கண்டனத்தால் ஆயிற்றா?

ஒவ்வொரு பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகும், சோகமும் கண்டனமும் கோபமும் தொடர்வது வழக்கமாகிவிட்டது.


ஒவ்வொரு பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகும், சோகமும் கண்டனமும் கோபமும் தொடர்வது வழக்கமாகிவிட்டது. 48-க்கும் அதிகமான நாடுகள் புல்வாமா தாக்குதலைக் கண்டித்திருப்பது பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் போராட்டத்துக்கு வலுசேர்க்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், இதனால் என்ன பயன் ஏற்பட்டுவிடப் போகிறது என்பதை ஆராய முற்பட்டால் வெறுப்பும் விரக்தியும்தான் மேலிடுகிறது.
1999 முதல் இதுவரை ஐ.நா.வின் பாதுகாப்புக் கவுன்சில் பயங்கரவாதத்துக்கு எதிராக 27 தீர்மானங்களை நிறைவேற்றியிருக்கிறது. நியூயார்க் நகரில் நடந்த செப்டம்பர் 11 இரட்டை கோபுரத் தாக்குதலைத் தொடர்ந்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில், 2001 செப்டம்பர் 28-ஆம் தேதி ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. பயங்கரவாதிகளுக்கு எதிராகவும், பயங்கரவாதக் குழுக்களுக்கு எதிராகவும், பயங்கரவாதத்துக்கு எதிராகவும் எல்லா நடவடிக்கைகளையும் முனைப்புடன் எடுப்பது என்று ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் 1373-ஆவது தீர்மானம் வலியுறுத்தியது. பயங்கரவாதிகளையும், பயங்கரவாதக் குழுக்களையும் பட்டியலிட்டு, அவர்களுடன் எந்த நாடும் தொடர்பு வைத்துக் கொள்வதோ, அவர்களுக்குப் புகலிடம் அளிப்பதோ, உதவி செய்வதோ ஐ.நா. சபையால் தடை செய்யப்பட்டது. 
2016-இல் ஐ.நா. சபை தனது உறுப்பு நாடுகள் எந்த அளவுக்கு 2001-இல் நிறைவேற்றிய தீர்மான எண் 1373-ஐ நடைமுறைப்படுத்துகின்றன என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டு அறிக்கை வெளியிட்டது. அந்த 123 பக்க அறிக்கையில், பாகிஸ்தானிலிருந்து எந்தவிதத் தடையும் இல்லாமல் செயல்பட்டுவரும் பயங்கரவாத அமைப்புகள் குறித்தோ, அவற்றுக்கு உதவும் பாகிஸ்தான் ராணுவத்தின் செயல்பாடு குறித்தோ சிறு குறிப்புகூடக் காணப்படவில்லை எனும்போது, தீர்மானங்கள் நிறைவேற்றுவதால் எதுவும் நடந்துவிடாது என்பது தெளிவாகிறது. 
ஜூன் 2016-இல் பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா சென்றபோது அதிபர் டொனால்ட் டிரம்ப் அளித்த வரவேற்பில் மும்பை, பதான்கோட் தாக்குதல்களுக்கும், எல்லை தாண்டிய பயங்கரவாதத்தில் ஈடுபடும் பாகிஸ்தானிலிருந்து இயங்கும் குழுக்களுக்கும் அடைக்கலம் கொடுப்பதற்கு பாகிஸ்தானைக் கடுமையாகக் கண்டித்து அறிக்கை விடுத்தார். அதேபோல ஜூலை 2017-இல் அமர்நாத் புனிதப் பயண யாத்ரீகர்கள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்தது. பாகிஸ்தானில் செயல்படும் பயங்கரவாதக் குழுக்களை முற்றிலுமாக அந்த அரசு வேரறுக்காவிட்டால் பாகிஸ்தானுக்கு வழங்கும் எல்லா நிதியுதவிகளையும் நிறுத்தப் போவதாக 2018-இல் அமெரிக்க அரசு எச்சரித்தது. கடந்த 20 ஆண்டுகளாக இப்படி எச்சரிப்பதும் கண்டனம் தெரிவிப்பதும் தொடர்கின்றனவே தவிர, அதனால் எந்தவிதமான விளைவும் ஏற்பட்டதாகத் தெரியவில்லை. 
