேரடியாக செலுத்தும்படிச் செய்யலாம்.
÷அடுத்ததாக, ரூ.1 லட்சத்துக்கு மேல் பணம் எடுப்போர் விவரங்களை வங்கிகள் தேர்தல் ஆணையத்துக்குத் தெரிவிக்க வேண்டும் என்கிற உத்தரவைப் போல, ஏடிஎம்-களில் பணம் நிரப்பும் தனியார் நிறுவனங்களையும் தேர்தல் ஆணையம் தனது நேரடி கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவது அவசியம்.
÷பேராவூரணியில் ரூ.36 லட்சம், திருச்சி நகரில் கும்பகோணத்தான் சாலையில் ரூ.3 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டபோது, இந்தத் தொகை ஏடிஎம்-களில் நிரப்புவதற்காக கொண்டு செல்லப்பட்ட பணம் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால், இந்த வாகனங்கள் அதற்குரிய வாகனமாக இல்லாததும், இதற்கான ஆவணங்கள் இல்லாததும் வியப்பளிக்கின்றன. தற்போதைய சூழ்நிலையில், பல கோடி ரூபாயைப் பாதுகாப்புடன் எடுத்துச் செல்லக் கூடியவர்கள் வங்கி ஏடிஎம்-களில் பணம் நிரப்பும் தனியார் நிறுவனங்கள்தான். இத்தகைய நிறுவனங்கள், உரிய ஆவணங்கள் இல்லாமல் பணம் கொண்டு செல்ல முடியும் என்றால், எத்தனை இடங்களில் பறக்கும்படை இவற்றைச் சோதனையிட்டு தடுக்க முடியும்?
÷இந்த தனியார் நிறுவனங்களின் ஊழியர்கள் கள்ளப் பணத்தை இடையில் செருகுகிறார்கள் என்பதற்காகவும், சில லட்சங்களை இயந்திரத்தில் வைக்காமல் ஏமாற்றியதாகவும் கைது செய்யப்பட்ட நேர்வுகள் உள்ளன. அவர்கள் எந்தவிதக் கட்டுப்பாட்டுக்கும் உள்பட்டவர்கள் அல்ல. இத்தகைய சில ஊழியர்களைக் கொண்டு பல கோடி பணத்தை தேவைப்படும் தொகுதிக்கு கொண்டு செல்வது மிக எளிது. ஆகவே, ஏடிஎம்-களில் பணம் நிரப்பும் நிறுவனங்களை உடனடியாகத் தனது கண்காணிப்பு வளையத்துக்குள் தேர்தல் ஆணையம் கொண்டுவருவது மிகமிக அவசியம்.
÷ஏடிஎம்-களில் பணம் நிரப்பும் நிறுவனங்கள், அவை சேவை வழங்கும் வங்கிகள் தரும் விவரங்களின்படி, எந்தெந்த ஏடிஎம் மையங்களுக்கு எவ்வளவு பணம் எடுத்துச் செல்லப்படுகிறது என்பதை முன்னதாகத் தீர்மானித்துத்தான் பணத்தை எடுத்துச் செல்கிறார்கள். எந்த எண் உள்ள வண்டியில், எந்தச் சாலை வழியாக எந்த வங்கியின் பணம் எடுத்துச் செல்லப்படுகிறது என்பதைத் தேர்தல் அதிகாரிகளிடம் முன்னதாகவே தெரிவிக்கும் கட்டாயத்தை ஏற்படுத்த வேண்டும்.
÷மின்வாரியத்திடமும், வாயு உருளை மானியம் பட்டுவாடாவிலும் நுகர்வோரின் வங்கிக் கணக்கு எண் உள்ளது. அவரவர் வங்கிக் கணக்கில் நேரடியாகப் பணம் செலுத்தப்படலாம். செல்லிடப்பேசியில் "ரீ சார்ஜ்' செய்து தேர்தல் ஆணையத்தின் கண்களில் மண்ணைத் தூவலாம். இப்படி எத்தனை எத்தனையோ வழிகள் இருக்கத்தான் செய்கின்றன. நூறு விழுக்காடு தவறு நடக்காமல் தடுத்து விடுவது என்பது இயலாதுதான்.
÷தேர்தலில் பணப் பட்டுவாடா செய்யப்படுவது தடுக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. அதேநேரத்தில், அப்பாவிப் பொதுமக்களும், வியாபாரிகளும் பாதிக்கப்படுவதும் கூடாது. வாகனச் சோதனை தவிர்க்க முடியாதது. அதற்காக, அதிகார வரம்பு மீறலும், அநியாயக் கெடுபிடிகளும் ஏற்புடையதல்ல!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.