ஹசீனாவா இப்படி?
வங்கதேசம் 11ஆவது பொதுத் தேர்தலை சந்திக்க இருக்கிறது. ஏறத்தாழ 10 கோடி வாக்காளர்கள் வங்கதேச நாடாளுமன்றத்துக்கு 300 உறுப்பினர்களைத்


வங்கதேசம் 11ஆவது பொதுத் தேர்தலை சந்திக்க இருக்கிறது. ஏறத்தாழ 10 கோடி வாக்காளர்கள் வங்கதேச நாடாளுமன்றத்துக்கு 300 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க இருக்கிறார்கள். தேர்தல் அறிவிக்கப்பட்டது முதல் இதுவரை, ஜாதீய ஐக்கிய முன்னணி என்கிற எதிர்க்கட்சிக் கூட்டணிக்குத் தலைமை தாங்கும் வங்கதேசத்தின் பிரதான எதிர்க்கட்சியான வங்கதேச தேசியவாதக் கட்சியைச் சேர்ந்த 9,200 தொண்டர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.
199091இல் வங்கதேசத்தில் மீண்டும் ஜனநாயகம் நிலைநாட்டப்பட்டது முதல், ஒவ்வொரு தேர்தலுமே பரபரப்பாகவும் வன்முறையுடன் கூடியதாகவும்தான் இருந்து வந்திருக்கிறது. ஆளும் அவாமி லீக் கட்சியும், எதிர்க்கட்சியான வங்கதேச தேசியவாதக் கட்சியும் நேர்மையான ஜனநாயகப் பண்புகளைக் கடைப்பிடிப்பதில்லை என்பதுதான் வரலாறு காட்டும் உண்மை.
கலீதா ஜியாவின் தலைமையில் வங்கதேச தேசியவாதக் கட்சி ஆட்சியில் இருக்கும்போது, பதவிக்காலம் முடிவடைந்தும்கூட பதவியிலிருந்து விலக மறுத்திருக்கிறது. 1996இல் அவாமி லீக் கட்சி மிகப் பெரிய மக்கள் போராட்டத்தை நடத்தித்தான் மீண்டும் தேர்தலுக்கு வழிகோலப்பட்டது. 2008 டிசம்பரில் நடைபெற்ற தேர்தலில் அவாமி லீக் கட்சி வெற்றி பெற்று, அதுமுதல் இப்போதைய பிரதமரும், வங்கபந்து முஜிபுர் ரஹ்மானின் புதல்வியுமான ஷேக் ஹசீனா பிரதமராகத் தொடர்கிறார்.
இதற்கு முந்தைய 2014 நாடாளுமன்றத் தேர்தலில் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி பெற்ற வெற்றியை ஜனநாயக வெற்றி என்று கூறிவிட முடியாது. தேர்தலுக்கு ஜனநாயக அங்கீகாரம் கிடைக்காமல் இருக்க தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டது வங்கதேச தேசியவாதக் கட்சி. தேர்தல் களத்தில் ஆளும் அவாமி லீக் கட்சி மட்டுமே குறிப்பிடத்தக்க அரசியல் கட்சியாக இருந்ததால், பிரதமர் ஷேக் ஹசீனா இரண்டாவது முறையாக வென்று தனது பதவியைத் தக்கவைத்துக் கொண்டார்.
கடந்த தேர்தலில் பெரிய அளவில் எதிர்ப்பில்லாமல் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் வெற்றியை உறுதிப்படுத்தியது என்றால், இந்த முறையும்கூட பெருமளவில் எதிர்ப்பில்லாத நிலைதான் ஆளுங்கட்சிக்குக் காணப்படுகிறது. கடந்த சில மாதங்களாகவே தேர்தல் வன்முறை காணப்பட்டாலும்கூட, ராணுவத்தை அழைக்க வேண்டும் என்றோ, ராணுவ தளபதிகளின் மூலம் சமரசம் ஏற்படுத்தப்பட வேண்டும் என்றோ யாரும் வற்புறுத்தவில்லை என்பதே பிரதமர் ஷேக் ஹசீனாவுக்குக் கிடைத்திருக்கும் மிகப்பெரிய வெற்றி.