பாகிஸ்தானிலுள்ள பகவல்பூரிலிருந்து இயங்கும் ஜெஏஎம் பயங்கரவாதக் குழுவின் தலைவர் மசூத் அஸாருக்கு எதிராக தடையுத்தரவு பிறப்பிக்கும் ஐ.நா. பாதுகாப்பு சபையின் தீர்மானத்தை சீனா தொடர்ந்து எதிர்த்தும் தடுத்தும் வருகிறது. சர்வதேச அளவில் இந்தியாவின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்த சீனா மறைமுகமாக பாகிஸ்தானையும், பாகிஸ்தானின் ஆதரவில் இயங்கும் பயங்கரவாதக் குழுக்களையும் ஊக்குவிக்கிறது. இந்த நிலையில்,  தடை பிறப்பிப்பதும் எச்சரிப்பதும் ஜெஏஎம்-இன் செயல்பாடுகளையோ, மசூத் அஸாரின் நடவடிக்கைகளையோ தடுத்துவிடப் போவதில்லை. 
ஒசாமா பின்லேடன் அமெரிக்காவுக்கு பயந்து பாகிஸ்தானில் தஞ்சமடைந்து பதுங்கியிருந்தது உலகறிந்த உண்மை. உலகில் மிகவும் தேடப்பட்ட பல பயங்கரவாதிகளான கலித் ஷேக் முகமது, அபூ சுபைதா, யாசர் ஜசீரி, அபு பரஜ் அல் லிபி, ரம்ஜி பின் அல் ஷிப், உமர் பதேக் ஆகியோர் பாகிஸ்தானிலிருந்துதான் பிடிபட்டனர். உலகின் மிக மோசமான பயங்கரவாதத் தாக்குதல்களான 1993 மும்பை தொடர் குண்டு வெடிப்பில் தொடங்கி, அனைத்து நிகழ்வுகளையும் நடத்தியவர்கள் பாகிஸ்தானில்தான் தஞ்சமடைந்து செயல்பட்டு வருகிறார்கள் என்பது அமெரிக்காவிற்கும் 
ஐ.நா. சபைக்கும் தெரியாததல்ல. 
தலிபான் அரசின் முக்கியப் பிரமுகர்கள் அப்துல் அகமது துர்க், அப்துல் அஜீஸ் மட்டுமல்லாமல் எகிப்தைச் சேர்ந்த அப்த் அல்லா, ஜேசி அகமது, ஐமன் அல் ஜவாஹிரி, அல்கொய்தா உறுப்பினர் பஜீல் அதுல், ஈராக்கைச் சேர்ந்து அப்த் அல் ரஹ்மான், குவைத் பயங்கரவாதி அபோ கைத், உஸ்பெகிஸ்தான் ஐ.எஸ். பயங்கரவாதி அயூப் பஷீர் ஆகியோர் பாகிஸ்தானில்தான் அடைக்கலம் பெற்றிருக்கிறார்கள். ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலின் அறிக்கைபடியே உலகில் மிகவும் தேடப்படும் பயங்கரவாதிகளுக்கு தஞ்சம் அளித்திருக்கும் நாடு பாகிஸ்தான் என்று ஒப்புக்கொள்ளப்பட்டிருக்கிறது.
இத்தனை ஆதாரங்கள், சாட்சிகள், நிரூபணங்கள் இருந்தும்கூட உலக நாடுகளால், பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுப்பதிலிருந்து பாகிஸ்தானைத் தடுக்க முடியவில்லை. அதனால், துல்லியத் தாக்குதல் நடத்துவதாலோ, பாகிஸ்தானுடனான சிறப்பு வர்த்தக உறவுகளை துண்டித்துக் கொள்வதாலோ, விடுதலை அடைந்தது முதல் இந்தியா எதிர்கொள்ளும் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட முடியாது. நமக்கு அனுதாபமும் ஆதரவும் தெரிவிக்கப் பல நாடுகள் இருந்தாலும், பயங்கரவாதப் பிரச்னைக்கு நிரந்தர விடை காண இந்தியாவுக்கு யாரும் துணை புரிவதாக இல்லை. இப்படியே போனால் நாமும் பயங்கரவாதத்தை ஏற்றுமதி செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிடுமோ என்கிற அச்சம் மேலிடுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com