எதிர்க்கட்சியான வங்கதேச தேசியவாதக் கட்சியின் தலைவியும் முன்னாள் பிரதமருமான கலீதா ஜியா, ஊழல் குற்றச்சாட்டில் சிக்கி சிறையில் இருக்கிறார். அவருக்கு நீதிமன்றம் ஏழு ஆண்டு சிறைத்தண்டனை விதித்திருக்கிறது. சிறைக்கும் மருத்துவமனைக்குமாக இடம் மாறிக் கொண்டிருக்கும் கலீதா ஜியாவின் சார்பில், அவரது மகன் தாரிக் ரஹ்மான் அந்தக் கட்சியின் செயல் தலைவராக இருந்து வருகிறார். அவாமி லீக் கட்சிப் பேரணியின் மீது குண்டுவீச்சுத் தாக்குதல் நடத்திய வழக்கில் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டிருக்கும் தாரிக் ரஹ்மான், வெளிநாட்டிலிருந்து கட்சியை நடத்தி வரும் நிலையில், வங்கதேச தேசியவாதக் கட்சி ஆளும் அவாமி லீக் கட்சியை எதிர்கொள்ளும் வலிமையுடன் இல்லாமல் இருப்பதில் வியப்பொன்றும் இல்லை.
அவாமி லீக் கட்சிக்கும் வங்கதேச தேசியவாதக் கட்சிக்கும் இடையில் மட்டுமல்ல, அந்தக் கட்சிகளின் தலைவர்களுமான பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கும், முன்னாள் பிரதமரான கலீதா ஜியாவுக்கும் இடையேயும் தனிப்பட்ட முறையில் கடுமையான விரோதம் நிலவுகிறது. ஆனால், வங்கதேச தேசியவாதக் கட்சித் தலைவர்களுக்கு நீதிமன்றம் தண்டனை வழங்கியதற்கும், இவர்களுக்கு இடையேயான விரோதத்துக்கும் தொடர்பு இல்லை என்பதைக் குறிப்பிட்டாக வேண்டும்.
2001 06 வரை நடந்த வங்கதேச தேசியவாதக் கட்சியின் கடந்த ஆட்சிக் காலம் பாராட்டும்படி இருக்கவில்லை. எதிர்க்கட்சிகள் மீது அடக்குமுறை ஏவிவிடப்பட்டது என்பது மட்டுமல்லாமல், கடுமையான கட்டுக்கடங்காத ஊழலும் அந்த ஆட்சியில் காணப்பட்டது. எல்லாவற்றுக்கும் மேலாக, மத அடிப்படைவாதிகளுக்கு கலீதா ஜியா முழு சுதந்திரமும் ஆதரவும் அளித்து வந்தார் என்பதை மறந்துவிடக் கூடாது.
பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான கடந்த 10 ஆண்டு அவாமி லீக் கட்சி ஆட்சியில் வங்கதேசம் மிகப்பெரிய அளவிலான வளர்ச்சியைக் கண்டிருக்கிறது. வங்கதேசப் பொருளாதாரத்தின் வளர்ச்சி வீதம் 7.8%ஆக உயர்ந்திருக்கிறது. கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட சமூகப் பிரச்னைகளிலும் ஷேக் ஹசீனாவின் ஆட்சி குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கிறது. தனது ஆட்சியின் 10 ஆண்டு சாதனைகளின் அடிப்படையில் ஆளும் அவாமி லீக் கட்சி தேர்தலை எதிர்கொள்வதால் மூன்றாவது முறையும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் வாய்ப்பு ஷேக் ஹசீனாவுக்குப் பிரகாசமாகவே இருக்கிறது.
அப்படியிருந்தும்கூட, பிரதமர் ஷேக் ஹசீனா எதற்காக மத அடிப்படைவாதிகளைத் திருப்திப்படுத்த முயற்சிக்கிறார் என்பதுதான் புதிராக இருக்கிறது. அரசுச் செலவில் 560 மாதிரி மசூதிகளை அமைத்துத் தருவது, இஸ்லாமியப் பல்கலைக்கழகம் நிறுவுவது உள்ளிட்ட பிரதமர் ஷேக் ஹசீனாவின் அறிவிப்புகள், கலீதா ஜியாவை ஆதரிக்கும் மதத் தீவிரவாதிகளைத் தன் பக்கம் இழுப்பதற்கான முயற்சியாகவே கருதத் தோன்றுகிறது.
பாகிஸ்தானைப் போல அல்லாமல், வங்கதேசத்தை மதச்சார்பற்ற நாடாக உருவாக்க வேண்டும் என்று கனவு கண்ட வங்கபந்து ஷேக் முஜிபுர் ரஹ்மானின் கனவை, அவரது மகளே தகர்க்க முற்படுகிறார் என்பதுதான் நகைமுரண்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...